வணிகர்களை வஞ்சிக்காதீர்!

இலங்கைத் தமிழர் பிரச்னை, கேரள, கர்நாடக மாநிலங்களுடன் நதிநீர்ப் பிரச்னை, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு,

இலங்கைத் தமிழர் பிரச்னை, கேரள, கர்நாடக மாநிலங்களுடன் நதிநீர்ப் பிரச்னை, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு, உள்ளூர் பிரச்னை என என்ன பிரச்னை வந்தாலும், முதலில் அறிவிக்கப்படுவது கடையடைப்புப் போராட்டம்தான். 
அரசு மற்றும் அரசியல் கட்சிகள், ஜாதி, மத அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்படும் போது, வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவரும் அறிந்துகொள்ள முற்படுவதில்லை.
அரசியல்வாதிகளுக்கு இதை வைத்துப் பிழைப்பு நடக்கிறது. ஊடகங்களை பொருத்தவரை இது ஒருநாள் செய்தி, அவ்வளவே. ஆனால் போராட்டத்தில் பங்கேற்கக் கட்டாயப்படுத்தப்படும் ஒவ்வொரு வியாபாரியும் பாதிக்கப்படுகிறார்.
முன்பு சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு கிடைத்த பலன், தற்போது எந்தப் போராட்டத்துக்கும் கிடைப்பதில்லை. அரசியல்வாதிகளும், பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தின் தன்மையையே மாற்றிவிட்டனர். எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அவர்களின் மலிவான விளம்பரங்களுக்காக முதலில் பாதிக்கப்படுவோர் வணிகர்களே.
சில மாதங்களுக்கு முன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் வெவ்வேறு நாளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரே வாரத்தில் மூன்று நாள் கடையடைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
நாட்டின் வளர்ச்சிக்காகப் போராட்டம் நடத்துவதாக கூறுபவர்கள், வியாபாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? 
ஒவ்வொரு போராட்டத்தின்போதும் வியாபாரிகளை கடையடைக்கச் சொல்லும் அரசியல் கட்சிகள், தங்களுக்கு சொந்தமான ஊடகங்களில் ஒரு நாள் முழுவதும் விளம்பரம் ஒளிபரப்பாமல் நிறுத்த முடியுமா? மது தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், தங்கள் ஆலைகளுக்கு விடுமுறை அளிப்பார்களா? 
ஒரு வியாபாரி தனது கடையை திறம்பட நடத்த வேண்டுமென்றால், அவரது குடும்பமே இணைந்து பணியாற்றினால்தான் முடியும்.
காலை ஆறு மணிக்குள்ளாக குடும்பத் தலைவர் கடையை திறந்து, பின்னர் வீட்டில் யாரோ ஒரு நபர் அவரை காலை, மதியம், இரவு உணவுக்கு மாற்றிவிட்டு, சிறிது நேரம் கூட ஓய்வு எடுக்க முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் வியாபாரம் செய்கின்றனர்.
பெரும்பாலான வியாபாரிகள் எந்த ஒரு நிகழ்வுக்கும் குடும்பத்துடன் செல்ல முடியாத நிலைதான் உள்ளது. குடும்பத்தில் யாராவது ஒருவரைத்தான் அனுப்பிவைக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஒரு நாள் கடை அடைக்கப்பட்டாலும் வியாபாரம் பாதிக்கும்; வருவாய் இழப்பு ஏற்படும். அந்த ஒரு நாள் இழப்பை சரி செய்ய பல நாள்கள் ஆகும்.
வாரம் ஒரு முறை கடைக்கு விடுமுறை என்றாலும் கூட, பெரும்பாலான வியாபாரிகள் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்துவிட்டு, தாங்கள் அன்றைய தினத்தை கொள்முதல் செய்ய பயன்படுத்திக்கொள்கின்றனர். இப்படி ஓய்வே இல்லாமல் வேலை செய்து வரும் வியாபாரிகளை, அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் வஞ்சிப்பது வருத்தமளிக்கிறது.
ஏற்கெனவே, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் நெருக்கடி, இரவு 11 மணிக்கு மேல் தொழில் செய்ய முடியாமல் காவல் துறை செய்யும் கெடுபிடி என உணவகம், தேநீர் கடை, இனிப்பகம், பழக்கடை நடத்தும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். திடீர் திடீரென போராட்டம் அறிவிக்கப்படும்போது இவர்கள் கடைகளில் பொருள்கள் வீணாவதைத் தவிர்க்க முடியாது.
திடீர் போராட்டங்கள் காரணமாக, கடையை மூடிவிடுவதால் கொள்முதல் செய்த இடங்களுக்கு பணம் சரியாக பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. வங்கிக் கடன்களையும் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. வட்டிக்குப் பணம் வாங்கி தொழில் செய்யும் சிறு வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமானதாக ஆகிவிடுகிறது.
கடையைத் திறந்தாலும் திறக்காவிட்டாலும், வாடகை, பணியாளர் சம்பளம் போன்றவற்றை எப்படியும் கொடுத்தே ஆக வேண்டும். இது போன்ற நெருக்கடி வியாபாரிகளுக்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது.
அரசும், அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் ஒன்றை சிந்திக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களிலும் கூட இயற்கை பேரிடர் ஏற்படும் போது, ஒவ்வொரு கால கட்டத்திலும், நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் முதலிடத்தில் இருப்பது வியாபாரிகள்தான்.
நிவாரண நிதிக்கும், உள்ளூரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நன்கொடை அள்ளித்தருவதும் அவர்களே.
இதையெல்லாம் தாண்டிதான் அவர்கள் தன் குடும்பத்துக்கு வருமானத்தை ஈட்ட முடியும்.
அரசியல்வாதிகளே, இனியாவது கடையடைப்பு போராட்டத்தை அறிவிக்காதீர்கள். உங்களுக்கு உள்ள மொழி உணர்வு, இன உணர்வு ஒவ்வொரு வியாபாரிக்கும் உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் அன்றாடம் உழைத்தால்தான் அவர்களின் குடும்பம் உயிர் வாழ முடியும்.
போராட்டங்கள் அறிவித்தால், அமைதியான வழியில், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றச் சொல்லியோ, பணியாளர்களை கருப்பு பட்டை அணிந்து பணிபுரியச் சொல்லியோ கோரிக்கை விடுங்கள். அதையுங்கூட கட்டாயப்படுத்தாதீர்கள். அப்போதுதான் வியாபாரப் பெருங்குடி மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com