பிரபஞ்சனின் இணையற்ற தோழமை!

பிரபஞ்சன் மறைந்துவிட்டார் என்று புதுவையிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார் ஒரு நண்பர். காது அதைக் கேட்டபோது மனது ஒத்துக் கொள்ள மறுத்தது.


பிரபஞ்சன் மறைந்துவிட்டார் என்று புதுவையிலிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார் ஒரு நண்பர். காது அதைக் கேட்டபோது மனது ஒத்துக் கொள்ள மறுத்தது. மறுபடியும் மறுபடியும் அது உண்மைதானா எனக்கேட்டுக் கொண்டேயிருந்தேன். நண்பர் அழுகுரலில் இப்படி நம்மை விட்டுட்டுப் போயிட்டாரே என்று விம்மினார். தொலைபேசி உரையாடலை தொடரமுடியவில்லை. உடைந்து அழுதேன். சொந்த சகோதரரை இழந்துவிட்டது போன்ற துக்கம். வேதனை. 
காலம் கருணையற்றது. அது மனிதர்களின் ஆசைகளை, கனவுகளை, நம்பிக்கைகளை ஒரு நிமிஷத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது. பிரபஞ்சன் நலமடைந்து வருவார். மீண்டும் எழுத்துப் பணியை தொடருவார் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தேன். எல்லாமும் மறைந்து போய்விட்டது. 
பிரபஞ்சன் என்றால் மனதில் தோன்றும் முதல் பிம்பம் சிரித்துக் கொண்டேயிருக்கும் அவரது முகம். இனிமையான குரலில் வரவேற்று நலம் விசாரிக்கும் பண்பு. கையில் காசேயில்லாமல் அறையில் அவர் தனித்து இருந்த நாளில்கூட சந்தித்திருக்கிறேன். அப்போதும் அந்தச் சிரிப்பு மாறியதேயில்லை. அது வாழ்க்கையைப் பார்த்து சிரிக்கும் சிரிப்பு. நீ என்னை குப்புறத்தள்ளி விட்டதாக நினைக்கிறாய். நான் ஒரு எழுத்தாளன். பொருளாதார கஷ்டங்களால் ஒரு போதும் விழுந்துவிடமாட்டேன் என இறுமாப்புடன் வெளிப்பட்ட புன்னகை.
தனது கஷ்டங்கள், உடல்நலப் பிரச்சனைகள் குறித்து ஒரு போதும் அவர் புலம்பியவரில்லை. எவரிடமும் கையேந்தி நின்றவரில்லை. அதே நேரம் தனது சந்தோஷங்களை தனித்துக் கொண்டாடியதேயில்லை. தன் மகிழ்ச்சியை நண்பர்களுக்கு பகிர்ந்து தருவதில் நிகரற்றவர். அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காக திறந்தேயிருந்தது. அதிலும் என்னைப் போல எழுத்தாளர் ஆக வேண்டும் என வேலையில்லாமல் அலைபவர்களுக்கு அந்த அறை புகலிடமாகவே இருந்தது. 
இளம் எழுத்தாளர்களை அவரைப் போல பாராட்டிக் கொண்டாடிய இன்னொருவரை நான் கண்டதில்லை. சில நேரங்களில் இவ்வளவு பெரிய வார்த்தைகளால் புகழ்கிறீர்களே என அவரிடமே கேட்டிருக்கிறேன். பாராட்டு தானே ராமகிருஷ்ணன் எழுத்தாளனை மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விடவும் அவனது கதை கவிதை சிறப்பாக உள்ளது. நீ மிக நன்றாக எழுதுகிறாய் என்று பாராட்டு சொல்வதைத்தானே படைப்பாளி பெரியதாக நினைப்பான். 
நல்ல படைப்புகளை யார் எழுதினாலும் எந்த பத்திரிகையில் வந்தாலும் தேடிப் படித்து உடனே பாராட்டக்கூடியவன் நான். அது எனது கடமை என்று சொன்னார் பிரபஞ்சன். இந்தப் பண்பு அவரை எப்போதும் இளந்தலைமுறை படைப்பாளியின் தோழனாக இருக்க வைத்தது. 
புதுச்சேரி தெருக்களில் ஒவ்வொரு அங்குல மண்ணின் வரலாற்றையும் அவர் அறிவார். இதைச் சொல்லியும் எழுதியும் இருக்கிறார். எழுத்து, இசை, கலை, பண்பாடு எல்லாம் மனிதர்களை ஒருவரோடு ஒருவரை இசைவிக்கத்தானே அன்றி வேறு எதற்கும் இல்லை. 
அன்பால் இணைந்து, அன்பால் புரிந்து கொண்டு அன்பே பிரதானமாக ஒரு உலகத்தை உருவாக்கும் தொழிலையே நான் செய்கிறேன் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. மனித குலம் அன்பினால் மட்டுமே தழைக்கும் என்பதே என் செய்தி என பிரபஞ்சனே தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை.
பிரபஞ்சனின் சென்னை வாழ்க்கை ஆயிரம் பக்கங்களில் எழுதினாலும் எழுதித் தீராதது. ஆயிரத்தோரு அராபிய இரவுகள் போல பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம். அவ்வளவு அனுபவங்கள். அத்தனையும் அவமானமும் புறக்கணிப்பும் ஏமாற்றமும் துயரமும் கொண்ட நிகழ்வுகள். அந்த அனுபவத்தில் கால்வாசி ஒருவருக்கு நடந்திருந்தால்கூட ஊரை விட்டு ஒடிப் போயிருப்பார். ஆனால், பிரபஞ்சன் தவம் போல எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார்.
தனது அவமானத்தைக்கூட சிரிப்பும் கேலியாக சொல்லத் தெரிந்தவர் பிரபஞ்சன். சொந்த வீடு இல்லாமல் பல்வேறு மேன்ஷன்களில் அவர் வாழ்ந்தார். எந்த மேன்ஷனில் வாழ்ந்தாலும் அவர் அறையில் நிறைய புத்தகங்களும் இசை நாடாக்களும் குறுந்தகடுகளுமே இருந்தன. நல்ல காபியும் நல்ல சங்கீதமும் விருப்பமான புத்தகங்களுமே என் வாழ்க்கை என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார் பிரபஞ்சன். ஒரு காலத்தில் முறையாக வீணை படித்தார் என்று ஒரு நேர்பேச்சில் சொன்னார். இசை அவரை துயரங்களில் இருந்து ஆற்றுப்படுத்தியது.
புதுமைப்பித்தன் காலம் முதல் இன்று வரை தமிழ் எழுத்தாளர் தன் எழுத்தை நம்பி திருப்தியாக வாழமுடியாத நிலைதான் நிலவுகின்றது. 
பிழைப்பிற்காகவே பத்திரிகை துறையில் வேலை செய்தார். பத்திரிகைகள் தனக்கான உலகமில்லை என்று அறிந்து கொண்ட பிறகு எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது என முடிவு செய்து கொண்டார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, அது ஒரு தற்கொலை முயற்சி எனத் தெரிந்துமே அதில் ஈடுபட்டேன் என்று பிரபஞ்சன் சிரித்தபடியே சொன்னார். 
1970-களில் இல்லஸ்டிரேடட் வீக்லி போல அழகான இலக்கியப் பத்திரிகை தமிழில் நடத்தவேண்டும் என்பது அவரது கனவாக உருவானது. இதற்காக புதுவையில் பாரதி அச்சகம் என்ற பெயரில் அச்சகம் ஒன்றை காந்தி வீதியில், சின்னப்பிள்ளையார் கோயில் அருகில் தொடங்கினார். மனைவியின் நகையை விற்று டிரடில் மெஷின் வாங்கினார். அதில், பாரதியாரின், மனதில் உறுதி வேண்டும் என்ற கவிதையை கம்போஸ் செய்துஅச்சேற்றினார். ஆனால், அது முழுமையாக அச்சாகவில்லை. 
அந்த மிஷின் உடைந்த நிலையில் இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதை உணர்ந்தார். வேறு வழியின்றி அந்த அச்சகத்தைச் சொற்ப விலைக்கு விற்பனை செய்தார். சிறந்த பத்திரிகை ஒன்றை நடத்த வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவேயில்லை.
பிரபஞ்சன் ஒப்பனை செய்து கொள்வதிலும் நேர்த்தியாக உடைகள் அணிந்து கொள்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். அழகான தோற்றம் கொண்டவர். உயர் ரக ஜிப்பா அணிந்து அவர் கூட்டங்களுக்கு வருவதைக் காண அத்தனை வசீகரமாகயிருக்கும். 
காபியை விரும்பிக் குடிப்பவர் என்பதால் அவருக்குச் சரவணபவன் காபி மீது கூடுதல் விருப்பம். அங்கே பணியாற்றுகிற அனைத்துப் பணியாளர்களையும் அவர் அறிவார். அவர்கள் குடும்ப நலன்களைக் கேட்டுக் கொள்வார். 
ஒருமுறை ஒரு சர்வருக்கு உடல் நலமில்லை என அறிந்து பை நிறைய ஆரஞ்சுப் பழங்களை வாங்கி அளிப்பதை நேரில் கண்டேன். மகாகவி பாரதியிடம் இது போன்ற அன்பு இருந்த்தாகச் சொல்லியிருக்கிறார்கள். அதே அன்பு பிரபஞ்சனிடமும் இருந்தது.
புதுவையில் இருந்து சினிமாத் துறையில் பிரவேசிக்க வேண்டியே அவர் சென்னைக்கு வந்தார். ஆனால், அந்த ஆசை ஒன்றிரண்டு வருஷங்களிலே வடிந்துவிட்டது, காரணம் அவர் பட்ட அவமானங்களே. 
ஆனால், கரந்தை தமிழ் கல்லூரியில் முறையாக தமிழ் கற்றவர் என்பதால் பத்திரிகை துறையிலும் எழுத்துத் துறையிலும் தனது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். பிரபஞ்சனின் கதைகள் அதிகமும் பெண்களின் துயரத்தை பேசின. எளிய மனிதர்களின் வாழ்க்கையை கவனத்துடன் அக்கறையுடன் அன்புடன் அவர் எழுதினார். 
தனது வம்சத்திலே பெண் பிள்ளைகள் கிடையாது. எல்லோருக்கும் ஆண் பிள்ளைகள்தான். எனக்கும் ஆண் பிள்ளைகள்தான். ஆகவே, நான் சந்திக்கும் இளம் பெண்களை மகளைப் போல நினைத்துக் கொள்வேன் என்று ஒருமுறை பிரபஞ்சன் சொன்னார். அவர் தன் மகள் போல நேசித்த பெண் படைப்பாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். வெளியிட்டு விழாக்களில் பேசி அவர்களைக் கொண்டாடியிருக்கிறார். அவர்களின் சொந்த வாழ்க்கையில் துயரம் கவ்வும் போதெல்லாம் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறார். அந்த வகையில் அவர் எத்தனையோ பெண் படைப்பாளிகளின் தந்தை என்றே சொல்வேன்.
வரலாற்றை மீள்ஆய்வு செய்வதிலும் வரலாற்று உண்மைகளை உலகம் அறியச் செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். புதுவையின் வரலாற்றை விவரிக்கும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியை முதன்மையாகக் கொண்டு அவர் உருவாக்கிய வானம் வசப்படும், மிகச் சிறப்பான வரலாற்று நாவல். அந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 
அந்த விருது அறிவிக்கபட்ட நாளில் அவரைத் தேடிச் சென்று வாழ்த்துச் சொன்னேன். தமிழில் நல்ல வரலாற்று நாவல்கள் இல்லை என்று நீண்ட குறையிருந்து வந்தது. அந்தக் குறையை போக்கும் ஒரு நாவலை நான் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சி என்று சொன்னார். அது வெறும் தற்பெருமையில்லை. இலக்கியவாதி தன் படைப்பின் மீது கொண்ட மரியாதை. 
சென்னைக்கு வந்த நாள்களில் வாரம் இரண்டுமுறையோ அல்லது மூன்று முறையோ அவரது அறைக்குச் சென்று விடுவேன். எப்போதும் அந்த அறையில் யாராவது அமர்ந்து இலக்கியம் பேசிக கொண்டிருப்பார்கள். சில நேரம் இந்த எண்ணிக்கை பத்து, பனிரெண்டு என அதிகமாகிவிடும். அத்தனை பேருக்கும் காபியும் சிற்றுண்டியும் வாங்கித் தந்து ரசிப்பார். இப்படி ஆட்கள் வந்து திரளுகிறார்கள் என சில அறைகளை விட்டு அவரைத் துரத்தியிருக்கிறார்கள். அப்போதும் அவர் எவரையும் வரவேண்டாம் என்று சொன்னதேயில்லை. 
வந்தவர்களில் சிலர் அவரது சொந்தப் பொருள்களை, பணத்தை எடுத்துக் கொண்டு போன போதும்கூட வேடிக்கையாகத்தான் அதைச் சொல்வார். பகலில் மட்டுமில்லை. இரவு இரண்டு மணிக்குக்கூட அவரது அறைக் கதவை தட்டி அவரை எழுப்பி பேசுகிறவர்கள் இருந்தார்கள். ஒருவரையும் ஒருமுறைகூட அவர் கோவித்துக் கொண்டு நான் கண்டதேயில்லை. சகமனிதர் மீது முழுமையாக அன்பு செலுத்துவது எப்படி என்பதை அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்.
பிரபஞ்சனின் துணைவியார் பிரமீளா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.அவரது முதலாண்டு நினைவின்போது பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதினார். அந்த கட்டுரையைப் படித்து கண்கலங்கிப்போனேன். அது நம் அனைவருக்குமான அறிவுரை என்றே சொல்வேன்.
அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது: எனக்கு முன் என் துணைவர் இறந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மரணம் எனக்கு நேர்ந்து, அவர் பூமியில் தங்க நேர்ந்திருந்தால், மிகுந்த அவமானங்களைச் சந்தித்து இருப்பார். அவமானத்தின், புறக்கணிப்பின் நிழல்கூடப் படக்கூடாத ஆத்மா அவர். இவை போன்ற சிறுமைகள் எல்லாம் எனக்கே உரியவை.
நட்சத்திரக் கணக்குப்படி, அவர் இறந்து இந்த 16 மார்ச்சோடு சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. அவரது இல்லாமை இப்போதுதான் என்னைத் தாக்கத் தொடங்கி இருக்கிறது. இளமையில் துணை இல்லாமல் இருந்துவிடலாம். முதுமையில்தான் துணையின் அவசியம் கூடுதலாக உணர முடிகிறது. நிறைந்த கனவுகளும், லட்சியங்களும் கண்களில் மிதக்க, ஆனந்தமாகப் பறந்து திரிய வேண்டிய, அறிவும் ஞானமும் பொலிந்த, மகத்தான மானுட உணர்வுகள் கொண்ட பெண்மணிகளை மனைவியாகக் கொண்டு, அவர்களைக் கீழிறக்கி, ஒளி இழக்கச் செய்த, செய்து கொண்டிருக்கும் கோடி கோடி ஆண்களின் வரிசையில் நானும் சேர்ந்து இருக்கிறேன்என்கிற குற்றவுணர்வு மட்டும் எப்போதும் என்னுடன் இருந்து தீரும். அதிலிருந்து நான் தப்ப முடியாது.
பிரபஞ்சன் மிகச்சிறந்த பேச்சாளர். அவர் பேச்சை கேட்டுக் கொண்டேயிருக்கலாம். மிகுந்த தைரியத்துடன் எழுத்தாளனுக்கே உரிய கர்வமும் உரத்த சிந்தனையும் கொண்டவர். ஒருமுறைகூட ஒருவரை கூட அவர் அநாகரிகமாக மேடையில் பேசியதோ, விமர்சனம் செய்ததோ கிடையாது. பிடிக்காத விஷயத்தைக்கூட அவரைப் போல பண்புடன் சொல்பவரைக் காண்பது அரிது. 
இரண்டு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த அவரைக் காண குடும்பத்துடன் சென்றிருந்தேன். என் கைகளைப் பிடித்தபடியே மெளனமாக இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் கசிந்தது. அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உங்களுக்கு நான் என்ன செய்தேன் ராமகிருஷ்ணன். எனக்காக எவ்வளவு பெரிய விழா நடத்தி பணமுடிப்பு கொடுத்து கெளரவம் செய்துள்ளீர்கள். இதற்கு நான் என்ன செய்வது எனக்கேட்டார். 
தமிழுக்கு நீங்கள் செய்த சேவைக்கு நாங்கள் திரும்ப செய்யும் கெளரவமிது. இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பாக்கியம் என்றேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆசி வழங்கினார். பின்பு, என் மனைவியிடம் தனித்துப் பேசி தந்தையைப் போல ஆசி அளித்தார்.
விடைபெறும் வரை என் கையை விடவேயில்லை. அந்தப் பிடிமானம் இன்றில்லை. அதை நினைத்து மனது வேதனையில் துடித்துக் கொண்டேயிருக்கிறது.
புத்தக அலமாரியில் இருந்து பிரபஞ்சனின் சிறுகதைகளை எடுத்துப் படித்தேன்.
ஒவ்வொரு சொல்லிலும் அவர் உயிருடன் இருந்து கொண்டேயிருக்கிறார். அந்தக் குரல், அந்த நெருக்கம், அந்த அன்பு வாழ்வில் நான் அடைந்த பெரும் பேறு என்றே சொல்வேன்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com