கண்டம் விட்டு கண்டம் தாவி புதிய நட்பும், உறவும் கொள்ளும் இன்றைய நாள் மனிதன், வானத்தின் உச்சிக்கே சென்று வீடு கட்டி வாழத் துடிக்கும் மாமனிதன் தன்னையொத்த சக மனிதனுக்கு விபத்துக் காலத்தில் கூட உதவ மறுக்கின்ற அவலத்தைப் படிக்கும்போது, 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை' என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது.
அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்றில் அதிர்ச்சி தரும் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
தில்லி - யமுனா விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்துதான் அது. தில்லியைச் சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்று லக்னெள நகரில் சர்வதேச நடன நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கலந்து கொண்ட உக்ரைன் நாட்டு இரு நடனக் கலைஞர்கள் மறுநாள் காலை காரில் தில்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அதிவேகமாக ஓட்டி வந்த நிறுவன மேலாளரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. வாகனத்தை ஓட்டி வந்த மேலாளர் அவ்விடத்திலேயே உயிர் இழந்தார்.
நடனக் கலைஞர்கள் இருவரும் பலத்த காயமுற்று, உயிர்க்குப் போராடினர். பின்னால் வந்த காரில் இருந்த தொலைக்காட்சி நிருபர்கள் அந்தக் கலைஞர்களை விபத்து நடந்த பகுதி மக்களின் துணையோடு மீட்டனர். உடன் சாலை ரோந்து காவல் படைக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் வந்ததும், சாலையில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு செய்தனர்.
உயிருக்குப் போராடிய கலைஞர்கட்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அவர்களிடம் நிருபர்கள் வேண்டியபோது, 'அது எங்கள் பணி அல்ல' என்று கூறிவிட்டனர். உடனே 100 எண் மையத்தைத் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் பதில் இல்லை. பிறகு மாவட்ட காவல் துறை அதிகாரியை 10,12 தடவைக்கு மேலாகத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டும் பதில் கிட்டாமையால், அருகில் ரயா என்னுமிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். மருத்துவமனை நிர்வாகம் காவல் துறை அனுமதி இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்துவிடுகிறது.
பிறகு மதுரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இதற்குள் 'பொன்னான' நேரமாகிய ஒரு மணி நேரம் (கோல்டன் அவர்) கடந்து விடுகிறது. ஒரு நடனக் கலைஞர் மரணம் அடைந்துவிடுகிறார்.
விபத்து நடந்த உடன் தகுந்த சிகிச்சை அளித்திருந்தால் உக்ரைன் நாட்டு நடனக் கலைஞரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று தொலைக்காட்சி நிருபர்கள் வருத்தத்தோடு தெரிவித்தனர்.
இந்தச் செய்தியைப் படித்தவர்கள் எல்லோரும் இதே வித உணர்ச்சியைத்தான் அடைந்து இருப்பார்கள்.
இந்த நேரத்தில் நமக்கு தமிழ்நாட்டில் நடந்த விபத்து ஒன்று நினைவுக்கு வருகிறது.
பல ஆண்டுகட்கு முன்னர் இராமேஸ்வரத்திற்கு வந்த வட இந்திய யாத்திரிகர்கள் பேருந்து திருநெல்வேலி அருகே விபத்திற்குள்ளானது. பல பயணிகள் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அரசு மருத்துவமனையில் போதுமான ரத்தம் இல்லை. மருத்துவர்கள் உடனே திருநெல்வேலி வானொலி நிலையத்திற்குத் தகவல் தந்து உதவி கோரினர்.
அப்போது வேளாண்மைத் துறை தொடர்பான செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தவர் இதனை அறிந்து வானொலி நிலைய விதிமுறைகளை மீறி உடனே இந்த விபத்தினைச் சொல்லி ரத்தம் கொடுக்கத் தகுதியானவர்களை மருத்துவமனைக்கு உடன் போக வானொலி மூலம் தகவலை ஒலிபரப்பினார். பலர் சென்றனர். ரத்தம் வழங்கினர். பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இரக்கமும் கருணையும் மனித குலத்தின் இரு கண்கள்.
சபர்மதி ஆசிரமத்தில் ஒரு நிகழ்ச்சி. ஆசிரமத்தில் சில தொழு நோயாளிகளும் தங்கியிருந்தனர். தொழு நோயாளிகட்கு சிகிச்சை அழிக்கும் வழக்கமான மருத்துவர் ஒரு நாள் வரவில்லை. பொதுவாக தொழு நோயாளிகட்குத் தொடு உணர்ச்சி குறைவாகவே இருக்கும். இதனால் நோயாளிக்குப் புண்ணின் வலி தெரியாது. அங்கே இருந்த ஒரு நோயாளியின் கால் புண்ணில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. சீழும் வடிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கே வந்த காந்திஜியின் காரியதரிசிகளில் ஒருவரான, ஐ.சி.எஸ். பட்டம் பெற்ற, மகாதேவ தேசாய் இதை கவனித்தார். மருத்துவர் வரவில்லை என்பதையும் கேட்டறிந்தார். அவர் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த அண்ணல், நோயாளியைப் பார்த்தார். உடனே சிகிச்சையை ஆரம்பித்தார். சீழைத் துடைத்து, புண்ணைக் கழுவி மருந்திட்டு கட்டும் கட்டினார். பின்னர் இந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற மகாதேவ தேசாய், அண்ணலிடம் கண்ணீர் மல்க வருந்தி மன்னிப்பு கோரினார். இது வரலாறு.
சங்க காலத்தில் நடந்த இரக்கமும் கருணையும் வெளிப்படும் நிகழ்ச்சிகள் இலக்கிய ஏடுகளைப் புரட்டும் எவர்க்கும் நிழற்படங்களாக கண்முன் நிற்கும்.
தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன்னிடம் பொருள் கேட்டு வந்த வறிய புலவனுக்கு 'இல்லை' என்று சொல்லக் கூடாது என்று எண்ணினான் குமணன்.
'இளவலால் ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டப்பட்டு காட்டில் ஒளிந்து வாழும் என்னிடம் பொருள் இல்லை. எனினும் என் தலைக்கு விலை விதித்துள்ளான், என் தம்பி. எனவே என் தலையைக் கொய்து கொண்டு போய்க் கொடு. பொன்னும் பொருளும் தருவான். இதோ வாள், வெட்டு!' என்கிறான்.
நாடு இழந்தனினும் நனி இன்னாது என
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈயத்
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்
ஆடு மலி உவகையோடு...
-பெருந்தலைச் சாத்தனார் (புறம்-165).
மற்றொரு மன்னன் வேடனின் அம்பில் இருந்து தப்பிய புறாவைத் துரத்தி வந்த வேடனுக்கு என் உடலில் இருந்து புறாவின் எடைக்கு தசையை அறுத்துத் தருகிறேன், என்று புறாவை மீட்டானே, சிபி சக்ரவர்த்தி!
இதனை மாறோக்கத்து நப்பசலையார், 'புறாவின் அல்லல் சொல்லிய கறையடி' என்று தொடங்கி சோழ மன்னன் கிள்ளிவளவனைப் பாராட்டுவார் (புறம் -39).
தான் நெடிய வாழ்வதைக் காட்டிலும் ஒளவைப் பிராட்டி நீடுவாழ்தலே சிறப்பு என்று பகை வெல்லும் புகழ் மன்னன் எண்ணித் தனக்குக் கிடைத்திட்ட அரிய தீங்கனி நெல்லியை பிராட்டிக்கு வழங்கிய அதியமானின் கருணையை வியந்து ஒளவை,
'சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே'
- என்று பாடினார் (புறம் - 91).
நாடாண்ட இன்னொரு காவலன் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்த மயிலுக்கு, அது எப்போதும் தன் மேல் போர்வையாக அணிந்து கொண்டிருக்காது எனத் தெரிந்தும், மறக்கொடையாக மன்னன் பேகன் தனது உயர்ந்த மேலாடையைக் கழற்றி மயிலுக்குப் போர்த்திவிடுகிறான். இந்த நிகழ்ச்சி மனிதனின் மாசற்ற அன்பின் மிகுதி அல்லவா!
'உடாஅபோரா ஆகுதல் அறிந்தும்
படா அம்மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ'
- வையாவிக்கோ (புறம் - 141).
ஓரறிவு கொண்ட தாவரத்தின் துயரைக் கண்ட பறம்பு மலைத் தலைவன் பாரி, தன் வாய் திறந்து உதவி வேண்டும் என்று கேட்க இயலாத முல்லைக்கொடி படர தன் தேரினையே கொழு கொம்பாகத் தந்தானே! அவனது கருணையை இப்படிப் பேசும் புறம் -
பூத்தலை அறா அப்புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாதாயினும்
கறங்கு மணி நெடுந்தேர் கொள்க
எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி
- கபிலர் (புறம்-200).
அன்றொரு நாள் ஆரூர் அரண்மனையில் கண்ணீர் சோறக் கதறி அழ வாயில்லா குறையோடு வந்த தாய்ப்பசு ஆராய்ச்சி மணியதனைத் தன் கொம்பினால் அசைத்து, அசைத்துப் பெரும் ஓசை எழுப்தியதன் விளைவாக வாயிலுக்கு வந்தான் மன்னன் மனுநீதிச் சோழன். நடந்தவை கேட்டறிந்தான். பசுவின் துயர் துடைக்கத் தனது ஆருயிர் புதல்வனையே தேர்க்காலில் இட்டு நீதி வழங்கினானே! அது எதனால் நிகழ்ந்து? அறிவிலே குறைந்தது எனினும் பசுவின் துயரம் என் துயரத்தினினும் சற்றும் குறைந்தது அல்ல என்று எண்ணியே நீதி வழங்கினான் என்பதை,
'மன் உயிர் காக்கும் செங்கோல்
மனுவின் பொன்கோயில் வாயில்
பொன் அணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்து...
முன் இவனை அவ்வீதி
முரண் தேர்க்கால் ஊர்க'
- (பெரிய புராணம்).
இப்படி இரக்க உணர்வோடும், கருணை உள்ளத்தோடும் ஆட்சி புரிந்த மன்னர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் போரில் ஏற்பட்ட துயரங்களைக் கண்டு போரையே வெறுத்த அசோக சக்ரவர்த்தி ஆண்ட இந்த மண்ணில், 'மனிதர் என்றால் உபகாரப் பெருமை வேண்டும்' என்று போதித்த பட்டினத்தார் அவதரித்த புண்ணிய பூமியில், வாடிய பயிரைக் கண்டு கசிந்து உருகிய வள்ளல் பெருமான் தோன்றிய திருத்தலத்தில், ஆபத்திற்கு உடன் உதவாமல் காவல் துறை அனுமதி தந்தால்தான் உதவ - சிகிச்சை அளிக்க முடியும் என்று இருக்கும் மருத்துவமனைகளும், கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்காத 100 என்ற அவசர உதவி மையமும் இருந்தென்ன, இல்லை என்றால் என்ன?
விபத்துக் காலங்களில் உடனே எல்லா துறையினரும் விரைந்த செயல்பட வேண்டும். இதற்கு யாரது முன் அனுமதியும் தேவையில்லை. உடன் உதவ இல்லை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வருதல் நலம் பயக்கும். அந்தச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகிறதா என்பதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும்.
விபத்தில் காயமடைந்தவர்கட்குத் தகுந்த சிகிச்சை அளித்த பின்னர், உயிர்க்கு
இனி ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, எல்லா புலன் விசாரணைகளைத் தொடங்கலாம், அல்லது விரைவு படுத்தலாம். இதை விடுத்து, விபத்தில் சிக்கியவர்கட்கு உதவ முன்வருபவர்களின் ஊக்கத்தை தடுக்கும் வகையில் அரசுத் துறைகளோ, தனியார் நிறுவனங்களோ இருக்கக் கூடாது.
இனி ஒரு விதி செய்வோம். மனித உயிர்கள் மலிவானது அல்ல. மிகவும் மதிப்பு மிக்கது. சக்தி உடையது. விபத்துக் காலத்தின் பொன்னான நேரத்தில் எதைச் செய்தாவது உயிர்களைக் காப்போம்.
'தூங்கற்க தூங்காது செய்யும் வினை' என்ற வழி கற்போம். அதற்கான முயற்சியில் துணை நிற்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.