குறை காண ஏதுமில்லை!

முந்தைய அரசின் ஊழல்கள், தள்ளாடும் நிலையில் கைவிடப்பட்டிருந்த பொருளாதாரம், வெளி வர்த்தகப் பற்றாக்குறை, கொள்கைக் குழப்பங்களால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது.

முந்தைய அரசின் ஊழல்கள், தள்ளாடும் நிலையில் கைவிடப்பட்டிருந்த பொருளாதாரம், வெளி வர்த்தகப் பற்றாக்குறை, கொள்கைக் குழப்பங்களால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. எனவே, தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் முதல் மூன்று நிதிநிலை அறிக்கைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் நோக்கம் கொண்டவையாக மட்டுமே இருந்தன. முந்தைய நிதிநிலை அறிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் ஏற்பட்டிருந்த பாதிப்புகளின் பின்னணியில் அமைந்திருந்தது. 
முந்தைய நிதிநிலை அறிக்கைகளை போலல்லாமல் முற்றிலும் தடைகளற்ற நிலையில் தற்போதைய 2018-19க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் அருண் ஜேட்லி. ஜிஎஸ்டி அறிமுத்தால் சில பாதிப்புகள் இருந்தாலும்கூட அரசுக்கு கணிசமான அளவில் தற்போது வருவாயும் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக அடைந்திருக்கும் வலுவான பொருளாதாரத்தின் அடைப்படையில்தான் இந்த 2018-19 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் சரிவு கண்டு மீண்டெழுந்த உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளும், இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்ட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் (ஜி.டி.பி.) இந்த நிதிநிலை அறிக்கைக்கு வலு சேர்த்திருக்கின்றன.
இதற்கு முன்னர், வங்கிகளின் மீட்க இயலாத வாராக் கடன், அயல்நாட்டு வர்த்தகத்தில் சுமையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஆகிய இரு அம்சங்களும் இந்தியப் பொருளாதாரத்தை மிரட்டுபவையாக விளங்கின. அரசு மேற்கொண்ட துணிச்சலான இரு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் நேர்மறையான சூழல் உருவாகியுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இதுவே தற்போதைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆதாரமாக உள்ளது என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் மூலம் ஆக்கபூர்வமான நான்கு பலன்களை அரசு அடைந்திருக்கிறது. 
1. நேரடியாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; 18 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்த உள்ளனர். அதேபோல, மறைமுக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. 
2. ஜி.எஸ்.டி. வரித்தாக்கல் பதிவுகள், தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தில் செய்யப்பட்ட பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செய்த ஆய்வில், முறைசார்ந்த தொழில்துறையில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 12.5 கோடி என்பது தெரியவந்துள்ளது. இது முன்னர் 2.95 கோடி என்று கருதப்பட்டுவந்தது.
3. ஜி.டி.பி.யுடன் தனிநபர் வரி வசூல் ஒப்பீட்டு விகிதம் 2009-2010 முதல் 2014-15 வரை 1.1 ஆக இருந்தது. இதுவே 2016-17-இல் 1.91 ஆகவும், 2018- 19இல் (2018 ஜனவரி 15 வரை) 2.11 ஆகவும் அதிகரித்துள்ளது. இவை வரி வசூலில் காணப்படும் இணக்கமான சூழலை வெளிப்படுத்துகின்றன. இதனால் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.90,000 கோடி கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது. 
4. நமது பொருளாதாரம் மாபெரும் அளவில் முறைப்படுத்தப்பட இந்த இரு நடவடிக்கைகளுமே காரணம். 
இந்த நிதிநிலை அறிக்கையைப் பொருத்த வரை, நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயனளிப்பதாக அமைந்திருப்பது அதன் சிறப்பாகும். அதைத் தவிர குறிப்பிடத் தகுந்த மற்றொன்று, விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு மிகப் பெரும் முதலீடுகளுடன் தொலைநோக்குத் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அறிவித்திருக்கிறது. விவசாயிகள் சாகுபடிக்குச் செய்யும் செலவைவிட 50 சதவீதம் அதிகமாக, விளைபொருளுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்வதாக நிதிநிலை அறிக்கை உறுதி அளிக்கிறது. 
விவசாய விளைபொருள்கள் உற்பத்தியாகும் கிராம, ஊரகப் பகுதிகளிலேயே டிஜிட்டல் சந்தையை அறிமுகப்படுத்துவதன் மூலமாக, விளைபொருள் கொள்முதலை முறைப்படுத்துவதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய அரசு திட்டமிடுகிறது. ஏனெனில் கிராமப் பகுதிகளில்தான் விவசாய விளைபொருள்கள் பெரும்பாலும் விற்பனையாகின்றன. டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக விவசாயிகளின் விளைபொருள் கிராம எல்லையைத் தாண்டும்போது அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்கும். இதை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை யாரும் கற்பனை கூட செய்திருக்க இயலாது.
இந்த நிதிநிலை அறிக்கை, மகளிர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், இதுவரை கவனம் பெறாதவர் உள்ளிட்டோருக்கு பல நன்மைகளை அறிவித்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய அரசு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை - 10 கோடி குடும்பங்களிலுள்ள 50 கோடி மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டத்தை - இந்த நிதிநிலை அறிக்கை அறிவித்துள்ளது.
முறைசார் தொழில்துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தற்போதைய மத்திய நிதிநிலை அறிக்கைட் உறுதி அளித்துள்ளது. அமைப்பு சாரா சிறு, குறு தொழில்களை மேம்படுத்த உதவும் முத்ரா கடனுதவித் திட்டத்தில் ரூ. 3 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதி சாலை மேம்பாட்டுத் திட்டங்களின் கால எல்லையை 2022-லிருந்து 2019-க்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பங்கு ஏற்கெனவே நிறைவேறிவிட்டது. அது மட்டுமல்ல, தேசிய நெடுஞ்சாலை அமைப்புத் திறனாக நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட்ட 9,000 கி.மீ. என்பதை உயர்த்தி, எதிர்கால இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
நிதியமைச்சர் இதற்கு முன் அறிவித்த இலக்குகளில் நிறைவேறியவை குறித்த பெருமிதத்துடன் எதிர்கால இலக்குகளை உறுதிப்பாட்டுடன் முன்வைத்திருக்கிறார். இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு, மிக ஆழ்ந்து திட்டமிடப்பட்ட நிதிநிலை அறிக்கை என்பதில் சந்தேகமில்லை. அதே சமயத்தில், வெறும் கவர்ச்சித் திட்டங்கள் என்று குறை சொல்லும் விதத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் குறை கூற வாய்ப்புள்ள பிரிவினர் மாதாந்திர ஊதியம் பெறும் நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்கள் எதிர்பார்த்தபடி வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அவர்களையும் நிதிநிலை அறிக்கை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். எனினும், தனி நபர் பொருளாதாரம் சார்ந்தும், தேசப் பொருளாதாரம் சார்ந்தும், இந்த நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் அதிகரிப்பால் வரும் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை விகிதம் 3.3 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. மேலும், அரசின் கடன் சுமை ஜி.டி.பி.யில் 40 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார். பங்குச் சந்தையை விரைவுபடுத்தக் கூடிய மூலதன ஆதாய வரியை மீண்டும் கொண்டுவருவதாக அறிவித்திருப்பது நிதிநிலை அறிக்கையின் துணிவான முடிவு. 
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த நிதிநிலை அறிக்கையில் பொருளாதாரத்தின் அடிப்படைகள் தொடர்பாக குறை காண ஏதுமில்லை. அரசியல் ரீதியாகவும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயனடையும் மாபெரும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை இந்த நிதிநிலை அறிக்கை அளித்துள்ளது. இதுவரை பல பத்தாண்டுகளாக கணக்கில் கொள்ளப்படாதிருந்த மூலதன ஆதாய வரி விதிப்பை அமல்படுத்துவதன் மூலம் அதற்கான நிதித் தேவை சரி செய்யப்படுகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையை இடதுசாரிகள் குறை கூற முடியாது. வலதுசாரிகள் மனக்குறைபடவும் இதில் ஏதுமில்லை. எனவே நிதிநிலை அறிக்கை தேர்வில் நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முழுமையான மதிப்பெண்ணை வழங்கியாக வேண்டியுள்ளது. 
எனினும் இந்தப் பாராட்டு மதிப்பீடு, நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி நிகழ்த்திய உரையின் அடிப்படையில் அமைந்தது மட்டுமே. நிதிநிலை அறிக்கை ஆவணங்களிலுள்ள புள்ளிவிரங்களின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அளிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். நிதியமைச்சர் கூறிய விவரங்களின் நம்பகத்தன்மை அடிப்படையில் அமைந்த, நிதிநிலை அறிக்கை மீதான உடனடிக் கருத்து வெளிப்பாடாக மட்டும்தான் இந்தக் கட்டுரையைக் கருத வேண்டும்.

கட்டுரையாளர்:
ஆசிரியர், துக்ளக் வார இதழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com