முன்கூட்டியே வருமா மக்களவைத் தேர்தல்?

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் (2019) நடத்தப்பட வேண்டும். ஆனால், அண்மைக் காலமாக நடந்துவரும் சில விஷயங்களைப் பார்த்தால் முன்கூட்டியே இத்தேர்தல் வந்து விடுமோ என்ற எண்ணம் எழுகிறது.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் (2019) நடத்தப்பட வேண்டும். ஆனால், அண்மைக் காலமாக நடந்துவரும் சில விஷயங்களைப் பார்த்தால் முன்கூட்டியே இத்தேர்தல் வந்து விடுமோ என்ற எண்ணம் எழுகிறது. அதாவது, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளன்று குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையில் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற யோசனையை வலியுறுத்தியிருந்தார். அதேபோல், பிரதமர் மோடியும் அக்கருத்தை மீண்டும் ஒரு முறை கூறியிருந்தார். 
இதை ஏற்கெனவே சில முறை மோடியும், பாஜகவினரும் கூறியிருந்தாலும், தற்போது மீண்டும் இக்கருத்து கூறப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், மத்தியில் பாஜக கூட்டணி அரசு அமைந்து தற்போது நான்காண்டுகள் ஆகிவிட்டன. 
இந்த ஆண்டில் அக்கட்சியின் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திலும் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்த மாநிலங்களில் சத்தீஸ்கரைத் தவிர, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பாஜக ஆட்சிக்கு எதிரான மனப்போக்கு காணப்படுகிறது என்பதே யதார்த்த நிலை. கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மிகச்சிறப்பானது என்று கூற முடியாவிட்டாலும் பெரிய அளவில் ஆட்சி மீது அதிருப்தி காணப்படவில்லை. எனவே, மேற்கண்ட நான்கு மாநிலத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற நல்ல வாய்ப்பு தெரிகிறது.
இவ்வாறு முக்கியமான மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்தால் அது தேசிய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த மாநிலங்களில் கிடைக்கும் வெற்றியானது காங்கிரஸுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதோடு பல்வேறு மாநிலங்களில் வலுவான மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே, மேற்கண்ட 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுடன் மக்களவைத் தேர்தலையும் நடத்துவது பற்றி பாஜக மேலிடம் பரிசீலிக்கக் கூடும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் செலவு குறையும் போன்ற காரணங்கள் இதற்குக் கூறப்பட்டாலும், காங்கிரஸ் வலுப்பெறுவதைத் தடுப்பதே பாஜகவின் உண்மையான நோக்கமாக இருக்கும்.
பாஜக கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைப் பொருத்தவரை, வேலைவாய்ப்பு உருவாக்கமும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், அக்கட்சியின் நான்காண்டு ஆட்சியில் இதுவரை பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் சிரமங்கள் ஏற்பட்டன. எனினும், அது கருப்புப் பணத்தை ஒழிக்க உதவும் என்ற நம்பிக்கையில் மக்கள் அந்தச் சிரமங்களை பொறுத்துக் கொண்டார்கள்.
மற்றபடி, பாஜகவின் நான்காண்டு ஆட்சியில் மிகப்பெரிய அளவில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் எழாதது அக்கட்சிக்கு சாதகமான அம்சமே. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2ஜி, காமன்வெல்த், ஆதர்ஷ் என்று அடுக்கடுக்காக ஊழல்கள் வரிசைகட்டி நின்றன. தற்போது அந்த நிலை மாறியிருந்தாலும், பொருளாதார ரீதியில் இன்னும் சாதிக்க வேண்டியது ஏராளமாக உள்ளது. 
நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்னை பெரிய அளவில் நீடிக்கிறது. ஆங்காங்கே நடைபெறும் மதவாதச் சம்பவங்களும், பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆகியவற்றின் சில தலைவர்கள் வெளியிடும் உணர்ச்சிகரமான கருத்துகளும் ஒருசாராரிடையே வெறுப்பையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மத்திய அரசு ஆட்சி மீது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வெறுப்பும் காணப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு வரை காத்திராமல் முன்கூட்டியே தேர்தலை நடத்தினால் அது ஆட்சியைத் தக்க வைக்க உதவும் என்று பாஜக தலைவர்கள் கருதலாம். கடந்த 2004-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சில மாதங்களுக்கு முன்பே மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொண்டது. 
அப்போது அந்த முயற்சி அக்கட்சிக்கு கைகொடுக்கவில்லை. தமிழ்நாடு, பிகார், உத்தரப் பிரதேசம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு சரியான கூட்டணி அமையாமல் போனதும், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் வலுவான கூட்டணிகளை அமைத்ததும்தான் பாஜகவின் தோல்விக்கு வழிவகுத்தது. இவற்றையும் பாஜக தலைவர்கள் கருத்தில் கொள்வார்கள்.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் மூன்று கட்சிகள்தான் முக்கியமானவை. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையே அவை. இந்தக் கட்சிகளில் சிவசேனைக்கும் பாஜகவுக்கும் நல்லுறவு இல்லை. ஆந்திர பாஜகவினரின் தொடர்ச்சியான விமர்சனம் காரணமாக கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாமா என்ற யோசனையில் சந்திரபாபு நாயுடு இருக்கிறார். 
ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாஜகவுக்கும் இடையே பெரிய நெருடல் ஏதுமில்லை. ஆனால், 'கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற அடிப்படையிலேயே அடுத்த மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு செய்யப்பட வேண்டும் ' என்று பிகார் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். அதன்படி, பார்த்தால் பிகாரில் வரும் மக்களவைத் தேர்தலில் நிதீஷ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். அப்படி ஒரு நிபந்தனையை பாஜக மேலிடம் முன்வைத்தால் நிதீஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியேறத் தயங்க மாட்டார்.
இவ்வாறு கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி அதிகரித்து உறவில் விரிசல் ஏற்படும் முன்பு மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்று பாஜக முடிவெடுத்தால் அதில் வியப்படைய ஏதுமிருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com