குடியரசு என்னும் கொள்கை

இந்தியாவின் 69-ஆம் குடியரசு தினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
Updated on
3 min read

இந்தியாவின் 69-ஆம் குடியரசு தினம் நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. புதுதில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பைப் பார்வையிட்டுள்ளார். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 10 நாடுகளின் (ஆசியான்) தலைவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வீரர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியரசு தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, இளைஞர்களே இந்தியாவின் நம்பிக்கை என்றும், மக்களே ஜனநாயகத்தின் தூண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
'மக்களே ஜனநாயகத்தின் தூண்கள். அந்த வகையில் ஒவ்வொருவரும் ஒரு தூணாக விளங்குகிறார்கள். ஒரு ராணுவ வீரர் நமது குடியரசைக் காக்கிறார். ஒரு விவசாயி நமது குடியரசுவுக்கு உணவு அளிக்கிறார். ஒரு விஞ்ஞானி புதியவைகளைக் கண்டுபிடிக்கிறார். ஒரு பழங்குடி இனத்தவர் இயற்கையைப் பாதுகாக்கிறார். ஒரு பொறியாளர் நாட்டை வடிவமைக்கிறார். ஒரு கட்டுமானத் தொழிலாளி நாட்டைக் கட்டி எழுப்புகிறார்.
அனைவரும் சரிசமம், மதச்சார்பின்மை, நட்பு ஆகியவையே நமது நாட்டின் அடிப்படைக் கொள்கைகள். அந்த வகையில் நாட்டு மக்கள் அனைவரும் சரிசமம். இதில் மதம், மாநிலம், சமுதாயப் பாகுபாடு கிடையாது. மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைந்த இளைஞர்கள், அவர்கள் நமது நாட்டின் எதிர்காலம்' என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசம் விடுதலையடைந்து 71 ஆண்டுகளும், குடியரசாகி 69 ஆண்டுகளும் ஆகிவிட்ட பிறகும் நாட்டில் வறுமை யொழிப்பு பேச்சளவிலேயே இருக்கிறது. நாட்டு மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே உள்ளனர்; படித்த இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு என்பது இன்னும் எட்டாத தொலைவிலேயே இருக்கிறது.
பருவ நிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் விவசாயிகளின் வருவாய் 20 முதல் 25 விழுக்காடு அளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது. இதில் கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
நாட்டின் வேளாண்மைத் துறைக்கான நீர்ப்பாசனத் திட்டத்தில் மிகப் பெரிய மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்றும், நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவது உள்பட வேளாண் துறை உற்பத்திக்காகத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம்தான் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கை அடைய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேசத்தின் உணவுத் தன்னிறைவுக்காகப் பாடுபடும் விவசாயிகளுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை வரை சென்றுவிட்டனர். நெற்களஞ்சியம் என்று பேசப்படும் காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் சிதைந்து கொண்டே போகிறது.
எரிவாயு மற்றும் மீத்தேன் எடுப்பதன் காரணமாக பொன் கொழிக்கும் பூமி பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கு எப்போது நிறைவேறும்?
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பைத் தரும் துறையாக சில்லறை வணிகமே உள்ளது. ஒற்றை முத்திரை சில்லறை வணிகத்தில் தங்கு தடையற்ற 100 விழுக்காடு நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக மாறியுள்ளது. பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இத்துறையில் இறங்கினால் நம்நாட்டு சிறு குறு தொழில்கள் நசுங்கிப் போகாதா? மேக் இன் இந்தியா திட்டம் இதுதானா? குடியரசைக் கொண்டாடும் நேரத்தில் குடிமக்களையும் கொண்டாட வேண்டாமா?
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.75 விழுக்காடாக உள்ளது. இது 2018-19ஆம் நிதியாண்டில் 7 முதல் 7.5 விழுக்காடாக இருக்கும். உலகில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா தொடர்ந்து முன்னேறும். இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் அதற்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆனால் உண்மை நிலை என்ன? இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இந்தியாவில் உள்ள ஒரு விழுக்காடு செல்வந்தர்களிடம் 58 விழுக்காடு சொத்து குவிந்துள்ளது என்றும், பன்னாட்டு அளவுடன் ஒப்பிடுகையில் 50 விழுக்காடு அதிகம் என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தன்னார்வ உரிமைகள் குழுவான ஆக்ஸ்ஃபாம் உலகப் பொருளாதார மைய மாநாட்டின் பரிசீலனைக்காக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி இதில் பட்டியல் இடப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 7 பெரும் செல்வந்தர்களிடம் 21,600 கோடி டாலர் குவிந்துள்ளது. இது இந்தியாவின் 70 விழுக்காடு மக்களிடம் உள்ள சொத்துக்களின் மதிப்புக்கு இணையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் 8 பெரும் கோடீஸ்வரர்களிடம் குவிந்துள்ள தொகையானது உலக மக்கள் தொகையில் 50 விழுக்காடு பேரிடம் குவிந்துள்ள தொகைக்கு இணையாக உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 84 கோடீஸ்வரர்களிடம் ஒட்டுமொத்தமாக 24,800 கோடி டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. இந்த ஆய்வறிக்கைக்கு 99 விழுக்காடு மக்களுக்கான பொருளாதாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டிலிருந்து செல்வந்தர்களாக உள்ள ஒரு விழுக்காட்டினர்தாம் தொடர்ந்து செல்வம் ஈட்டியுள்ளனர். மற்றவர்களின் நிலை எப்போதும் போலவே உள்ளது என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் 500 கோடீஸ்வரர்களிடம் 210 லட்சம் கோடி டாலர் இருக்கும் என்றும், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஜிடிபியைவிட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
இங்கே ஏழைகளின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 விழுக்காடு சரிந்துள்ளது. பணியிடங்களில் ஊதியம் வழங்கலில் பாரபட்சம், பெண்களுக்குக் குறைவான ஊதியம் ஆகியவை ஏற்றத் தாழ்வுக்கான முக்கிய காரணங்களாகும்.
பெண்களைவிட ஆண்களுக்கு 70 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இது இயற்கை நியாயத்துக்கு எதிரானது; வயிறும், வாழ்க்கையும் இரு பாலார்க்கும் சமமானது என்பதை யாரும் மறுக்க முடியாது அல்லவா!
சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் பொருளாதார சமத்துவத்தையும் முன்வைத்துப் போராடினார்கள். அதனைக் கூறியே தேச விடுதலைக்கு அனைத்து மக்களையும் அணி திரட்டினர்.
ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்பது
இந்தியாவில் இல்லையே 
என்று பாரதி பாடினார். புதுதில்லியில் இருக்கும் அரண்மனைகளுக்கும் பரிதாபகரமான தொழிலாளர்களின் குடிசைகளுக்கும் இருக்கும் இந்த வித்தியாசம் சுதந்திர இந்தியாவில் ஒரு நாளைக்குக் கூட இருந்து வர முடியாது என்று தேசப்பிதா காந்தியடிகள் உறுதி கூறினார். விடுதலை பெற்ற நாட்டில் பாலும் தேனும் பாயும் என்றார்கள்.
சுதந்திர இந்தியாவில் நாட்டின் மிகப்பெரிய செல்வந்தருக்கு இருக்கும் அதே அதிகாரமே ஏழைக்கும் இருக்கும். செல்வத்தையும், அதிகாரத்தையும் எல்லோருக்கும் பொதுவான நன்மைக்காகப் பங்கிட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்று தேசியத் தலைவர்கள் கூறினர். ஆனால் விடுதலை பெற்ற நாட்டில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
முடியாட்சியின் கொடுங்கோன்மையைத் தாங்க முடியாமல்தான் மக்கள் புரட்சி செய்து குடியாட்சியைக் கொண்டு வந்தனர். குடியாட்சியும் மக்களைப் புறக்கணித்துவிட்டு குடியரசு விழாவைக் கொண்டாடுவதால் பயன் என்ன? சுதந்திர தினமும், குடியரசு தினமும் அரசு விழாவாக மட்டும் இல்லாமல் அனைத்து மக்களும் கொண்டாடும் விழாவாக இருக்க வேண்டும். குடியரசு என்பது கொடி ஏற்றுவதோடு முடிந்து விடுவதில்லை. 
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
என்று தேசத்தின் இலக்கணமாகக் குறள் கூறுகிறது.
பசியும், பிணியும், பகையும் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவாக இருந்தது. நாடு வல்லரசாக இருப்பதை விட நல்லரசாக இருக்க வேண்டும் என்பதையே நாட்டு மக்களும் விரும்புவர்.
மனித உறுப்புகள் எல்லாம் ஒரே சீராக வளர்வதையே வளர்ச்சி என்று கூறலாம். சில உறுப்புகள் மட்டும் பெருத்துக் கொண்டு போவது வளர்ச்சியல்ல, நோயாகும். இது நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பொருந்தும்.
சமுதாய ஏற்றத் தாழ்வுகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் ஒழிக்கப்படாமல் வல்லரசுக் கனவுகளால் வாழ்க்கை கிடைக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com