குறைந்துவரும் பெண்களின் வேலைவாய்ப்பு

இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு (நேஷனல் சாம்பிள் சர்வே) புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Updated on
2 min read

இந்தியாவில் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு (நேஷனல் சாம்பிள் சர்வே) புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் 10ஆண்டுகளுக்கு முன்பு பெண்களில் 43 சதவீதம் பேர் வேலைக்குச் சென்றனர். ஆனால் இப்போது வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக குறைந்துவிட்டது. நேபாளம் (80 சதவீதம்), சீனா (64 சதவீதம்), அமெரிக்கா (54 சதவீதம்), இலங்கை (36 சதவீதம்), இந்த நாடுகளை விட இந்தியா பின் தங்கியுள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.
வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம், ஆணாதிக்கம், சாதிய முறை, கலாசாரம், மகப்பேறு, பேறுகால விடுப்புக்குப் பிறகு பெண்களை வேலைக்குச் சேர்க்க தனியார் நிறுவனங்கள் தயங்குவது, பாலியல் தொல்லை காரணமாக வேலைக்குச் செல்வதில் தயக்கம், குழந்தைகளுக்காகவே சிலர் வேலையை விட்டுவிடுவது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.
சென்னை, அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக பாலியல் சமத்துவம் என்பது பணி நேரத்திலும் இல்லை. சம்பளத்திலும் இல்லை.
சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சில மருந்து கம்பெனிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 16 முதல் 20 வயதுகுட்பட்ட பெண்களே அதிக அளவில் பணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆய்வை மேற்கொண்ட குழுவிற்கு பெண்களுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று வியப்பை ஏற்படுத்தியது.
ஆனால் நிர்வாகத்தின் தந்திரத்தை அறிந்தபோது வேதனையும், மனவலியும் மிஞ்சியுள்ளது. "பெண்கள் பொறுமையாக இருப்பார்கள். சொன்ன வேலையைச் செய்வார்கள். கொடுத்த கூலியை வாங்கிக் கொள்வார்கள். கொடி பிடிக்க மாட்டார்கள். கோஷம் போட மாட்டார்கள். அதனால் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை' என்று நிர்வாகம் கூறியபோது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதைவிட கொடுமையான விஷயம், சில நிறுவனங்களில் திருமணமான பெண்கள் வேலைக்கு சேர்க்கப்பட மாட்டார்கள். திருமணமாகி குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் பலம் இருக்காது. அவர்களால் நிறுவனத்திற்கு பணி ஆதாயம் இல்லை என்பது அந்த நிர்வாகங்களின் எண்ணம். அதனால் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை. அதையும் மீறி சில பெண்கள் தங்களுக்கு திருமணம் ஆனதை மறைத்து வேலைக்கும் வருகின்றனர் என்பதும் உண்டு. காரணம் குடும்பத்தின் வறுமை.
பெருமளவில் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களை கையாளக் கூடிய மருந்து நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு சரியான பணி தொடர்பான பாதுகாப்பு இல்லை. இதனால் பெண்களின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாதவிடாய் தொல்லை உட்பட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றிற்கு முறையான சிகிச்சைகள், பாதுகாப்பு முறைகள் இல்லை. சென்னையின் பல தொழிற்பேட்டைகளில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கும் இதே நிலைதான்.
இன்னும் புள்ளி விவரங்களை நுட்பமாகப் பார்த்தால் இன்னொரு புறம் பெண்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பை இழந்திருப்பது வேளாண்மையில்தான் என்பது தெரிய வருகிறது. 2000-ஆம் ஆண்டில் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்ட 15 வயது முதல் 59 வயது வரையிலான பெண்கள் 44 சதவீதம். இது 2012-இல் 29 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குறைந்தபட்சம், 20 சதவீதமாக சரிந்திருக்கலாம் என்று புள்ளி விவபரம் மதிப்பீடு செய்துள்ளது.
2000-ஆம் ஆண்டில் சில்லறை விற்பனைக் கடைகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 சதவீதம். இது 2012-இல் 3 சதவீதமாக அதிகரித்துள்ளது. கட்டுமானத் துறை பணிகளில் 2000-ஆம் ஆண்டில் 1.5 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2012-இல் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபோல் ஜவுளி மற்றும் ஆடைகள் தயாரிப்புத் துறையிலும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.5 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தப் புள்ளி விவரங்களின் எச்சரிக்கையாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது - கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பு மட்டும் முடித்த பெண்கள் வேலை வாய்ப்பு சரிந்துள்ளதால் ஏதாவது சிறிய வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்துள்ளது. விவசாயம் நஷ்டம் என்று பலரும் கைவிடுவதால் வேளாண்மை வேலை வாய்ப்பு குறைகிறது. எனவே விவசாய புத்துயிர்ப்பு திட்டங்களை விரிவாக, விரைவாக முழு உறுதியோடு அரசு செயல்படுத்த வேண்டும்.
பெண்களின் வேலை வாய்ப்பு இழப்பை 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்தவர்கள், பிளஸ் 2 வரை படித்தவர்கள், பட்டதாரிகள் என்று வகை பிரித்தும் தொழில்துறை வாரியாகவும் கணக்கிட்டு சரியான தீர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்பப் பயிற்சி வாய்ப்புகளால் பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல், தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாநிலத்தின் மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் தொழிற்சாலைகளில் பெண்கள் நிர்பந்தங்கள் இல்லாமல் தைரியமாகவும், சுதந்திரமாகவும், தன்மானத்துடனும் சம ஊதியத்துடன் பாலியல் அச்சமின்றி வேலைக்குச் செல்வதற்கு அரசும், நிறுவனங்களும், சட்டங்களும் வழிவகை செய்திட வேண்டும். அப்போதுதான் குறைந்து வரும் பெண்களின் வேலைவாய்ப்புக்கு முடிவு கட்ட முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com