கண் நுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெளிந்து ஆய்ந்த பைந்தமிழ்' என்றபடி, சிவபெருமான் ஆராய்ந்த தமிழின் ஓசை உலகெங்கும் பரவட்டும். அந்த மூல மந்திரத்தின் கர்ப்பகிரகம் தமிழகமாக இருந்தால்தானே சிறப்பு!
தமிழன் என்ற சொல் வெறும் இன அடையாளச் சீட்டு அல்ல. தமிழகத்தில் இருந்தபடி தொட்டதற்கு எல்லாம் "நான் தமிழன்' என்று யாரேனும் சொன்னால் அதன் நம்பகத்தன்மை குறையும். சந்தையில் "இங்கு நல்ல மீன் கிடைக்கும்' என்றால், மற்றவர்கள் நொள்ளை மீனையா விற்கிறார்கள் என்கிற பகுத்தறிவு முளைப்பது இயல்புதானே?
ஆனாலும், உலகில் வருங்காலத் தமிழர்களை வாழிடம் அன்றி, பயன்நிலை தளத்தில் நால் வகையாகக் காணலாம். தமிழில் பேச, வாசிக்க, எழுதத் தெரிந்து புரிதலுடனும் பண்பாட்டுடனும் வாழ்பவன் முழுத் தமிழன்'. தமிழ் எழுத வராது என்றால் "முக்கால் தமிழன்'. எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்ற நிலை} "அரைத்தமிழன்'. அதில் பேசவும் வராது என்பவன் "கால் தமிழன்'. தமிழ்ப் பண்பாடே புரியாதவன் தமிழனே அல்ல.
இளமையிலேயே தமிழில் கற்றுக்கொள்ள என்னவெல்லாம் தொழில்நுட்ப அறிவுச் சமாசாரங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சி செய்வதற்கு முழுத் தமிழர்களால் மட்டுமே முடியும். கால்டுவெல் வகுத்த "திராவிடம்' போன்ற கருத்தாக்கத்தில் தமிழ்மொழி மீதான வரலாற்றுப் பார்வைக் குறைபாடு உண்டு என்று கருதத் தோன்றுகிறது. தமிழர்தம் பண்பாட்டுப் புரிதல் இன்றித் தவறான கருத்துகளையும் ஆங்கிலேயர்கள் முன்வைத்து உள்ளனர்.
ஏற்கெனவே தமிழ் வெறும் பாடமாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் கற்றுத் தரப்படுகிறதாம். அமெரிக்காவில் கலிஃபோர்னியா (பெர்க்ளி) பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், ஆஸ்டினில் டெக்சாஸ் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனாலும் ஹார்வர்டு பல்கலையில் இருக்கைக்கு மட்டும் ஏன் இத்தனை ஒளிச் சிறகுகள்?
"உங்கள் கைப் பணத்தை எங்களுக்கு அனுப்புங்கள். நாங்கள் ஆராய்ந்து உங்கள் மொழிவளத்தை அறிவிக்கிறோம்' என்கிறார்களா? அமெரிக்காவின் பழைமையான பல்கலைக் கழகம் என்ற "பேனர்' இருந்தால் போதுமாம். தமிழ் வளருமாம்.
உலக அழகியே ஆனாலும் வாடகைத்தாய் பெற்றுத் தருவதற்குத் தமிழ் என்ன சோதனைக் குழாய்க் குழந்தையா? ஆய்வுகள் ஆர்டருக்குச் செய்வதற்குத் தமிழ் ஆடம்பரச் சரக்கும் அல்ல.
பண்டைய திரமிளர் (தமிழர்) வடமொழி என்று பொதுவாகச் சுட்டப்பெறும் பாலி, பிராகிருத , சம்ஸ்கிருத மொழிகளோடு வாதாடியும், போராடியும் வாழ்ந்தனர். வாரணாசி, துவாரகை, சிரவண பெலகுளா, காஞ்சிபுரம், மாபலிபுரம், ஆதிச்ச நல்லூர், கீழடி, திருவிதாங்கோடு என்று தமிழின் கள ஆய்வுக்கான இடங்கள் இங்கே இருக்கின்றன. வெறும் புத்தக ஆய்வினை வைத்துக் கொண்டு பாடம் நடத்தும் எந்த ஆராய்ச்சிக்கு நாம் வலுச்சேர்க்க உதவுகிறோம் என்று தெரியவில்லை. நூல்களையும் பழஞ்சுவடிகளையும் மின்னணு முறையில் பத்திரப்படுத்த இந்தியாவில் வசதிகள் உள்ளன.
மனதளவில் என்றைக்கும் நாம் அன்னிய அடிமைகள். மேனாட்டவன் உதிர்த்தால்தான் அங்கீகாரம் என்று அலமந்து போகிறோம். 1910}ஆம் ஆண்டு ஹேலி விண்மீனைப் பார்த்து பாரதி வருந்திப் பாடிய கவிதை இது} "உனது இயல் அன்னியர் உரைத்திடக் கேட்டே தெரிந்தனம்; எம்முளே தெளிந்தவர் ஈங்கு இல்லை' என்று.
தமிழுக்கு அந்நிலை வரக் கூடாது. 1944}ஆம் ஆண்டு அந்நாளைய திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் ஆகிய கேரள பல்கலைக்கழகத்தில் முதன்முறையாகத் தமிழ்த்துறை உதித்தது. வள்ளல் ஆர்.எம்.அழகப்ப செட்டியார் அளித்த ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் நன்கொடையில் அங்கு தமிழ்த்துறை பிறந்தது.
முதலாவது தலைவரான மு.இராகவையங்கார் தொடங்கி, எஸ். வையாபுரிப் பிள்ளை, வ.அய்.சுப்பிரமணியம், ச.வே.சுப்பிரமணியம், மா.இளைய பெருமாள், க.ப.அறவாணன், இராம.சுந்தரம், கி.நாச்சிமுத்து, தமிழவன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இரா.இளவரசு போன்ற அறிஞர் பலர் தமிழகத்திலும், போலந்து வார்சா பல்கலைக்கழக இருக்கைகளிலும் சத்தமே இன்றிச் சாதனைகள் படைத்தனர்.
பண்டைக் காலத்தில் சமணம் } பெüத்த சமய பேதங்கள், சூரசேனி}பாலி மொழி வாதங்கள், பின்னர் சைவம் } வணவ மதங்கள், தொடர்ந்து ஆரிய } திராவிட வேற்றுமைகள் என்று காலந்தோறும் கருத்தாக்கங்களும் இலக்கியப் பின்னணிகளும் மாறிவந்துள்ளன. இன்றைக்கு அறிவியல் தமிழ் யுகத்தில் மீண்டும் பழைய பாகுபேத ஒட்டுண்ணிகளை உலவ விட்டு என்ன வளர்க்கப் போகிறோம்?
ஆன்மாவைத் தேடுவது அல்ல, பிறர் ஆன்மாவைத் தொட முயல்வதுவே ஆன்மிகம் என்பான் பாரதி. அவனுக்குள் "பரசிவ வெள்ளம்' ததும்பி வழிவதைப் பாருங்கள். "யாதுமாம் ஈச வெள்ளம் என்னுள் நிரம்பியது என்று ஒதுவதே போதும், அதை உள்ளுவதே போதுமடா. காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா; பாவித்தல் போதும், பரமநிலை எய்துதற்கே. சாத்திரங்கள் வேண்டா, சதுர்மறைகள் ஏதுமில்லை. தோத்திரங்கள் இல்லை; உளம் தொட்டு நின்றால் போதுமடா.'
இன்று அறிவியலால், தொழில்நுட்பத்தால் மட்டுமே இன்றைய இளைஞர்களின் அறிவையும், ஆன்மாவையும் தொட முடியும். அதனால் இங்கே இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் சம்ஸ்கிருத இருக்கை வருகிறது. நாமோ நமது இருக்கையினைப் பெட்டி படுக்கையோடு ஹார்வர்டிற்குத் தயார் செய்கிறோமா?
"மேக் இன் தமிழ்நாடு' என்ற திட்டம் நமக்கும் தேவை. அறிவியல் தமிழ்த்துறை இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு இடம் இருக்கிறதே. அதன் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம், யாரேனும் தன் மீது குற்றம் கண்டால், முதல்வரிடம் சேர்ப்பிக்குமாறு, முன் கையெழுத்து இட்ட ராஜிநாமா கடிதத்தை மேசை மீது எழுதி வைத்து இருந்தார். அத்தனைக்கு நேர்மையான தொலைநோக்காளர் சிந்தையில் பூத்த பன்னாட்டுத் திராவிட மொழியியல் மையமும் திராவிடப் பல்கலைக்கழகமும் ஏன் தமிழகத்தில் கால்கோள் நாட்டவில்லை? திருவனந்தபுரத்திற்கும், குப்பத்திற்கும் அனுப்பி வைத்த திராவிடர்களின் தாயகம் தமிழகம் அல்லவா?
"தமிழூர்' ச.வே.சுப்பிரமணியம் முதன்முதலாக இயக்குநர் ஆன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழி உயராய்வு மையம், ஆசியவியல் கழகம் எங்கும் தமிழ் ஆராய்ச்சிக்கு 144 தடை உத்தரவு இருக்கிறதா என்ன?
14000 கிலோமீட்டருக்கு அப்பால் ஓர் இருக்கைப் பேராசிரியர், ஆய்வுக்காக என்ற பெயரில் தேவைப்பட்டால் தமிழர்தம் கல்வெட்டுகள், சிலைகள், சிற்பங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஏற்றுமதி செய்யும் உரிமை யார் வசம் உள்ளது? தொல்பொருள்கள் அயல் நாட்டில் பத்திரமாக இருக்குமாம். இந்திய வருமான வரி ஏய்ப்புத் திருடர்களும் அங்கு ஜீவாந்தரம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள்.
மேனாட்டு இருக்கைக்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவையாம். 40 கோடி ரூபாய். இங்கு ஒரு சுயேச்சை வேட்பாளரே கூட இதைவிட இரண்டு மடங்கு செலவு செய்து தேர்தலை நிறுத்திவிட முடிகிறது. அயலகத் தமிழர்கள் இந்தச் "சிறு' தொகைக்காக தமிழக மக்களிடம் கை நீட்ட வேண்டுமா? அமெரிக்காவிலேயே 33}க்கும் கூடுதலான தமிழ்ச்சங்கங்களால் திரட்ட முடியாத நிதியா?
இருக்கை என்று வந்தால் அங்கும் "விருது அரசியல்' போன்ற சார்புநிலை உண்டாகிவிடும். நன்கொடையாளர்களில் எந்தக் கட்சிப் பேராசிரியரை யார் தீர்மானிப்பது என்பதில் தொடங்கி, யார் வீட்டுப் பிள்ளைகளை ஆய்வு மாணவர் சேர்க்கையில் உட்படுத்துவது என்பது வரை சர்வதேசப் பிரச்னை எழும். தமிழ்நாட்டுப் பிரபலங்கள் நினைத்தால் ஆடத் தெரியாதவரையும் ஐக்கிய நாடுகள் சபை வரை அனுப்பும் அவலமும் நிகழும்தானே.
உள்ளபடியே, இங்கு தமிழ்ப் பிராமியின் தந்தைக்கு எண்பது வயதில் வழங்கப்படும் "பத்ம' விருது, பணத்துக்குப் பாட்டு எழுதினால் ஐம்பது வயதிலேயே வாய்க்கிறது.
சொந்தச் செலவில் ஊர்கள்தோறும் சென்று மாணவ சமுதாயத்திற்குத் தொண்டு செய்பவர்கள் அப்பாவி மயில்வாகனர்கள் இங்கே சில அண்ணன்கள் சென்னையிலோ தில்லியிலோ இருந்த இடத்தில் அம்மை அப்பரைச் சுற்றிவந்து ஞானப் பழமோ (விருதோ?) பெற்று விடுவது சர்வ சகஜம்.
நன்கொடை வழங்கிய கையோடு தமிழ்ப் பத்ம விருதாளர்கள் இன்றைக்கே ஹார்வர்டில் அரசியல் உரையாற்றத் தொடங்கி விட்டனர். வேறு சிலர் சர்வதேச விருது வாங்குவதற்கு மேடை போட்டு அளித்தது முன்பணமாகவும் தோன்றுகிறது.
"நீயோ தர்மஞ் செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக் கடவது" (மத்தேயு 6:3) என்கிறது பரிசுத்த வேதாகமம்.
இதற்கிடையில், ஒரு கோடி வலைதளங்களில் கையாளப்படும் உலக மொழிகளின் வரிசையில் ஆங்கிலம் 51.2 சதவீத இடத்தை ஆக்கிரமித்து விட்டது. அதனால்தானோ என்னவோ சிலர், ஆண்டவனுக்கு வருத்தம் தெரிவிக்க ஆங்கிலத்தில் "சப்}டைட்டில்கள்' போடுகிறார்களோ? மூர்ச்சை ஆகிவிடாதீர்கள், இணையதளத்தில் தமிழ்ப்பயன்பாடு வெறும் 0.1 சதவீதம். 39}ஆம் இடத்தில் இருக்கிறோம்.
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழும் சம்ஸ்கிருதம், ஹீப்ரு, சீனம், லத்தீன், கிரேக்கம், பாரசிக மொழிகள் வரிசையில் இடம்பெறுமாம்.
மெல்லத் தமிழைப் பயன்பாட்டு மொழியாகக் கோபுரம் எழுப்பாமல், இன்றைக்கும் செங்கல் செதுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறோமே. தமிழன் பெருமைகளை மட்டுமே ஆராயத் துடிக்கிறோம். இதுவரை எழுதப்படாத அறிவியல், தொழில்நுட்பங்களைப் பதிவு செய்தாலே தமிழ் நிலைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.