காவிரி ஆற்றின் மாசுத்தன்மை குறித்து ஆய்வு செய்த அண்ணா பல்கலைக் கழகத்தின் புவியியல்துறையை சார்ந்த போராசிரியர் மாணவர்கள் அடங்கிய குழுவினர் ஸ்பிரிங்கர் நேச்சரின் சர்வதேச புவி சுற்றுச்சூழல் அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரை இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, 4 மாதங்களுக்கு ஒருமுறையாக ஒராண்டில் 3 முறை வீதம் 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நீரியல் ஆராய்ச்சி முடிவுகளின் தொகுப்பு ஆகும். காவிரி மட்டுமல்ல அதன் துணை ஆறுகளை மையப்படுத்தி எண்ணற்ற ரசாயன மற்றும் சாயத்தொழிற்சாலைகள் எப்போது வந்தனவோ அப்போதே காவிரி ஆற்றுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிட்டது.
தோல் ஆலைக்கழிவுகள், சாயக் கழிவுகள், காகித ஆலைக்கழிவுகள், சாம்பல் கழிவுகள் உட்பட பல விதமான கழிவுகள் காவிரியில் பாயத்தொடங்கின. இதனால் காவிரி ஆற்று நீரின் தரம் படிப்படியாக குறைந்துவிட்டது. காவிரியின் முகத்துவாரமான பூம்புகாரில் தொடங்கி உற்பத்தியாகும் தலைக்காவிரி வரையிலான பகுதிகளில் 25கி.மீட்டர் தூரத்துக்கு ஒரு இடம் என்று பிரித்து மொத்தம் 28 இடங்களில் நீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த நீர் மாதிரிகள் காவிரி ஆற்றிலும் ஆற்றின் கரையிலுமிருந்து அதிகபட்சமாக 300 மீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
காவிரியில் கலந்துள்ள மாசு காரணமாக அந்நீரைக் குடிக்கவும் விவசாயத்துக்கு எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதையும் அறிவதே இந்த குழுவின் பிரதான நோக்கம் என்று தெரிவித்துள்ளனர்.
குடிநீரில் என்னென்ன தாது உப்புகள் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்ற வரையறையை பிஐஎஸ் என்ற இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அலுமினியம், அமோனியா, கால்சியம், குளோரைடு, தாமிரம் புளுரைடு, இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், நைட்ரேட் உள்ளிட்ட பல வகையான உப்புகளும் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆற்று நீரோட்டம் அதிகமாக இருந்த இடங்களில் காவிரியின் நீர் குடிக்கும் வகையில் இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அமராவதி நொய்யல் ஆற்றின் படுகைகளிலும் அவை காவிரியில் கலக்கும் இடங்களிலும் தண்ணீரில் சோடியம், குளோரைடு, பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவற்றின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் அவற்றை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இதில் இன்னொரு அதிர்ச்சியும் உள்ளது. காவிரிக் கரையோரத்தில் இருந்து இரு பக்கங்களிலும் தலா 300 மீட்டர் தூரத்துக்கு நிலத்தடி நீர் சோதனை நடைபெற்றது. இதில் பூம்புகார் பண்ணையூர், திருவலஞ்சுழி, கண்டியூர்பாலம், ஸ்ரீராமசமுத்திரம், கிழக்கு தவிட்டுப்பாளையம், மேக்கேதாட்டு, ருத்ரபட்டினம் உள்ளிட்ட 10 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடிநீரில் அதிகப்படியான சோடியம், குளோரைடு பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை இருந்ததால் அவற்றை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பது உறுதியானது. அதேபோல் பூம்புகார் பண்ணையூர், ஸ்ரீராமசமுத்திரம், குளித்தலை கிழக்குதவிட்டுப்பாளையம் மேக்கேதாட்டு, டி.நரசிபுரா ஆகிய பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்தது.
இப்போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டும் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளது. காவிரிக் கரையோரம் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் கழிவுகளை சுத்திகரிக்காமல் அல்லது ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யாமல் வெளியிட்டால், நேற்று நொய்யல் ஆற்றுக்கு ஏற்பட்ட மோசமான நிலை, நாளை காவிரிக்கும் ஏற்படலாம் என்பதே ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கட்டுரையின் ரத்தின சுருக்கமாக உள்ளது.
தொழில் வளர்ச்சியை மறுக்க முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கலாம். குறிப்பாக பவானி நொய்யல் மற்றும் அமராவதியை மாசுபடுத்தும் சாயக் கழிவுகள் சலவை ஆலைக் கழிவுகள் பேப்பர் ஆலைக் கழிவுகள் ஆகியவற்றை முறைப்படி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழியாக செலுத்தி அவற்றின் ரசாயன மற்றும் உப்பு அளவுகளை குறைக்க வேண்டும. குறிப்பாக திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளின் பயன்பாட்டுக்காக பொது சுத்திகரிப்பு யூனிட்களை உடனடியாக உருவாக்கி சுத்திகரிப்பு செய்து சாயக் கழிவுகளை கடலில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
சாயக் கழிவுகள் மற்றும் பேப்பர் ஆலைக் கழிவுகள் நேரடியாக ஆறுகளில் கலந்திட தடை விதிக்க வேண்டும். அதேபோல் நகர்மயமாதலால் உருவாகும் கழிவுகளை பெரிய நகரங்களில் மட்டுமே சுத்திகரிக்கின்றனர். சிறிய பஞ்சாயத்துக்கள் மற்றும் நகர பேரூராட்சிகள் பகுதிகளில் கழிவுகள் அப்படியே ஓடைகள் வழியாக காவிரியில் பாய்கிறது. எனவே, சிறிய ஊராட்சி அமைப்புகள் கழிவுநீரை சுத்திகரிப்பு
செய்து வெளியேற்றிடவேண்டும். இதுதான் காவிரியை இப்போதைக்கு காப்பாற்றும் அவசர நடவடிக்கையாக இருக்கும் என்று ஆய்வின் சுருக்கம் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் உள்ள முக்கியமான 275 பெரிய- சிறிய நதிகள் தொழிற்சாலைக் கழிவுகளால் மாசு அடைந்து கொண்டிருப்பதாக தேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கவலை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் காவிரி உள்பட 7 ஆறுகள் தொழிற்சாலை நகர்மயக் கழிவுகளால் கடுமையாக மாசடைந்து கொண்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாயிகளுக்கும் ஆற்று நீரைக் குடிநீர் தேவைக்காக நம்பிக் கொண்டிருக்கும் கோடிக்காணக்கான மக்களுக்கும் நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்காது என்பது மட்டும் உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.