'வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதையே வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் நாடு அமெரிக்கா' என்ற பெயருக்கு மேலும் 'பெருமை' சேர்ப்பதுபோல உள்ளது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் செயல்பாடு. ஈரானில் இப்போது அரசுக்கு எதிராக நிகழ்ந்து வரும் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தாத போராளியாக டுவிட்டர் சமூக வலைதளம் மூலம் கிளர்ச்சியூட்டி வருகிறார் டிரம்ப்.
ஈரானில் வன்முறை வெடித்த கடந்த ஒரு வாரத்தில் டிரம்ப்பின் டுவிட்டர் பதிவுகளில் பாதிக்குமேல் ஈரான் பிரச்னையை மையமாகக் கொண்டே அமைந்தன. ஈரான் மக்கள் தங்கள் உரிமைக்காகவும், நன்மைக்காகவும் போராடுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருகிறார்.
வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாட்டை ஈரான் அரசு தாற்காலிகமாக முடக்கியது. இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து ஈரானிய மக்களின் கருத்துரிமையும் சுதந்திரமும் பறிக்கப்படுவதாக டுவிட்டரில் கடுமையாகக் குற்றம்சாட்டினார் டிரம்ப்.
இப்போது ஈரானிய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இதே டிரம்ப், சில மாதங்களுக்கு முன்பு ஈரான் உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்தார் என்பதை நினைவுகூர்ந்தாக வேண்டியுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டங்களை ஏனைய வல்லரசு நாடுகள் அமைதியாக கவனித்து வருகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகள் ஈரான் உள்நாட்டுப் பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை உயருமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளன. எனினும், அமெரிக்க அதிபர் மட்டும் பிரச்னையைத் தூண்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான காரணமும் உலகம் அறிந்ததுதான்.
ஈரான் அணு ஆயுதங்களை ரகசியமாகத் தயாரித்து வருவதாக கடந்த சுமார் 40 ஆண்டுகளாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ளது. ஆனால், ஈரானுக்கு முதல் முதலில் அணு ஆயுதத் தயாரிப்புக்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அளித்தது அமெரிக்காதான் என்பது கசப்பான உண்மை.
தனது கைப்பாவையான ஈரானின் ஷா வம்சத்தின் கடைசி மன்னர் முகமது ரிசா ஆட்சியில் இருந்தபோது (1967) அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான யுரேனியத்தை பல்வேறு தரப்பு எதிர்ப்புகளையும் மீறி ஈரானுக்கு அமெரிக்கா அளித்தது. 1979-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈரானிய புரட்சி ஷா மன்னரின் ஆட்சியைத் தூக்கி வீசியது.
அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை உடைய அயதுல்லா (ஈரானிய ஷியா மதத் தலைவர்) ருஹல்லா கொமேனியிடம் அதிகாரம் சென்றது. ஈரானின் ஒட்டுமொத்த மதம், அரசியல் தலைவர் அயதுல்லா மட்டுமே. இப்போது அப்பொறுப்பில் இருப்பவர் அயதுல்லா அலி கமேனி. அவரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டை உடையவர் என்பதுதான் பிரச்னை தொடரக் காரணம்.
மன்னராட்சி அகற்றப்பட்டதில் இருந்து ஈரான்-அமெரிக்க உறவு ஏழாம் பொருத்தமாக மாறியதில் வியப்பேதும் இல்லை. கடந்த 2015-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பிற வல்லரசு நாடுகளுடன் இணைந்து ஈரானுடன் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஆனால், டிரம்ப் அதிபர் ஆனவுடன், ஈரான் ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பதான குற்றச்சாட்டில் அந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரானுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார் டிரம்ப். இப்போது, அங்கு அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கும் ஆதரவு அளித்து வருகிறார்.
தற்போது ஈரானில் நிலவி வரும் விலைவாசி உயர்வு, பொருளாதாரப் பிரச்னைகளை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம், பின்னர் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக உருவெடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்குப் பரவியது. வன்முறையில் 20-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன நிலையில், ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. நாட்டில் அந்நிய சக்திகள் வன்முறையைத் தூண்டுவதாக அமெரிக்கா மீது மறைமுகமாகக் குற்றம்சாட்டினார் அயதுல்லா அலி கமேனி.
ஈரானிய மக்கள் மீது அமெரிக்காவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள திடீர் பாசத்தையே அந்நாட்டு அரசு தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. அரசு இயந்திரத்தின் உதவியுடன், ஈரானியப் போராட்டம் குறித்த டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் கருத்துகள் மக்களிடையே வேகமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன!
ஈரான் மீது சர்வதேச பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் முன்னின்று நடத்திய அமெரிக்கா, இப்போது ஈரானியர்கள் நலனில் திடீர் அக்கறை கொள்வது, 'ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு' ஒப்பானது என்ற பாணியில் பொதுமக்கள் மத்தியில் ஈரான் அரசு முன்னெடுத்த பிரசாரத்துக்கு உடனடியாக பலன் கிடைக்கத் தொடங்கியது.
ஈரானின் முக்கிய நகரங்களில் அரசு ஆதரவுப் பேரணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அதில் அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களுடன் பங்கேற்கும் ஈரானியர்களின் எண்ணிக்கை அரசுத் தரப்புக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
நாட்டில் வன்முறை முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்த ஈரான் அதிகாரிகள் இறுதியாக கிண்டல் தொனியில் கூறிய வார்த்தை 'நன்றி அமெரிக்கா!'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.