கோதை நாச்சியாரும் பாவை நோன்பும்!

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கண்ணபிரான் அருளியிருக்கிறார்.
Updated on
4 min read

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கண்ணபிரான் அருளியிருக்கிறார். இத்தகு சிறப்பு பொருந்திய மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்றல் மரபு. பழந்தமிழ் இலக்கியங்கள் 'தைநீராடல்' என இதனைக் குறித்தன. இதனைப் பாவை நோன்பாக மாற்றி பக்தி இலக்கியத்திற்கு உரம் சேர்த்தவர்கள் இருவர். ஒருவர் திருப்பாவையை அருளிய ஆண்டாள் நாச்சியார். இன்னொருவர் திருவெம்பாவையை அருளிய மாணிக்கவாசகர்.
தமிழ்ச் சமய வரலாற்றில் பாடல் புனைந்து இறைவனை ஏற்றிப் போற்றிய பெண்கள் இருவர். அவர்கள் சைவ வைணவச் சமயங்களுக்கு இரு கண்களாகத் திகழ்கின்றார்கள். ஒருவர் காரைக்கால் அம்மையார், இன்னொருவர் ஆண்டாள் நாச்சியார்.
சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை, பாவை நாச்சியார், கோதை நாச்சியார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெறும் சிறப்பு பெற்றவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த இவர், பரமனுக்குப் பூமாலை சூட்டிக்கொடுத்தது மட்டுமின்றி, பாமாலையும் பாடிக் கொடுத்தார்.
இரண்டு நூல்களை இவர் அருளியிருக்கிறார். முதலில் அருளியது திருப்பாவை, இரண்டாவது நாச்சியார் திருமொழி. திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களும் கொண்டவை. ஆகமொத்தம், கோதை நாச்சியார் பாடியதாக 173 பாசுரங்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன.
ஆண்டாளின் பாசுரத்தன்மை பற்றி, பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறபோது, 'பள்ளமடை' எனக் குறிப்பிடுகிறார். சமநிலையில் நீர் வேகமாகச் செல்லும். பள்ளமாக இருந்தால் மிக வேகமாகச் செல்லும். அதுபோல ஆண்டாளின் பக்தி உணர்ச்சி அவரது பாசுரங்களில் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுகிறது.
'நாச்சியார் திருமொழி' ஒரு பெண்ணின் மன உணர்வுகளை முழுமையாக எடுத்துக்காட்ட வல்லது. இந்நூலின் 14 திருமொழிகளில் (தலைப்புகள்) 143 பாசுரங்கள் உள்ளன. இதிலுள்ள 4, 5, 6, திருமொழிகளில் மட்டும் 11 பாசுரங்கள் உள்ளன. ஏனையவற்றில் 10 பாசுரங்கள் உள்ளன.
ஆறாவது திருமொழியாக இருக்கிற 'வாரணம் ஆயிரம்' குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் இடம்பெற்றுள்ள 11 பாசுரங்களில் 1200 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த திருமண நிகழ்வு ஒன்றுவிடாமல் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
'வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்எதிர்' என்று தொடங்கும் பாசுரத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள திருமண நிகழ்வுகள் இன்றும் நடைமுறையில் உள்ளது வியப்பிற்குரிய செய்தியாகும்.
இந்த திருமொழியில் 8-ஆவது பாசுரம் குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்தது. மாமன், மாமி என அனைவரும் வாழ்த்தினர். பிறகு, அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கிற நேரம் வருகிறது. அந்த இடத்தில் மாப்பிள்ளையாகிய ஸ்ரீமந் நாராயணன் மணப்பெண்ணாகிய ஆண்டாளின் காலைத் தூக்கிப்பிடித்து அம்மியின் மேல் வைத்து, அருந்ததி பார்க்கிற நேரத்தில் கோதை நாச்சியார் உருகுகிறார். நெஞ்சம் நெகிழ்கிறார்.
இத்திருமொழியை ஊன்றிப் படித்துக்கொண்டே வந்தால்தான் ஆண்டாளின் அழுகையை - உருக்கத்தை நம்மால் உணர முடியும். இந்த இடத்தில் ஆண்டாள் ஏன் உருகுகிறார் என்றால் தன் திருவடிகளைப் பற்றியிருப்பவர் யார் என்ற சிந்தனை அவருக்கு எழுகிறது.
இக வாழ்க்கைக்கு மட்டுமல்ல. இனி எழுகின்ற ஏழேழு பிறவிக்கும் பற்றுக்கோடாக இருப்பவன் ஸ்ரீமந் நாராயணன். அதுமட்டுமல்ல, சித்தர்களும், முக்தர்களும் ஞானிகளும் பல்லாண்டுகளாகத் தவம் இருக்கிறார்கள். எதற்கெனில், ஸ்ரீமந் நாராயணனின் திருவடியைக் காண்பதற்காக. அப்படிப் பல்லாண்டுகள் தவமிருந்தும் திருவடி தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட செம்பொருளான திருவடிக்கு உரியவன் ஸ்ரீமந் நாராயணன். 'அந்தத் திருவடியை உடையவனாக இருக்கிற எம்பெருமான் என் திருவடியைப் பிடிக்கிறானே' என்றவுடன் கோதையின் மனம் நெகிழ்கின்றது.
'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் 
பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் 
தோழீநான்'
என்று உருகிய கோதை நாச்சியார், இறைவனின் திருப்பவளச் செவ்வாயின் நறுமணத்தை திருச்சங்கிடம் கேட்பதாக அமைந்த பின்வரும் பாடல் ஞான இரகசியம் அடங்கியது.
'கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித் தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல், ஆழி வெண்சங்கே'
என்ற பாசுரம் மேலோட்டமாகப் பார்த்தால் கண்ணபிரானின் திருப்பவளச் செவ்வாயின் நறுமணத்தைக் கேட்டதாகப் பொருள்தரும். ஆனால், குருபிரானின் திருவாய்மொழியாகிய ஞானத்தைப் பெற ஏங்கும் சீடனின் ஏக்கம் இப்பாட்டில் இடம்பெறுகிறது.
காலம் கடந்தும் 'அறிவு என்கிற ஞானம்' தன் மணத்தைப் பரப்பிக் கொண்டே இருக்குமல்லவா? இதுபோன்ற இரகசியங்கள் இப்பாடலில் பொதிந்துள்ளன.
திருப்பாவையின் 30 பாசுரங்களும் 'குறையொன்றும் இல்லாத கோவிந்தனை' போற்றி உரைப்பவையாகும். பக்தி இலக்கியத்தின் முடிந்த முடிபுகளைத் தெரிவிப்பவையாக இப்பாசுரங்கள் அமைந்துள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார்தான் மார்கழி மாதத்தின் 30 நாள்களும் தொடர்ந்து நினைக்கப்பெறுகிறார்.
அறிவியலையும் இணைத்து அம்மையார் பாடியிருப்பது சிறப்புக்குரிய செய்தியாகும். மழை பொழிவதற்கான காரணத்தை அறிவியல்பூர்வமாக ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளிகளில் சொல்லுகிற செய்தியை மிகச் சிறப்பாக,
'ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம் போல் 
மெய்கருத்துப்
பாழியந் தோளுடைய பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் 
நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'
என்ற பாசுரத்தின் வாயிலாக கோதை நாச்சியார் விளக்குகிறார்.
'கடல்போன்ற ஆற்றல் மிக்க மழைக் கடவுள், கடலில் புகுந்து நீரை மொண்டு கொண்டு வானத்தில் ஏறி பகவான் சக்கரம் போல் மின்னி, சங்கு ஒலி போல் இடி இடித்து, அவர் வில் உதிர்க்கும் சரங்களைப் போல் பெருமழையைப் பொழிவாயாக. உலகம் வாழப் பெய்திடுவாயாக' என்பதே இப்பாசுரத்திற்கான மேலோட்டமான பொருள்.
இதன் உட்கருத்து என்னவெனில், 'மழைபோன்ற தன்மை கொண்ட குருபிரான் இறையின்பத்தில் திளைத்து, அவ்வின்ப அனுபவத்தை சீடர்கள் அடையும்படி அருளுபவர்' என்பதாகும்.
பக்தி இலக்கிய வரலாற்றில் கோதை நாச்சியார் செய்த பெரிய புரட்சி கூட்டு வழிபாடு. தமிழில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும் தனித்தனியே இறைவனைப் போற்றி இறையருளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், கூட்டு வழிபாட்டின் (சங்கம வழிபாடு) உண்மையை உணர்ந்து, அதனைத் தானே தலைமையேற்று நடத்திக் காட்டியவர் ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் சிறப்பான வழிபாட்டுக்கு உரிய பெருமாட்டியாகப் பெருந்தேவித் தாயாருக்குச் சமமாகத் திருக்கோயில்களில் வழிபடப்பெறுபவர். 
அதற்குச் சான்று திருமால் உரையும் 108 திவ்ய தேசங்களில் 100 திவ்ய தேசங்களில் ஆண்டாளுக்கென்று தனி சந்நிதிகள் இருக்கின்றன. பெருமாளின் வலப் பக்கத்தில் தாயார் சந்நிதியும் இடப்பக்கத்தில் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதியும் இருக்கின்றன. அங்கு மார்கழி மாதத்தில் தவறாமல் திருப்பாவை (சேவை) பாடப்பெறுவது இன்றும் நிகழ்கிறது. சிறப்பு வழிபாடுகளும் உற்சவங்களும் சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு உண்டு.
ஆண்டாள் அருளிய திருப்பாவையில் நோன்பு பற்றிய குறிப்புகள் விரிவாக உள்ளன.
'நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு 
எழுதோம் 
மலர்இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்' 
(பாடல் 2)
என நோன்பு இருந்து, வழிபாட்டினை நிறைவு செய்த பின்னர் என்னென்ன பரிசுகள் பெற்றார்கள் என்பதையும் விரிவாகக் குறிப்பிடுகிறார்.
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா 
உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் 
யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேல், ஓர் எம்பாவாய். (பாடல் - 27)
இவ்வாறு நோன்பினால் பெற்ற பரிசுகளைக் குறிப்பிட்ட பிறகு அடியார் திருக்கூட்டத்தோடு ஒன்றாக இருந்து கூடியிருந்து குளிர்தேலோர் எம்பாவாய் என்று நிறைவு செய்கிறார்.
'கூடியிருந்து குளிர்தல்' என்பது, குரு பிரான் முன்நிலையில் திருவாய் அமிழ்தமாகிய - ஞானமாகிய நெய்யை ஆரா அமுதமாக செவி வாயாக நெஞ்சு கலனாக அடியார் திருக்கூட்டத்தோடு இணைந்திருந்து உண்டு நிறைதல் எனும் நுட்பமான பொருளைக் கொண்டதாகும்.
திருப்பாவையின் முப்பது பாசுரங்களுக்கும் நுட்பமான பொருள் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால் வேதத்தின் பிழிவு திருப்பாவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராமானுஜரே திருப்பாவைக்கு உரை எழுத அஞ்சினார் என்றால் நாச்சியாரின் பெருமை நம்மால் எடுத்துரைக்க இயலுமா?
ஒருமுறை, உடையவராகிய இராமானுஜரிடம் நாலாயிரத்துக்கு உரை செய்ய வேண்டும் எனச் சீடர் குழாம் கேட்டனர். அதற்கு இராமானுஜர் மறுத்துவிட்டார்.
'நான் உரை சொன்னால் அதற்கு வரம்பு கட்டியதுபோல் ஆகிவிடும்; 'இராமானுஜரே சொல்லிவிட்டார், இதற்குமேல் நாம் என்ன உரைவிளக்கம் சொல்வது' என்று நினைத்துப் பெரியோர்கள் விட்டுவிடுவார்கள். அவரவர் உணர்திறனுக்கு ஏற்ப பாசுரங்களில் பொருள் விரிந்து பரந்து சென்றுகொண்டே இருக்கும்' என்று கூறி இராமானுஜர் உரை எழுத மறுத்துவிட்டார்.
திருப்பாவை முப்பது பாசுரங்களுக்காவது உரை எழுதலாமே எனக் கேட்க, அதற்கு உடையவர் இராமானுஜர், 'திருப்பாவைக்கு உரை செய்வது பொருத்தமன்று. அது அனுபவிக்கத் தக்கது. நாள்தோறும் திருப்பாவை பாசுரங்களை அனுசந்தானித்து (சிந்தனை செய்து) அனுபவிக்க அனுபவிக்க புதுப் புதுப் பொருளும் உணர்வும் எனக்குத் தோன்றுகிறது. எனவே, உரை எழுதி, இவ்வளவுதான் என்று வரம்பு கட்டிவிடக் கூடாது' என்றாராம்.
இராமானுஜர் நாளும் இரவுப்பொழுதில் திருப்பாவை பாசுரங்களை ஓதிஓதி - உணர்ந்து உணர்ந்து - நெகிழ்ந்து நெகிழ்ந்து - ஊற்றெழும் கண்ணீர், அதனால் உடம்பு நனைந்து நனைந்து அப்பாசுரப் பொருளாகவே ஆகிவிடுவாராம். ஒரு கட்டத்தில் ஆண்டாள் நாச்சியார் பெற்ற இறைபிரேமை நிலையை அடைவாராம். அதனால் உடையவராகிய இராமானுஜருக்கு 'திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும் உண்டு.
ஆண்டாளின்மேல் இராமானுஜருக்கு இருந்த பக்தியின் ஆழத்திற்கு ஒரு நிகழ்வைச் சொல்வார்கள். திருமாலிருஞ்சோலை பெருமாளுக்கு நூறு அண்டாக்களில் வெண்ணெயும், நூறுஅண்டாக்களில் அக்கார அடிசிலும் வைத்துப் படைப்பதாக ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் வேண்டிக்கொள்கிறார்.
திருமாலிருஞ்சோலை பெருமாளுக்காக நைவேத்தியம் செய்ய நினைத்த ஆண்டாளின் மேற்சுட்டிய விருப்பம் நிறைவேறியதா எனத் தெரியவில்லை. இப்பாசுரத்தைப் படித்த உடையவராகிய இராமானுஜர், தானே திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளி நூறு அண்டாக்களில் வெண்ணெயும், நூறுஅண்டாக்களில் அக்கார அடிசிலும் வைத்து ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றியதாக வரலாறு கூறுகிறது.
சமய உலகம் தலைமேல் வைத்துக்கொண்டாடும் புரட்சித் துறவியாகிய உடையவர் இராமானுஜர், சூடிக்கொடுத்த நாச்சியாரையும் அவர்தம் பாசுரங்களையும் உச்சிமேல் வைத்துப் போற்றிக் கொண்டாடியதை அறிகிறோம். 'திருப்பாவை ஜீயர்' எனும் பெயரையும் தாமே விரும்பி ஏற்றுக்கொண்டார். திருப்பாவையை நாள்தோறும் அனுசந்தானம் செய்யாமல் உறங்க மாட்டார். இராமானுஜர் தொடங்கி, இன்று வாழும் வைணவத் தொண்டர்வரை, உச்சிமேல் வைத்துத் தொழத்தக்க சிறப்புக்கு உரியவர் ஆண்டாள் நாச்சியார்.
ஆண்டாள் திருவரங்கத்து அரங்கநாதரோடு ஜோதியாக இணைகிறபோது உடனிருந்து அதைப் பார்த்துப் பரவசம் அடைந்து நெகிழ்ந்தவர் பெரியாழ்வார். தான் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த தம் அருமைப் பெண் தன் எதிரிலேயே இறையருளோடு இணைவதைக் கண்டு மகிழ்ந்தாலும் தன் பெண்ணின் பிரிவைத் தாங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை. அதை இரு கண்களாலும் நேரில் பார்த்த (eye-witness) பெரியாழ்வார்,

ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான் பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை மருமகளைக்கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யங் கொலோ

(பெரியாழ்வார் திருவாய்மொழி, 3:8:4) என்று அருளிச் செய்கிறார்.
நிறைவாக, தமிழ் சமய வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஆண்டாளின் ஆளுமை நிலைபெற்றுவிட்ட ஒன்று. இப்படிக் காலம் கடந்து நிலைத்த புகழுக்கு உரியவராகத் தம் ஆளுமையை இன்றும் நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் ஆண்டாள் நாச்சியார்.

(மார்கழி மாதம் இன்று நிறைவடைகிறது)

கட்டுரையாளர்:
பேராசிரியர் - தலைவர் (பணிநிறைவு)
தமிழ் மொழித்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com