சீர்படுமா நகர்ப்புற வளர்ச்சி?

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் சராசரி 31% ஆகும்.
Updated on
2 min read

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் சராசரி 31% ஆகும். ஆனால் அகில இந்திய சராசரியைவிட, தமிழகத்தில் 48.45% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்துவருகின்றனர். 2026-இல் புது தில்லிக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் நகர்ப்புற மக்களின் எண்ணிக்கை 74.8சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2001-2011இடைப்பட்ட காலத்தில் மட்டும் தமிழகத்தில் நகர்ப்புற மக்கள்தொகை 27% அதிகரித்தது. இதில் குடிசைப்பகுதி மக்கள் தொகை 28.38 லட்சத்திலிருந்து 59 லட்சமாக அதிகரித்தது.
நகர்ப்புற மக்கள்தொகையில் 45% குடிசைவாழ் மக்களாக உள்ளனர். அதாவது, 1.2 கோடி மக்கள் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரமும் வசிப்பிடமும் பெருமளவில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. 
நகர குடிசைப் பகுதிகளில் வாழும் மொத்த குடும்பங்களில் 45.41% எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள். நகர்ப்புற மக்கள்தொகையில் 45.88% உடல் உழைப்புத் தொழிலாளர்கள் என்பதை மேற்கண்ட அம்சங்களோடு இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது. வசதிகளையும், வளர்ச்சிகளையும் பெற்றுள்ள நகர்ப்புற பகுதி ஒரு பக்கம்; அடிப்படை வசதிகள்கூட கிடைக்கப்பெறாத ஏழை மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களை கொண்ட குடிசைப்பகுதி மறுபக்கம்.
இப்படிப் பிரித்து பார்த்தால் இன்றைய தேவைகளையும், எதிர்கால நெருக்கடிகளையும் கணக்கில் கொள்ளாமல், அரசு சொல்லும் நகர்ப்புற வளர்ச்சி சாத்தியமாகாது. நகர திட்டமிடல் மட்டுமே அரசு நிர்வாகத்திடம் உள்ளது. இடநெருக்கடி, குடிநீர் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் கேடு, சுகாதாரக் கேடு என்று நகர்ப்புற மக்கள் வாழும் சூழல் சீரழிவுக்கு உள்ளாகின்றன. இது நகர்மயமாதலின் மோசமான விளைவு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
சர்வதேச அளவில் காற்று மாசு நிரம்பிய 1600 நகரங்களின் ஆய்வுப் பட்டியலில் முதலிடத்தில் புது தில்லி உள்ளது. அடுத்த முதல் 10 இடங்களில் சென்னை உள்ளிட்ட 6 இந்திய நகரங்கள் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தொடங்கிவைத்த தேசிய காற்று தரக் குறியீடு ஆய்வு திட்டத்தின் தேசிய அளவிலான முடிவு தில்லியைவிட சென்னை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. நகர்மயமாதலின் வேகமும் விளைவும் நிலையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை முதன்மை தேவையாக மாற்றியுள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, விஷன் 2022 மற்றும் மாநில அரசின் சாட்டிலைட் சிட்டி, விஷன்-2023 ஆகிய திட்டங்கள் நகர திட்டமிடலின் பெருமிதமாய் முன்வைக்கப்படுகின்றன. தமிழக அரசால் 2012-இல் வெளியிடப்பட்ட விஷன் 2023 உலக தரத்திலான உள்கட்டமைப்பு வசதியை நகர்புறங்களுக்கு உத்திரவாதப்படுத்துவதாக கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையை அழகுபடுத்தும் வார்த்தைகளாகவே இவை உள்ளன என்பதையும் கவலையோடு பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் மாறி மாறி அரியணையை அலங்கரிக்கும் கட்சிகள் ஆரம்ப இரு பத்தாண்டுகளில் சில அடிப்படைத் திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்தன. குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் அமைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கியது. 
மேலும், தொழில் மருத்துவம் சார்ந்து மேற்கொண்ட சில முயற்சிகள் மக்களுக்கு பயன்பட்டது. ஆனால் அடுத்தடுத்த காலங்களில் பெருகி வரும் தேவைக்கேற்ப தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. வேலையின்மையும், ஏழ்மையும் நகர்ப்புற ஏழைகளின் துயரங்களாக மாறின. வாங்கும் சக்தியை இழந்து நிற்கும் மக்களின் நெருக்கடியை இலவச திட்டங்களின் மூலம் தணிப்பதற்கு மட்டுமே அரசுகள் முயன்றன. 
மாசற்ற நகரம், கல்வி, சுகாதாரம், குடிசைப்பகுதி மேம்பாடு, போக்குவரத்து, குடியிருப்பு, தரமான குடிநீர், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, பேரிடர் பாதுகாப்பு என நகர வளர்ச்சியின் தேவை நீண்டுகொண்டே போகிறது. ஏழ்மையைப் போக்கும் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு, கான்டிராக்ட் தொழிலாளர்களின் சமவேலைக்கு சம ஊதியம், அமைப்புசாரா தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், ஆகியவற்றுடன் நகர வளர்ச்சியின் இதர அம்சங்களையும் இணைத்து முன்னெடுப்பது இன்றைய தேவையாகும். நகர்புறங்களில் வாழும் பலதரபட்ட மக்களையும் இணைக்கும் நகர சூழல் இதுவே ஆகும்.
ஏழ்மையும் வறுமையும் உழைக்கும் மக்களைக் கடுமையாக தாக்குகிறது. நகர்ப்புற நவீனமும் நுகர்வு வேட்டையும் திக்குமுக்காட வைக்கிறது. உழைக்கும் மக்களைப் போன்றே நடுத்தர மக்களும் நவீனத்தை எதிர்கொண்டு பிரச்னைகளை சந்திக்கின்றனர். 
அரசியல் கிரிமினல் மயமாவதையும், ஊழலையும் எதிர்க்கும் நடுத்தர வர்க்கத்திற்கு சந்தைப் பொருளாதாரம் மீது பெரும் பிரமை உள்ளது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நகர மேம்பாட்டுக்கான உண்மையான சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com