மாணவர்களின் எதிர்காலம்...

உலக நாடுகளில் இந்தியாதான் மிக அதிக இளைஞர்களைக் கொண்ட தேசம். அதனால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற எண்ணம்தான் இங்குள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு.
Published on
Updated on
2 min read

உலக நாடுகளில் இந்தியாதான் மிக அதிக இளைஞர்களைக் கொண்ட தேசம். அதனால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற எண்ணம்தான் இங்குள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு. ஆனால் எதிர்கால இந்தியாவின் சிந்தனைச் சிற்பிகளான இளைஞர்களில் பலர் அதாவது மாணவர்கள் கல்லூரி திறந்து முதல் நாள் வரும்போது பட்டாக்கத்தியுடன் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். அத்துடன் ஒரு பேருந்தையும் கடத்திச் சென்றிருக்கிறார்கள்.
 பள்ளியாகட்டும் கல்லூரியாகட்டும் ஆண்டு முடிந்து புதிய வகுப்பு, புதிய தோழர்கள், புதிய ஆசிரியர்கள் என வரும் புதிய மாற்றங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதனால் எப்போதுமே ஆண்டுத் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வது என்பது அனைவருக்குமே மகிழ்ச்சியான தருணம்.
 ஆனால் சென்னையைப் பொருத்தவரையில் ஒவ்வோராண்டின் தொடக்கத்திலும் பழைய மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருந்தாலும் போலீஸாருக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இது எப்போதுமே துன்பம் தரும் நிகழ்ச்சியாகத்தான் அமைகிறது.
 சில மாதங்களுக்கு முன்னர், மின்சார ரயிலில் வந்த மாணவர்களில் சிலர் பட்டாக்கத்தியை ரயில் நிலைய நடைமேடைகளில் தேய்த்ததில் தீப்பொறி உண்டானது. இது மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டியது. ஆனால் பொதுமக்கள் பயந்து ஓடினர். ரயில் நிலைய சி.சி.டி.வி. கேமராக்களில் இருந்த பதிவுகளை வைத்து மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக அவர்கள் தாங்கள் விளையாட்டுத்தனமாகச் செய்துவிட்டதாகக் கூறி மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டனர்.
 இந்தக் கல்வியாண்டுத் தொடக்கத்தில் பட்டாக் கத்தி, உருட்டுக் கட்டையுடன் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு வந்தனர். சிலர் பேருந்துகளின் மீதேறி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வந்தனர். மேலும் சில மாணவர்கள் ஒரு பேருந்தைக் கடத்துமளவுக்குத் துணிந்துவிட்டனர். பயணிகளையும் இறங்கவிடவில்லை.
 இவ்வாறு ஆட்டம் போடும் மாணவர்கள் போலீஸாரைக் கண்டதும் தலைதெறிக்க ஓடினார்கள். எதற்காக இப்படிக் கேவலப் பட வேண்டும்? தாங்கள் மாணவ சமுதாயத்தினர் என ஆட்டம் போடுபவர்கள் தைரியமாகப் போலீஸாரை எதிர்க்க வேண்டியதுதானே? ஒரு சில மாணவர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் அனைத்து மாணவர் சமுதாயத்துக்கே கெட்ட பெயர்.
 சென்னையில் பள்ளி மாணவர்கள் போடும் ஆட்டத்துக்கே அளவில்லை எனும்போது கல்லூரி மாணவர்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? சென்னையில் அண்மையில் முழு ஆண்டுத் தேர்வெழுதி முடித்துவந்த பள்ளி மாணவர்கள் சுமார் 20 பேர் புரசைவாக்கம் பகுதியில் ஒரு பேருந்தில் ஏறி ஜன்னல்களைத் தட்டிக் கொண்டு பாட்டுப்பாடி வந்தனர். நடத்துநர் சொல்லியும் கேட்கவில்லை. ஓட்டுநர் இவர்களின் ஆட்டத்தைத் தாங்க முடியாமல் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு, தாளம் போட்ட மாணவர் ஒவ்வொருவரையும் முதுகில் அறைந்து பேருந்திலிருந்து இறங்க வைத்தார். இல்லாவிட்டால் பேருந்தை ஓட்ட முடியாது என்று சொல்லி காவல் நிலையத்துக்குச் செல்வதாகக் கூறினார். இதையடுத்துப் பயணிகளும் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவுடன் மாணவர்கள் இறங்கிச் சென்றனர்.
 இதே போல ஒரு கல்லூரி மாணவரிடம் ஓட்டுநர்கள் சொல்ல முடியுமா? ஓட்டுநரின் நகமாவது மாணவர்களின் மீது படுமா? ஏதாவது ஒரு பயணிக்கும் ஓட்டுநர் அல்லது நடத்துநருக்கும் இடையில் பிரச்னையென்றால் அனைத்துப் பேருந்துகளையும் நிறுத்தித் தங்கள் ஒற்றுமையைப் பறைசாற்றும் ஓட்டுநர்கள், மாணவர்கள் விஷயத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு அமைதி காப்பது ஏன்?
 இவ்வாறு தகராறு செய்யும் மாணவர்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். அவர்களை இனம் கண்டு களையெடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால் அம்மாணவர்கள் சமுதாயத்தில் நாளை மிகப் பெரிய ரெளடிகளாக உருமாறுவார்கள். கல்லூரியில் முதலாண்டு மாணவர்களை ராகிங் என்ற பெயரில் செய்யும் கொடுமைகளால் மனதளவில் ஜூனியர் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
 மாணவர்கள் என்ற போர்வையில் ஒரு சிலர் செய்யும் அராஜகங்களால் யாருக்குக் கெட்ட பெயர் என்று மாணவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்பெல்லாம் வகுப்பறைக்குள் மட்டுமே இருந்த மதிப்பெண் போட்டி இப்போது மாநிலம் மற்றும் நாடு முழுக்கப் பரவி உலக மாணவர்களின் போட்டியாக உருமாறியுள்ளது.
 விரும்பிய படிப்பை விரும்பிய கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஒரு சில மாணவ, மாணவியருக்கு மட்டுமே அமையும். ஆனால் கிடைத்த படிப்பில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பல லட்சம் மாணவர்களை உதாரணம் சொல்ல முடியும். நல்ல கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைத்தும் பொருளாதார ரீதியாகச் சிரமப்படுபவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு தகராறு செய்யும் மாணவர்கள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வோர் ஆண்டு தொடக்கத்திலும் மனநல மருத்துவர்களிடம் அனுப்பி அனைத்து மாணவர்களின் எண்ண ஓட்டங்களையும் ஓரளவு தெரிந்து கொள்ளவாவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 அனைத்துக்கும் மேலாக மாணவர்களின் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதற்கு போலீஸார் தயவு தாட்சண்யமில்லாமல் அது யாராக இருந்தாலும் தவறு செய்யும் மாணவர்கள் மீது உரிய கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் - எவ்வித நிர்ப்பந்தத்துக்கும் அடிபணியாமல்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com