தனித்தமிழ்த் தந்தை பெயரில் விருது 

நாகப்பட்டினத்தில் 15.07.1876-இல் பிறந்த தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார், 1920-ஆம் ஆண்டிலேயே சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை
Published on
Updated on
2 min read

நாகப்பட்டினத்தில் 15.07.1876-இல் பிறந்த தனித்தமிழ்த் தந்தை மறைமலை அடிகளார், 1920-ஆம் ஆண்டிலேயே சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை வேதம் + அசலம் என்பதை மறைமலை அடிகள் எனவும் ஞானசாகரம் என்ற தமது இதழை அறிவுக்கடல் எனவும், சமரசச் சன்மார்க்கச் சங்கம் என்ற தனது அறநிலையத்தைப் பொதுநிலக் கழகம் என்றும் மாற்றினார். அடிகளார் வழியில் தங்கள் பெயர்களைத் தூய தமிழ்ப் பெயர்களாகப் பலர் அந்நாளில் மாற்றினார்கள்.
சூரிய நாராயண சாஸ்திரியார் - பரிதிமாற் கலைஞர், சந்தோஷம் - மகிழ்நன், பாலசுந்தரம்பிள்ளை - இளவழகனார், பாலசுப்பிரமணியனார் - இளமுருகனார், இராசாக்கண்ணு - அரசங்கண்ணனார், கலியாண சுந்தரம், சோமசுந்தரம், சண்முக சுந்தரம், மீனாட்சி சுந்தரம் என்னும் பெயர்கள் முறையே மணவழகன், மதியழகன், ஆறுமுகஅழகன், கயற்கண்ணி கவினன் எனவும் மாற்றம் பெற்றன. இவ்வளவு தமிழ்ப் பெயர்கள் வழங்கப்பெற்றனவும் அடிகளாராலேயே ஆகும். 
ஒரு மொழியின் தனித்தன்மையையும், தூய்மையையும் காத்து வளர்க்கப் பிற நாடுகளிலும் இயக்கங்கள் தோன்றின. துருக்கியில் அரபு, பாரசீகச் சொற்களுக்குப் பதிலாகத் தொன்மையான துருக்கியச் சொற்களையே பயன்படுத்தும் இயக்கத்தை கமால் அதாதுர்க் என்ற அரசியல் தலைவர் தொடங்கி வென்றார்.
ஆங்கில நாட்டவர் தம் மொழியின் நலம் காப்பதற்காக அவ்வப்போது முயல்கின்றனர். நெடுங்காலமாக உயர்தனி செம்மொழியாகவும், தனித்தன்மை காத்து வரும் தகைமை உடையதாக விளங்கிவரும் தமிழ் பல்வேறு ஆட்சியிலும், வேற்று நாட்டவரின் வருகையினாலும் தன் சிறப்பையும், தூய்மையையும் இழந்தது.
மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் உணர்வுச் சாயலில் ஈர்க்கப்பெற்ற சுவாமி விபுலாநந்தர் குறிப்பிடுவதைக் காணலாம். சுவாமி விவேகானந்தர் இயற்றிய இராஜயோக நூலினை மொழிபெயர்க்குந் தொழிலில் யான் ஈடுபட்டிருந்த காலத்திலே யோகச் சாத்திரத்துக்கு முதனூலாகிய பதஞ்சலியோக சூத்திர நூலினைத் தமிழில் மொழிபெயர்த்தெழுத நேரிட்டது. அம்மொழிபெயர்ப்பு சுவாமி விவேகானந்தர் இயற்றிய நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்பாகிய விவேகானந்த ஞானத் தீப' முதற்றொகுதியிலே வெளியிடப்பட்டிருக்கிறது. அதனைப் படித்த அன்பர் பலர், மிகவுயர்ந்த நுண்ணிய கருத்துகளைத் தூய தமிழிலே எழுதுதல் கூடும் என்னும் முடிவிற்கு வந்தனர்''.
இன்றைய தமிழக அரசு அடிகளார் பெயரில் விருது அறிவித்திருப்பது மிகப் பெருமையான சான்றாகும்.
மறைமலை அடிகளார் ஒரு பெரும் அறிவுச்சுடர், தமிழ் நிலவு. தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலை அடிகளுக்கு உண்டு. தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களும், நாவலர் வேங்கடசாமி நாட்டாரும் தமிழ் ஆகிய ஒரு மொழியே பயின்றவர்கள். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் போன்றோர் தமிழும் வடமொழியும், நாவலர் சோம சுந்தர பாரதியார் போன்றோர் தமிழும், ஆங்கிலமும் ஆகிய இரு மொழியே பயின்றவர்கள். அடிகளாரோ, தொன் மொழி என்னும் தமிழும், வடமொழி என்னும் சமற்கிருதமும், குடமொழியாகிய ஆங்கிலமும் ஆகிய மும்மொழியும் செம்மையாகப் பயின்றவர். அவர்தம் ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன' என்று திரு.வி.க. கூறுகிறார்.
தமிழில் வரலாறு, ஆராய்ச்சி என்னும் சொற்களைப் பெரிதும் வழக்கிற்குக் கொணர்ந்த பெருமையும் அடிகளாரைச் சாரும். பட்டினப்பாலை ஆராய்ச்சி, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, சிவஞானபோத ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் சாகுந்தல நாடக ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறு முதலியன அடிகளாரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டும். காஞ்சிப் பெரியவர் சாகுந்தல நாடக ஆராய்ச்சியின் பெருமையைப் பெரிதும் பாராட்டி அதனைப் பாடநூலாக்க வேண்டுமென்றும் கூறினார். 
அடிகளார், நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர் ஆகிய மூவகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், பாவலராகவும், ஆராய்ச்சியாளரும், திறனாய்வாளருமாகவும், மறுப்பாளரும், எதிர் மறுப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருந்து சிறுவர், பெரியர், புலவர், பொதுமக்கள் ஆகிய பல வகுப்பாருக்கும் வெவ்வேறாக பல நூல்களை எழுதிய பெருமை வாய்ந்தவர். 
காலம் தவறாமை, செய்வன திருந்தச் செய்தல் என்பன வழக்கமாகும். எழுத்து எண்ணிப் பயின்றவர் என்ற புகழும் கல்விப்பெருமிதமும் கொண்டவர். சிவஞானபோதம் பன்னிரண்டு நூற்பாக்கள், நாற்பத்தொரு வரிகள், 216 சொற்கள், 624 எழுத்துகள் என எண்ணிப் பார்த்துக் குறிப்பிட்டவர் அடிகளே. 
திருவாசகம் முழுவதும் சொற்களை எண்ணிப் பார்த்து 2210 சொற்கள் என்றார். இவற்றில் 373 சொற்கள் வட சொற்கள் என்றார். இவற்றை வகுத்துப் பார்த்தால் 100-க்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வட சொற்கள் விரவலாயின என்று தெளிவாகச் சொன்னார்.
தனித்தமிழ் நூற்றாண்டை நினைவுகூரும் வகையிலும், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்துக்கும் ஆற்றிய பணியைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளன்று பல்லவபுரத்தில் உள்ள அவரின் நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்ய தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
அவ்வண்ணமே, தனித்தமிழ்ப் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழறிஞர் ஒருவருக்கு தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளார் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
இணைத்துணைத் தென்பதொன் றில்லை உணர்வார் 
மனத்துணையாம் நம்அடிகள் மாண்பு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com