சிறுதொழில் வளர்ப்போம்

அண்மையில், ஒரு தொலைக்காட்சியில் தமிழக முதல்வர் பேசுவதைப் பார்த்தேன். ஏராளமான இளம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.
Published on
Updated on
2 min read

அண்மையில், ஒரு தொலைக்காட்சியில் தமிழக முதல்வர் பேசுவதைப் பார்த்தேன். ஏராளமான இளம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை கொடுக்கவும் புதிய தொழில்கள் தொடங்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும் திட்டத்தின் ஒரு பகுதிதான் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை' என்று அவர் பேசினார். 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று முதல்வர் பேசியது பாராட்டத்தக்கதுதான். ஆனால், இதே தமிழ்நாட்டில்தான் சென்ற ஆண்டு, சுமார் 50,000 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; ஐந்து லட்சம் பேருக்கு வேலை பறிபோனது. 
தொழில்துறையில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக தமிழகத்தில் உள்ள பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். தொழிற்சாலை எந்த அளவு பெரிதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக மூலதனம் இருக்கும், நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று நினைக்கின்றனர். 
ஆனால், விவசாயமல்லாத 90 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்தான். குறிப்பாக, ஆயத்த ஆடை, தோல் போன்ற பல துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், இவை எதற்கும் பெரிய அளவிலான மூலதனமோ, இயற்கை வளமோ தேவையில்லை என்பதுதான் உண்மை.
ஆட்டோமொபைல் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகளில், ஒரு கோடி ரூபாய் முதலீட்டுக்கு 10 முதல் 30 வரையான பணியிடங்கள் உருவாகும். ஆனால், அதே தொகைக்கு ஆயத்த ஆடைகள் துறையிலோ, சுமார் 2,400 பணியிடங்கள் உருவாகும். இவற்றுக்கெல்லாம் ஏராளமான நிலமோ, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரோ, வங்கிகளிடமிருந்து கடன் உதவியோ தேவையே இல்லை. 
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலில் ஈடுபடுவோர் தங்கள் பணிகளை மேற்கொள்ள சிறிய மூலதனம் போதும்; துண்டு நிலம் போதும். நிர்வாகச் சுமையை ஏற்றாத இணக்கமான அரசு நெறிமுறை வேண்டும். எண்ணற்ற அடுக்குளைக் கொண்ட ஜி.எஸ்.டி.யால் இந்த நிறுவனங்கள் பரிதவிக்கின்றன. அவர்களையெல்லாம் நெறிப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கட்டுப்படுத்துவதன் மூலம், அவர்கள் தொழில்களை விட்டு ஓடிப் போக நேர்கிறது.
உள்கட்டுமான வசதிகள் பெருகுவது, சிறு, குறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் உதவும். ஆனால், அவர்களுக்கு சென்னைக்கு வரும் நான்கு வழி நெடுஞ்சாலையால் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த நெடுஞ்சாலை முடியும் செங்கல்பட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருவதற்கு ஆகும் நேரம் தான் முக்கியப் பிரச்னை. அதேபோன்று, துறைமுகத்தில் ஆகும் காலதாமதமும் மற்றொரு பிரச்னை. 
சரக்குகளைக் கப்பல்களில் ஏற்றுவதற்கு, சீனத் துறைமுகத்தில் ஆகும் நேரத்தைவிட நான்கு மடங்கு அதிக நேரம் ஆகிறது. போய்ச் சேருவதோ மிகவும் தாமதமாக. கொழும்புவில் இருந்து புறப்படும் கப்பல்கள் போய்ச் சேருவதற்கு ஆகும் நேரத்தைவிட 25 சதவீத நேரம் அதிகமாகிறது. வங்கதேசத்தில் இருந்து செல்வதை விடக் கூடுதலாக 20 சதவீத நேரம் ஆகிறது. 
இந்தியத் துறைமுகங்களுக்கு வரும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஏற்றுமதியாளர்கள் கொழும்பு வழியாக சரக்குகளை அனுப்ப வேண்டியுள்ளதால், பயணச் செலவு அதிகம். இதனாலெல்லாம் தான் தொழிற்துறையில் சுணக்கம் ஏற்படுகிறது. சிறு, குறு ஏற்றுமதியாளர்களின் இத்தகைய பிரச்னைகளை மத்திய அரசாங்கம் கவனித்து சரிசெய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
சேலம் - சென்னை எட்டு வழி விரைவுச் சாலையை அமைப்பதன் மூலம், பயண தூரம் குறையும், அதனால், டீசல் செலவு குறையும் என்று தமிழக முதல்வர் பேசி வருகிறார். ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்வதற்கு நமக்கு ஆகும் செலவு, சீனாவை விட மூன்று மடங்கு அதிகம்; இலங்கையைவிட 2.5 மடங்கு அதிகம். அப்படிப் பார்க்கும்போது, செலவு குறைவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், 60 கிலோ மீட்டர் தூரம் குறைவதை மட்டும் பார்க்கும் முதல்வர், சென்னைக்கு வருவதற்குள் கட்ட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் பல மடங்கு உயரவிருப்பதை ஏனோ மறந்துவிட்டார். 
போக்குவரத்து வாகனங்களுக்கான செலவுகளில் 40 சதவீத செலவு டீசலுக்கானதுதான். மத்திய, மாநில அரசுகள், சிறு, குறு ஏற்றுமதியாளர்களுக்கு உதவ விரும்பினால், டீசல் மீதான தங்களுடைய வாட்' மற்றும் சுங்க வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். அது இந்த எட்டுவழிச் சாலை போடுவதற்கு ஆகும் 10,000 கோடி ரூபாயைவிடச் சிறந்த முதலீடாக இருக்கும்.
ஒவ்வொரு நாடும் சிறு நிறுவனங்களை எல்லா வகைகளிலும் ஊக்கப்படுத்த வேண்டும், ஏனெனில், அவை தான் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அட்சய பாத்திரம். ஆனால், தமிழ்நாட்டிலோ, நாம் பெரு நிறுவனங்கள் மீதும் அவற்றுக்கான முதலீடுகள மீதும் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். திருப்பூரில் உருவான ஜவுளித் தொழில், கோவையில் உருவான மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் ஆகியற்றைப் புறமொதுக்கிவிட்டோம். இவற்றில்தான் லட்சக்கணக்கான மக்கள் பணியாற்றுகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி.யும் இவர்களைக் கடுமையாகப் பாதித்தது கண்கூடு.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பற்றியும் அவர்கள் சந்திக்கும் எண்ணற்ற சிரமங்கள் பற்றியும் முதல்வர் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர் செல்லவேண்டிய இடங்கள் திருப்பூரும் கோவையும் தான். அங்கே சென்றால் அவருக்கு உண்மை நிலை புரியும். அதன் பின்னர் அவர் எடுக்கப் போகும் நடவடிக்கைகளை, தமிழக இளைஞர்கள் பாராட்டுவார்கள் என்பது உறுதி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com