சமயம் கடந்த சமரச ஞானி

இந்திய ஒருமைப்பாட்டை அரசியல்வாதிகளும் அறிவியல்வாதிகளும் உருவாக்குவதற்கு முன்னர், அதனை உருவாக்குவதற்கு முழு மூச்சாய் நின்றவர்கள் ஆன்மிகவாதிகளே.
Updated on
3 min read

இந்திய ஒருமைப்பாட்டை அரசியல்வாதிகளும் அறிவியல்வாதிகளும் உருவாக்குவதற்கு முன்னர், அதனை உருவாக்குவதற்கு முழு மூச்சாய் நின்றவர்கள் ஆன்மிகவாதிகளே. வாழையடி வாழையென வந்த அந்தத் திருக்கூட்ட மரபில் கபீரும் ஒருவர். கண்ணனைத் தேசியக் கடவுள் ஆக்குவதற்கு மகாகவி பாரதி, பிறந்தது மறக்குலத்தில் - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பனருள்ளே - சில செட்டி மக்களோடும் மிகப் பழக்கமுண்டு' எனப் பாடினான்.
ஆனால், கபீர் ஓர் இந்திய ஒருமைப்பாட்டுக் கவி என்பது அவருடைய பிறப்பிலும் வளர்ப்பிலும் இயல்பாக அமைந்திருக்கிறது. அவர் பெயர் தெரியாத ஓர் இந்து பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை. ஆனால், இசுலாமியக் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டிருக்கிறார். அவருடைய இறைக்கவிகள், சீக்கியர்களுடைய வேதமாகிய கிரந்த சாகிப்'பில் விரவிக் கிடக்கின்றன. அவருடைய கவிதைகளில் சூபிசமும் புத்தருடைய போதனைகளும் ஊடாடி நிற்கின்றன. அவருடைய ஞானப்பாடல்கள் உபநிஷதக் கருத்துக்களை உள்வாங்கி நிற்கின்றன. 
அவருடைய பெற்றோர், வளர்த்தோர் பற்றிய கதைகள் ஜோடிக்கப்பட்டவையே. நதிமூலம் ரிஷி மூலம் பார்க்காதே எனும் பழமொழி, கபீருக்கு முற்றிலும் பொருந்தும்.
கபீர் என்னும் பெயர் ஓர் இசுலாமியப் பெரியாரால் வழங்கப்பட்டதாகும். அவர் திருக்குரானைத் திறந்தவுடன், பெரிய' எனும் பொருளைத் தரும் கபீர்' எனும் சொல் தென்பட்டதாம். அதனால், ஆதரவற்ற அந்தக் குழந்தைக்கு கபீர்' எனப் பெயரிட்டாராம். கபீர் தம் பாடல்களில் வாராணசிக்கு அருகில் உள்ள மக்ஹர்' எனும் ஊரைப் பற்றிக் குறிப்பிடுவதால், மக்ஹர்' அவருடைய பிறப்பிடம் எனத் தெரிகிறது. அவருடைய சமாதியும் அங்கேயே அமைந்திருக்கிறது. 
தம் சொந்த வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத கபீர், தமக்கு குரூரமான ஒரு மனைவி வாய்த்ததாகவும், அவள் மரியாதை அற்றவள்' என்றும் குறிப்பிடுவதால், அவர் இல்லறத்திலிருந்து துறவறத்திற்கு வந்திருக்கலாமெனத் தெரிகிறது. அவருக்குப் கமால்' என்று ஒரு புதல்வனும், கமாலி' என்று ஒரு புதல்வியும் இருந்ததை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.
தொடக்கத்தில் கபீர் எந்தக் குருவிடத்திலும் பயிலவில்லை. அதனால் குருவற்றவர்' எனும் பொருளில் நிகுரா' என அழைக்கப்பட்டார். என்றாலும், ஜயதேவர், நாமதேவர் இருவரையும் குறிப்பாகத் தம் பாடல்களில் சுட்டுவதால், ஏகலைவனைப் போல் கற்றிருக்கிறார் எனத் தெரிகிறது. வளர்ந்த காலத்தில் இராமானந்தர் ஏற்காவிட்டாலும், கபீர் அவரைத் தம் குருவாக வரித்துக் கொண்டார் என்பதை அனைவரும் ஏற்கின்றனர். 
கபீருக்கு வாயால் கவிதை சொல்லத் தெரியுமே தவிர, ஏட்டில் எழுதத் தெரியாது. அவருடைய பாடல்கள் வாய்மொழி இலக்கியமாகவே வழங்கப்பட்டதால், இடைச்செருகல்கள் நிறைய நிகழ்ந்தன. வங்கக் கவி இரவீந்திரநாத் தாகூர், கபீரின் பாடல்களை மொழி பெயர்த்தார். ஆனால், அவற்றுள் ஆறு பாடல்களே கபீரின் பாடல்கள் எனப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 
கபீர், இந்து - இசுலாம் சமயங்களுக்கிடையிலிருந்த பகுத்தறிவுக் கொள்கைகளை இணைத்து, ஒரு புதிய மார்க்கத்தை உருவாக்க நினைத்தார். அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றும் மக்களுக்குக் கபீர் பாந்த்' (கபீர் வழியினர்') எனப் பெயர். வாராணசியில் பாய் பின்னுகின்ற இனத்திற்கு ஜோலாஹா' என்றும், கோரி' எனவும் பெயர். கபீர், தம்மை ஜோலாஹா' எனவும், கோரி' எனவும் பாடல்களில் குறிப்பிட்டிருப்பதால், அவர் பாய் பின்னும் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.
கபீரின் கவிதைகளில், எங்கே கவிதை முடிகிறது, எங்கே ஆன்மிக ஞானம் தொடங்குகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இவ்விரண்டு உத்திகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன' என வரலாற்றறிஞர் டாக்டர் மாச்வே வர்ணிக்கிறார். காந்தியடிகள், கபீரின் கீழ்வரும் பாடலை தமது பிரார்த்தனைப் பாடலாக்கிக் கொண்டார்.
நெசவு பாவு என்ன? ஊடு நூல் என்ன?
போர்வை நெய்ய உதவும் நூல்கள் தாம் என்ன?
எட்டு கமலங்கள், எழில் பத்து 
இராட்டினங்கள்
ஐந்து மூலப் பொருள்கள், மூன்று 
போர்வைக் குணங்கள்
பரமனுக்கு இதைச் செய்ய பத்து 
மாதமாயிற்று!'
சூபிசமும், சித்தர் பாடுபொருளும் பின்னிய இப்பாடல், காந்தியடிகளைக் கவர்ந்ததில் வியப்பில்லை.
எல்லா உயிர்களுக்குள்ளும் இறைத்தன்மை ஊடுருவி இருப்பதால், எந்த உயிருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்பது கபீர்தாசின் கொள்கையாகும். அதனை அவர் இந்து இராமன்' பெயரை ஓதுவர், முஸ்லிம் இறைவனே' என்பர். கபீரின் கடவுள், உயிரனைத்திலும் கலந்துள்ளார்'' எனப் பாடியிருக்கிறார். 
கபீர், போதித்ததை தம் வாழ்வில் சாதித்தும் காட்டியுள்ளார். கபீர், தான் உண்பதற்காக ஒரு காய்ந்து போன ரொட்டித் துண்டு வைத்திருந்தார். ரொட்டி வறண்டு கிடப்பதைக் கண்ட கபீர், அதனை நெய்யில் தடவி சாப்பிடுவதற்காக வீட்டுக்குள்ளே நெய்யை எடுப்பதற்காகச் சென்றார்.
அப்போது ஒரு நாய் அந்த ரொட்டித் துண்டைக் கவ்விக்கொண்டு ஓடிற்று. நெய்கிண்ணத்தோடு வெளியே வந்த கபீர், நாய் ஓடுவதைக் கண்டு, நெய்க் கிண்ணத்தோடு தொடர்ந்து ஓடி அதனை விரட்டிப் பிடித்துவிட்டார். நாய் வாயிலிருந்து ரொட்டி கீழே விழுந்தவுடன் அதனை எடுத்து, தாம் கொண்டு போயிருந்த நெய்யை அதன்மீது தடவி, தம் கையாலேயே அந்த நாய்க்கு ஊட்டினார். வியப்பிலாழ்ந்த மக்கள் அது குறித்து வினவ, காய்ந்த ரொட்டியை நாய் கடித்தால், அதன் வாய் புண்ணாகிவிடும். அதனால் நெய்யில் தோய்த்து ஊட்டினேன்' என்றார் கபீர்.
கபீர் சமயம் கடந்த ஒரு சமரச ஞானியாகத் திகழ்ந்ததால், இந்து மதத்திலும் இசுலாமிய மதத்திலும் இருந்த பல நடைமுறைகளை விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். அதனால், இரண்டு மதத்திலுமுள்ள அடிப்படைவாதிகள், கபீரை கண்டிக்கவும் தண்டிக்கவும் தொடங்கினர்.
கபீர் தாழ்ந்த சாதியில் பிறந்தவர் என்பதாலும், தம்மைப் போதகராக பாவித்துக் கொண்டதாலும், அவருடைய கைகளை முதுகில் கட்டி, அவரைத் துன்புறுத்தியும் இருக்கின்றனர். கபீரும் கபீரின் மார்க்கமும்' எனும் நூலை எழுதிய ஜி.ஹெச். வெஸ்ட்காட், கபீர் இரண்டு மதத்தினராலும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதை உறுதி செய்கிறார். கபீர் வாழும்போது வதைக்கப்பட்டாலும், அவருடைய கடவுள் கொள்கை, ஆன்மநேய விடுதலை, சமயம் கடந்த சமரச ஞானம் ஆகியவை இன்றும் பொக்கிஷம் போல் போற்றப்படுகின்றன.
கபீரின் பாடல்கள், இசைவாணர்களால் மட்டுமன்றி, நாட்டுப்புற மக்களாலும் போற்றப்படுகின்றது. அவருடைய நாடோடிப் பாடல்களின் இனிமைக்கு ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
எப்படி நாளை நான் கழிப்பேன்? 
இயம்பிடுவாய் வழியை
இப்பக்கம் கங்கை, அப்பக்கம் யமுனை, இடையே எனக்கோர் குடிசையமை
என்றன் மேலாடை தன்னைநான், 
காகிதம் போலக் கிழித்திடுவேன்
என்றன் இதயத்து உன்முகத்தை, என்றும் எழுதி அருள்வாயே'
என்னும் பாடல், வாராணசிவாசிகளின் உதடுகளால் இன்றும் உச்சரிக்கப்படுகின்றது.
இவ்வுடம்பு ஆடை போன்றது. அது பயன்படப் பயன்படக் கிழிந்து போக வேண்டியதே! எனவே ஏன் அதில் பற்று வைக்க வேண்டும்?' இந்தக் கருத்து உழைக்கும் வர்க்கத்தவரின் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்தது.
கபீர் ஒரு வேதாந்த கவி மட்டுமன்று; ஒரு சூபிச கவி மட்டுமன்று; அவர் ஒரு சமதர்மக் கவிஞராகவும் வாழ்ந்திருக்கிறார். பற்றற்ற துறவு வாழ்க்கை வாழ வேண்டும் என இறையன்பர்களை எச்சரித்த கபீர், ஒரு பாமரனின் தேவைகள் என்னென்ன என்பதையும் பாடியிருக்கிறார். 
பசியுடன் பிரார்த்தனை முடியாது, பரம! 
இச்செபமாலை வாங்கிக் கொள்! 
என் வயிறு இருமுறை நிரம்பிடவே, எனக்கு அரைச்சேர் தானியம் வேண்டும்!
உறங்கத் தேவை ஒரு கட்டில், ஒரு 
மரச் சட்டம் தலையணையாம்,
பொய் புனைந்துரைகள் புகலவில்லை; புகல்வேன் இறைவா! உன் பெயரை'
எனும் பொதுவுடமைக் குரல் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது.
ஆன்மா ஆணில்லை, பெண்ணில்லை, அலியுமில்லை. அது, தான் தேடி அடையும் உடலாகிய ஆடைக்கேற்ற உருவத்தை எடுத்துக் கொள்கிறது' என்பது உபநிஷதக் கருத்து. அந்த உபநிஷதக் கருத்தை உள்வாங்கிக் கொண்ட கபீர்,
அது நானுமில்லை, தேவனுமில்லை, அது ஊழியம் கோரும் புனிதனுமில்லை,
அது யோகியுமில்லை, துறவியுமில்லை; அதற்குத் தாயுமில்லை, தனயனுமில்லை
அது இல்வாழ்வானுமில்லை; இரப்பவனுமில்லை, அது அரசனுமில்லை, ஆண்டியுமில்லை, அது இந்துவுமில்லை, இஸ்லாமுமில்லை, அதன் பிறப்பையும் இறப்பையும் பார்த்திலர் எவரும்' 
என ஒரு சின்ன கருப்பொருளுக்கு, விரிவாக்கமும், விளக்கவுரையும் கொடுத்துப் பாடுகிறார்.
மதக்காழ்ப்பு என்பது ஒருவன் வாழுகின்றபோது மட்டும் ஆட்டிப்படைப்பதில்லை; ஒருவன் மறைந்த பிறகும் அவனைச் சுட்டெரிக்கக் கூடியதாகும். கபீர் இவ்வுலக வாழ்வை நீத்தவுடன், இரண்டு மதத்தார்களும் போட்டி போட்டுக்கொண்டு, உடலை எரிக்க வேண்டும்', புதைக்க வேண்டும்' எனப் போரிட்டனர். இதில் மத்தியஸ்தர்களாக இருந்த சிலர், இரண்டு மதத்தினரும் கபீருடைய புகழுடம்பைப் பாதி பாதியாக ஒரு போர்வையைக் கொண்டு போர்த்தி வைத்துவிட்டுப் போங்கள்; இரண்டு நாட்கள் கழித்து முடிவெடுப்போம்' எனக்கூறி அனுப்பிவிட்டனர். இரண்டு நாட்கள் கழித்து இரண்டு மதத்தினரும் வந்து தங்கள் தங்கள் போர்வைகளை அகற்றியபோது, அந்த இடத்தில் பூக்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. இருதரப்பினரும் பூக்களை அள்ளிக்கொண்டு, சமாதானமாகப் போனார்களாம். 
இந்நிகழ்வை நம்புவதற்கில்லை என்றாலும், இது கற்பிக்கின்ற பாடம் மகத்தானதாக இருப்பதால், அப்படியே ஏற்பதில் தவறில்லை.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).

(இவ்வாண்டு, கபீர் அமரத்துவம் அடைந்த 500-ஆவது ஆண்டு)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com