தேவையா இந்த மசோதா?

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குரல் எழுப்பியுள்ளார்.
பெண்கள் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்றெல்லாம் மேடைகளில் முழங்கும் நம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மகளிருக்கான ஓர் மசோதாவை கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக நிறைவேற்றாமல் ஆறப்போட்டு வருவதைவிட கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.
கடந்த 1993 -ஆம் ஆண்டு, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதன் தொடர்ச்சியாக, மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதா முதன்முதலாக கடந்த 1996 ஆம் ஆண்டு ஹெச்.டி. தேவெகௌடா தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டது. 
ஆனால் அம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படாத நிலையில், சரியாக ஒரு மாமாங்கம் அதாவது 12 ஆண்டுகள் கழித்து 2008 -இல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இம்மசோதாவை மீண்டும் கொண்டு வந்தது. இருப்பினும் நீண்ட நேர வாத, பிரதிவாதங்களுக்கு பிறகு, 2010 மார்ச் மாதம் மாநிலங்களவையில் மட்டுமே மசோதாவை காங்கிரஸ் அரசால் நிறைவேற்ற முடிந்தது. 
சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் எதிர்ப்பால், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இதில், அப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க.வுக்கும் பங்கு உண்டு. இதனிடையே, 2014 -இல் 15 -ஆவது மக்களவையின் ஆயுள்காலம் நிறைவடைந்ததையடுத்து, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவும் காலாவதியானது.
தற்போது, மூன்றாவது முறையாக இம்மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை மத்திய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் அவவப்போது கொடுத்து வருகிறது.
மக்களவையில் பா.ஜ.க.வுக்கு தற்போது அசுர பலம் உள்ளதால், அக்கட்சி நினைத்தால் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் எளிதில் நிறைவேற்றலாம் என்பது காங்கிரஸின் வாதம். இருப்பினும், இந்த விஷயத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இன்னும் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளதாக தெரியவில்லை. இதற்கு, ஒருவேளை தற்போது இம்மசோதாவை நிறைவேற்றினாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தாங்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை தற்போது பா.ஜ.க. நிறைவேற்றியுள்ளது என, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பிரசாரம் செய்ய வாய்ப்பாக அடைந்துவிடுமோ என பா.ஜ.க. தயங்குகிறதோ என்னவோ? 
இம்மசோதா இதுவரை நிறைவேற்றப்படாததற்குப் பல அரசியல் காரணங்கள் இருந்தாலும் பாலினத்தை மையப்படுத்திய ஒரு மசோதா தேவைதானா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். காரணம், கல்வி, வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறை சரிதானா என்ற கேள்விக்கே நீண்டகாலமாக விடை கிடைக்காமல் உள்ளபோது, பாலினத்தை மையமாக வைத்து இடஒதுக்கீடு என்பது சரியா என்ற கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.
மேலும், நம் சமூக அமைப்பில் ஆண்களை ஒப்பிடும்போது பெண்களுக்கு பொதுவாக அரசியல் ஆர்வம் மிகக் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை. இரு ஆண் நண்பர்களுக்கு இடையேயோ, உறவினர்களுக்குள்ளோ நடைபெறும் உரையாடல்களில் அநேகமாக அரசியல் இருக்கும். இதுவே இரு பெண்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல்களில் நிச்சயம் அரசியல் இருக்காது.
இவற்றுக்கு மேலாக, உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு முறையால் பொது வாழ்வில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கலாம், ஆனால், அவர்களில் பெரும்பாலோரை அவர்களின் தந்தையோ, கணவரோ, சகோதரர்களோதான் பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்கிற கோணத்திலும் நம் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். மேலும், இன்றைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜி தொடங்கி, நம்மூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலபாரதி வரை ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்களை தேர்தல் களத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டுதான் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களைப் போன்றே, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் என மக்கள் பிரதிநிதிகளாய் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமென விரும்பும் பெண்கள், பொது வாழ்வில் இறங்கி தேர்தலில் நின்று வெற்றி வாகை சூடட்டும். அப்போது 33 சதவீதம் என்ன, அதற்கு மேலும் அவர்கள் பிரதிநிதித்துவம் பெறட்டும். ஆனால் இந்த நீண்ட நெடும் பயணத்துக்கு முதல்படியாக, பெண்கள் அனைவரும் தேர்தலில் தங்களின் அப்பா, அண்ணன், கணவர் ஆகியோர் கைக்காட்டும் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ வாக்களிக்காமல், சுயமாக சிந்தித்து வாக்களிக்கட்டும். 
அதுவரையில் பெண்களை முன்னிறுத்தி அரசியல் செய்வதை கட்சித் தலைவர்கள் நிறுத்திக் கொள்ளட்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com