எல்லோரும் கொண்டாடுவோம்!

அண்ணல் காந்தி ஒரு சிறந்த தத்துவஞானிதான்; ஆனால், அவரைவிடச் சிறந்த தத்துவஞானிகளை- ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர்- போன்றோரை நவீன இந்தியா கண்டிருக்கிறது.
Updated on
3 min read


அண்ணல் காந்தி ஒரு சிறந்த தத்துவஞானிதான்; ஆனால், அவரைவிடச் சிறந்த தத்துவஞானிகளை- ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர்- போன்றோரை நவீன இந்தியா கண்டிருக்கிறது. அவர் ஒரு நல்ல பேச்சாளர்தான்; ஆனால் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர் என்று கருத முடியாது. அவர் வாழ்ந்த காலத்திலேயே பண்டித நேரு, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி போன்ற மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர்களை இந்திய மக்கள் அறிவார்கள். 
அண்ணல் நல்ல விவாதத் திறமை உள்ளவர்தான்; ஆனால், ராஜாஜி, வல்லபபாய் படேல் போன்று அவரை விட விவாதத் திறன் வாய்ந்தவர்கள் இருந்தார்கள். அண்ணலை மிகப்பெரிய மேதை எனவும் கருத முடியாது. தாகூர், கோகலே போன்று பல மேதைகள் நம் தேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனாலும் அண்ணல் காந்திஜி எல்லாரையும் விட உயர்ந்து நிற்கிறார்; மக்களால் மகாத்மா என மதிக்கப்படுகிறார். அது எப்படி?
அவர் உண்மையானவர்; சத்தியத்தை நம்பியவர்; அதன் வழி நடந்தவர். அவரது ஆன்மா எது சரி என அவருக்கு உணர்த்தியதோ, அதையே அவர் பேசினார்; தான் பேசியபடியே, வாழ்ந்து காட்டினார். தன் எண்ணத்திற்கும், சொல்லுக்கும், செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.
இந்த வியத்தகு பண்புதான் அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது. அவரை மகாத்மா என்ற நிலைக்கு உயர்த்தியது. அதனால்தான் உலகத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக, வழிகாட்டிகளில் ஒருவராக அவர் இன்றும் நிற்கிறார்.
அந்த மாமனிதரின் 150-ஆவது பிறந்தநாள், இந்த ஆண்டு அக்டோபர் 2-இல் வருகிறது. அந்த நாளை நாம் எப்படிக் கொண்டாடப் போகிறோம்? எப்படிக் கொண்டாட வேண்டும்?
இக்கேள்விக்கு காந்தியடிகளே நமக்குப் பதிலும் தருகிறார். 1937-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மத்தியிலும், பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அக்காலகட்டத்தில் பிகார் மாநில அரசு, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாளை (அக். 2) விடுமுறை நாளாக அறிவித்தது.
அதனை பெரும்பான்மையான மக்கள் வரவேற்றனர். ஆனால் பிகாரி இளைஞன் ஒருவன் காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில், உங்கள் பிறந்தநாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அரசு அறிவித்திருப்பது தகுமா?' என்று கேட்டிருந்தான்.
அதற்கு அண்ணல் காந்தி தனது கருத்தைப் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்:
என் பிறந்தநாளை விடுமுறை தினமாக அறிவித்திருப்பது குற்றமே. உண்மையில் பிடி ஆணை இன்றியே கைது செய்யப்படுவதற்குரிய குற்றம் அது எனக் கருதுகிறேன். அந்த நாளில் நூற்பு வேள்வியில் அல்லது பயனுள்ள தேச சேவையில் ஈடுபட வேண்டும். அந்நாள் முழுவதும் உழைப்புக்கான நாள்; ஓய்விற்கும், உல்லாசத்திற்கும், விளையாட்டிற்குமான நாள் அல்ல' எனக் கூறியுள்ளார்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் காந்திஜி பதிவு செய்த கருத்து இன்றும் பொருந்துமா என்றால், பொருந்தும். அண்ணலின் கருத்துகள் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும், வருங்காலத்திற்கும்கூட பொருந்தும். அவற்றை முழுமையாகக் கடைப்பிடிக்க இயலுமா என்றால், முயன்றால் முடியும். 
காந்திஜியின் கருத்தை கவனத்தில் கொண்டு அந்த நாளை, நமக்கு, நமது தேசத்திற்கு, நமது மனித சமுதாயத்திற்கு பயன் தரும் விதமாக உருவாக்குவது எப்படி? காந்திஜியின் கனவுகளை நனவாக்குவது எப்படி? அதற்கு உரிய திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். சீரிய வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்! 
மத்திய அரசு, 2018-19 நிதிநிலை அறிக்கையில், இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதனைப் பாராட்டலாம். ஆனால் இந்தத் தொகை குறைவானது என்பது காந்தியவாதிகளின் மனக்குறை.
மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு, சிறப்பு ஒதுக்கீடு ஏதாவது செய்துள்ளதா? இதுவரை எந்தத் தகவலும் இல்லை. காலம் தாழ்த்தாமல், மாநில அரசுகளுக்கு உரிய ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். அதன் பயன்பாட்டு வழிமுறைகளையும் வகுத்துக் கொடுக்க வேண்டும்.
மகாத்மாவின் 150-ஆவது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுவது மாநில அரசின் கடமையாகும். ஆகவே தமிழ்நாடு அரசும் இதற்கென தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், குடியரசுத் தலைவர் தலைமையில், பிரதமர் முன்னிலையில், மாநில முதல்வர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் அண்ணலின் 150-ஆவது ஜயந்தியைக் கொண்டாடுவது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் அதில் கலந்து கொண்டு, சில முக்கிய கருத்துகளை முன்வைத்தார். 
அரசே அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அண்ணல் காந்தி, அரசையோ, அதிகாரப் பீடத்தையோ எதிர்பார்க்கவில்லை. மாறாக ஒவ்வொரு தனிமனிதனையும் நம்பினார். ஒட்டுமொத்த சமுதாயத்தையே நம்பினார். 
உண்மையான சுதந்திரம் எது?' என்ற கேள்விக்கு அவரே பதில் தருகிறார்.
வெள்ளையர் ஆட்சி விலகுவதால் மட்டும், உண்மையான விடுதலை கிடைத்துவிடாது. ஒவ்வொரு தனிமனிதனும், தான் சுதந்திர மனிதன் என்பதை உணர வேண்டும். தன் உரிமையை உளமார உணர்ந்து கடமையை தவறாமல் செய்ய வேண்டும். தன் விதியை, தன் வருங்காலத்தை தானே வகுத்துக்கொள்ள வேண்டும். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக, தனக்கு உரிய சட்டத்தை தானே நிறைவேற்ற வேண்டும்'.
அண்ணலே சொல்லுகிறார்: ஒவ்வொருவரும் மிக எளிமையாக வாழுங்கள்; அப்பொழுதுதான் மற்றவர்கள் வாழ்வது எளிதாக இருக்கும்'(Live more simply so that others can simply live)  என்று.
அண்ணலின் பிறந்தநாள் முதல், நாம் எளிமையாக வாழ்வோம். அதன் பயனாக, அனைத்து ஏழைகளும் வாழ்வதை எளிதாக்குவோம். அரிஜன நலன், தீண்டாமை ஒழிப்பு, குடிப் பழக்கம் துறத்தல், வறுமை ஒழிப்பு, கிராம முன்னேற்றம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன், நலிந்தோர் மற்றும் சிறுபான்மையினர் நலன், எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, தூய்மையான சுற்றுச்சூழல் - இப்படி அண்ணலின் இலட்சியங்கள் எண்ணில் அடங்காது.
ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தைக் கையில் எடுத்துச் செயல்படுத்துவோம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் ஒரு பகுதியை காந்ஸ்திஜி கனவு கண்ட திட்டம் ஒன்றுக்கு ஒதுக்கீடு செய்யலாம். ஒரு கிராமத்தைத் தேர்வு செய்து அதனை மேம்படுத்தலாம்.
செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியைக் கொண்டு காந்தியத் திட்டம் ஒன்றை எடுத்து செயல்படுத்தலாம். சேவை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் தேசமெங்கும் பரந்து விரிந்து செயல்படுகின்றன. அவையும் காந்தியத் தொண்டில் கவனம் செலுத்தலாம்.
தமிழ்நாட்டில் மட்டும் ஓய்வூதியம் பெறுவோர் சுமார் ஏழு இலட்சம் பேர் உள்ளனர். அவர்களில் அறிவாற்றலும், ஆழ்ந்த அனுபவமும், செயல்திறனும், சமூக நலனில் அக்கறையும் கொண்டவர்கள், தங்கள் ஓய்வு நேரத்தின் ஒரு பகுதியை நலிந்தோர் நலனுக்குப் பயன்படுத்தலாம். மாணவர் மற்றும் இளைஞர் மத்தியில் மகாத்மாவின் கொள்கைகளைப் பரப்பலாம்.
ஒவ்வொருவரும் உத்தமர் காந்தியின் சித்தாந்தத்ததைக் கையில் எடுக்க வேண்டும். ஊருக்கு உழைக்க வேண்டும்; தேச சேவையில் நம் கவனத்தைத் திருப்ப வேண்டும். எளிமையாக வாழ வேண்டும்; அதன் மூலம் ஏழைகள் வாழ்வதை எளிதாக்க வேண்டும்; தன்னலம் துறந்து பொது நலன் பேண வேண்டும். அக்டோபர் 2-இல் தொடங்கி ஆண்டு முழுவதும் இத்தகைய சேவை தொய்வில்லாமல் தொடர வேண்டும். அதுவே அண்ணலின் கனவை நனவாக்குவதற்கான அடித்தளமாக அமையும்.
இத்தாலியின் ரோம் நகரத்தில் ஓர் அற்புதக் காட்சி! அங்கு ஸ்பக்னா சதுக்கம்' (Spagna Square)  என்று ஓர் இடம் உள்ளது. அங்கு ஓர் அழகிய குன்று அமைந்துள்ளது. அங்கே, அதன் உச்சியில் எழில் கொஞ்சும் இயற்கைக் காட்சி. அதனை எட்டுவதற்கு அழகாக அமைக்கப்பட்டுள்ள பளபளக்கும் படிக்கட்டுகள். அழகுமிகு அவ்விடத்தைக் காண, கண்டு மகிழ, ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்! அது இயற்கையே!
ஆனால், அச்சதுக்கத்தையும், படிக்கட்டுகளையும் பார்த்த வண்ணம், கையில் கோல் ஊன்றி கம்பீரமாக நின்று கொண்டிருப்பது அண்ணல் காந்தியின் சிலை! இது அதிசயம்! அதை விட அச்சிலையிலிருந்து அண்ணலின் குரல் ஒலிபரப்பாகிறது. அவர் பேசுகிறார். அன்பு, அஹிம்சை, சத்தியம், சகோதரத்துவம், சமத்துவம் - இதுவே உலகம் உய்வதற்கான வழி' - என்று. இது அதிசயத்திலும் அதிசயம்.
நாளும் வருகின்ற பயணிகளோ இயற்கைக் காட்சியைக் கண்டு களிப்பதை மறந்து, அண்ணலின் அறிவுரை கேட்டு வியந்து, மகிழ்ந்து நிற்கிறார்கள்.
மகாத்மா மறையவில்லை! காலங்களைக் கடந்து தேச எல்லைகளைக் கடந்து வாழ்கிறார்! மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்! அண்ணலின் 150-ஆவது பிறந்தநாளில் அவரது தடம் பார்த்து வழி நடப்போம்! தரணியை வாழ வைப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com