கல்தோன்றி முன்தோன்றா காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி' என நாம் பெருமிதம் கொள்கிறோம். தமிழர்களின் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். அதில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று வகை அதிகாரங்கள் உள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களின் வழியில் நம் வாழ்வியல் வகுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் தமிழ் மொழி இலக்கண நூலாக இருந்தாலும், இதில் வாழ்விற்கும் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என தமிழகத்திற்கு எல்லை தொல்காப்பியத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. புவியியல் ஆராய்ச்சியாளர்கள், குமரிக் கண்டமே முதன்முதலில் உயிர்கள் தோன்றிய லெமூரியா கண்டம் எனவும், அதுவே பண்டைத் தமிழர்களின் பூமி எனவும் கருதுகின்றனர். ஆப்பிரிக்கா கண்டம், ஆஸ்திரேலியா கண்டம் ஆகியவை ஆசிய கண்டத்தில் இந்தியாவின் தென்பகுதியுடன் நிலப்பரப்பு ரீதியாக இணைக்கப்பட்டிருந்தன. கடல்கோள், ஆழிப்பேரலை (சுனாமி') போன்ற காரணங்களால் குமரிக் கண்டம் கடலில் மூழ்கியது. ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க நிலப்பரப்புகள் நமது பாரத தேசத்தின் நிலப்பரப்பிலிருந்து பிரிந்து இப்போதைய வடிவம் பெற்றுள்ளன.
கலித்தொகை பாடல் பஃருளி ஆறும் பல குன்றும் சூழ்ந்த குமரிக்கோடும் சினங் கெழு கடலுள் ஆழ்ந்தன' என்கிறது. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி' என்றும் செந்தமிழியற்கை சிவணிய நிலம்' எனவும் தொல்காப்பியத்திற்கு பாயிரம் செய்த பனம்பாரனார் குறிப்பிடுகின்றார். பஃருளி யாற்றுக்கும் குமரியாற்றுக்கும் இடையில் இருந்த 700 காத அளவுள்ள 49 நாடுகள் அழிந்ததாகவும், இந்த இரண்டு ஆறுகளுக்கிடையே இருந்ததாக ஏழ் தென் நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு ஏழ் குறும்பனை நாடு என்பவற்றையும் குறிப்பிடுகின்றனர்.
முதுகுடுமி பெருவழுதியை போற்றிப்பாடும் காரிக்கிழார் வடா அது பனிபடு நெடுவரை வடக்கும், தெனா அது உருகெழு குமரியின் தெற்கும், குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும், குடா அது தொன்று மிதிர் பௌவத்தின் குடக்கும் என்று தற்போதைய பாரதநாடு முழுமைக்கும் எல்லை வகுக்கிறார்.
தமிழ் கூறு நல்லுலகம் பதிமூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக உரை ஆசிரியரான அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். ஒன்பது மண்டலங்கள் இருந்தன' எனவும், மண்டலங்கள் ஐந்தும் தாவி' எனவும் சைவத் திருமுறைகள் குறிப்பிடுகின்றன. மூவேந்தர் நாடுகள் என சேர, சோழ, பாண்டிய நாடுகள் குறிக்கப்படுகின்றன. நாஞ்சில் நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு, நடு நாடு, மலை நாடு, ஈழ நாடு என ஏராளமான நாடுகளும் சிற்றரசுகளும், அவ்வப்பொழுது தோன்றி மறைந்துள்ளன. ஈழத்து பூதந்தேவனார் எனும் சங்க காலப் புலவர் பாடல்களும் உள்ளன. மேலும், சிந்து சமவெளி நாகரிக காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
பண்டைத் தமிழர்கள், நாவலந் தேசம்' எனப்படும் பாரத நாடு முழுவதும் தேசிய இனமாகப் பரவி வாழ்ந்துள்ளனர். புறநானூற்றுப் பாடலில் தென்குமரி வடபெருங்கடல், குணகுட கட லாலெல்லை' என குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர், மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாடியிருக்கிறார். வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி' என சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பொதுவாக சேர மன்னர்களை இமயவரம்பன்' என்று குறிப்பிடுவார்கள்.
குமரிக் கண்டம் காலத்திலும், சங்கப்பாடல்கள் காலத்திலும், தொல்காப்பியர் காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும், காப்பியக் காலத்திலும், பக்தி இலக்கிய காலத்திலும் தமிழ்நாடு என மொழியின் பெயரில் ஒரு தனி நாடு ஒரு தனி தேசிய இனம் இருந்ததாகக் குறிப்பு எதுவும் இல்லை. நாடு என்பது நிலப் பரப்பைக் குறிப்பது. தேசியம் என்பது அந்த நிலப்பரப்பில் பன்னெடுங்காலமாக வாழும் மக்களின் கலாசாரம், பண்பாடு, வாழ்வியல், வழிபாட்டு முறை, சம்பிரதாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இயற்கையாக உருக்கொள்வது. வெறும் மொழியின் அடிப்படையில் மட்டும் எந்த தேசிய இனமும் அடையாளம் காணப்படுவதில்லை. உலகத்தில் எந்த தேசிய இனமும் பேசும் மொழி வழியில் மட்டும் உருவாக்கப்பட்டதில்லை.
தமிழினத்தின் அடையாளம்' என்றும், உலகப் பொது மறை' என்றும் கருதப்படும் திருக்குறளில் தமிழன்', தமிழ்', தமிழ்நாடு' என எங்கும் குறிக்கப்படவில்லை. பண்டைய இலக்கியங்கள், தமிழ் கூறு நல்லுலகம்' என்று குறிப்பிட்டுள்ளன. சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாட்டு எல்லைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று' என இமயத்தையும், கங்கையையும் குறிப்பிட்டு உள்ளனர். பாரத நாடு முழுவதையும் தன் நாடாகவே சங்கப் புலவர்கள் கருதியுள்ளனர். அன்னை மீனாட்சி இமயமலை வரை படை நடத்தி சென்றார். முழுமுதற் கடவுள் சிவபெருமானின் உறைவிடம் கயிலாய மலையாகும். பல அருளாளர்கள் கயிலைக்காட்சி கண்டுள்ளார்.
ஞானசம்பந்தப் பெருமான் தமிழன்' என பெருமிதத்தோடு தன்னை அடையாளப் படுத்துகிறார். மாணிக்கவாசகர் ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!' என சிவபெருமானைத் துதிக்கின்றார். சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், வரலாறுகளிலும், புராணங்களிலும், கல்வெட்டுகளிலும் தமிழ்நாடு' என்று ஒன்று இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. தமிழ் தேசியம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. அது இந்திய தேசியத்தின் ஓர் அங்கமே .
கிறித்துவ ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் வந்த பிறகு பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் மொழிவழி தேசியத்தை கூர்மைப்படுத்தினர். ஒருபுறம் ஆங்கிலத் திணிப்பு, தாய்மொழி அழிப்பு என அதிகாரம் செலுத்தியவர்கள் மறுபுறம் மொழி வழி தனிநாடு எனும் நச்சுக்கருத்தை விதைத்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகும் பாரத நாட்டில் சென்னை மாகாணம் (மதராஸ் ஸ்டேட்') என்கிற அமைப்பு இருந்தது. தென்னிந்தியாவைச் சார்ந்த அனைவரையும் மதராஸிகள் என்றே அழைப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்புதான் தமிழ்நாடு' என்கிற மாநிலம் உருவானது. தமிழ் தேசிய இனத்திற்காக சுட்டிக் காட்டப்படும் வரலாறுகள் அனைத்தும் இந்திய தேசம் முழுமைக்கும் பொதுவானவை. பாரத பூமி பைந்தமிழர் பூமியாகும்.
மொழி அடிப்படையில் மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேசுபவர்களும் பிற மொழிகள் பேசுவோரும் நம்மிடம் இருந்து மாறுபட்டு இருக்கலாம். ஆனால் கலாசாரம், பண்பாடு, சமயம், வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில், நாம் அனைவரும் ஒரே தேசிய இனத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கிறோம்.
தற்போது மொழி வழி தேசியம் என்பதைக் கூர்மைப் படுத்தி தமிழ்நாடு என்பது தனிநாடு, தமிழர்கள் தனி தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்' என்று சிலர் பேசி வருகின்றனர். இந்திய தேசியத்தில் இருந்து மாறுபட்டவர்கள் தமிழர்கள்; தமிழர்களாக இருப்பவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது; வடநாடு வேறு தென்நாடு வேறு; வட இந்தியர்கள் ஆரிய கலாசாரத்தை சார்ந்தவர்கள்; கலாசாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக ஆரியம் நம்மீது திணிக்கப்பட்டது' என்றெல்லாம் பேசி வருகின்றனர். கால்டுவெல் எழுதிய குறிப்புக்களின் அடிப்படையில் திராவிட நாடு', திராவிட இனம்' ஆகிய கருத்துக்கள் திராவிட இயக்கங்களால் வலிமைப் படுத்தப்பட்டன. ஆரிய-திராவிட இன வாதம், தனி திராவிட நாடு கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழ் தேசியம் பேசும் சிலர், ஆரிய கருத்தியலைப் போல திராவிடக் கருத்தியலும் எம் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளது' என்று வாதிடுகின்றனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும், முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையும் நல்ல நண்பர்கள். திராவிட தேசியம் குறித்து வாஜ்பாயிடம் கருத்து கேட்டபோது, இந்திய தேசியமும் திராவிட தேசியமும் வேறு வேறானதல்ல, இரண்டும் ஒன்றுதான். இந்திய கலாசாரத்தின் மிக முக்கிய அங்கம் திராவிடக் கலாசாரம்' என்றார். தற்போது தமிழ் தேசியம் என சிலர் குறிப்பிடுவதும் பாரத தேசியத்திலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல.
இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் இராமாயணமும் மகாபாரதமும். இராமாயணம் தொடர்பான சம்பவங்கள் இமயம் முதல் ஈழம் வரை நிகழ்ந்துள்ளன. அயோத்திய அரசன் இராமன் இலங்கை வரை சென்றுள்ளான். தமிழகத்தில் சேது பந்தனம்' (இராமர் பாலம்) இராமபிரானால் உருவாக்கப்பட்டு சேது காவலர்கள்' (சேதுபதிகள்) நியமிக்கப்பட்டது இராமாயணத்தில் இடம் பெற்றுள்ளது. இராவணன் எனும் பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க இராமர் சிவபூஜை செய்த இடம் இராமேஸ்வரம். இந்தப் பகுதியே இராமநாதபுரம் அதாவது இராமன் நாடு' என இன்றும் அழைக்கப்படுகிறது.
இது போலவே, இராமாயணத்திற்கு பின்னர் தோன்றிய மகாபாரதமும் தமிழர்களோடு வரலாற்றுத் தொடர்புடையது. இராமயண காலத்தில் இல்லாத சேர, சோழ, பாண்டிய வம்சமும் அரசுகளும் மகாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்றன.
தமிழர்களின் பழமையான இலக்கியங்களும், இலக்கண நூல்களும், சங்கப் பாடல்களும், கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், வரலாற்றுக் குறிப்புக்களும் இராமாயணம், மகாபாரதத்தோடு பெரும் தொடர்புடையவை. இதே போல புத்த, சமண சமயங்களும், வரலாறுகளும் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடையவையாகும்.
இந்நிலையில், ஒரு மொழியை மட்டுமே வைத்து ஒரு தேசிய இனத்தை குறிப்பிடுவது அறிவிற்குப் பொருத்தமானது அல்ல. தற்பொழுது தமிழகத்தில் தமிழ் மொழியின் அடிப்படையில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெறுவது ஆரோக்கியமானதல்ல. தமிழகத்தில் பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட பழுத்த தேசியவாதிகள் தலைச்சிறந்த தமிழர்களாக இருந்து தேசியப் பயிர் வளர்த்தனர்.
தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்' என்று வாழ்ந்து காட்டியவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். வங்க மொழியில் தோன்றிய வந்தே மாதரம்', ஜெய்ஹிந்த்' கோஷங்கள், தமிழகத்தில் தேசபக்தி உணர்ச்சியை ஊட்டின.
தமிழ் மொழி நமது மூச்சாகும், பாரதம் எமது உடலாகும், தர்மம் என்றும் உயிராகும்' என்கிற கருத்துக்கள் வழி நின்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் தமிழையும் காத்து நின்று பாரதத்தின் தலைவர்களாகவும் திகழ்ந்தனர். தமிழ் தேசியம் வேறு, இந்து தேசியம் வேறல்ல. இந்து தேசியம் என்பது தமிழ் தேசியத்தை உள்ளடக்கியது ஆகும். வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பது இந்து தேசியம் ஆகும்.
இந்து தேசியம் என்பது பன்முகத்தன்மைக் கொண்டதாகும். யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஒன்றே குலம் ஒருவனே தேவன்', எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே' என்று அகிலத்திற்கே சகோதரத்துவத்தை, சமத்துவத்தை கொடுத்தது இந்து தேசியம் ஆகும். மனித குலத்திற்கு அன்பே சிவம்' என்றும், அறம் செய விரும்பு' என்றும் வாழும் நெறிமுறைகளை வகுத்தளித்தது இந்து தேசியமாகும்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!' எனும் பாரதியின் தேசியப்பாடல் வழி நடப்போம்.
கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.