குழந்தைகள்தான் ஒரு குடும்பத்தின், தேசத்தின் செல்வம் என்ற நம்பிக்கை கொண்ட கலாசாரம் நம்முடையது. நமது தாத்தா, பாட்டிகளுக்கு பத்துப் பன்னிரெண்டு பிள்ளைகள் இருந்ததை நாம் அறிவோம். பதினாறு பிள்ளைகள் பெற்ற பெண்ணை "ஒரு கோட்டை பிள்ளை பெற்ற மகராசி' என்று கொண்டாடியும் இருக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கூட நான்கைந்து குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்திருக்கிறார்கள்.
அந்தப் பிள்ளைகள் எப்படி வளர்ந்தார்கள்?அப்போதைய குழந்தை வளர்ப்பின் சாத்தியப்பாடுகள் என்ன? என்று யோசிக்கப் புகுந்தால் மலைப்பும் ஆச்சர்யமும் தோன்றும். மூத்த பிள்ளை கடைசிப் பிள்ளையைப் பொறுப்பாய் பார்த்துக்கொள்ளும். பெண் பிள்ளைகள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ரகசியம் பேசுவதும், உதவி புரிவதும் துணையாய் இருப்பதும் என அவர்களின் வாழ்வியல் முறையே ஒரு கொண்டாட்டம் போல இருந்தது. குழந்தைப் பருவம் முதல் வயோதிகம் வரை இந்தச் சகோதர உறவுகள் ஒருவருக்கொருவர் துணை நின்று அன்பு பாராட்டித் தங்கள் வாழ்வையே ஒரு திருவிழா போல ஆக்கிக் கொண்டார்கள்.
பத்துப் பிள்ளைகள் பெற்ற பெற்றோருக்குத் தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதெல்லாம் தர முடிந்ததா என்ற கேள்வியை இன்றைய தலைமுறையினர் முன்வைக்கிறார்கள். இதற்கான பதில் "நிச்சயமாய் இல்லை' என்பதுதான். என்றோ விசேஷ நாட்களில் மட்டுமே அவர்கள் பலகாரங்களை ருசித்தார்கள். அந்த விசேஷ நாட்களுக்காக கற்பனையோடு காத்திருந்தார்கள். நண்பர்களோடு கூடி பண்டமாற்று செய்து கொண்டார்கள். ஒரு புதிய உடைக்காக தீபாவளி வரை காத்திருந்த அவர்களின் காத்திருப்பில் மகிழ்ச்சியும் சுவாரசியமும் இருந்தது.
வாழ்வில் எதுவும் உடனே கிடைத்து விடாது. எதனையும் அடைவதற்கு காத்திருத்தல் அவசியம் என்று கற்றுக்கொண்டிருந்தார்கள். அதனால் பொறுமை எனும் குணம் அவர்களுக்கு இயல்பாகவே அமையப்பெற்றிருந்தது. பெரிய கூட்டுக்குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான இயல்பு கொண்டவர்களாய் இருந்த சூழலில் வளர்ந்தவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருந்தார்கள்.
தம்பியைப் படிக்க வைத்த அண்ணன்மார்கள், சகோதரியின் திருமணத்திற்காக உழைத்த சகோதரர்கள், குடும்பத்திற்கெனதன் ஆசைகளைத் துறந்த பெண்கள் எனஅவர்கள் தங்கள் குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, ஒற்றுமை, உழைப்பு, இப்படி பல நற்பண்புகளைப் பெற்று செம்மையாய் வளர்ந்திருந்தார்கள். குழந்தை வளர்ப்புக்கென பிரத்யேகத் திட்டங்கள் எதனையும் இந்தப் பெற்றோர்கள் வைத்திருக்கவில்லை. குழந்தைகள் கூடி வாழ வேண்டுமென நினைத்தார்களே தவிர, எப்படி சம்பாதிக்க வேண்டுமெனநினைத்தார்களில்லை. "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்'என்ற நம்பிக்கை பெரியவர்களுக்கும், பெரியவர்கள் மீது மரியாதை பிள்ளைகளுக்கும் இருந்தது.
இப்படி இருந்த நமது குடும்ப கலாசாரம், கடந்த இருபது ஆண்டுகளுக்குள் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது கண்கூடான உண்மை. கூட்டுக் குடும்பங்கள் மறைந்து தனிக் குடும்பங்கள் தோன்றிவிட்டன. இதற்குப் பணி நிமித்தமான காரணங்கள் இருக்கின்றன என்றாலும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கே.
இன்று குழந்தை வளர்ப்பு என்பது ஆகக்கடின பணி என்றும், சிக்கலான, சவால்கள் நிறைந்த பெரும் சுமை என்றும் கருதுகிறார்கள். வீடு நிறைய குழந்தைகள் கூடிக்களித்து ஒருவருக்கொருவராக வளர்ந்த காலம் போய், ஒரேயொரு குழந்தை தன்னந்தனியே ஏது செய்வதென அறியாது தவிக்கும் நிலைக்கு குழந்தைகளைத் தள்ளி விட்டோம்.
தாத்தா, பாட்டி, பெரியப்பா, அத்தை போன்று வீட்டில் குழந்தைகளுக்கு அன்பு செய்த உறவுகளெல்லாம் கனவாய்ப் போய்விட்ட நிலையில், வேலைக்காரப் பெண்களின் அல்லது குழந்தைகள் பாதுகாப்பு மைய பணிப்பெண்களின் கைகளில் பிள்ளைகள் சிக்குண்டு தவிக்கிறார்கள். இந்த நிலையில், அக்குழந்தைகள் தங்கள் பொழுதுபோக்கிற்கு நாடுவது பொம்மைகள், வீடியோ கேம்ஸ் எனப்படும் மின்னணு சாதன விளையாட்டுப் பொருட்கள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றையே.
குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாமல் அவர்களைத் தனிமைப்படுத்தியிருக்கும் பெற்றோர் தங்கள் அன்பைப் பிள்ளைகளுக்குக் காட்ட சில வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அது, குழந்தைகள் கைகாட்டும் பொருள்களையெல்லாம் அவர்களுக்கு வாங்கித் தருவது. அது மட்டுமல்ல, தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைகளால் சந்தையாக மாறியிருக்கும் நம் தேசத்தில் வந்து குவியும் சர்வதேசப் பொருட்களையெல்லாம் வாங்கித் தந்து தங்கள் பிள்ளைகளுக்கு அபரிமிதமான சொகுசு வசதிகளை ஏற்படுத்தி தருவது.
உடைகள், அலங்காரப் பொருட்கள் தொடங்கி கைக்கடிகாரங்கள், காலணிகள் வரை தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பது, சர்வதேச உணவுகள் என்ற பெயரில் நம் சீதோஷண நிலைக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை வாங்கித் தருவது என அவர்களின் மன, உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் பெற்றோர்.
கூடி வாழ்ந்து பகிர்ந்துண்ட கலாசாரம் மறைந்து, நுகர்வு கலாசாரம் தலைதூக்கி, காண்பதையெல்லாம் யோசனையின்றி வாங்கிக் குவிக்கும் நிலையில் குழந்தைகள் தங்கள் தேவை, ஆசை என்பதையன்றி வேறு எதையும் அறியாதவர்களாக மாறிப் போனதில் வியப்பில்லை.பெற்றோர் இதனை வாங்குவதற்கு எத்தனை உழைத்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல் போன்ற அடிப்படைப் பண்புகளைக் கற்றுக்கொள்வதற்கான சூழலே அவர்கள் வாழ்வில் இல்லாமல் செய்தாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு சுலபமல்லதான். குழந்தை வளர்ப்பென்பதை வரவு, செலவுக் கணக்கோடு தொடர்புபடுத்தும் நிலை தோன்றிவிட்ட சோகம் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை எவரும் யோசிப்பதில்லை. ஆனால், அடிப்படை குடும்ப கலாசாரத்தையும் மனிதர்களின் இயல்புகளையுமே மாற்றம் காணச் செய்து கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாசாரம் பற்றி சிந்தித்துத் தீர்வு காண வேண்டிய அவசியமும் அவசரமும் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
கேட்டதையெல்லாம், நினைத்ததையெல்லாம் வாங்கிப் பழகிவிட்ட பின்னர் வளரிளம் பருவப் பிள்ளைகள் தங்கள் வி ருப்பம் போல எல்லாம் நடந்தாக வேண்டுமென எதிர்பார்க்கத் தொடங்குவது பல குற்றங்களுக்கும் வழி செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
குழந்தைகளுக்கு வசதியான சூழலை உருவாக்கித் தருவதைவிட ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தித் தரவேண்டியது அவசியம். தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம்ஸ் இவற்றிலிருந்து மீட்டு நம்மோடு வைத்துக் கதை சொல்லலாம். இது அவர்களுக்குக் கற்பனையை, அறம் பற்றிய சிந்தனையை வளர்க்கும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். விரும்பியதை உடனே அடைய அடம் பிடிக்கும் பிள்ளைகள் காலப்போக்கில் எல்லாம் தனக்கு மட்டுமே வேண்டும் என்றும் தனக்கு மட்டுமே சொந்தமென்றும் எண்ணும் மனப்பான்மையைப் பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதால் அடம் பிடித்தவுடன் அவர்கள் விரும்பியதை வாங்கித் தராதீர்கள் என்கின்றனர்.
காத்திருப்பதற்கு அவர்களைப் பழக்குவதும், அவசியமானவற்றை மட்டுமே வாங்கித் தருவதும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளிடம் அன்போடும் அதே நேரத்தில், உறுதியோடும் நடந்து கொண்டு சூழலை விளக்கிசொல்ல முற்படும்போது அவர்களுக்கும் புரிந்து கொள்வதற்கான பக்குவம் வரும். பொருட்கள் மட்டுமே ஒருநாளும் மனநிறைவைத் தரப்போவதில்லை, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மனம் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் திருப்தியும் நிம்மதியும் பொருட்களின் அடிப்படையில் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்; பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும். தன்னிடமிருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ள கற்றுக்கொடுத்தால் அவர்களின் மனநலம் மேம்படும்.
பெற்றோராகிய நாம்தான் பிள்ளைகள் முன் இருக்கும் உதாரணம் என்பதை நினைவில் கொண்டு எளிமையானவாழ்க்கைக்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டால் குழந்தைகளும் அதையே கற்றுக்கொள்வார்கள். பெற்றோர், பிள்ளைகளுக்கு நட்போடு துணை நிற்க முற்பட்டால் அவர்கள் மனஅழுத்தம் இல்லாமல் இயல்பாய் நல்ல ஆரோக்கியத்துடன் வளர முடியும். குடும்பத்தில் அவர்களுக்கும் வளரும் வயதில் சில பொறுப்புகளைத் தந்து குடும்பத்தின் செயல்பாடுகளில் அவர்களையும் இணைத்துக் கொண்டால், பிற்காலத்தில் அவர்கள் தங்கள் சொந்த காலில் நிற்க முடியும். உழைப்பின் அருமையையும் அவசியம் அறிந்து செலவு செய்வதையும் சேமிப்பின் அவசியத்தையும் அவர்கள் அறிய இது உதவும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நம் பிள்ளைகளுக்கு தாத்தா, பாட்டி எனும் உறவோடு சகோதர வாஞ்சையை அனுபவிக்கும்படியான குடும்ப கட்டமைப்பை சரிசெய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும். நுகர்வு கலாசாரத்தைப் புறந்தள்ளுவதும், கூட்டுக் குடும்ப கலாசாரத்திற்குப் புத்துயிர் தருவதும் நாளைய தலைமுறையின் மேன்மைக்கு அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.