வாஷிங்டனில் 1963-ஆம் வருடம் நடந்த பேரணியில் அமெரிக்க நாட்டின் வரலாற்று நாயகன் மார்டின் லூதர் கிங் கூறிய "எனக்கு ஒரு கனவு இருக்கிறது' (I have a dream) என்ற வாசகம் அமெரிக்க நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளிலெல்லாம் பரவி அழியாப் புகழைப் பெற்று விட்டது.
இந்தியத் தாயின் திருவடியில் தவழும் தமிழ் மக்களாகிய எமக்கும் ஒன்றல்ல, பல கனவுகளிருக்கின்றன. அவை பெருங்கனவுகளாகவும் இருக்கின்றன.
தமிழர்களாகிய நாங்கள் எமது கனவுகளை ஒவ்வொன்றாகச் சொல்கிறோம்....கேளீர். கேட்க வேண்டிய இடங்களிலிருப்பவர்கள் அனைவரும் தவறாமல் கேளீர்.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - காவிரியாற்றுத் தண்ணீரில் எங்களுக்குரிய நியாயமான பகுதியை எங்களின் கர்நாடகச் சகோதரர்கள் தயக்கம் ஏதுமின்றிப் பாச உணர்வுகளுடன் பகிர்ந்துகொள்ளுவார்கள் என்று. அப்படிச்செய்ய அவர்கள் தயங்குவார்கள் எனில், எங்கள் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நியாயத்தை நிலை நிறுத்தும் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - காவிரியோ, பெரியாறோ, பாலாறோ எந்த நதி சம்பந்தப்பட்ட பிரச்சினை இனி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் அந்தந்தக் காலத்தில் நடைபெறக்கூடிய தேர்தல்களைக் காரணம் காட்டித் தாமதம் ஏதும் செய்யப்படாது என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எங்கள் விவசாயப் பிரதிநிதிகள் மாநிலத்தில் ஏதாவது ஓர் ஊரிலோ அல்லது இந்த தேசத்தின் தலைநகரிலோ போராடச் சென்றால், அவர்கள் போராட்டத்தைத் துவக்கும் முன்பாகவே மாநில அல்லது மத்திய அரசின் பிரதிநிதிகளோ, அமைச்சர் பெருமக்களோ நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து ஆவன செய்வதாக உறுதியளித்து அதற்கான ஆணைகளையும் தாமதமின்றிப் பிறப்பிப்பார்கள் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடுவதையே ஓர் அவமானமாக எங்களை ஆள்வோர்கள் கருதுவார்கள் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எமது விவசாயிகள் விளைவிக்கும் கரும்பை டன் கணக்கில் வாங்கிக்கொண்டு அவர்களுக்குரிய பணத்தை வருடக்கணக்கில் பைசல் செய்யாமல் இருப்பதை ஒரு பெரும் பாவச்செயலாக எம் சர்க்கரை ஆலை முதலாளிகள் நினைப்பார்கள் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எங்களது விளைநிலங்களைப் பாழ் செய்து எங்களது சுற்றுச்சூழலைக் கெடுத்து எங்களுக்குத் தீராத வியாதிகளைப் பரிசாகக் கொடுக்கும் எந்த ஒரு தொழில்நிறுவனமும் நாங்கள் குரல் எழுப்பும் முன்பாகவே தடை செய்யப்படும் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எமது மாநில மாணவர்கள் எழுதும் தேர்வுகளுக்கு பலநூறு, ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்கும் பிள்ளை விளையாட்டை இனி யாரும் அரங்கேற்ற மாட்டார்கள் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - குடிக்க வைத்துக் குடிகெடுக்கும் டாஸ்மாக் கடைகள் தரும் லாபத்தைக் கணக்கில் கொள்ளாமல், சமூக நன்மையைக் கருதி அக்கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - டெங்கு காய்ச்சல் பரவுதல் போன்ற நிலைமைகள் ஏற்பட்டால், எமது உள்ளாட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நுழைந்து ஆய்வு செய்து குடிமக்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதில், தங்கள் பொறுப்பில் உள்ள கால்வாய்கள் மற்றும் குப்பைக்கிடங்குகளைச் சுத்தமாகப் பராமரிக்க முற்படுவார்கள் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - பட்டா, வாரிசுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் என்று எதற்கு விண்ணப்பித்தாலும், விண்ணப்பதாரர்களை அலைக்கழிக்காமல், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசு அலுவலகங்களில் செய்து கொடுப்பார்கள் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எமது மாநிலத்தின் பிரச்சினை எதுவானாலும், இங்குள்ள கட்சியினர் ஒருவரை ஒருவர் பழிசொல்லி லாவணி பாடிக்கொண்டிருக்காமல், பிற மாநிலங்களைப் போல ஒரே அணியாகத் திரண்டு நின்று மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுப்பார்கள் என்று .
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - எந்த ஒரு பிரச்னையையும் முற்றவிட்டுப் போராட்டம், வன்முறை, உயிரிழப்பு என்று போவதற்கு முன்பு ஒரு நல்ல தீர்வு காணப்படும் என்று.
எமக்கும் ஒரு கனவு இருக்கிறது - போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதற்கும் வாய்ப்பே இன்றி எமது பிரச்னைகள் முன் கூட்டியே தீர்க்கப்பட்டு, எமது சீரிய உழைப்பினால் இந்த நாட்டின் வளமான எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று.
இன்னொரு கனவும் இருக்கிறது - மேலே கூறப்பட்ட எமது கனவுகள் அனைத்தும் எமது வாழ்நாளுக்குள்ளாகவே நிறைவேறி, ஒரு புதுவாழ்வு மலரும் என்று.
கனவு நனவாகுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.