விவசாயிகளின் எதிர்பார்ப்பு

இன்று விவசாயம் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள், 17 ஆற்றுப் படுகைகள், 61 நீர்த் தேக்கங்கள், 49,480 பாசனக் குளங்கள்,
Updated on
2 min read

இன்று விவசாயம் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. சிறியதும், பெரியதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள், 17 ஆற்றுப் படுகைகள், 61 நீர்த் தேக்கங்கள், 49,480 பாசனக் குளங்கள், ஆண்டுக்கு சராசரியாக 9.58 மி.மீ. மழை என எல்லா வளங்களும் நிறைந்த நம் மாநிலத்தில் விவாசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நமது குடும்பத்தில் என்ன ஆகுமோ என்று பயந்து, பெண்கள் ஆண்களை வயல் பக்கம்போக விடாமல் தடுக்கின்றனர். நாமும் இதில் சிக்கிக் கொள்வோமோ என்று பயந்து கிராமத்தை விட்டு நகரத்திற்குப் பிழைப்பு தேடி ஒடுகிறது இளைய தலைமுறை. 
பரிதவிக்கும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களை கந்துவட்டியினர் சத்தமில்லாமல் கழுத்தறிக்கின்றனர். ஆடுகளும், மாடுகளும் தீவனமின்றி சாகின்றன இதற்குக் காரணம், வரலாறு காணாத வறட்சி என்கிறது மத்திய - மாநில அரசுகள். பருவமழை சரியாகப் பெய்து விட்டால் இந்த நெருக்கடிகள் மாறிவிடும் என்கின்றனர் அதிகாரிகள். நீர்நிலைகளை முறையாக பராமரித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், காவிரி பிரச்சனையைத் தீர்க்க தவறிய மத்திய - மாநில அரசுகள்தான் இதற்கு முழுக்காரணமென்பதே உண்மை.
தாரளமயக் கொள்கைகள் புகுத்தப்பட்ட பிறகு விவசாயத்துக்கான அடிப்படை ஆதாரங்களான நிலவளம், நீர்வளம் சந்தை ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பயன்படுத்தபடுகிறது. வியாபார நோக்கத்திற்காக ஆற்று நீரும், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரும் கொள்ளையடிக்கபடுகின்றன. தண்ணீர் வியாபாரம் கொடிக்கட்டிப் பறக்கிறது. மத்திய - மாநில அரசுகள், கிராமப்புற வறுமையை ஒழிப்பதாகவும், உணவுப் பற்றாக்குறையை நீக்குவதாகவும், வேலைவாய்ப்பைப் பெருக்குவதாகவும், விலைவாசியை குறைப்பதாகவும் வாக்குறுதிகளை கொடுத்தன. 
இந்த வாக்குறுதிகளை நம்பி, அரசு கொண்டுவந்த ஒட்டுரகப் பயிர்கள், ரசாயன உரங்கள், வீரியரகப் பயிர்கள், பணப் பயிர்கள், நடவு எந்திரம், அறுவடை எந்திரம், சொட்டு நீர் பாசான முறைகள் என எல்லா முறைகளையும் விவசாயிகள் பின்பற்றினர். ஆனால் அரசின் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறப்படவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய - மாநில அரசுகள் தேல்வியடைந்து விட்டன.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மனைவணிகம், தனியார் கல்வி நிறுவனங்கள், தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சி காரணமாக 12 லட்சம் ஹெக்டர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக வேளாண் பல்கலைகழகமே குற்றம் சாட்டுகிறது. ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் பதிப்பு, மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களின் பெயரில் விளைநிலங்களை அரசே அழிக்கிறது. அத்துடன், பழைய நில உச்சவரம்பு சட்டம், குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்கேற்ப மாற்றியமைத்து வருகிறது. 
முன்பெல்லாம், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று சாகுபடிகள் 13 லட்சம் ஏக்கரில் நடைபெற்று வந்தன. அது பழைய கதை. இப்போதெல்லாம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளை எட்டிப் பார்ப்பதே இல்லை. டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்கள் தூர்வாரபடாததே இதற்குக் காரணம்.
ஒவ்வோர் ஆண்டும், மழைக்காலத்திற்கு முன்பே தூர்வாரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் எந்த ஆண்டும் தூர்வாரும் பணி நடைபெறுவதில்லை. அணை திறந்த பின், தண்ணீர் வந்துவிட்டதைக் காரணம் காட்டி அவசர கதியில் அரைகுறையாக தூர்வாரும் பணி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் 31கிராமப்புற மாவட்டடங்களில் உள்ள 12,527 கிராமப்புற ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்துப் போனதால் தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது. அதை தொடர்ந்து விவசாய தொழிலாளர்கள் முன்வைத்த 200 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஏற்க மறுத்து ஏற்கெனவே இருந்து வந்த 100 என்பதை மாற்றி 150 நாள் வேலையாக அரசு அறிவித்தது. 
இன்னொருபுறம் 100 நாள் வேலைத் திட்டத்தில் பயனாளிகளுக்கான ரூபாய் 750 கோடி சம்பளபாக்கியை மத்திய அரசு நிலுவையில் வைத்து இருந்தது. அதனை கேட்டு பெறுவதற்கு தமிழக அரசு அப்போது எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. 
இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பள பாக்கி கேட்டு பயனாளிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதற்கு பிறகுதான் நிலுவைத் தொகையைப் பட்டுவாடா செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
இப்போது 200 நாள் வேலை வழங்கிடவும், அதற்கான கூலி ரூ. 400 அளித்திடவும், 200நாள் வேலையை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்திடவும் விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அழிவின் விளிம்பில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை பிறக்கும் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com