தோழர்களுக்கு ஒரு வார்த்தை...

எதிர்வரும் மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை தொடங்கிவிட்ட நிலையில், பாஜக, காங்கிரஸுக்கு எதிராக மூன்றாவது அணியை

எதிர்வரும் மக்களவைத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை தொடங்கிவிட்ட நிலையில், பாஜக, காங்கிரஸுக்கு எதிராக மூன்றாவது அணியை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுப்பதில் தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகளைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு.
ஆனால், மதவாதம் எனச் சொல்லி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை சற்றும் தயங்காமல் எடுக்கத் துணியும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு, காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் தயக்கம் தொடர்வதாகவே தெரிகிறது.
அண்மையில், ஹைதராபாதில் நடைபெற்ற அக்கட்சியின் தேசிய மாநாட்டில், காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைக்காமல், அனைத்து மதசார்பற்ற சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், மதவாத சக்திகளைத் தடுப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸுடன் தேர்தல் உடன்படிக்கை வைத்துக் கொள்வோம்' என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறிக் கொண்டிருக்கிறார்.
இதன் மூலம் காங்கிரஸுடனான உறவை முற்றிலும் முறித்துக் கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் ஒருவேளை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும்அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில், மூன்றாவது அணியின் ஆதரவை காங்கிரஸுக்கு அளிக்க வேண்டி வரலாம் என்பதன் அடிப்படையில் இடதுசாரிகள் இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், பொருளாதாரக் கொள்கையில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் எந்த வேறுபாடும் இல்லையென்ற விமர்சனத்தைத் தொடர்ந்து முன்வைத்துவரும் தோழர்கள், காங்கிரஸுடன் தேர்தல் உடன்படிக்கை வைத்துக் கொள்வோம் எனச் சொல்வது நகைமுரணாக உள்ளது. 
அத்துடன் கம்யூனிஸ்ட்டுகளின் இருதலைக் கொள்ளி போன்ற இந்த நிலைப்பாடு, வரும் எம்.பி. தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமென்ற அதன் இமாலய இலக்கை நோக்கிய பயணத்துக்கும் தடையாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய அரசியலில் பாஜக, காங்கிரஸுக்கு எதிரான மாற்று அரசியலை முன்னெடுப்பதன் முதல் முயற்சியாக காங்கிரஸுவுடன் தேர்தல் உடன்படிக்கைக் கூட இல்லை என்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலில் தீர்க்கமாக எடுக்க வேண்டும்.
அடுத்து அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குடன் விளங்கும் தெலுங்கு தேசம், சிவசேனை, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட மாநிலக் கட்சிகளை ஓரணியில் திரட்ட வேண்டும். இதன் மூலம், வரும் எம்.பி.தேர்தலில் இரு தேசிய கட்சிகளுக்கும் மூன்றாவது அணி கடும் சவாலை அளிக்கும்படி செய்ய முடியும்.
சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தலிலும் வாக்காளர்களின் நிலைப்பாடு வேறு வேறாக உள்ளது. அதாவது சட்டப்பேரவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளுக்கோ, மாநிலக் கட்சிகளுக்கோ பொதுமக்கள் வாக்களித்தாலும், எம்.பி. தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய தேசியக் கட்சிகளை கருத்தில் கொண்டுதான் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்துகின்றனர் என்ற பொதுவானதொரு வரையறை உண்டு. 
ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 எம்.பி., இடங்களில் 37 இடங்களை கைப்பற்றி தேசிய அளவில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்ததன் மூலமும், மோடி அலை என்று சொல்லப்பட்டபோதும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலமும் இந்த வரையறை பொய்ப்பிக்கப்பட்டுள்ளதை இடதுசாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். 
ஆளுங்கட்சி மீது பொதுமக்களுக்கு இருக்கும் பொதுவான அதிருப்தியுடன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பாதிப்புகள், வேலையிழப்பு , வேலைவாய்ப்பின்மை போன்ற எதிர்மறை விளைவுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என, மத்திய பாஜக அரசுக்கு எதிராக மூன்றாவது அணியினர் அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொள்ள பல பிரச்னைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்துக் கொள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி எனக் கூறிக்கொண்டு, பொதுமக்களுக்கு நாள்தோறும் இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிக்கு, எரிபொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்துக்கு இருமுறை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதித்த, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் அடிகோலியது. 
இதேபோன்று சிறு, குறு ,நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதற்குக் காரணமான ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு சூத்திரதாரியே முந்தைய மத்திய காங்கிரஸ் அரசுதான். எனவே, காங்கிரஸுக்கு எதிராகவும் வலுவான பிரசாரத்தை முன்னெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. 
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடுமே என்று கவலைக் கொள்ளாமல், காங்கிரஸுக்கு எதிரான வாக்குகளையும் அறுவடை செய்யும் வகையில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மூன்றாவது அணியினர் தேர்தல் பிரசார உத்தியை வகுக்க வேண்டும். அதன் பயனாக மூன்றாவது அணி மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, பாஜக - காங்கிரஸின் வெற்றிக்கு நிச்சயம் கடிவாளம் போடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com