புத்துயிர் பெறுமா பொதுத்துறை வங்கிகள்?

பொதுமக்கள் வழங்கும் வைப்புத் தொகையிலும், சாதாரண குடிமக்கள் உழைத்து செலுத்தும் வரிப் பணத்திலும் இயங்கி கொண்டிருப்பவை பொதுத் துறை வங்கிகள்.
Updated on
3 min read

பொதுமக்கள் வழங்கும் வைப்புத் தொகையிலும், சாதாரண குடிமக்கள் உழைத்து செலுத்தும் வரிப் பணத்திலும் இயங்கி கொண்டிருப்பவை பொதுத் துறை வங்கிகள். நம் அன்றாட வாழ்வில் இறண்டறக் கலந்துவிட்ட பொதுத்துறை வங்கிகளின் நிலை பற்றி நாம் அவ்வப்பொழுது அறிந்து கொள்வது அவசியமாகும்.
2017 - 18ஆம் நிதி ஆண்டில், 19 பொதுத்துறை வங்கிகளின் மொத்த நஷ்டத்தின் அளவு 87,357 கோடியாகும். இவற்றுள், பஞ்சாப் நேஷனல் வங்கி, 12,282 கோடி ரூபாய் அளவிலான அதிகபட்ச நஷ்டக் கணக்கை காட்டியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தை பிடிக்கும் ஐ.டி.பி.ஐ வங்கியின் நஷ்டத்தின் அளவு, 8,238 கோடி ரூபாயாகும். 
மூன்றாம் இடத்தைப் பிடித்த பாரத ஸ்டேட் வங்கியின் நஷ்டம், 6,547 கோடி ரூபாய்.
வளர்ந்து வரும் வாராக்கடன்களுக்கான ஒதுக்கீட்டு தொகை (டழ்ர்ஸ்ண்ள்ண்ர்ய் ச்ர்ழ் க்ஷஹக் க்ங்க்ஷற்ள்) பெருமளவில் அதிகரித்து வருவதே, இம்மாதிரியான பெரும் நஷ்டங்களுக்குக் காரணம். 
2013-ஆம் ஆண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன்களின் அளவு, தற்போது 10.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகும். இது மேலும் வளர்ச்சி அடையும் என்று கிரிசில் தர நிர்ணய நிறுவனம் கணித்துள்ளது.
வாராக்கடன்களால் சூழப்பட்ட பொதுத்துறை வங்கிகள் தங்கள் மூலதன மேம்பாட்டிற்கு மத்திய அரசையே சார்ந்துள்ளன. கடந்த நிதி ஆண்டில், வாராக்கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளின் மூலதனக் கணக்கிற்கு உயிரூட்ட, மறு மூலதன திட்டத்தின் மூலம், 2.10 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, அதில் 90 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய வாராக்கடன்களின் நிலவரப்படி, வங்கிகளின் மூலதனத்தைக் காப்பாற்ற மேலும் பெருந்தொகை தேவைப்படும் என்று தோன்றுகிறது. 
கடந்த மூன்று வருடங்களாக அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பற்றிய தகவல்கள், மக்களிடையே, வங்கித் துறை செயல்பாடுகள் குறித்த நம்பிக்கையைக் குறைத்து வருகின்றன. வங்கிகளின் நிர்வாகத்தில் என்னதான் கோளாறு என சாமானிய மக்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்.
வங்கிகளால் அறிவிக்கப்படும் வாராக்கடன்கள் பற்றிய பகீர் தகவல்களில் பெரும்பாலும், ஏற்கனவே வங்கி நிர்வாகங்களால் நீண்ட காலமாக மறைக்கப்பட்ட வலுவிழந்த கடன்கள் அடங்கி இருக்கின்றன. வாராக்கடன்களை வசூலிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளாமல், அவற்றை மறைக்கும் திறமையை வங்கிகள் வளர்த்துக் கொண்டுவிட்டன. 2016-17-ஆம் ஆண்டுகளில், ரிசர்வ் வங்கி அறிவித்த "ஒரு முறை சுத்தம் செய்வோம்' திட்டத்தின் கீழ், ஒளிந்திருந்த வாராக்கடன் விவரங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு வங்கி நிர்வாகங்கள் தள்ளப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும். 
கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி, "எந்த விதமான மேம்பாடும் இல்லாமல், வசூல் மேம்பாட்டு திட்டங்கள் என்ற போர்வையில் ஒளிந்திருந்த நீண்ட காலமாக வசூலாகாத அனைத்து கடன்களும் வாராக்கடன்களாக பட்டியலிடப்படவேண்டும்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டிய கட்டாயத்துக்கு வங்கிகள் தள்ளப்பட்டன. இல்லையென்றால், ஆழமாக வேரூன்றி விட்ட வாராக்கடனோடு, வங்கிகள் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கும்.
திரும்ப செலுத்தப்படாத பெரும் கடன்களை, வாராக்கடன்களாகப் பகுதி நீக்கம் செய்து, வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் ஏற்படும் விளைவுகள் ஏராளம். தாமதமாகும் காலத்தில், கடன் சார்ந்த பிணையங்களைக் கடனாளிகள் தவறாக பயன்படுத்துவதற்கு அது வாய்ப்பாக அமையும். கடன் கணக்கின் சகஜ நிலைமையை (நற்ஹய்க்ஹழ்க் ள்ற்ஹற்ன்ள்) எடுத்துக்காட்டி, வெளி இடங்களில் கடனாளி மேலும் கடன் பெறக்கூடும். கடனைத் திரும்ப செலுத்துவதிலிருந்து தப்பிக்க, கடனாளி வெளிநாடுகளுக்குத் தப்பி செல்வதற்கும் வழியேற்படும். 
கடன் கணக்கு சார்ந்த வசூலாகாத வட்டித் தொகையை, வசூலானது போல் வரவுக் கணக்கில் காட்டுவதாலும், ஒதுக்கீடுகளைத் தவிர்ப்பதாலும் வங்கிகளின் செயற்கை லாபம் (ஆர்ர்ந் ல்ழ்ர்ச்ண்ற்ள்) அதிகரித்து, அந்த லாபத்துக்குரிய ஈவுத் தொகையை பங்குதாரர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த மாதிரி சூழ்நிலையில்தான் வங்கிகள் கடந்த சில வருடங்களாக இயங்கி வந்தன எனலாம். 
வாராக்கடன் எனும் சிக்கலால் பாதிக்கப்பட்ட 12 பொதுத்துறை வங்கிகள் தற்போது, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் வந்து விட்டன. இந்தக் கண்காணிப்பு முறைப்படி, வங்கிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புத் தொகை பெறுவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், கடன் வழங்குவதற்குப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால், இவற்றின் வர்த்தகம் குறுகி, வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும். ஆனால், நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களை வசூலிக்கும் பணி முடுக்கி விடப்பட்டு, அந்த பணியில் வங்கிகள் ஓரளவு வெற்றி கண்டால், அவற்றின் வருமானம், வரும் காலங்களில் கூடுவதற்கு வாய்ப்புண்டு. 
கடந்த வருடம் இயற்றப்பட்ட திவால் சட்டம், வங்கிகளின் பெருந்தொகையிலான வாராக்கடன்களை விரைவில் வசூலிக்க ஓரளவு உதவி புரிகிறது. திவால் சட்டத்திற்கு உள்படுத்தப்பட்ட "பூஷன் ஸ்டீல்' என்ற நிறுவனத்தை "டாடா ஸ்டீல்' நிறுவனம் கையகப்படுத்தியதன் மூலம், 35 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் வசூலாகும் சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பது ஓர் உதாரணமாகும். 
கடன் வழங்குவது ஒரு கலை என்றால், வழங்கிய கடனை வசூலிப்பதும் ஒரு கலையாகும். அந்தக் கலையை அறியாமல் கடன் வழங்கியதால்தான், பல வங்கிகள் வாராக்கடன் எனும் சுமையை சுமந்து, தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. கடன் வசூல் நிர்வாகத்தில், சில சிறிய வங்கிகளின் அடிப்படைத் திறமை கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, சிறிய வங்கிகளின் வாராக்கடன்களை பெரிய வங்கிகளுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 
பொதுத்துறை வங்கிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தற்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. நிர்வாகச் சீர்திருத்தங்கள் மூலம், இழந்த நம்பிக்கையை மீட்டு எடுக்க வேண்டிய பொறுப்பு, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசை சார்ந்ததாகும். இது போன்ற குழப்பங்களால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள், தங்கள் வைப்புத் தொகை மூலம், வங்கிகள் கடன் வழங்க மூலதனத்தை வழங்கும் வாடிக்கையாளர்கள்தான். வேண்டுமென்றே கடனை செலுத்தாத பெருந்தொகை கடனாளிகளையும், அந்த கடன்களை சரிவர மேற்பார்வையிட்டு பராமரிக்காத குற்றத்திற்காக விசாரணைக்கு உள்படுத்தப்படும் வங்கி அதிகாரிகளையும் வாடிக்கையாளர்கள் வில்லன்களாகவே பார்க்கிறார்கள். 
நாட்டின் வங்கி நடவடிக்கைகளில் 70 சதவீதத்தை ஆக்கிரமிக்கும் பொதுத்துறை வங்கிகளில், நிர்வாக சீர்திருத்தங்களை மேம்படுத்த, மத்தியில் ஆளும் அரசுகள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவது வியப்பை அளிக்கிறது. அரசின் கருவூலமாகக் கருதப்படும் பொதுத்துறை வங்கிகளை நிர்வகிக்க, தகுதியான அதிகாரிகளை நியமிப்பது, இயக்குநர் குழுக்களில் வங்கித்துறையில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களைச் சேர்ப்பது மற்றும் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பது போன்றவை இந்த சீர்திருத்தத்தில் அடங்கும். பிரச்னை பூதாகரமாக வளர்ந்த பிறகு அதற்கான தீர்வைத் தேடுவதை விட, பிரச்னைக்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டும் அம்மாதிரி பிரச்னை எழாமல் செயல்டுவதுதான் விவேகமாகும்.
தற்போதைய நிலவரப்படி, பிரச்னையில் சிக்கித் தவிக்கும் நான்கு வங்கிகளுக்கு தலைமை நிர்வாக அதிகாரிகள் இல்லை. எட்டு வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் ஓய்வு பெறுவதால், நிர்வாகத்தில் வெற்றிடம் மேலும் அதிகரிக்கும். ஒரு சில வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர்களின் அதிகாரங்கள், அவர்கள் மீது விசாரணை நடப்பதால் முடக்கப்பட்டிருக்கின்றன. 
பொதுத்துறை வங்கிகளால் வழங்கப்படும் ஊதிய விகிதம், இடர்ப்பாடுகளுக்கு ஏற்ப அமையவில்லை என்பதால், வங்கித் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த திறமைசாலிகளை கவர்ந்திழுக்க முடிவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. 
பொதுத்துறை வங்கிகளில் திறமை மிக்க பல அதிகாரிகள் பணி புரிகின்றனர். ஆனால், அதிகார மையத்தின் அருகில் இல்லாதது, பதவி உயர்வுகளில் பாரபட்சம், நேர்மறையான அணுகுமுறைகளால் ஒதுக்கி வைக்கப்படுவது, வங்கி நிர்வாக மேம்பாட்டுக்கான வெளிப்படை கருத்து பகிர்வுகள், அரசியல் சார்பின்மை போன்ற காரணங்களால் பல திறமையான அதிகாரிகள் புறந்தள்ளப்படுவதாக கருத்துகளும் நிலவுகின்றன. ஒரு வங்கியின் பணி கலாச்சாரத்துக்குப் பொருந்தாத வெளி நபர்களை குறுகிய காலத்திற்கு தலைமைப் பொறுப்பாளர்களாக நியமிப்பதை விட, அதே வங்கியை சார்ந்த திறமையான அதிகாரிகளை அடையாளம் கண்டு, தலைமை பொறுப்புக்கு அவர்களை உருவாக்குவது நிர்வாக சீர்திருத்தத்திற்கு பெரிதும் பயன்படும். 
வங்கித் துறையில் தற்போது மலிந்திருக்கும் குறைகள் களையப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடத்தப்பட்டிருக்கும் பல பொதுத்துறை வங்கிகள் புத்துயிர் பெற்று, வாடிக்கையாளர் மத்தியில் இழந்த நம்பிக்கையை விரைவில் மீட்டெடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்: வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com