அரசு மக்களுக்கானதா?

இந்த உலகம் நம்முடையது; இந்த நாடு நம்முடையது; இந்தச் சமூகம் நம்முடையது. இவற்றுக்காக நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? நாம் போராடாவிட்டால் யார் போராடுவார்கள்?
Updated on
3 min read

இந்த உலகம் நம்முடையது; இந்த நாடு நம்முடையது; இந்தச் சமூகம் நம்முடையது. இவற்றுக்காக நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? நாம் போராடாவிட்டால் யார் போராடுவார்கள்?' - இப்படி மாசே துங் கேட்டார். அவர் சீன மக்களை மட்டும் பார்த்துக் கேட்டார் என்பதல்ல, உலகம் முழுவதிலுமுள்ள, அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படும் மக்களைப் பார்த்துக் கேட்டார். அவர்கள் கிளர்ந்தெழுந்து போராட முன்வர வேண்டும் என்பதற்காகக் கேட்டார்.
அரசாங்கம் என்பதே மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தைக் காப்பதற்காகவும் ஏற்பட்டதுதான். ஆனால் நடைமுறையில் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை. முடியரசு, சர்வாதிகார அரசு, ஜனநாயக அரசு என எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசாகவே இருக்கிறது. பண பலம் பெற்றவர்கள், ஊழல் பேர்வழிகள், தொழில் அதிபர்களோடு சேர்ந்து கொண்டு அது எளிய மக்களை பயமுறுத்துகிறது. 
அவர்களுக்காகப் பரிந்து பேசும் சுதந்திர விரும்பிகளைச் சிறையில் அடைக்கிறது. இவர்கள் சமூக விரோதிகள்', பொது அமைதியை சீர்குலைக்கிறார்கள்' என்று நஞ்சு கொடுத்தும், தூக்கில் மாட்டியும் கொல்கிறது. சுதந்திரப் போராளிகள் மக்களுக்குச் சொல்லி சென்றது, சிறைக்குச் செல்வதற்கு அஞ்சாதீர்கள்; உயிரைக் கொடுத்தாவது மனித மாண்புகளைக் காப்பாற்றுங்கள்; அதுதான் அடுத்த தலைமுறையை வாழ்விக்கும்' என்பதுதான்.
மனித வாழ்க்கை என்பது ஒரு தலைமுறையோடு முடிந்து போவது இல்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்து வருவது. நமக்குப் பின்னால் இன்னும் பல லட்சக்கணக்கான ஆண்டுகள் இருக்கக்கூடியது. அதனைக் காக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்று கொள்ள வேண்டும்.
உலகத்தின் பல நாடுகள், வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களில் காற்றையும், நீரையும், வனத்தையும், பூமியையும் அறியாமலும், அறிந்தும் பாழ்படுத்தி வருகின்றன. வல்லரசாக மாற வேண்டும் என்று பேரவா கொண்டிருக்கும் இந்தியாவும் அதில் சேர்ந்து கொண்டு இருக்கிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வானுயர்ந்த குடியிருப்புக் கொண்ட கட்டடங்கள், இடைவிடாது புகை உமிழும் புகை போக்கிகள், பெரிய பெரிய தொழிற்சாலைகள் என்று கருதப்படுகிறது. ஆனால், அதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறிப்பது முறையல்ல. விவசாய நிலங்கள்கையகப்படுத்தப்பட்டு தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தப்பட்டதால் மக்கள் ஒன்றுகூடி நீர்நிலைகளைக் காக்கவும், வேளாண்மை நிலத்திற்காகவும், தூய்மையான நிலத்திற்காகவும் பேரணிகள், போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தார்கள்.
அரசாங்கம் எளிய மக்களின் போராட்டத்தைப் புறந்தள்ளியது. முன்னேற்றம் பற்றி ஒன்றுமே அறியாதவர்கள், பிற்போக்குவாதிகள், சொந்த புத்தி இல்லாதவர்கள், யாரோ சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுக் கொண்டு பேரணி நடத்தி பொது அமைதியைக் கெடுக்கிறார்கள், ஒரு ஜனநாயக அரசு, வளர்ச்சியையே முதன்மை லட்சியமாகக் கொண்டு செயல்படும் அரசு, போராட்டங்களை அனுமதிக்க முடியாது' என்று கடுமையான நடவடிக்கை எடுத்தது. அதனால் கலவரங்கள் மூண்டன. பிரச்னைகள் நாடு முழுவதற்கும் பரவின. உச்சநீதிமன்றம் வரை சென்றது.
உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் மக்கள் பேரணிகள், போராட்டங்கள் நடத்தலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையிருக்கிறது' என்று கூறியது. மக்கள் அரசியல் சாசனச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான் என்றாலும், அரசு செய்யும் கெட்ட காரியங்களுக்கு - அவர்களின் மண்ணை அபகரிக்கும் காரியத்திற்கும், காற்றையும் நீரையும் மாசுபடுத்தும் காரியங்களையும் எதிர்த்துப் போராட உரிமை பெற்றவர்கள். அதுதான் இயற்கை நீதி.
மக்கள் தங்களின் அரசாங்கத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடினால் நேர்மையான அரசு அவர்களை அழைத்து மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 
பொதுமக்கள் என்பவர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் மாமனிதர்கள் இல்லை, எப்போதும் அவர்கள் மாமனிதர்கள்தான். அவர்களின் வாக்குகளால்தான் அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரம் கிடைத்திருக்கிறது. அந்தப் புரிதல் இல்லாத காரணத்தால்தான் ஊழல் புரிந்து பணம் சேர்க்க அலைகிறார்கள்.
உண்மையான தேசபக்தர்களையும், சமூக சேவகர்களையும் குண்டர் சட்டத்திலும், தேச துரோகச் சட்டத்திலும் பிடித்து சிறையில் அடைக்கிறார்கள்.
இந்தியாவில் தேச துரோகச் சட்டம் என்பது நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டது. அது தேச துரோகிகளைத் தண்டிக்கவில்லை. மகத்தான தேசபக்தர்களான மகாத்மா காந்தி, பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா இவர்களையெல்லாம்தான் தேச துரோகச் சட்டத்தில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
மனிதர்கள் இந்தப் பூமியில் இளைய விலங்குகள். ஆனால் மற்றெல்லா விலங்குகளையும்விட அறிவு கொண்டவர்கள். பேசவும் எழுதவும் கற்றவர்கள். ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போய் வேட்டை ஆடுகிறவர்கள். அவர்களில் பலர் பேராசையும், சுயநலமும் கொண்டவர்கள். அவர்கள் செய்து இருக்கிற அட்டகாசங்கள் பற்றி அட்டவணை தயாரிக்க முடியாது என்பது சரித்திரமாக இருக்கிறது.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது எந்தக் கட்சி அதிகமான இடங்களைப் பெற்று இருக்கிறதோ, அதுவே அரசில் அதிகாரம் பெற்றது. பெரும்பான்மை பெற்ற கட்சியின் செயல்திட்டங்கள் ஐந்தாண்டுகளுக்கு தங்குத் தடையின்றி அமல் செய்யப்படும். அதனை சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தின் வழியாக முறியடிக்க முடியாது. பெரும்பான்மை என்பதே முடிவெடுக்கும் காரணியாக இருக்கிறது.
ஆளுங்கட்சியின் செயற்பாடுகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்றன. நாடாளுமன்றம், சட்டப்பேரவை வழியாக முறியடிக்க இயலாது என்கிற நிலையில், பாதிக்கப்படும் மக்கள் வீதியில் நின்று அமைதியாகப் போராடுகிறார்கள். 
மக்கள் போராட்டம் அரசுக்கு சகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இவர்கள் ஒன்றுகூடி சகல அதிகாரமும் கொண்ட அரசாங்கத்தைப் பணிய வைக்க முடியாது என்று எண்ணி, கேளிக்கை, கொண்டாட்டங்களில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உறுதி குலையாமல் வெற்றி பெறும் வரையில் அமைதியாகப் போராடுவோம் என்று அமைதிப் பேரணிகள் நடத்துகிறார்கள்.
பெண்கள், சிறுவர்கள்,இளைஞர்கள், முதியவர்கள் என இருபதாயிரம், இருபத்தைந்தாயிரம் பேர் பெரும் கூட்டமாக அரசு அலுவலகங்களை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்கிறார்கள். அதற்கு முன்னே ஐந்து பேர் கூட கூட்டமாகச் சேரக்கூடாது என்று தடை போடப்படுகிறது. நூறு நாள்கள் அமைதியாகப் போராடியவர்கள் அமைதியாகவே நடக்கிறார்கள்.
அரசுக்கு நிலைமை கட்டுமீறிவிட்டது என்று புரிகிறது. உயர் பதவியில் இருக்கிறவர்கள், உத்தரவு போட்டு அமைதியை நிலைநாட்டுவதில் முன்னே இருக்கக் கூடியவர்கள் எல்லாரும் காணாமல் போய் விடுகிறார்கள்.
பெரும் கூட்டத்தில் கலவரம் ஏற்படுகிறது. அரசு கட்டடங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகள் தீயில் எரிகின்றன.
தொண்ணூற்று ஒன்பது நாள்களாக மக்களின் அமைதிப் போராட்டத்தை அடக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அரசுக்கு ஒரு நல்வாய்ப்பு கிடைத்துவிட்டது. போலீஸார் துப்பாக்கியால் சுடுகிறார்கள். சிலர் சாக, சிலர் காயமடைய மக்கள் கூட்டம் சிதறி ஓடுகிறது.
அரசு மக்கள் மேல் அக்கறை கொண்டது போல பாவனை செய்து கொண்டு, அமைதிக் கூட்டத்தில் சமூக விரோதிகள், தேச துரோகிகள், வன்முறையாளர்கள் ஊடுருவிவிட்டார்கள். அவர்கள்தான் வன்முறைச் செயற்பாடுகளுக்கெல்லாம் காரணம். மக்கள் அப்பாவிகள். நல்லவர்கள். அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது. இறந்து போனவர்கள், காயமுற்றவர்களுக்கு அரசு தாராளமாக இழப்பீடு கொடுக்கிறது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து இருக்கிறோம். வன்முறையைத் தூண்டிவிட்டதே காவல்துறைதான் என்பது பொறுப்பில்லாத குற்றச்சாட்டு. எல்லாம் விசாரணை கமிஷனில் தெரிந்துவிடும்' என்று பிரச்னைகளை நீர்த்துப் போக வைக்கப் போகிறது.
மனிதர்கள் எந்தச் சட்டத்தாலும் உருவாக்கப்பட்டவர்கள் அல்லர். மனிதர்கள் அமைதியாக வாழவும், தொழில் செய்யவும், தாங்கள் நம்பும் கடவுளைத் தொழுவதற்கும், இயற்கையாக உள்ள உரிமையை நிலைப்படுத்தவுமே சட்டம், அரசியல் சாசனம் எல்லாம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதிய தாமஸ் ஜெபர்ஸன், ஒவ்வொரு தலைமுறையும் அடுத்து வரும் தலைமுறைகளுக்குச் சமமானதுதான். ஒரு தலைமுறை தனக்குப் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதற்காக, வரும் தலைமுறை மீது அதிகாரம் செலுத்தக்கூடாது' என்று சொன்னார்.
அது எல்லா காலத்திற்கும்,எல்லாருக்கும் சொல்லப்பட்டதுதான்.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com