சீராட்டுவோம் செம்மொழித் தமிழை!

தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது 2004 ஜூன் 6-ஆம் நாள்.
Updated on
3 min read

தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என உலகம் ஏற்றுக்கொண்ட உண்மையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது 2004 ஜூன் 6-ஆம் நாள். தமிழ் மொழிக்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்து 14 ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதனால் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்று பரிசீலனை செய்து கொள்வது நல்லது.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்று பாரதியார் நமக்கு அறிவுறுத்திச் சென்றுள்ளார். நாம் அதைச் செய்தோமா என்று ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது. வாழ்க' என்று கூவுவதால் மட்டும் எந்த மொழியும் வாழ்ந்து விடாது என்பதுதான் வரலாற்று உண்மை.
உலகச் செம்மொழிகளில் தமிழும், சீனமுமே பேச்சு வழக்கில் இப்போதும் இருக்கின்றன. நாகரிகத்தில் கொடிகட்டிப் பறந்த கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் எல்லாம் பேச்சு வழக்கிழந்து மொழியளவில் நின்றுவிட்டன என்பது வருத்தமான செய்தி. அந்த நிலை தமிழுக்கு வந்துவிடக் கூடாது என்று வாழும் மொழியின் வாணர்கள் கவலைப்பட வேண்டும்.
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு எழுதும் மாணவர்களிடம் உரையாற்றியபோது, சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ். இனிமையான தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளாதது எனக்கு வருத்தம் அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.
பிரதமரின் கூற்று உண்மையெனில், மூத்த மொழிக்குரிய முன்னுரிமையும், மரியாதையும் தமிழுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.
மூத்த உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சீன தத்துவ ஞானி கன்பூசியஸ் (கிமு 551-478) அவர்களிடம், பெரியீர்! சமுதாயத்தை ஆளும் பொறுப்பு உம்மிடம் விடப்படுமாயின், நீவீர் யாது செய்வீர்?' என்று வினவப்பட்டது.
அதற்கு அவர் அளித்த விடை என்ன தெரியுமா? நான் முதலில் மொழியைத் திருத்துவேன்' என்றார். அவ்வாறு செய்யாவிட்டால் ஒழுக்கமும், கலையும் கெடும். அதனால் நீதி தடுமாறும். மக்கள் செய்வதறியாமல் குழப்பம் அடைவர்' என்றார்.
மொழியில் தடுமாற்றம் ஏற்படுகிறபோது ஆட்சியும், அதிகாரமும் தடுமாறும். மொழி வீழ்ச்சியடையும்போது அந்த மொழி பேசும் இனமும், அதனால் நாடும் வீழ்ச்சியடையும் என்பது இதன் பொருள்.
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போல அவரவர்க்கு அவர்களது தாய்மொழி உயர்வானதே யாகும். எனினும் தமிழ்மொழி அதற்கு விலக்காக, கொண்டவரை மட்டுமின்றி, ஆராய்ந்த அயல்நாட்டவரையும் கொண்டாடச் செய்துள்ளது.
தமிழ் இலக்கியம் பற்றிக் குறிப்பிடவந்த பெஸ்கி பாதிரியார், தமிழ்ப் புலவர் ஆற்றல் சான்ற மொழியினைக் கொண்டனர். தமிழ்க் கவிதையில் சிறந்த பாட்டுகள் இறையுணர்வு பற்றியும், இயற்கையருள் பற்றியும் காணப்படுகின்றன' என்று கூறியுள்ளார்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு, முன்தோன்றிய மூத்த குடி'யின் மொழியும் மூத்ததுதான். உலகின் பிற பகுதிகள் போராலும், புரட்சியாலும் அமைதியற்று வாழ்ந்த காலத்தில் மூவேந்தர்கள் முச்சங்கம் வைத்து மொழியை வளர்த்தனர். திரைகடல் ஓடி திரவியம் சேர்த்தனர்.
கடல், ஆர்கலி, முந்நீர், பரவை, புணரி எனக் கடல் பற்றிய தூய தமிழ்ச் சொற்களும், நாவாய், ஓடம், மரக்கலம், கலம், கப்பல், தோணி, தெப்பம், திமில், அம்பி முதலிய மரக்கலத்தின் வேறு பெயர்களும் தமிழர்களின் கடல் வணிகத்தின் சிறப்பைக் கூறாமல் கூறுகின்றன.
தமிழ் மொழி பழமையிலும், சொல்வளத்திலும், இலக்கண வரம்பிலும், செய்யுள் வகையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைச்சிறந்தது. வடமொழி, எபிரேயம், கிரேக்கம் ஆகிய மூன்று உலக இலக்கிய மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன என்று ரைஸ்டேவிஸ் என்னும் மொழி நூலார் கூறியுள்ளார்.
பரிதிமாற் கலைஞர் என்ற வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியவர்கள் 1897 -இல் தாம் எழுதிய தமிழ் மொழியின் வரலாறு' என்னும் நூலில் தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்பதை தனிமொழி', உயர்மொழி', உயர்தனிச் செம்மொழி' என்பன போன்ற தொடர்களால் விளக்கியுள்ளார்.
வடமொழி, இலத்தீன், கிரீக் முதலியன போல தமிழ்மொழியும் உயர்தனிச் செம்மொழி ஆமாறு சிறிது காட்டுவோம்' என்று கீழ்க்காணுமாறு எழுதியுள்ளார்:
தாம் வழங்கிய நாட்டின் கண் உள்ள பல மொழிகட்கும் தலைமையும், அவற்றிலும் மிக்க மேதகவு உடைமையும் உள்ள மொழியே உயர்மொழி. இவ்விலக்கணத்தை ஆராயுமிடத்து தமிழ்மொழி, தெலுங்கு முதலியவற்றிற்கெல்லாம் தலைமையும் அவற்றிலும் மிக்க மேதகவும் உடையதாலும் உயர்மொழி என்க. தான் வழங்கும் நாட்டின் பயிலும் மற்றைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தமிழே தனிமொழி எனப்படும். திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து, தமிழை ஆய்வு செய்த மேல்நாட்டுப் பாதிரிமார்கள் பலரும் தமிழைச் செவ்வியல் மொழி' என்றே சுட்டிச் செல்கின்றனர்.
சங்கத் தொகுதியில் இடம்பெறும் 26,350 வரிகள் உலகின் ஒப்புயர்வற்ற செவ்வியல் மொழி தமிழ் என்பதை நிலைநிறுத்தப் போதுமான சான்று' என்பது செக்கோஸ்லாவிய நாட்டு அறிஞர் கமில்
சுவலெபில் கண்டறிந்த உண்மையாகும்.
இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பேச்சு வழக்கில் இருப்பது மட்டுமல்லாமல் இலக்கண இலக்கியம் கொண்ட மொழியாகவும் இருக்கும் தமிழ், செம்மொழிதான் என்று உலகம் ஏற்றுக் கொண்டது. எனவே இந்திய அரசும் தமிழ் மொழியைச் செம்மொழி என்று அறிவிக்க வேண்டுமென்று தமிழ் ஆர்வலர்கள் போராடினர்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகள் தமிழைச் செம்மொழி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. 1918 -இல் நடந்த 
சைவ சித்தாந்த மகா சமாஜம் மாநாட்டில் தமிழை, சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1919-1920-இல் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. ஆயினும் இந்த முயற்சி தொடர்ச்சியாகவும், எழுச்சியாகவும் நடைபெறவில்லை. 2003-ஆம் ஆண்டு தலைநகர் தில்லியில் நாடாளுமன்றத்தின் முன் தமிழறிஞர்கள் உண்ணாநோன்பு இருந்தனர். தமிழக அரசும் அதற்கான நியாயங்களை எடுத்து வைத்தது. செம்மொழிக்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டுக் காட்டியது.
2004 -ஆம் ஆண்டு இந்திய அரசு தமிழ் மொழியை செம்மொழி என்று அறிவித்தது. அதன் வளர்ச்சிக்காகவும், ஆய்வுக்காகவும், செம்மொழித் தமிழாய்வு மைய நிறுவனம் மைசூரில் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தங்கள் மொழிக்கான அமைப்பு தங்கள் மாநிலத்தில் இருக்க வேண்டும் என்று போராடி அந்நிறுவனத்தை சென்னைக்குக் கொண்டு வந்தது.
சங்க இலக்கியங்களாகிய தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இவற்றுடன் சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்னும் நாற்பத்தொரு இலக்கியங்களால் தமிழ்மொழி செம்மொழியாக அறியப்படுகிறது.
தமிழ்மொழி செம்மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம், அது பல மொழிகளுக்குத் தாயாக இருக்கும் தன்மைதான். திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாகத் தமிழும், அதன் கிளை மொழிகளாக தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவையும் மொழி நூலார் மொழிந்தவை.
தமிழ் பழமையானது. நலம் சிறந்தது. உயர்நிலையில் உள்ளது. வடமொழி உதவியின்றி தனித்து இயங்க வல்லது' என்று அறிஞர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் தமிழும், சமஸ்கிருதமும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதும், தெலுங்கு, கன்னட மொழியினர் கோரிக்கைக் கொடி பிடித்ததால் 2008 -ஆம் ஆண்டு அவையிரண்டும் செம்மொழிகளாயின. அதைத் தொடர்ந்து 2013 -ஆம் ஆண்டு மலையாளமும், 2014 -ஆம் ஆண்டு ஒரிய மொழியும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டன.
இவ்வாறு செம்மொழிக்காகப் போராடியவர்கள் தங்கள் தாய் மொழி வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார்களா? அவர்களது மாநிலத்தில் அம்மொழி ஆட்சி புரிகிறதா? அவர்களது அடுத்தத் தலைமுறை தாய்மொழியில் படிக்கிறதா? இவையெல்லாம் இல்லை என்பதை வேதனையோடும், வெட்கத்தோடும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் மக்களின் பேச்சு வழக்கிலிருந்து காணாமல் போய்விட்டதாக, குஜராத் மாநிலம் வதோதராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாஷா' என்கிற ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனம் கூறுகிறது.
உலக அமைப்பான ஐ.நா.வின் யுனெஸ்கோ மையம் தாய்மொழி நாள் கொண்டாட அறிவுறுத்துவதன் நோக்கமும் அதுதான். அறிவியல் வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு அழிந்து கொண்டிருக்கும் மொழிகளில் நமது மொழியும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது அல்லவா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com