பயங்கரவாதத்துக்கு அரசியல் அங்கீகாரம்!

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
Updated on
2 min read

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பரிணாமத்தில் ஒருபடி முன்னேறியுள்ள பாகிஸ்தான், பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தேர்தலில் போட்டியிடும் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இதன் மூலம், மக்களாட்சி, ராணுவ ஆட்சி இரண்டையும் பலமுறை மாறி மாறி பார்த்து சலித்துவிட்ட பாகிஸ்தான் மக்களுக்கு பயங்கரவாத இயக்கத்தினரின் ஆட்சியைப் பார்க்கவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
வரும் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தனது பலத்தைக் காட்டும் ஆர்வத்தில் களத்தில் குதித்துள்ளார் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தலைவர் ஹஃபீஸ் சயீது. அவர் இதற்காக ஏற்கெனவே ஒரு அரசியல் கட்சியையும் தனது ஆதரவாளர்கள் மூலம் தொடங்கிவிட்டார்.
இந்தியாவுக்கு எதிரான அவரது பயங்கரவாதத் தாக்குதலே பாகிஸ்தானில் அவருக்கு மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்தித் தந்துள்ளது என்றால் அது மிகையல்ல. காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து மீட்டு பாகிஸ்தானுடன் இணைப்பேன்' என்ற அவரது உணர்ச்சிகரப் பேச்சுக்கு பாகிஸ்தானில் - முக்கியமாக அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் - பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய எதிர்ப்புதான் இப்போது அவரது அரசியல் பலம்.
ஹஃபீஸ் பாகிஸ்தானில் பிறந்தவர் என்றாலும், அவரது தந்தை தேசப் பிரிவினையின்போது ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்தான். இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றபோது தனது குடும்பத்தினர் 36 பேர் வன்முறைக்கு பலியானதை ஹஃபீஸின் தந்தை அவரிடம் பலமுறை விவரித்துள்ளார். இதனை, தான் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்களிலும் ஹஃபீஸ் பலமுறை கூறியுள்ளார். இதன் காரணமாகவும் ஹஃபீஸ் தீவிர இந்திய எதிர்ப்பாளராக மாறினார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து, அதனைப் பின்னால் இருந்து இயக்கியவர் ஹஃபீஸ் சயீது. இந்தியாவில் நிகழ்ந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலான அதில் 166 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு மும்பைத் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான பல ஆதாரங்களை இந்தியா அளித்த பிறகும், அதிகபட்சமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க மட்டுமே பாகிஸ்தான்அரசால் முடிந்தது. 
இப்போது, பாகிஸ்தானில் அவர் மிகவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறார். பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி இந்திய எதிர்ப்பு அரசியல் மூலம் மக்கள் ஆதரவைப் பெற்று வருகிறார். எனினும், தேர்தலில் ஹஃபீஸ் நேரடியாகக் களமிறங்கவில்லை. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதைப் போலவே தனது கூட்டாளிகளையும், ஆதரவாளர்களையும் களமிறக்கி பின்னாலிருந்து அவர்களை வழிநடத்தி வருகிறார்.
இத்தனைக்கும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ரஷியா, உள்ளிட்ட பல நாடுகள் ஹஃபீஸை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளன. அவரது தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்துள்ளது. 
இதுவரை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை மட்டுமே முக்கிய வேலையாகக் கொண்டிருந்த ஹஃபீஸ், இனி பாகிஸ்தான் தேர்தல் களத்தையும் ஒரு கை பார்ப்பது என்று முடிவெடுத்து மில்லி முஸ்லிம் லீக்' என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு ஆதரவாளர்கள் மூலம் தொடங்கினார்.
பாகிஸ்தானை முழுமையாக இஸ்லாமிய நாடாக்குவதும், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதும்தான் அக்கட்சியின் முக்கியக் கொள்கைகள். ஆனால், ஹஃபீஸின் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அளித்த நெருக்கடியும்கூட, தேர்தல் ஆணையம் ஹஃபீஸ் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்காததற்கு ஒரு முக்கியக் காரணம். 
ஏனெனில், அமெரிக்காவால் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்ட ஹஃபீஸ் உள்பட ஏழு பேர், மில்லி முஸ்லிம் லீக்' கட்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மேலும், லஷ்கர்' பயங்கரவாத அமைப்பின் அரசியல் வடிவம்தான் மில்லி முஸ்லிம் லீக்' என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும், தேர்தலில் போட்டியிடுவதற்கு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார் ஹஃபீஸ். பாகிஸ்தானில் ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றுள்ள சிறிய அரசியல் கட்சியான அல்லா-ஹு-அக்பர் தெஹ்ரிக்' கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். இந்தத் தேர்தலில் ஹஃபீஸ் ஆதரவாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கோ, ஆட்சியில் பங்கு வகிக்கும் அளவுக்கோ ஹஃபீஸால் வெற்றி பெற முடியாது என்றாலும், அவருக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வாக்காகவே கருதப்படும்.
ஒசாமா பின்லேடனுக்கே அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான், ஹஃபீஸுக்கு அரசியல் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதில் வியப்படைய ஒன்றும் இல்லை. 
எனினும், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்ப்போம்' என்று அறைகூவல் எழுப்பும் சர்வதேசத் தலைவர்கள், இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாடு எடுக்க இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com