மக்களைச் சந்தியுங்கள்! 

இன்று தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர்.
Published on
Updated on
2 min read

இன்று தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றனர். மாநில வளர்ச்சி வேண்டும் என்று கூறி அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது ஒரு குழு. இன்னொரு குழுவோ, மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக, விவசாய நிலத்தையோ இதர தேசிய வளங்களையோ கையகப்படுத்தக் கூடாது என்று முழக்கமிடுகிறது. 
இரு தரப்புகளும் தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிட்டன. விவாதத்தின் தரம் தாழ்ந்துவிட்டது. வளர்ச்சித் திட்டங்களை ஆதரிப்பவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தேசவிரோதிகள்' என்றும் மாவோயிஸ்டுகள்', நக்ஸலைட்டுகள்' என்றும் வசைபாடுகின்றனர். எதிர்ப்பாளர்களோ, இத்திட்டங்கள் அனைத்தும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உதவுவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றன. 
தற்போது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் மூன்று பொதுவான அம்சங்கள் தென்படுகின்றன. போராட்டங்கள் திரும்பவே முடியாத எல்லைக்குச் செல்லும்வரை மாநில அரசு வாளாவிருப்பதுடன் எந்தவிதமான அக்கறையும் காட்ட மறுக்கிறது. எதிர்க்குரல்களை அடக்குவதற்கு மாநில அரசு, காவல்துறையையே நம்பியிருக்கிறது. 
இங்கே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே விரிசல் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டம், நியூட்ரினோ திட்டம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிகள், சென்னை - சேலம் எட்டு வழிப் பாதை ஆகிய அனைத்தும் இதற்கான அத்தாட்சிகளாக இருக்கின்றன. 
இது மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்பதை தமிழக முதல்வர் மறந்துவிட்டார். அவர் நேரடியாக மக்களோடு கலந்து பேசி தீர்வு காணாவிட்டால் பல திட்டங்களை இங்கே அமல்படுத்த முடியாது. 
இந்தத் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் முகத்தையும் எதிர்காலத்தையும் மாற்றிவிட முடியும். ஆனால், அதனை மக்கள் நம்பவேண்டும். முதல்வர் தங்களுக்காகத்தான் உழைக்கிறார் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட வேண்டும். 
தற்போதைய முதல்வர், தற்செயலாக முதல் அமைச்சர் ஆகி இருக்கலாம். ஆனால், அவர் அப்பதவியில் தொடர்ந்து நீடித்து வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அவர் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பா.ஜ.க.வின் உதவியை நாடியிருக்கலாம். அதனால்தான், அவரைத் தலைமைச் செயல் அதிகாரியாகவும், ஓ.பன்னீர்செல்வத்தை துணை தலைமைச் செயல் அதிகாரியாகவும் நியமித்து, தமிழகத்தை பா.ஜ.க. நிர்வகித்து வருவதாக பேசப்படுகிறது. 
தமிழக முதல்வர் சற்று தலையை உயர்த்தி வடக்கே பார்க்க வேண்டும். அங்கே பா.ஜ.க.வின் வெற்றிகளைத் தாண்டி, அழகிய காஷ்மீர் மலைச்சிகரங்கள் தென்படுகின்றன. அங்கே நடப்பவை அனைத்தும் இங்கும் நடக்கலாம்.
பா.ஜ.க.வோடு மக்கள் ஜனநாயகக் கட்சி வைத்துக்கொண்ட கூட்டணியால், காஷ்மீர் மக்களிடையே அதன் நம்பகத்தன்மை முற்றிலும் சிதைந்துவிட்டது. ஜம்மு - காஷ்மீரை மிகத் தெளிவாக இந்து மற்றும் இஸ்லாமிய ஓட்டுவங்கியாகப் பிரித்ததன் மூலம், அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நீடித்து இருப்பதற்கான சூழ்நிலையை பா.ஜ.க. ஏற்படுத்திவிட்டது. 
மெஹபூபா, தம் மக்களிடைய நம்பிக்கையை இழந்துவிட்டார் என்பதோடு, அவரது கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் உதிரி அமைப்புகள் அங்கே பலமாகக் காலூன்றின. அவை தமிழகத்தில் உள்ள உதிரி அமைப்புகளுக்கு இணையானவை. அவர்கள்தான் தமிழ்த் தேசியம் அல்லது பிரிவினைவாதத்தை உரத்த குரலில் பேசுகின்றனர். அவர்கள்தான் ஒவ்வொரு புதிய போராட்டத்தின் மூலமும் வளருகிறார்கள். அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு கைதுகளின் மூலமும் பலம் பெறுகிறார்கள். 
முக்கிய எதிர்க்கட்சி இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் செய்தது, ஆனால், அவர்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். காஷ்மீர் விஷயத்தில் ஒமர் அப்துல்லாவும் இதைத்தான் செய்தார். ஆனால், பா.ஜ.க.வோ, தமிழகத்தைப் பொருத்தவரை, இந்து - இந்து அல்லாதார் என்று பிரிவினை ஏற்படுத்த முயன்று அதில் தோல்வியுற்றது. பின்னர், தேசியவாதிகள், தேச விரோதிகள் என்ற புதிய பாகுபாட்டை உருவாக்கி வருகிறது. இந்த உத்தி, பிரிவினை பேசும் அல்லது தமிழ்த் தேசியவாதம் பேசும் உதிரி அமைப்புகளின் உத்தியைப் போன்றே உள்ளது. 
மெஹபூபாவைப் போன்று, தாமும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த பயன்படுத்தப்படுகிறோம் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவிதமான பலனும் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லை என்றால், காஷ்மீரைப் போன்று இங்கேயும் இவர் கழற்றிவிடப்படுவார். இரட்டை இலைச் சின்னம் காணாமல் போகும் அபாயமும் உண்டு.
மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழக முதல்வர் புறக்கணிக்கத் தயங்கக் கூடாது. பா.ஜ.க.வின் விரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அதிகார வர்க்கத்தை ஒதுக்கிவிட்டு, நேரடியாக மக்களைப் போய்ச் சந்திக்க வேண்டும். மக்களிடம் அவர் நம்பிக்கையைப் பெறவேண்டும். 
அப்படிச் செய்தால்தான், முதல்வர் சொல்வதை மக்கள் கேட்பார்கள். மக்கள் முற்றிலும் விலகிப் போவதற்கு முன்பு முதல்வர் விரைந்து செயல்பட வேண்டும். மக்களுக்கும் முதல்வருக்குமான இடைவெளி குறைய வேண்டும். 
மக்களிடம் முதல்வர் சென்று சேரவில்லை என்றால், தமிழகத்தில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது; எந்த முன்னேற்றத்தையும் இங்கே கொண்டுவர முடியாது. 
முதல்வரே! விரைவில் மக்களைச் சந்தியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com