எதிரி நாடுகளை மட்டுமல்லாது, நட்பு நாடாக இருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளையும் தங்கள் உளவாளிகள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சிறந்த அரசுக்கான இலக்கணம். இதுவே திருக்குறளில் 'வல்லறிதல் வேந்தன் தொழில்' (அனைத்து இடங்களிலும் நடப்பதையும் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொள்வது அரசனின் வேலை) என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உளவு விஷயங்களில் ரகசியங்கள் காக்கப்படுவது மிகவும் அவசியம். அது தவறும்போது அரசுக்கு தலைகுனிவையும், பிற நாடுகளுடன் பகைமையையும் ஏற்படுத்தும். ஜெர்மனி பிரதமராக இருந்தவர்களின் தொலைபேசி உரையாடல்களை பல ஆண்டுகளாக அமெரிக்க உளவு அமைப்பு பதிவு செய்து வந்ததை விக்கிலீக்ஸ் சில ஆண்டுகளுக்கு அம்பலப்படுத்தியதும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்தது வெளிப்பட்டதும் உளவுத் தகவல்கள் கசிந்ததால் அமெரிக்க அரசுக்கு ஏற்பட்ட நெருடல்களுக்கு சமீபத்திய உதாரணங்கள்.
வல்லரசு நாடுகள் மட்டுமல்லாது வலுவான உளவு அமைப்பைக் கொண்டுள்ள சிறு நாடான இஸ்ரேல் கூட தனது மொஸாத் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்களை உலகின் மூலை முடுக்கெல்லாம் வைத்துள்ளது. ராணுவ பலத்தை மேம்படுத்துவதுபோல உளவுத் துறையின் பலத்தை மேம்படுத்துவதிலும் அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. ராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாது, வர்த்தக, பொருளாதார ஒப்பந்தங்கள், வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதிலும் ஒவ்வொரு நாட்டிலும் கண்ணுக்குப் புலப்படாத கையாக உளவு அமைப்புகள் செயல்படுகின்றன. இந்த உளவுச் செயல்பாடுகள் ஓர் எல்லையைக் கடக்கும்போது பெரும் பிரச்னைகளுக்கும் வித்திடுகின்றன.
உளவாளிகள் பிரச்னையால் வல்லரசு நாடுகளான பிரிட்டன்- ரஷியா இடையே அண்மைக்காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷியாவைச் சேர்ந்த 'டபுள் ஏஜெண்ட்' (இரு தரப்புக்கும் உளவுபார்க்கும் இரட்டை உளவாளி) செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீது பிரிட்டனில் நடைபெற்ற ரசாயனத் தாக்குதல், அந்நாடுகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது. 1990-ஆம் ஆண்டுகளில் ரஷிய ராணுவ உளவாளியாக பணியாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் ரஷிய நாட்டு ரகசியங்களை பிரிட்டனின் 'எம்.ஐ.6' உளவு அமைப்பு அளித்து வந்ததன் மூலம் அந்நாட்டின் இரட்டை உளவாளியாக செயல்பட்டார் செர்ஜி. அவரது இந்த குட்டு வெளிப்பட்ட பிறகு, தேசத் துரோக குற்றச்சாட்டில் ரஷியாவில் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உளவாளிகள் விடுவிப்பு ஒப்பந்தத்தின்படி விடுதலையான செர்ஜி, பிரிட்டனில் அடைக்கலமானார்.
அண்மையில் ரஷியாவில் இருந்து செர்ஜியை சந்திக்க வந்த அவரது மகள் யூலியாவும், செர்ஜியும் நரம்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் ரசாயனத் தாக்குதலுக்கு உள்ளாகி சுருண்டு விழுந்தனர். பிரிட்டன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்றே தெரிகிறது. இதனைச் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க பெரிய குழுவை முடுக்கிவிட்டுள்ளது பிரிட்டன். ரஷியாவைத் தவிர வேறு யாரும் இத்தகைய தாக்குதலை நடத்த வாய்ப்பு இல்லை என்பது பிரிட்டனின் கணிப்பு. ரஷிய அதிபர் தேர்தல் சில நாள்களில் (மார்ச் 18) நடைபெறவுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதும், பிரிட்டன் அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளதும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
ஏனெனில், தாக்குதலுக்கு உள்ளான செர்ஜி, ரஷிய அரசின் ரகசியத் தகவல்களை பிரிட்டன் உளவு அமைப்புகளுக்கு முன்பு அளித்து வந்தவர். அவரது மகள் சில நாள்களுக்கு முன்புதான் ரஷியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்துள்ளார். அவர் மூலம் ரஷியாவின் சில முக்கிய அரசியல் ரகசியங்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம். அவற்றை மறைக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நரம்புகளைத் தாக்கும் ரசாயனத் தாக்குதல் நடத்துவது, அரசியல்ரீதியாக எதிரியாகக் கருதுபவர்களை நாடு கடந்து சென்று வேட்டையாடுவதில் ரஷியாவுக்கு சாதனை சரித்திரமே உண்டு! ரஷிய மன்னர் 'இவான் தி டெரிபிள்' தொடங்கி, சோவியத் யூனியனில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜோசப் ஸ்டாலினின் என்கேவிடி படையினர் வரை, அரசுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படுவோரை களையெடுப்பதில் ரஷிய உளவு அமைப்புகள் கைதேர்ந்தவை. இப்போதைய ரஷிய அதிபர் புதினும் அதே அரசியல் பாணியைக் கடைப்பிடிப்பவர்தான். அதிபராவதற்கு முன்பு ரஷிய உளவு அமைப்பான கேஜிபி தலைவர் பொறுப்பு வகித்தவர் புதின் என்பது நினைவிருக்கட்டும்.
செர்ஜி மற்றும் அவரது மகளுக்கு நரம்புகளைத் தாக்கி செயலிழக்கச் செய்யும் கொடூரமான ரசாயனம் கொடுக்கப்பட்டது என்பதை தீவிர ஆய்வுக்குப் பிறகுதான் பிரிட்டன் உறுதி செய்துள்ளது. இதனை சாதாரண நபர்களால் மேற்கொள்ள முடியாது. அதுவும் அவர்களைக் கட்டாயப்படுத்தியோ, ஊசி மூலமாகவோ ரசாயனத்தைச் செலுத்தவில்லை. நிலைகுலைந்து விழுவதற்கு முன்பு அவர்கள் உணவு விடுதியில் சாப்பிட்டுள்ளனர். அங்கு தாக்குதல் நடந்திருக்கலாம். அந்த உணவு விடுதியில் வேறு பலரும் உணவுண்டபோதிலும், இவர்கள் இருவர் மட்டுமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். எனவே, கைதேர்ந்த சதியாளர்கள்தான் இதனை நிகழ்த்தியதாக பிரிட்டன் சந்தேகிக்கிறது. சம்பவம் நடந்த அன்று செர்ஜி தனது மனைவியின் நினைவிடத்துக்கு மகளுடன் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது அவர்கள் பயன்படுத்திய மலர்க்கொத்தின் மூலம் கூட ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
பிரிட்டனில் இதுபோன்று உளவாளிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது முதல்முறையல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் லிட்வினென்கோ பிரிட்டனில் ரசாயனத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
இப்போது, தங்கள் நாட்டில் உளவாளி மீது மீண்டும் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை பிரிட்டனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் நாட்டுக்குள் அந்நிய நாடு இப்படி ஒரு தாக்குதல் நடத்தி இருப்பதை பெரும் தலைகுனிவாகவும், சர்வதேச அரங்கில் ஏற்பட்ட அவமானமாகவும் பிரிட்டன் கருதுகிறது. பிரிட்டனின் பதிலடி எந்த வகையில் வெளிப்படும் என்பதை சர்வதேச சமூகம் பதற்றத்துடன் எதிர்நோக்கியுள்ளது.
சதுரங்க விளையாட்டில் ராஜா உள்ளிட்ட 'பெரும் தலை'களைக் காக்க முன்வரிசை சிப்பாய் காய்கள்தான் பலி கொடுக்கப்படும். அதே நகர்வுகள்தான் சர்வதேச அரசியலிலும் பிரதிபலித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.