அரசியல் - ஓர் ஆயுதம் ஏந்தாத போர்

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்' என்பது மா சேதுங்கின் புகழ்பெற்ற வாக்கியம். ஆயுதம் ஏந்தாத அந்த அரசியல் போரில் வெற்றி பெற்று சீனாவின் நிரந்தர அதிபராக தன்னை
Updated on
2 min read

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்' என்பது மா சேதுங்கின் புகழ்பெற்ற வாக்கியம். ஆயுதம் ஏந்தாத அந்த அரசியல் போரில் வெற்றி பெற்று சீனாவின் நிரந்தர அதிபராக தன்னை முன்னிறுத்தியுள்ளார் ஷி ஜின்பிங். பொதுவுடைமை சீனாவில் மா சேதுங்குக்குப் பிறகு நாட்டின் நிரந்தரத் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளதும் ஷி ஜின்பிங் மட்டும்தான்.
சீனா தன்னைச் சுற்றி இரும்புத் திரையிட்டுக் கொண்டாலும், அதனையும் மீறி "சீனாவின் இரண்டாவது மா சேதுங்காக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ஷி முயற்சிக்கிறார்' என்ற விமர்சனங்களும், எதிர்ப்பும் கசியவே செய்கின்றன. எனினும் "ஜனநாயக நாட்டில் மொத்த வாக்கில் பாதிக்கு மேல் பெறுபவர் அதிபர் ஆகிறார். ஆனால், எங்கள் தலைவர், 2,980 எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 2,958 பேரின் ஆதரவுடன் நிரந்தர அதிபராக ஆதரவைப் பெற்றுள்ளார்' என்று கூறுகின்றனர் ஷி-யின் விசுவாசிகள். அரசு கொண்டு வரும் எந்தத் தீர்மானத்தை நிராகரிக்க இயலாத "ரப்பர் ஸ்டாம்பு'தான் சீன நாடாளுமன்றம் என்ற உண்மையை அவர்கள் மறந்துவிட்டனர்.
ஊடங்களுக்கு கட்டுப்பாடு இருந்தாலும், சீனாவில் அரசின் செயல்பாடுகளை பகிரங்கமாக எதிர்ப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களில் பிரபலமானவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜி சூ. அதிபர் ஷி ஜின்பிங் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்று அவருக்கே கடிதம் எழுதி சிறைத் தண்டனை அனுபவித்ததன் மூலம் சர்வதேச ஊடகங்களுக்கு பரிச்சயமானவர் ஜி சூ. ஷி ஜின்பிங்கின் நிரந்த அதிபர் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், "வானத்தின் நிறம் மஞ்சள் என்று சீன பொதுவுடைமைக் கட்சி கூறினால், அதற்கும் தலையசைக்க வேண்டிய நிலையில் சீன மக்கள் உள்ளனர்' என்று சர்வதேச ஊடகங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
எனினும், சீனா போன்ற ஒரு பெரிய நாட்டில் அதிக எதிர்ப்பு ஏதுமின்றி, தான் விரும்பும் வரை அதிபர் பதவியை வகிக்கலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்த ஜின்பிங்கின் அரசியல் சாணக்கியம், பல நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், இனி அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சர்வதேச அரசியலில் வெவ்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தும்.
ராணுவம், ஆயுத பலம், பொருளாதாரம், தொழில்நுட்பம் என அனைத்திலும் முன்னிலையில் இருக்கும் சீனா, ஷி ஜின்பிங் என்னும் ஒற்றை மனிதரின் கட்டுப்பாட்டுக்குள் நிரந்தரமாகச் சென்றுவிட்டது.
"இதுவரை ஒரு கட்சி ஆட்சி முறையில் இருந்த சீனா இப்போது ஒரு மனிதர் ஆட்சி முறைக்கு மாறியுள்ளது' என்பது பொதுவாக விமர்சனமாக உள்ளது. ஆனால், சீனாவின் நிரந்தர அதிபராக ஷி ஜின்பிங் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது ஒரே நாளில் முடிந்துவிட்ட காரியமல்ல. சீன பொதுவுடைமைக் கட்சியையும் தாண்டி, மக்களின் நம்பிக்கையையும் வென்றதுதான், சீனாவில் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவானதற்குக் காரணம்.
தனது சொந்தக் கட்சியில் தொடங்கி அரசு நிர்வாகம் வரை மண்டிக்கிடந்த ஊழலை வேரறுக்க அவர் மேற்கொண்ட "ஈக்கள் முதல் புலிகள்' வரை என்ற நடவடிக்கை அவரது செல்வாக்கை உச்சிக்கே கொண்டு சென்றது. அதாவது லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு யார் மீது எழுந்தாலும் சரி, அரசின் கடைநிலை ஊழியர்கள் (ஈக்கள்) முதல் அமைச்சர்கள் (புலிகள்) அனைவருக்கு ஒரே விதமான விசாரணை முறை, தவறுக்கு கடுமையான தண்டனை என்பதை கடுமையாகக் கடைப்பிடித்தார். இதில் உயர் ராணுவ அதிகாரிகள், சீன பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுத் துறை நிறுவனங்களில் தலைவர்கள் என உயர் பதவியில் இருந்தவர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடும் தண்டனைக்கு உள்ளானார்கள். சீனாவைத் தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற அரசியல், நிர்வாகச் சுத்திகரிப்பு சாத்தியமே இல்லை என்பதை நாட்டு மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்து தனக்கென்று ஓர் இடத்தையும் பிடித்தார் ஷி ஜின்பிங்.
வடகொரியா போன்ற சிறிய நாட்டில் சர்வாதிகாரியாக இருப்பவரே உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், பல நிலைகளில் முன்னிலையில் இருக்கும் சீனா போன்ற ஒரு வல்லரசு நாட்டில் ஒரே நபரின் கையில் அவரது ஆயுள் முழுவதும் அதிகாரம் செல்வது நிச்சயம் கவலைக்குரிய விஷயம்தான் என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை இந்தியப் பார்வையில் நோக்குவது மிகவும் அவசியமாக உள்ளது. முழுவதும் பொருளாதார கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் நவீன அரசியல் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதார, வர்த்தக நலன்களை விட்டுக்கொடுக்க ஷி ஜின்பிங் ஒருபோதும் விரும்ப மாட்டார்.
இப்போது உலகின் அனைத்து நாடுகளும் தங்களை ராணுவ வலிமையுள்ள நாடு என்று கூறிக் கொள்வதைவிட பொருளாதார வல்லமைமிக்க நாடு என்ற பெயரை அதிகம் விரும்புகின்றன. இதனால், இந்தியா மட்டுமல்ல வேறு எந்த நாட்டுக்கு எதிராகவும் தீவிர மோதல் போக்கை கையாண்டாலோ அல்லது ராணுவ பலத்தை பயன்படுத்தினாலோ, அது தங்கள் நாட்டு பொருளாதார நலன்களை வெகுவாக பாதிக்கும்.
மேலும், எந்த நாட்டின் மீது சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அமெரிக்கா உள்ளிட்ட போட்டி நாடுகள் தங்களுக்கு எதிராக உடனடியாக அணி திரள்வார்கள் என்பதை சீன அதிபர் நன்கு அறிவார். எனவேதான், படை பலம் அதிகமிருந்து தென்சீன கடல் பிரச்னையை அவர் சாதுர்யமாகக் கையாண்டு வருகிறார்.
சமீபத்தில், இந்தியாவுடன் டோக்கா லாம் எல்லை விவகாரத்தைக் கூட சீனா ராஜீயரீதியில் பேசித்தான் தீர்த்துக் கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது. எனவே, சீனாவின் நிரந்தத் தலைவர், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் சார்ந்தே அரசியல் முடிவுகளை எடுப்பார் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com