கோயிலும் கோயில் சார்ந்த குடிகளும்
அண்மையில் வெளியான ஒரு பத்திரிகைச் செய்தி படித்தவர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 'தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் 1200 தெய்வத் திருவுருவச் சிலைகள் திருடு போயுள்ளன. இதில் 385 வழக்குகளில் தடயம் எதுவும் கிடைக்காததால் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. 56 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 18 சிலைகள் உரிய கோயில்களில் ஒப்படைக்கப்பட்டன' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்தது இந்து சமய அறநிலையத் துறை.
கோயில் என்பது இறைவன் குடி கொண்ட இடம் மட்டும் அன்று. நுண்கலைகள் பயிற்றுவிக்கும், வளர்க்கும் கூடமாக, மக்களின் வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் நடுவர் ஆயமாக, ஆய்ந்தறிந்த ஆசிரியர்கள் பலர் சூழ்ந்த தேவாசிரிய மண்டபமாக விளங்கி வந்தது. காலப்போக்கில் ஆயிரமாண்டு அந்நியர் ஆட்சியில் நம் நாட்டுத் தொல் மரபுகள் தொலைந்து போயின. சுதந்திர இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இன்னும் நசிந்து போனது.
கோயில்கட்கு நமது முன்னோர்கள் அளித்த நிலபுலன்களின் அளவு, நன்செய், புன்செய் என்று 4 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள். பல கோடி சதுர அடி பரப்பு உள்ள கட்டடங்கள் குடியிருப்பு மனைகள், இவைகள் எல்லாம் என்றோ ஒரு காலத்தில் சொற்ப வாடகைக்கும், குத்தகைக்கும் விடப்பட்டவை. செல்வாக்கு மிக்க பலர் வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்த சொத்தை உள்வாடகை, குத்தகைக்கு விட்டுக் கொழுத்த லாபம் அடைகிறார்கள். இந்த சொத்துகளை இன்றைய சந்தை நிலவரப்படி ஏலத்தில் அல்லது நியாய வாடகையை நிர்ணயம் செய்தால் ஆண்டொன்றுக்கு உத்தேசமாக 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமாக வரும் என்று சமய அறிஞர்கள் சொல்கிறார்கள்.
1967-இல் அரசுக் கட்டிலில் அமர்ந்த திராவிடக் கட்சி கடவுள் மறுப்புக் கொள்கையை மனதில் கொண்டு, பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்த பழைய பாக்கியைத் தள்ளுபடி செய்தது. இதன் விளைவு தினசரி ஆறுகால பூசை செய்து வந்த பல கோயில்கள் இரு கால, ஒரு கால பூசைக்கே வழியின்றி அவலக் காட்சியில் நின்று அலறின.
கடந்த ஆயிரம் ஆண்டு காலமாகவே அந்நியர் ஆட்சியில் கோயில்கள் பல சிதைவுண்டன. தெய்வச் சிலைகள் சேதமுற்றன. வழிபாடுகள் நின்றுபோயின. இப்படி அவலம் நிகழ நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையும், பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும்தான் காரணம் எனில் மிகையல்ல.
1967-க்குப் பிறகு முன் எப்போதும் இல்லாத வகையில் பகுத்தறிவுக் கொள்கைகள் என்ற பெயரில் நாத்திக உணர்வோடு ஆன்மிகம் பலவாறாக, தவறாக விமர்சிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மையப்படுத்தி கொச்சைப்படுத்தினர். சில இடங்களில் அந்தப் பிரிவு ஆடவரின் சிகை அலங்காரங்கள் சிதைக்கப்பட்டன. முப்புரி நூல் அறுக்கப்பட்டது. 'பச்சிளம் குழந்தைக்கு இல்லாத பால் பாழும் கல்லுக்கு ஏன்' என்று கேலி பேசப்பட்டது. 'தில்லை நடராசனையும், ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ' என்று ஏக்கம் தெரிவித்து மகிழ்ந்தனர்.
இன்னொரு மிகக் கேவலமான பணியையும் மேற்கொண்டனர். இதற்கு அரசின் அனுமதியும் உண்டு என்பதுதான் வெட்கக்கேட்டின் உச்சம். முக்கிய நகரங்களில் நாற்சந்திகளில், கோயில்கள் முன்பு உள்ள சாலைகளில், சமய ஆச்சாரியர்கள் மடம் முன்பு கருங்கல் தூண் நிறுவி, 'கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். மதத்தைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்ற வசைச் சொற்களை வடித்தார்கள். உலகில் எந்த ஒரு நாட்டிலும் நகரத்திலும் இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான செயல் நடக்கவும் இல்லை. நடக்கவும் நடக்காது. 'தெய்வம் உண்டின்று இரு', 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று நம் முன்னோர்கள் போதித்த நம் நாட்டிலா இப்படி!
இதில் ஒரு வருத்தப்பட வேண்டிய அம்சம், கடவுள் இருக்கிறார் என்று திடமாக நம்பும் உலகின் மிகப் பெரிய மதங்களான கிறித்தவமும், இஸ்லாமும், இது ஏதோ இந்துக் கடவுள்களைக் குறித்துதான் எழுதியுள்ளனர் என்று எண்ணி வாளா இருந்துவிட்டனர்.
இந்தக் கல்வெட்டுகளில் இந்துக் கடவுள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. கடவுள் என்றே, பொதுவாகவே எழுதியுள்ளனர். ஆகவே, உலகில் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் கிறித்தவ மக்களும் இஸ்லாம் மக்களும் வாய் திறவாமல் இருப்பது வேடிக்கைதான்.
இந்நாட்டின் பெரும்பான்மை சமய இளைஞர் சமூகம் இதனை நம்பியதால் விபரீத விளைவுகள் தோன்றலாயிற்று. நாள்தோறும் வழிபாடுகள், திங்கள்தோறும் உற்சவங்கள் என்று நடந்த கோயில்களில் நிதி நெருக்கடி, அடியார்கள் வருகை குறைவு, பணியாளர்கள் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் பழம்பெரும் கோயில்கள் பொலிவிழந்தன.
கிழக்கு தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஒரு கோயிலுக்கு 138 ஏக்கர் நன்செய், புன்செய் விளை நிலங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் அதிகமான சதுர அடியில் குடியிருப்பு மனை கட்டடங்கள் உள்ளன. 1967-க்கு முன்பு 40 நபர்கள் பணியில் இருந்தார்கள். முப்போதும் திருமேனி தீண்டுவோர், பண்களைப் பாடும் ஓதுவார், தீபம் ஏற்றுவோர், மாலை கட்டுவோர், நந்தவனம் பராமரிப்போர், நாகஸ்வரம் வாசிப்போர், மேளம் வாசிப்போர், ஒத்து ஊதுவோர், தாளம் போடுவோர், பல்லக்கு சுமப்போர், தீவட்டி பிடிப்போர், காவலர், கணக்கர் என்று பலர். இன்றைக்கு இருவர் மட்டுமே. ஒருவர் அர்ச்சகர். மற்றொருவர் மெய்க்காவல். இந்த இருவர்க்கும் சேர்ந்து சுமார் ஏழாயிரம் ரூபாய்தான் ஊதியம். ஆனால் இந்தவொரு கோயிலோடு மற்றிரு கோயில்களையும் நிர்வாகம் செய்யும் நிர்வாக அலுவலர்க்கு அரசின் இளநிலை ஊழியர் சம்பளம் பல ஆயிரம். இவர்க்கு சமய நம்பிக்கையோ, ஆன்மிக நாட்டமோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன், இவர் நாத்திக உணர்வு கொண்டவராகக் கூட இருக்கலாம். இவர் ஒரு அரசு ஊழியர், அவ்வளவே! இதுவே இன்றைய கோயில் நிலை.
திருவாரூர், திருவிடைமருதூர், திருபுவனம், சீரங்கம், மதுரை, தஞ்சை, தில்லை போன்ற பெருங்கோயில்கட்கு எத்துணை பேர் ஊழியம் செய்தால் அதன் பழைய பொலிவு வரும்? பல ஆண்டுகட்கு முன்னர் சீர்காழி கோயிலில் 200 நபர்கள் ஊழியமாற்றினார்கள். இன்றைக்கு பத்துக்கும் குறைவாகவே உள்ளனர்.
அற்றை நாளில் கோயிலுக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மக்கட்கும் ஆன்மிகத் தொடர்பு ஒரு சங்கிலித் தொடர்பாக இருந்தது. அண்மைக் காலத்தில் மகளிர்க்கு ஏற்படும் கருச்சிதைவு போல, மக்கட்கு கருத்துச் சிதைவு ஏற்பட்டது.
தஞ்சைப் பெரு நிலத்தில் சிறு மலைகளோ, ஏன், குன்றுகளோ கூட இல்லாத நிலையில், தஞ்சை முதல் திருமறைக்காடு வரை உள்ள கோயில்கள் அனைத்தையும் கருங்கற்களால் எப்படிக் கட்டினார்கள்? சுமார் 25 அடி உயரமும் 3 அடி முதல் 4 அடி அகலம் கொண்ட நீண்ட பாறைகளைப் பல கி.மீ. தூரம் கடந்து கொண்டு வந்து எப்படிச் சேர்த்தார்கள்? மேடு பள்ளமான மண் சாலைகள், மழை, வெயில், காற்று, வறட்சி இவை போன்ற இயற்கை இடர்களைத் தாங்கிக் கொண்டு, முயற்சியோடும், தெய்வ நம்பிக்கையோடும், பொறுமையாடும், சலியாது உழைத்தார்கள். கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள் சற்றே பின்நோக்கி நமது தொல் இலக்கிய பனுவல்களின் ஏடுகளை ஓரளவாவது படிக்க வேண்டும்.
இன்றைக்கு கிடைத்திட்ட பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ்க் கடவுள் முருகனையும், இன்ன பிற தெய்வங்களையும் குறிப்பிட்டு,
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
என்று அகத்திணையில் குறிக்கிறது.
முருகனை, 'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும் பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு' என்று நீலக்கடலை நீல மயிலுக்கும் பலர் புகழ் ஞாயிற்றை முருகப் பெருமானுக்கும் உவமையாக நக்கீரர் பெருமான் திருமுருகாற்றுப்படையில் பேசுகிறார்.
சங்க இலக்கியப் பனுவலான மதுரைக் காஞ்சியும்,
நீரு நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடைந்துடன் இயற்றிய
மழுவான் நெடியோன் தலைவனாக
என்று கூத்தப்பிரானை வழுத்தும்.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதை, 'பிறங்கு மலை மீமிசைக் கடவுள்' என்று குறிஞ்சிப் பாடல் சொல்லி மகிழும். பிறைச் சந்திரனை தன் தலையில் சூடிய ஆடல் வல்லானை, '...பலர் தொழச் செவ்வாய் வானத்து ஐயெனத்தோன்றி இன்னம் பிறந்தென்று பிறை சூடிய' என்று குறுந்தொகை காட்டும்.
ஆனால், எப்படியோ இப்படிப்பட்ட சிந்தனைகள், பேச்சுகள், எழுத்துகள், ஆங்கிலத்தை ஆராதனை செய்தல், ஒரு வகுப்பினரை வெறுத்தல், கடவுட் கொள்கையை மறுத்தல் போன்றவற்றை விதைத்து விளைச்சலாக்கி அறுவடை செய்துவிட்டனர். முன்னோர் போற்றிப் புகழ்ந்த பெருமையான சமயக் கருவூலங்களைப் படித்தறிய மறந்தனர். படிக்க மறுத்தனர்.
சாதிப்பூசலும், தீண்டாமைக் கொடுமையும் சத்தின் உண்மை உட்பொருள் அறியாததால் வளர்ந்து நின்றது. பல நூறு ஆண்டுகட்கு முன்னர் ஆளுடைப்பிள்ளை தன்னோடு கோயிலுக்கும் வேதியர் குடிலுக்கும் யாழ்ப்பாணரை அழைத்துச் சென்றார் என்பது வரலாறு.
ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே தீண்டாமைத் தீயை அணைத்த வள்ளல் ஸ்ரீ இராமானுஜர். சடைக்கரந்தார்க்கு அன்பர் எனில் நான் வணங்கும் கடவுள்தாம் அவர் என்று புலையரையும் சொல்லால் வணங்கி மகிழ்ந்தாரே நாவுக்கரசர்! நேர வந்தவர் யாவர் ஆயினும் என் விருந்தினர்தான் என்று வரவேற்று விருந்தோம்பல் செய்தாரே இளையான்குடி மறை நாயனார்! சேக்கிழார் பெருமான் மூன்று இடங்களில் ஐயரே என்று யாரை விளிக்கிறார்?
கோயிலும் கோயிலைச் சார்ந்த குடிகளும் முன்னைப் போல ஒன்றொடொன்று இணைந்தும், பிணைந்தும் தெய்வ நெறி வளர்த்து, முறை காத்து, எல்லோரும் ஓர் குலம் ஓர் நிறை என்ற அளவில் சமைய
இறைவனை இறைஞ்சுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
