காந்திஜியின் நினைவிடங்களைப் பாதுகாப்போமா?

அண்ணல் காந்தி பிறந்தது இந்தியாவில்; பாரிஸ்டர் பட்டம் பெற்றது இங்கிலாந்தில்;
Updated on
3 min read

அண்ணல் காந்தி பிறந்தது இந்தியாவில்; பாரிஸ்டர் பட்டம் பெற்றது இங்கிலாந்தில்; ஒரு போராளியாக மலர்ந்தது தென்னாப்பிரிக்காவில்; அவர் வாழ்ந்தது 78 ஆண்டுகளே. இறுதி மூச்சு இருக்கும்வரை, ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருந்தார். இனிய பொழுதுபோக்கு என்று எதுவும் இல்லை அவருக்கு; ஓய்வு அவர் அறியாதது.
ஒரு சில நாடுகளுக்குத்தான் அவர் பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் அவர் கால் தடம்பதித்த கிராமங்களோ ஆயிரக்கணக்கில்; தங்கிய இடங்கள், இல்லங்களோ ஏராளம்; அவர் உருவாக்கி நிர்வகித்த ஆசிரமங்கள் பல!
அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்னணி உண்டு; ஒவ்வொன்றிலும் ஒரு வரலாற்றுச் செய்தி உள்ளடங்கியிருக்கும்; ஒவ்வொன்றிலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கும்; ஆகவே அண்ணல் தங்கிய அத்தகைய சரித்திரப் பின்னணி கொண்ட இடங்கள், இல்லங்கள் கண்டறியப்பட வேண்டும்; அவை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும்; அவை வரலாற்றுச் சின்னங்களாக, நினைவிடங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய காந்திஜி 12.04.1915 தில்லி மாநகருக்கு வந்தார். அங்கிருந்த புகழ் பெற்ற புனித ஸ்டீபன் கல்லூரி முதல்வர் சுசீல்குமார் ருத்ரா, அண்ணலின் அன்புக்குரிய நண்பர். 1915 முதல் 1925 வரை காந்திஜி தில்லி வரும்போது பெரும்பாலும் நண்பர் ருத்ராவுடன்தான் தங்குவார். கிலாபத் இயக்கம் தொடங்குவது தொடர்பான முடிவு அங்குதான் எடுக்கப்பட்டது; ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கம் கருவாகி, உருவாகி, உயிர் பெற்றதும் இந்தக் கல்லூரி வளாகத்தில்தான்.
அண்ணல் தங்கிய அறை, விருந்தினர்களை சந்தித்த இடம், மாணவர்களுக்குப் பாடம் போதித்த அரங்கு, அரசியல் கலந்துரையாடல் செய்த மாடம் என்று ஒவ்வொன்றும் ஒரு வரலாறு சொல்லும் இடமாக உள்ளது.
ஆனால் தற்சமயம் அப்பகுதி தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகமாக உள்ளது; அதனை தேர்தல் அருங்காட்சியகமாக மாற்ற வேண்டுமெனவும், அதன் ஒரு பகுதியில் காந்தி மையம் அமைக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது. பழுதுபார்த்து, பாதுகாக்கப்பட வேண்டிய காந்திய நினைவுச் சின்னங்களில் இது முக்கியமானது எனக் கருதலாம்.
முதல்வர் ருத்ராவின் மூலம் அண்ணல் காந்திக்கு டாக்டர் அன்சாரியின் அறிமுகம் கிடைத்தது. மருத்துவ நிபுணரான அன்சாரி, பின்னாளில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் பதவி வகித்தவர். முஸ்லிம் லீகின் தலைவராகவும் இருந்தவர். அவருக்கு ஓர் அழகிய பரந்து விரிந்த பங்களா தில்லி தரியாகஞ்ஜ் பகுதியில் இருந்தது. அந்த இல்லத்திலும் அண்ணல் பலமுறை அன்சாரியின் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். காங்கிரஸ் காரியக் கமிட்டியின் முக்கிய முடிவுகள் சில இங்கு எடுக்கப்பட்டன; இங்கிருந்து இந்திய வைஸ்ராய் மாளிகை 5 மைல் தூரம்; அண்ணல் காந்தி அந்த 5 மைல் தூரத்தை நடந்தே சென்று, இர்வின் பிரபுவை சந்திப்பாராம். இத்தகைய தொடர் சந்திப்புகளின் பயனாகத்தான் 1927-இல் காந்தி - இர்வின் உடன்படிக்கை உருவானது.
ஒரு முறை உண்ணாவிரதத்திற்குப் பின்பு, காந்திஜியின் உடல் மிகவும் நலிந்தது; அண்ணல் உயிர் பிழைப்பாரா என்ற ஐயம் எழுந்தது; அந்நிலையில் அண்ணல், 'நான் இறந்துவிட்டால் என் உடலை இவ்வீட்டின் பின்புறத்திலேயே எரித்துவிடுங்கள்' என்றார். இதனை ஓர் வரலாற்றுக் கதையாக விவரிக்கிறார் இக்கட்டடத்தின் இன்றைய உரிமையாளர் டாக்டர் ஜெயின்.
டாக்டர் ஜெயினின் தனிப்பட்ட ஆர்வத்தாலும், ஏன், ஒரு வகை அதிருஷ்டத்தாலும் அந்த வீடு இன்று பழுதடைந்த நிலையிலாவது உள்ளது! இதனைப் புதுப்பித்து, புனரமைத்து, வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமைகளில் ஒன்றல்லவா?
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அருகில் காந்திஜியால் 1917-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது சபர்மதி ஆசிரமம். ஆசிரமத்திற்குள் அடியெடுத்து வைத்தவுடன், காந்தியச் சிந்தனை நம் மனதிற்குள் சிறகு கட்டிப் பறக்கத் தொடங்குகிறது. எழில் மிகுந்த இயற்கையான சூழல். ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் மக்கள் ஆசிரமத்தை பார்க்கவும், பக்தியுடன் தரிசிக்கவும் வருகிறார்கள். அவர்களில் இந்தியர்கள் மட்டுமல்ல, அயல்நாட்டு மக்களும் சம அளவில் இருப்பதாக அதன் மேலாளர் கூறுகிறார். ஆண், பெண், படித்தவர், பாமரர் என அனைவரும் அவர்களில் அடங்குவர்.
ஆரம்பத்தில் ஆசிரமத்தின் அறக்கட்டளைக்கு 80 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது; இன்று அதற்கு 2.5 ஏக்கர் மட்டுமே சொந்தமாகும். மீதமுள்ள நிலங்கள் அதன் இணை அறக்கட்டளைகளுக்கு உரிமையானவை.
சபர்மதி ஆசிரமம் 2013-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆயினும் அதன் பழைமையும், மாண்பும், மகிமையும் மாறாமல், குன்றாமல், குறையாமல் நாம் காக்க வேண்டும். இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமலும் பாதுகாக்க வேண்டும்! இதற்கென்றே ஓர் சிறப்பு மேற்பார்வைக் குழுவை நியமிக்க வேண்டும்.
அண்ணலின் பிறந்த நாள், நினைவு நாளின்போது அரசு இங்கு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாமே! சத்தியம், அஹிம்சை, தேச ஒற்றுமை, உலக அமைதி போன்ற மனித சமுதாய நலனுக்கான கருப்பொருள்களை விவாதிக்க சர்வ சமய, சர்வ கட்சி, சர்வ தேச தளமாக இதனை மாற்றலாமா எனப் பரிசீலிக்கலாமே!
1921-ஆம் ஆண்டு தேசப்பிதா தென் தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். வரும் வழியில் ஒட்டிய வயிறு, உடம்பை மறைக்க காலுக்கு மேல் கட்டியிருக்கும் 4 முழ வேட்டி; வெயிலின் கொடுமையைத் தாங்க, தலையில் சுற்றிருக்கும் 2 முழத் துண்டு, இப்படி அரை நிர்வாண நிலையில், வயலில் உழைக்கும் ஏழை விவசாய சகோதரர்களைக் காண்கிறார்! கண் கலங்குகிறார் காந்திஜி.
அன்றிரவு மதுரை மாநகரில் மேலமாசி வீதியிலுள்ள, 251-ஏ எண் வீட்டில் அண்ணல் தங்குகிறார். அது அவரது நண்பர் ஸ்ரீராம்ஜி கல்யாண்ஜியின் வீடு. இரவு முழுவதும் அண்ணலுக்கு உறக்கம் இல்லைபோலும்! 'என் சகோதரர்கள் அரை நிர்வாண நிலையில் உழுது பிழைக்கும்போது, எனக்கு ஏன் சட்டையும், வேட்டியும், தலைப்பாகையும், துப்பட்டாவும்' என நினைத்தார்போலும்!
மறு நாள் காலையில் தனது குஜராத்தி உடையைத் துறக்கிறார். உடுத்திக் கொள்ள வேட்டியும், உடம்பைப் போர்த்த ஒரு துண்டும் போட்டுக் கொண்டு, அரை நிர்வாணப் பக்கிரியாக மாறுகிறார். இந்த மாபெரும் மாற்றம் நிகழ்ந்த மதுரை மேலமாசி வீதி வீடு இன்றும் உள்ளது. அதன் தரைதளத்தில் காதிகிராப்ட் நடத்தும் ஓர் கதர் கடை; முதல் தளத்தில் ஓர் புகைப்படக் கண்காட்சி! அவ்வீதியில் வருவோர் போவோருக்கு அதன் வரலாற்று முக்கியத்துவம் தெரியாது. அரசு இக்கட்டடத்தை ஓர் வரலாற்றுச் சின்னமாக மாற்ற வழி செய்யலாமல்லவா? 
மகாத்மாவின் மாண்பு போற்றும் இடங்கள் கண்டறியும் குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. காந்திஜியின் பேரன் கோபால்கிருஷ்ணகாந்தி அக்குழுவின் தலைவராகப் பணிபுரிந்தார். அக்குழு தன் அறிக்கையை 2008-ஆம் ஆண்டிலேயே சமர்ப்பித்தது. அக்குழு மிக முக்கியமான வரலாற்றுத் தளங்களாக 39 இடங்களை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் 4 இடங்கள் இந்தியாவுக்கு வெளியே -லண்டன் மாநகரிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ளன. பிற நம் நாட்டிலேயே பல பகுதிகளில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக சுமார் 300 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தற்போதைய தகவல்.
புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு மானியம் வழங்குகிறது. அதே போல் காந்திஜியைக் காண்போம் என்ற புனிதப் பயணத்தை மாநில அளவிலும், தேசிய அளவிலும், மாநில -மத்திய அரசு ஏற்பாடு செய்யலாம்; இயன்ற அளவு மானியமும் சலுகையும் வழங்கலாம்.
அண்ணல் கால் பதித்த ஒவ்வொரு இடத்திலும் ஒரு தாக்கம் இருக்கும்; ஒரு செய்தி இருக்கும், தேச வரலாறும் வரைபடமாக வரும்.
மகாத்மா தங்கிய இடங்களில் மண்வெட்டி கொண்டு நிலத்தை சீர் செய்திருக்கிறார்; செடிகள் வைத்திருக்கிறார்; தோட்டங்கள் உருவாக்கியிருக்கிறார்; குடில்கள் எழுப்பியிருக்கிறார்; அங்கேயே குடியிருந்திருக்கிறார்; நூற்பு வேள்வியில் ஈடுபட்டிருக்கிறார்; உண்ணா நோன்பும் மௌனவிரதமும் மேற்கொண்டுள்ளார்; நாள் தவறாமல் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். மக்களோடு கருத்துப் பரிமாற்றம் செய்திருக்கிறார். போதனைகள் வழங்கியிருக்கிறார். வரலாற்றுத் திருப்புமுனை முடிவுகள் எடுத்திருக்கிறார். இறுதிவரை போராளியாக வாழ்ந்திருக்கிறார். கொள்கை வீரனாக, தியாகியாக, தேசபக்தனாக மரணித்திருக்கிறார்.
அண்ணலின் முழு வரலாற்றையும் அவரது நினைவிடங்கள் நம்மில் பதிக்கும்; பாடங்கள் போதிக்கும். வருங்கால பாரத சமுதாய இளைஞர்களுக்கு நிலைத்த வழிகாட்டியாக நிற்கும்!
காந்திஜியின் 150-ஆவது ஜயந்தி ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, அவரது நினைவிடங்களைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் முன் முயற்சிகள் எடுக்க வேண்டுமென்பதே தேச பக்தர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com