ஒரு மனிதனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு கௌரவத்துடன் இறப்பதற்கும் உரிமையுள்ளது. மேலும் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமை அந்த மனிதனின் அந்தரங்கத்திற்கான உரிமையின் (ழ்ண்ஞ்ட்ற் ற்ர் ல்ழ்ண்ஸ்ஹஸ்ரீஹ்) ஒரு முக்கிய அங்கம் என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட தனிமனித உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அண்மையில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, "தீராத நோயால் அவதிப்படுபவர்களை கருணைக் கொலை செய்யலாம்' என்ற உத்தரவை கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள நோயாளியை கௌரவமாக உயிரிழக்க வழிவகுக்கிறது உச்ச நீதிமன்றதின் இந்தத் தீர்ப்பு! "தன்மானத்துடன் இறப்பது மனிதனின் அடிப்படை உரிமை என்ற அடிப்படையில், கருணைக் கொலையும், வாழும்போதே தன் விருப்பப்படி உயிலை எழுதி வைப்பதும் சட்டப்படி செல்லும்' என தீர்ப்பு அளித்துள்ளது இந்த அமர்வு.
நமது நாட்டில் கருணைக் கொலை பற்றி மக்களையும் நீதிமன்றங்களையும் சிந்திக்க வைத்த விஷயம், 42 ஆண்டுகள் கோமா நிலையில் இயந்திரங்களின் உதவியுடன் உயிர்ப்பிணமாய் வாழ்ந்த மும்பை அருணா ஷாம்பாக் என்பவரின் வழக்கு. 1973}ஆம் ஆண்டு மும்பை கே.இ.எம். மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய அருணா ஷான்பாக்கை அங்குள்ள பணியாளர் ஒருவர் பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கழுத்தைச் சுற்றி சங்கிலியால் கட்டிப்போட்டதால் மூச்சுக்குழாய் துண்டிக்கப்பட்டு அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட கொடுமை இந்த நாட்டையே உலுக்கியது. அதே மருத்துவமனையில் 42 ஆண்டுகள் சுய நினைவின்றி செயலற்ற நிலையில் வாழ்ந்து 2015}ஆம் ஆண்டு தனது 68 } ஆவது வயதில் உயிரிழந்த அருணாவின் வழக்கே கருணைக்கொலைக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டுவதற்கு வித்திட்டது . 2009}ஆம் ஆண்டு பிங்கி விரானி என்கிற பத்திரிகையாளர், அருணாவை கருணைக் கொலை செய்யவேண்டுமென்று, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், பிங்கியின் மனுவை நிராகரித்து விட்டாலும், "கருணைக்கொலை' எனப்படும் "பேசிவ் யுதேனிசியா' முறைக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும் என்று அறிவித்தது. 2011} ஆம் ஆண்டு கருணைக் கொலையை அனுமதிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் முதல் தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, இந்த ஆண்டு மார்ச் 9 அன்று கருணைக் கொலை தொடர்பான வழக்கு ஒன்றில், மருத்துவ சிகிச்சையால் காப்பாற்ற முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
ஆங்கிலத்தில் "மெர்ஸி கில்லிங்' என்று சொல்வதை நாம் தமிழில் கருணைக் கொலை என்கிறோம். ஆனால் இதைக் "கொலை' என்று சொல்வதே தவறு என்று வாதாடுகிறார்கள் ஒரு சாரார். இப்படிப்பட்ட இறப்பை "யுதேனிசியா' என்று சொல்வதே சரி என்பது இவர்களது வாதம். "யுதேனிசியா' என்பது கிரேக்க மொழியிலுள்ள ஒரு சொல். இதற்கு "நல்ல சாவு" அல்லது "நல்மரணம்" என்று பொருள் கொள்ளலாம். யாராவது ஒருவர் படுத்த படுக்கையாக கிடக்காமல், உறக்கத்திலோ அல்லது திடீரென்றோ இறந்து விட்டால் அதை "நல்ல சாவு' என்று சொல்வதுண்டு. ஒருவருக்கும் சுமையாக இல்லாமல் தானும் கஷ்டப்படாமல் பிறரையும் கஷ்டப்படுத்தாமல் இறக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்.
யுதேனிசியாவை, பாசிவ் யுதேனிசியா, ஆக்டிவ் யுதேனிசியா என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அதாவது தூண்டுதலின்றி மரணம் சம்பவிக்க வைப்பது மற்றும் மரணம் சம்பவிக்கும்படி தூண்டுவது என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத நிலையில் உள்ள ஒருவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பதை நிறுத்துவது, அதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்துவது அல்லது உயிர் காக்கும் கருவிகளை அகற்றுவது போன்றவை "பாசிவ் யுதேனிசியா" என்ற வகையில் சேர்க்கப்படும். காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளவரை மரணம் அடையச் செய்யும் ஊசி போட்டு (ப்ங்ற்ட்ஹப் ண்ய்த்ங்ஸ்ரீற்ண்ர்ய்) முடிவுக்குக் கொண்டு வருவது போன்ற வழிகளை "ஆக்டிவ் யுதேனிசியா" என்று கூறலாம். இது மருத்துவரின் உதவியுடன் செய்யப்படும் தற்கொலை என்றும் சொல்லப்படுகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆக்டிவ் யுதேனிசியா செய்வதற்கு அனுமதி கிடையாது. சட்டப்படி அது குற்றமே. அமெரிக்காவின் கலிபோர்னியா, ஓரகன், கொலராடோ போன்ற ஒரு சில மாநிலங்களிலும்,கனடா,நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் போன்ற சில நாடுகளிலும் மட்டுமே ஆக்டிவ் யுதேனிசியா முறையை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் பாசிவ் யுதேனிசியாவை சட்டம் அனுமதிக்கிறது.
நமது நாட்டில் பாசிவ் யுதேனிசியாவிற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதி மன்றம், உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத செயலற்ற (கோமா)நிலைக்குச் சென்று விட்டால் தன்னை உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் வாழ வைக்க வேண்டாம் என்று சுயநினைவுடன் இருக்கும் பொழுதே ஒருவர் உயில் எழுதி வைக்கவும் வழி செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள யுதனேசியா சொசைட்டி தான் முதல் முதலில் வாழும்போதே தன் விருப்பப்படியான உயில் (கண்ஸ்ண்ய்ஞ் ஜ்ண்ப்ப்) என்ற கருத்தை முன்வைத்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், சிகாகோ வாழ் லூயிஸ் குண்டர் எனும் மனித உரிமை வழக்குரைஞர் இந்தக் கருத்திற்கு வலு சேர்த்தார். தற்பொழுது அமெரிக்காவில் லட்சக் கணக்கானோர் தங்களது உயிரைப் பற்றிய உயில் அல்லது முன்கூட்டியே வழங்கும் மருத்துவ வழிகாட்டல் (அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் ஙங்க்ண்ஸ்ரீஹப் ஈண்ழ்ங்ஸ்ரீற்ண்ஸ்ங்) போன்ற வழிமுறைகளின் மூலம் தங்களது விருப்பத்தை முன்கூட்டியே தெரிவித்து விடுகிறார்கள்.
கருணைக் கொலையைப் பற்றி மதங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம். வாழ்வும் சாவும் கடவுள் நமக்கு அளித்திருக்கும் வரம் என்றும், அதனால் எந்த ஒருவருக்கும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை இல்லை என்றும், தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு மோட்சம் கிடைக்காது என்றும் சொல்கிறது இந்து மதம். அதேபோன்று இஸ்லாமியர்களும் தற்கொலையை தீவிரமாக கண்டிக்கிறார்கள். ஒருவருடைய வாழ்வும் சாவும் அல்லாவின் விருப்பம். மனிதர்களுக்கு அந்த விருப்பத்திற்கு மாறாக இயங்க இஸ்லாமிய மதத்தில் அனுமதியில்லை. கிறிஸ்துவ மதமும் தானாக உயிரை மாய்த்துக் கொள்வதை வன்மையாக கண்டிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் கடவுள் குடியிருக்கும் கோவில் என்றும், அந்தக் கோவிலை களங்கப் படுத்த யாருக்கும் உரிமையில்லை என்றும் கிறிஸ்துவ மதத்தில் சொல்லப்படுகிறது.
இரக்கம், கருணை போன்ற பண்புகள் புத்த மதத்தின் கொள்கைகளில் முக்கியமானவை என்பதால், தாங்க முடியாத வலியினால் அல்லது நோயினால் அவதிப்படுபவர்களுக்கு கருணைக் கொலை அந்த வலியிலிருந்து விடுதலை அளிப்பதால் கருணைக் கொலையை புத்த மதம் ஏற்றுக் கொள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தான் உட்கொள்ளும் உணவை குறைத்துக் கொண்டே வந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முறையை (ள்ஹப்ப்ங்ந்ட்ஹய்ஹ) சமண மதம் அங்கீகரிக்கிறது.
பாசிவ் யுதேனிசியா முறையில் கருணைக் கொலை செய்வதை பொருளாதார காரணங்களுக்காகவும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் பரிந்துரை செய்கிறது. நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் ஆரோக்கியமான உடல் நிலையுடன் உயிர் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கமுடியாத அரசு, அவர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு அனுமதி மறுப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வியும் சிலரால் எழுப்பப்படுகிறது.
நமது நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் மருத்துவச் செலவு எனும் சுமையை தாங்களேதான் சுமக்க வேண்டியுள்ளது. மருத்துவக் காப்பீடு போன்ற வசதிகள் ஒரு சிலருக்கே உள்ளன. மருத்துவச் செலவு, குறிப்பாக மருத்துவ மனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் செலவு, பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக ஒரேயடியாக சீர்குலைத்து விடும் என்பது யாவரும் அறிந்ததே. மருத்துவச் செலவின் காரணமாக அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாது, நடுத்தரக் குடும்பங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். அப்படி இருக்கையில் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கைவிட்ட பிறகு கோமா நிலையில் உள்ள நோயாளியை எத்தனை நாட்கள்தான் குடும்பத்தினரால் தொடர்ந்து கவனித்துக் கொள்ள முடியும்? தீராத வியாதியால் படுத்த படுக்கையாகிவிட்ட நோயாளியை கவனித்துக் கொள்ளும் குடும்பத்தினர் பணிக்குச் செல்வதும் பாதிக்கப் படுவதால் குடும்ப வருமானமும் குறைந்து போய் அவர்கள் மேலும் பணக் கஷ்டத்திற்கு ஆளாக நேரிடும். மருத்துவச் செலவுகளின் சுமையால் தங்களது வீடு, நிலம் என்று சொத்துகளை விற்கும் குடும்பங்களுக்கும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படும் குடும்பங்களுக்கும் நமது நாட்டில் குறைவில்லை.நீண்ட காலமாக ஒரு நோயாளியை கவனித்துக் கொள்ளும் குடும்பத்தினர் பணக் கஷ்டத்திற்கு மட்டுமல்லாமல் மனக் கஷ்டத்திற்கும் ஆளாகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
மேலும் குறைவான மருத்துவ வசதிகள் கொண்ட நமது நாட்டில், அறவே உயிர் பிழைக்க வழியில்லாத ஒருவருக்காக மற்றவர் செலவிடும் நேரத்தையும், பணத்தையும் உயிர் பிழைக்க வாய்ப்புள்ள ஒருவருக்காகச் செலவிடலாமே என்பதும் ஒரு நியாயமான கேள்வியே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.