பெண்கள் கல்வி பெறுவதில், குறிப்பாக, உயர்கல்வி பெறுவதில் இருந்த மனத் தடையை நீக்கி புதுத்தடம் போட்டுத் தந்ததில் மகளிர் கல்லூரிகளின் பங்கு மிக முக்கியமானது. சமூகத்தில் அதற்கான தேவையும் இருந்தது. மகளிருக்காக தனிக் கல்லூரி என்பது ஒரு வீட்டின் புறவாயிலாகக் கருதப்பட்டது. என்றாலும் அங்கிருந்து வெளிப்பட்டவர்களின் புகழ் வெளிச்சம் பல புதிய வாயில்களைத் திறந்துவிட்டன. உயர்கல்வியின் மூலம் பெண்கள் அடைந்த உரமும் உயர்வும் சமூகத்திற்கே ஊக்கமாக அமைந்தன. இன்று உள்ள பெரும்பாலான தனியார் மகளிர் கல்லூரிகள், இருபாலர் பயிலும் கல்லூரிகளாக மாற்றங்கண்டு வருகின்றன. அரசுக் கல்லூரிகளைப் பொருத்தவரை 1998- இல் இருந்து 2018 வரை இருபது ஆண்டுகளில் தொடங்கப் பெற்ற கல்லூரிகளில் நான்கு மட்டுமே மகளிர் கல்லூரிகளாகும். 2011-2018 - இல் மட்டும் 81 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பதனையும் கருதிப் பார்க்க வேண்டும். இன்று, உயர்கல்வியில் உள்ள அனைத்து அறிவுத் துறைகளிலும் பெண்கள் முதன்மையிடம் பெற்றுத்
திகழ்கின்றனர்.
நம் நாட்டின் விடுதலைக்கு முன்பாகவே, அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெற்றுவிட்டது. 1854-இல் சார்லஸ் வுட் என்பவர் "சார்லஸ் வுட் டெஸ்பாட்ச்' என்ற பெயரில் வழங்கிய அந்த அறிக்கை பெண்களுக்கு கல்வி அளிப்பதனால் சமூகத்தில் ஏற்படும் சிறப்பான மாற்றங்களைச் சுட்டியது. 1882-ஆம் ஆண்டின் சர் வில்லியம் ஹண்டர் அறிக்கையும் பெண் கல்விக்கு ஆதரவாகவே இருந்தது. இருப்பினும் பெண்கள் கல்வி பெறுவது என்பது பெரும் கனவாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. நீண்ட, நெடிய போராட்டங்களும், தியாகமும் அதற்குத் தேவையாக இருந்தது. பெண்கள் கல்வி பெறும் நிலையை அடைந்தாலும் உயர்கல்வி பெறுவதில் உள்ள பல தடைகளைத் தாண்ட இந்த நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை.
அதிகம் அறியப்படாமல், பெண்களின் கல்விக்காக அரிய பல சாதனைகளைப் படைத்தவர் சாவித்ரிபாய் புலே.தன் கணவர் ஜோதிராயுடன் இணைந்து, பெண்களுக்கான தனிப் பள்ளியை புணேயில் 1848 லேயே நிறுவியவர் அவர். இந்தியாவில் பெண்களுக்கான முதல் பள்ளி என்ற சிறப்பு அப்பள்ளிக்கும்,முதல் பெண் ஆசிரியர் என்ற புகழ் அவருக்கும் கிடைத்தன. 19- ஆம் நூற்றாண்டில், ஒன்பது மாணவியரைக் கொண்ட அந்தப் பள்ளியை நிறுவ பெரும்பாடுபட்டார். "மகிளா சேவா மண்டல்' என்ற அமைப்பினை ஏற்படுத்தி, பெண்கள் கல்வி பெறுவதற்கான பல தடைகளை உடைத்து, பல மடைகளைத் திறந்துவிட்டவர் சாவித்ரி பாய் புலே.அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் புணே பல்கலைக்கழகம் 2015-இல் "சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழகம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1901-இல் சென்னை மாகாணத்தில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவீதம்
0.9 மட்டுமே. நம் நாடு விடுதலை அடைந்த போது (1947-இல்) மொத்தமே 12 சதவீதம் பேர்தான் எழுத்தறிவு பெற்றவர்கள். பல்வேறு சமூக இயக்கங்கள், சிந்தனையாளர்களின் தொடர் முயற்சிகளினால், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 74 சதவீதமாக அது உயர்ந்துள்ளது. என்றபோதும் பெண்களின் நிலை 65.46 சதவீதம் மட்டுமே (ஆண்கள் சதவீதம் 82.14) தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் 73.86 சதவீதம்.
உயர்கல்வியில், பெண்கள் இன்றைய உயரத்தினைத் தொட, பலரின் உழைப்பும், தீரமும், தியாகமும்தான் அடிப்படை. 1952 - இல் இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் அமையபெற்ற கல்விக்குழுவின் முன் ஈ.வெ.ரா பெரியாரும், ஜி.டி. நாயுடுவும் நேரில் சென்று பெண்களுக்காக தனியாகக் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி வங்கத்தில் உருவான பெத்தூன் கல்லூரி (1879). ஆசிய கண்டத்திலேயே மிகத் தொன்மையான மகளிர் கல்லூரியான அக்கல்லூரி 1849-இல் ஜான் எலியட் டிங்கிங் தெர் பெத்தூனால் பெண்கள் பள்ளியாகத்தான் தொடங்கப்பட்டது. பல்வேறு படிநிலைக்குப் பின்னர் அது கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. தமிழ்நாட்டில் 1914 - ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற இராணி மேரி கல்லூரிதான் முதல் பெண்கள் கல்லூரி என்ற சிறப்பினைப் பெறுகிறது. அப்போது இந்தியாவில் இருந்த மூன்று மகளிர்கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
இதே போன்று, மும்பையில் உள்ள "ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தக்கர்சே மகரிஷி டாக்டர் தாந்தோகேசவ் கரே பல்கலைக்கழகம்'தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பெண்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம். இது 1916 - இல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தினைத் தோற்றுவித்தவர் டாக்டர் தாந்தோ தேசவ் கரே என்ற பெருங் கொடையாளி. இப்பல்கலைக்கழக உருவாக்கம்தான் இந்தியப் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்குப்
போடப்பட்ட முதல் விதை. 1921 - இல் இந்தியாவின் முதல் ஐந்து பெண் பட்டதாரிகள் இங்கிருந்துதான் உருவானார்கள். 1939-இல் நடைபெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு மகாத்மா காந்தி தலைமை ஏற்றார். நேதாஜி, சர்தார்படேல், சரோஜினி நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.
'பெண் கல்வி குறித்து அழுத்தமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, 1984-இல், கொடைக்கானலில் தொடங்கப்பெற்ற அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமே தமிழ்நாட்டில் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் என்ற சிறப்பினைப் பெறுகிறது. இதனை அடுத்து, தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியாரால் 1957-இல் தொடங்கப்பெற்ற அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி 1988 இல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இந்தப் பின்புலத்தில் இந்தியாவில் முதன் முதலில் பட்டம் பெற்ற பெண்களைப்பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். அந்தச் சிறப்பினை இருவர் பெறுகின்றனர். ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்திரமுகி பாசு (1860-1944) மற்றொருவர் காதம்பினி கங்குலி (1861-1923). இவர்கள் இருவருமே 1883-இல் பட்டம் பெற்றவர்கள் .சந்திரமுகி பாசு கலைப்பிரிவிலும், கங்குலி மருத்துவத்திலும் பட்டம் பெற்றனர்.
சந்திரமுகி பாசு, தான் பயின்ற பெத்தூன் கல்லூரியிலே 1886- இல் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கி, பின் அக்கல்லூரியிலேயே முதல்வராகவும் உயர்ந்தார். கங்குலி மருத்துவ மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று பின்னர் இந்தியாவில் புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்தார்.
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886-1968) மதராஸ் மருத்துவக் கல்லூரியில் இருந்து மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பினைப் பெறுகிறார்.
பல்கலைக்கழகத்தின் மிக உயரிய பட்டபடிப்பாக பி.எச்.டி ஆய்வுப் படிப்பு கருதப்படுகிறது. இன்றைய நிலையிலும் பலருக்கும் எட்டா நிலையில் உள்ள அந்த ஆய்வு படிப்பில் அப்போதே பல பெண்மணிகள் வெற்றி கண்டு சாதனை புரிந்துள்ளனர்.
சென்னை, இராணி மேரிக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை தாவரவியல் பட்டம் பெற்ற கேரளத்தைச் சேர்ந்த ஜானகி அம்மாள் (1897-1984) செல் மரபணுவியலில் 1931-இல் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இத்துறையில் இவருடைய பங்களிப்பு மிக முக்கியமானதாகும். 1957-இல் இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
நாட்டிலேயே முதன்முதலில் உயிர் வேதியியலில் ஆய்வு செய்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1939 - இல் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி கமலா ஹோனி. இவர் சர்.சி.வி. ராமனின் ஆராய்ச்சி மாணவி.
இந்திய துணை கண்டத்தில் உள்ள மருத்துவத் தாவரங்கள் குறித்து, அறிவியல் பிரிவில் 1944 - இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் அசிமா சட்டர்ஜி (1917-2006).
வானிலை ஆராய்ச்சியில் புகழ்பெற்ற அன்னாமணி (1918-2001) சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டபடிப்பை நிறைவு செய்து லண்டனில் உள்ள புகழ்பெற்ற இம்பீரியல் கல்லூரியில் தனதுஆய்வை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். 1946 - இல் தில்லி அரசின் நிதி உதவியுடன் அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி.
இவர்கள் எல்லாம் பெண்களுக்கான உயர்கல்வி வாய்ப்பும் வசதியும் இல்லாத காலகட்டத்தில் இந்த நிலையை அடைந்தவர்கள்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2016-2017 அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்காக தனியாக 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தற்போது உள்ள 40,026 கல்லூரிகளில் 9.3 சதவீதக் கல்லூரிகள் பெண்கள் கல்லூரிகளாகும். இது மட்டுமல்லாது தொலைநிலைக் கல்வி முறையில் பயில்பவர்களில் 46.9 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் தற்போது உயர்கல்வி பெறும் 35.7 மில்லியன் மாணாக்கர்களில் 16.7 மில்லியன் பேர் பெண்கள். 2016 - இல் இந்திய அளவில் பி.எச்டி ஆய்வு படிப்பினை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் 28,779 பேர். இவர்களில் 12,505 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவில் உள்ள 58.6 மில்லியன் தொழில் நிறுவனங்களில் 8.05 மில்லியன் நிறுவனங்களைப் பெண்களே நிர்வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்ற பெண்களில் 13.3 சதவீதம் பேர் தொழில் முனைவோர்களாக உள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த உயரிய நிலையைப் பெறவில்லை. அதே நேரத்தில், பட்டம் பெற்ற பெண்களில் 25.5 சதவீதத்தினர் மட்டுமே பணி வாய்ப்பினைப் பெறும் சூழல் உள்ளது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும்.
இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் முதன்மையாகக் கருதப்படுவது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகள்.
கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் ஏழு முறை பெண்களே இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே நடுத்தர, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களே.
இந்தச் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிட்ட, அறியப்படாத முகங்களையும், மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட முகங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமே நாம் இன்னும் பல புதிய வெளிச்சங்களைக் காணமுடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.