வருங்காலத்துக்கான வழிகாட்டி

எஃகு போன்ற நெஞ்சுறுதி, அனைவரையும் அரவணைக்கும் அன்பு மனம்; சத்தியம், அகிம்சை, அமைதி, சமூக நீதி ஆகிய தத்துவங்களின்
Updated on
3 min read

எஃகு போன்ற நெஞ்சுறுதி, அனைவரையும் அரவணைக்கும் அன்பு மனம்; சத்தியம், அகிம்சை, அமைதி, சமூக நீதி ஆகிய தத்துவங்களின் மொத்த உருவம்; மனித உருவில் இந்த மண்ணில் வாழ்ந்த ஓர் புனித ஆத்மா - அவர் தான் அண்ணல் காந்தியடிகள்.
 இந்தியர்கள் அவரை "தேசப்பிதா' என்றார்கள். ஆப்பிரிக்க மக்களோ "சமூக நீதிக்கான போராளி அவர்' என்றார்கள்.
 "ஆங்கிலேயர்களை நேசிக்கிறேன், ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியை வெறுக்கிறேன்' என்று அறிவித்த அவரை ஆங்கிலேயர்களும் நேசித்தார்கள்.
 இந்திய மக்கள் அவரை "மகாத்மா' எனப் போற்றினார்கள்.
 அண்ணல் காந்தி அமெரிக்கா சென்றதில்லை; அங்கு தன் தத்துவங்களைப் பரப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது உண்மையே! ஆனாலும் அமெரிக்க நாட்டு அறிஞர்கள் அண்ணலை நேசித்தார்கள். அந்நாட்டு மக்களோ அண்ணலைப் பெரிதும் மதித்தார்கள்.
 அமெரிக்க அதிபர் ட்ரூமன் "அன்பால் அனைவரையும் தன்வயப்படுத்தியவர்; அஹிம்சையால் ஆயுத பலத்தை வென்றவர்' என்று அண்ணலுக்குப் புகழாரம் சூட்டினார்.
 "இப்படி ஒரு மனிதர் சதையோடும் ரத்தத்தோடும் இந்திய மண்ணில் பிறந்து வாழ்ந்தார் என்பதை வருங்கால உலகம் நம்ப மறுக்கும்' என்றார் ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த விஞ்ஞானி ஐன்ஸ்டின்.
 "இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே வழிகாட்டும் நாயகராகத் திகழ்கிறார் உத்தமர் காந்தி' என்று 06.11.2010 அன்று மும்பைக்கு வந்திருந்த பராக் ஒபாமா, மணி பவனில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
 அன்றைய தினம் மும்பை கல்லூரி மாணவர்கள் சந்திப்பின்போது, ஒரு மாணவி ஒபாமாவிடம், "இன்றைய இரவு உணவை எவருடன் அமர்ந்து உண்ண விரும்புகிறீர்கள்?' எனக் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில் "இறைவன் வரமும் வாய்ப்பும் தந்தால், அண்ணல் காந்தியின் அருகில் அமர்ந்து உணவருந்துவேன். ஏனெனில் இன்றைய உலகின் தீர்க்க முடியாமல் உள்ள பல பிரச்னைகளுக்கு, அம்மகானே எனக்கு தீர்வு சொல்ல முடியும். நிறவெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்ற தலைவர்களுக்கும் காந்தியே சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்' என்று கூறினார்.
 அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கனைப் போல் நிறவெறியை எதிர்த்தவர், மனித உரிமைக்காக இயக்கமே (சிவில் ரைட்ஸ் மூவ்மென்ட்) நடத்திய கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்). அவர் வாழ்ந்தது 39 ஆண்டுகளே (1929 - 1968). நிறவெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.
 "இனவெறி, ஏழ்மை, போர் இம்மூன்றுமே மனித சமுதாயத்தின் இழிநிலைக்குக் காரணங்களாகும். அவற்றை ஒழிப்பதே என் லட்சியம்' என்று, தன் பொதுவாழ்வைத் தொடங்கினார் மார்ட்டின் லூதர் கிங். ஆயுத பலமே அதற்கான வழி என்று இளமைக் காலத்தில் எண்ணினார்.
 ரஸ்டின், வோபோர்ட், ஸ்மைலி போன்ற சீர்திருத்த சித்தாந்தவாதிகள், "ஆயுத பலம் அழிவுக்கு வழி; அஹிம்சையே விடியலுக்கான வழி' என்ற அண்ணலின் பாதையை அவருக்குக் காட்டினார்கள். மார்ட்டின் லூதர் கிங்கின் மனம் அதன்பின்புதான் மகாத்மாவின் திசை நோக்கித் திரும்பியது.
 காந்திஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. ஆனாலும், 1959-ஆம் ஆண்டு தனது 30-ஆவது வயதில், தனது மனைவி, கொரட்டா ஸ்காட் - உடன் இந்தியாவுக்கு வருகை தந்தார். காந்திய தத்துவங்களைக் கற்றார். அஹிம்சையின் அணுகுமுறையை முழுமையாக உணர்ந்தார்.
 அவர் தனது இந்தியப் பயணத்தை முடித்து அமெரிக்கா திரும்பும்போது, "ஏசுநாதர் எனது ஆன்மீக வழிகாட்டி; காந்தி எனது அரசியல் வழிகாட்டி' என்று சொன்னார். வாழும் காலம் வரை அண்ணல் காட்டிய வழியில் நடந்தார். சத்தியம், ஆன்ம பலம், பிறருக்குத் தீங்கிழைக்காமை மற்றும் துணிவு ஆகிய நான்கு நல்லியல்புகளின் துணை கொண்டு, நிறவெறியை எதிர்த்துப் போராடினார். எதிர்பாராத விதமாக, தனது 39-ஆவது வயதில் ஒரு நிறவெறியனால் சுடப்பட்டு, மகாத்மாவைப் போல் மரணத்தைத் தழுவினார்.
 அவரது மறைவுக்குப் பின்பும் அவரது துணைவியார் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்தார்.
 அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தின், வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான "அட்லாண்டா'வில் "மார்ட்டின் லூதர் கிங் தேசிய வரலாற்று மைய'த்தை நிறுவினார்.
 முதலாவதாக, தனதுஅரசியல் வழிகாட்டியான காந்திஜியின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்தநாளை அந்த வரலாற்று மையத்தில் தவறாமல் கொண்டாட ஏற்பாடு செய்தார்.
 இரண்டாவதாக, அந்த மையத்தில் 1983-ஆம் ஆண்டு சில இந்திய - அமெரிக்கத் தலைவர்களோடு இணைந்து "காந்தி நினைவிட அறை' ஒன்றைத் திறந்தார்.
 மூன்றாவதாக, 1989-இல் காந்தி - லூதர் கிங் என்ற இரு பெரும் தலைவர்களின் இணையற்ற சேவையை விளக்கும் கண்காட்சி ஒன்றும் அங்கு திறந்து வைக்கப்பட்டது.
 நான்காவதாக, 1992-இல் அட்லாண்டாவில் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சுமார் 14 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். அதன் மூலம் "காந்திஜி கொள்கை பரப்புக்குழு' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அகிம்சையின் தூதரானஅண்ணலின் லட்சியங்களை அமெரிக்க தேசம் முழுவதும் பரப்பும் நோக்குடன் அது செயல்பட்டு வருகிறது.
 ஐந்தாவதாக, "மார்ட்டின் லூதர் கிங் தேசிய வரலாற்று மையம்' அமைந்துள்ள தெரு }வுக்கு, காந்திஜியின் பெயரைச் சூட்ட முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அத்தகைய பெயர் மாற்றம், அங்கு வாழும் மக்களுக்கு சில சிரமங்களைக் கொடுக்கும் என்ற கருத்து எழுந்தபோது, பெயர் மாற்ற முயற்சி கைவிடப்பட்டது. காரணம், காந்தியின் பெயரால் எவருக்கும் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதுதான். இந்த முயற்சி வெற்றி பெறாததால் அமைப்பாளர்கள் துவண்டு போகவில்லை.
 மாறாக, மகாத்மாவின் முழு உருவச் சிலையை, லூதர் கிங் மையத்திற்கு முன்னால் நிறுவத் திட்டமிட்டார்கள். அதற்கு அமெரிக்க அரசுத் துறையின் அனுமதி கிடைத்தது. புதுதில்லியில் வசிக்கும் ராம் சுதார் என்ற சிற்பி அண்ணலின் ஆளுயர சிலையை அற்புதமாகச் செதுக்கிக் கொடுத்தார். அந்தச் சிலைக்கான செலவை இந்திய அரசே ஏற்றுக்கொண்டது.
 பாராட்டத்தகுந்த இப்பெரும் பணியை சீராகவும், சிறப்பாகவும் செய்து முடிப்பதற்கு ஓயாத உழைப்பு, சாயாத முயற்சி, நிதி உதவி, அனைத்து மக்களின் ஆதரவு - ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டியவர்களில் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். குறிப்பாக இந்திய அமெரிக்கர்களான ரஜ்தான், ராவ், காசி பரேக், அந்தோணி தாலியாத் , வினோத் பட்டேல் மற்றும் அமெரிக்கர்களான டாக்டர் ஜாய் பெர்ரி, லிஸ்ஸிமோர், க்ரேக் பிரிட்கான் ஆகியோர்.
 இத்தகைய ஓயாத உழைப்பின் காரணமாக அண்ணலின் முழு உருவச்சிலை 24.01.1998 அன்று அழகுமிகு அட்லாண்டா நகரில் திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 சிலை திறந்ததோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அமைப்பாளர்கள் அமைதியடையவில்லை. ஆண்டுதோறும் அண்ணலின் பிறந்தநாள், லூதர் கிங் பிறந்தநாள், இந்திய குடியரசு தினம், மையம் திறக்கப்பட்ட நாள், சிலை திறப்பு நாள் - என்று தொடர்ந்து விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் நலிந்தோர் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளும் இந்த அமைப்பின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
 காந்திய சித்தாந்தங்கள், அவற்றை மார்ட்டின் லூதர் கிங் கடைப்பிடித்த பாங்கு ஆகியவை பற்றிய கருத்தரங்குகளும் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த மையத்தைக் காண்பதற்கும், காந்தி - கிங் என்ற இரண்டு மனிதப் புனிதர்களின் சிலைகளைக் கண்டு வணங்குவதற்கும் இங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பார்வையாளர்கள் வருகிறார்களாம். வருகின்ற பார்வையார்களுக்கு காந்தியின் தத்துவங்களை விளக்குவதற்காக இந்திய உடை அணிந்த இந்திய இளைஞர்கள் இலவசமாகப் பணிபுரியக் காத்திருக்கிறார்கள்.
 மெலிந்த உடலில், குறைந்த உடை அணிந்து, கையில் கோல் ஊன்றி நிமிர்ந்து நிற்கும் காந்திஜியின் சிலையைப் பார்ப்பவர்கள்: "சர்வ வல்லமை படைத்த பிரிட்டிஷ் அரசைப் பணிய வைத்தது இந்த எளிய மனிதர்தானா?' என்று வியப்போடும் கேட்கிறார்கள்.
 அமெரிக்காவில் அண்ணல் காந்தியின் சிலைகள் ஐந்து இடங்களில் உள்ளன; உலகின் பிற நாடுகளில் 11 சிலைகள் உள்ளன.
 அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள மக்களுக்கு நல்வழி காட்டும் நாயகராக, உணர்வூட்டும் உந்துசக்தியாக விளங்குகிறார் காந்திஜி.
 நோபல் விருது பெற்றவர், இஸ்ரேல் தேசத்தின் முன்னாள் பிரதமர் சிமோன் பெரேஸ் சொல்லுகிறார் "காந்திஜி கடந்த காலத்துக்கு உரியவரல்ல வருங்காலத்துக்கான வழிகாட்டி' என்று. மகாத்மா மறையவில்லை; அவர் இன்றும் வாழ்கிறார்; வழிகாட்டி வருகிறார்.
 மார்ட்டின் லூதர் கிங் தேசிய வரலாற்று மையத்தைப் போல், உலகின் பல இடங்களில் காந்தியச் சித்தாந்தங்களைப் பரப்பும் அமைப்புக்கள் ஓசை ஏதும் இல்லாமல் இயங்கி வருகின்றன. அத்தகைய அமைப்புகளைக் கண்டறிய வேண்டும்.
 காந்திஜியின் 150-ஆவது ஜயந்தி விழாவில், அவ்வமைப்புக்களின் பிரதிநிதிகளையும் பங்கேற்க அழைக்க வேண்டும். அவர்களுக்குப் பாராட்டும் விருதும் வழங்கி கௌரவிக்க வேண்டும்.
 அதற்கான முன் முயற்சியை மத்திய - மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com