எல்லாவற்றிலும் அரசியல்...

தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிலெதில்தான் ஆதாயம் தேடுவது என்ற தராதரமே இல்லாமல் போய்விட்டது என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது.
Updated on
2 min read

தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிலெதில்தான் ஆதாயம் தேடுவது என்ற தராதரமே இல்லாமல் போய்விட்டது என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது.
ஏதாவது ஒரு பொதுப் பிரச்னையென்றால், பிற மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதமில்லாமல் இணைந்து மாநில நலனை முன்னிறுத்திப் போராடுவார்கள். காவிரிப் பிரச்னையென்றால் கர்நாடகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பாஜக, காங்கிரஸ், மஜத என எந்தக் கட்சியாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தாலும் தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
அதுபோன்றே, கேரளத்தில் முல்லைப் பெரியாறு பிரச்னையிலோ அல்லது சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் என எதுவாக இருந்தாலும் தமிழகத்துக்கு எதிரான பிரச்னை என்றால் கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கட்சி வித்தியாசமில்லாமல் ஒன்று சேர்வார்கள். அந்த 
மாநிலத்துக்குச் சிறப்பான பலனைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். உச்சநீதிமன்ற உத்தரவாக இருந்தாலும் அதை அனைவரும் சேர்ந்து எதிர்ப்பார்கள்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படியில்லை. எந்தப் பொதுப் பிரச்னையில் யார் சாவார்கள்? எப்படி தமிழக அரசுக்கு எதிராகச் செயல்படலாம்? யாரைப் பதவி விலகச் சொல்வது? என்ற சிந்தனைதான் அனைத்துக் கட்சியினருக்கும் உள்ளதே தவிர வேறு எந்தப் பிரச்னையிலும் சிந்தனை செல்வதில்லை.
ஏதாவது ஒரு பொதுப் பிரச்னையில் ஒரு பொது அமைப்புப் பெயர் பெற்றுவிட்டால் தங்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் அரசியல் கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவும் தாங்கள்தான் அனைவரையும் ரட்சிக்க வந்தவர்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லவும் தான் இப்படிப்பட்ட செயல்களை செய்கின்றனரா என்பது தெரியவில்லை.
காவிரிப் பிரச்னையில் வணிகர் சங்கத் தலைவர் கடையடைப்பு என்று தன்னிச்சையாக அறிவிக்கிறார். வணிகர் சங்கப் பேரமைப்புகள் சார்பாக ஒரு நாள் கடையடைப்பு, அதிமுக தவிர பிற கட்சிகள் சார்பில் கடையடைப்பு என மனம் போனபடி ஒவ்வொருவரும் ஒரு நாள் கடையடைப்பு என அறிவித்தால் எப்படி? இதனால் பாதிப்பு யாருக்கு? 
அப்புறம் கள்ளச் சந்தையில்தான் பொருள்களைக் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்பது ஏன் வியாபாரிகளுக்குக் கூடத் தெரிவதில்லை. ஒருவேளை தெரிந்தே அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கப் பாடுபடுகிறார்களா?
இவர்களுக்குக் கவலையில்லை சாப்பாட்டுக்கு. ஆனால் இன்று சம்பாதித்தால்தான் தங்கள் குழந்தைகளின் வயிறு நிறையும் என்ற நிலையில் உள்ள தாய், தந்தையரின் வயிறு எரிந்தால் என்ன ஆகும்?
கடையடைப்பு, வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என்று நீதிமன்றங்கள் தொடர்ந்து அறிவித்தும் அரசியல்கட்சிகள் வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்கிறார்களே, ஏன்? அவ்வாறு அறிவிக்கும் கட்சிகளைத் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட காலத்துக்குத் தடை விதித்தால்தான் என்ன? 
தேர்தலில் தனியாக நின்று டெபாசிட் பெறும் தகுதி கூட இல்லாத ஒரு சில லெட்டர் பேடு கட்சிகள், பிற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதற்காக வெட்கமில்லாமல் கெஞ்சும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட கடையடைப்பின்போது ரத்த ஆறு ஓடும் என்று சொல்லும் தைரியத்தைத் தந்தது யார்? இவர்களையல்லவா முதலில் சிறைக்குள் தள்ள வேண்டும்?
பேருந்து ஊழியர் போராட்டமென்றால் சாலைகளில் பேருந்தை நிறுத்திவிடுகின்றனர். வெளியில் சென்ற பெண்கள் அல்லது கணவர், மனைவி வீடு திரும்பினால்தான் உண்டு என்ற நிலைமை இப்போது வந்துவிட்டது. இதனால் பலர் நித்தியகண்டம் பூரண ஆயுசாகத்தான் வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. எந்த அரசியல் கட்சித் தலைவரின் குழந்தைகள் அல்லது குடும்பத்தினர் திரும்பி வந்தால்தான் உண்டு என்ற நிலையில் உள்ளனர்?
பல்வேறு வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்குக் கூட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றுதான் நீதிபதிகள் உத்தரவிடுவார்கள். ஆனால், இந்த அரசியல்வாதிகள் செய்யும் கேலிக்கூத்துகளால் பொதுமக்கள் ஒவ்வொரு விதமான தண்டனையை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகின்றனர். 
வியாபாரிகள் ஒரு நாள் கடையை மூடினால் எத்தனை இழப்புகள்? இன்று சம்பாதித்தால் மட்டுமே சாப்பாடு என்றுள்ள பல ஆயிரம் பேரின் பசியைத் தீர்க்க என்ன செய்வது?
இன்று ஆளும் கட்சியாக இருப்பவர்கள் செய்யும் அதே தவறை நாளை இப்போது எதிர்க்கட்சியாக இருந்து ஆளும் கட்சியாக மாறுபவர்களும் செய்வார்கள். ஆட்சிதானே மாறுகிறது. காட்சி மாறவில்லையே. 
ஒவ்வொருவரும் தங்கள் சுயநலத்தை மட்டுமே பார்க்கும்போது வளரும் நாளைய தலைமுறையினர் அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்? இதன் மூலம் இப்போதைய அரசியல் கட்சியினர் நாளைய தலைமுறையினருக்கு விட்டுச் செல்லும் சேதிதான் என்ன? வன்முறையைப் பார்த்து வளரும் குழந்தைகள் வன்முறைதான் வாழ்க்கை எனப் பழகிவிட்டால்...
வாக்களிக்கும் மக்கள்தான் தெய்வம் என்று அரசியல் கட்சிகள் சொல்வது உண்மையானால் அவர்களின் வாழ்க்கை முடங்கும் செயல்களை ஏன் செய்ய வேண்டும்?
இவர்கள் நடத்தும் போராட்டத்தால் எத்தனை விதமான பிரச்னைகள்? சில பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் எத்தகையது? 
அரசியல் கட்சிகள் தொடர்ந்து தங்கள் சுயநலத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள்.
தொட்டதற்கெல்லாம் பிற மாநிலங்களை ஒப்பிடும் தமிழக அரசியல்வாதிகள், அங்குள்ளவர்கள் தங்கள் மாநிலப் பிரச்னைக்காக ஒற்றுமையாக இருப்பதை ஏன் பார்ப்பதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் அமைதி நிலவுவது சாத்தியமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com