தற்கொலை எண்ணம் தவிர்

மனிதர்கள் பல்வேறு காரணங்களுக்காக, தற்கொலை செய்து கொள்கின்றனர். காதல் தோல்வி, திருமண வாழ்வில் கசப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் தொல்லை

மனிதர்கள் பல்வேறு காரணங்களுக்காக, தற்கொலை செய்து கொள்கின்றனர். காதல் தோல்வி, திருமண வாழ்வில் கசப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் தொல்லை, தீராத நோய், தனிமையின் கொடுமை போன்ற பல்வேறு காரணங்கள். தற்கொலை செய்து கொள்பவர்கள், தங்கள் இறப்பின் மூலம் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறார்கள். பலருக்கு நம்பிக்கை ஊட்டி, வாழ வழிகாட்டியவர்கள்கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். 
அப்படிப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்வது, அவர்களின் பலவீனம் என்று சொல்வதை விட, தங்களைச் சார்ந்து இருப்பவர்கள், தங்களுக்கு விருப்பமானவர்கள் அல்லது தங்கள் மீது அன்பு செலுத்துபவர்கள் ஆகியோரிடம் கொண்ட கோபத்தின் காரணமாக அவர்களைப் பழிவாங்க ஓர் ஆயுதமாக தற்கொலையைப் பயன்படுத்துகிறார்கள். குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் தங்கள் அருமையை உணர வேண்டும் என்பதற்காகவும், தங்களின் இறப்பு மற்றவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று எண்ணியும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். 
பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறப்பு என்பது விதிக்கப்பட்டது. அது ஒரு நாள் வந்தே தீரும். ஆனால், வாழ்வு நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாழும்வரை அனைவரும் போற்றும்படி வாழ்வது நம்முடைய பொறுப்பாகும். தற்கொலையால் படைப்பின் நோக்கமே அர்த்தமற்றதாகி விடுகிறது. 
மனத்தின் எண்ணங்களே மனிதர்களை ஆட்டி வைக்கிறது. ஆனால் மனிதர்களுக்கு, சிந்திக்கும் ஆற்றலும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிந்தனைத் திறன்தான் நம் எண்ணங்கள் சரியா, தவறா என்று நம்மைத் தெளிய வைக்கிறது. 
தற்கொலை போன்ற தவறானஎண்ணங்கள் வரும்போது அவற்றை மேலோங்க விடாமல் சிந்தனைத் திறனை அதிகப்படுத்தி அதன்படி நடந்தால் தவறான எண்ணங்கள் மறைந்து விடும். தவறு செய்த பெரும்பாலான மனிதர்கள் சிந்திக்காமல் செய்து விட்டேன் என்று வருந்துவதைப் பார்க்கிறோம். 
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. மற்றவர்களின் வாழ்க்கையோடு நம் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் நாம்தான் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும். 
இந்த குணங்கள் இல்லையென்றால் கோபமும், வெறுப்பும், விரக்தியுமே மனத்தில் நிறைந்திருக்கும். அவையே வார்த்தைகளாக வெடிக்கும். இதனால் குடும்பத்தில் சண்டையும் சச்சரவுமே நிலவும். இப்படிப்பட்டவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பும் ஆதரவும் தேவைப்படும். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்காமல் இருப்பது அவர்களுக்கு ஆறுதலை அளிக்கும். அவர்கள் ஆத்திரத்திரப்படும் சமயங்களில் விவாதங்களில் ஈடுபடுதல்கூட அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டலாம். 
நடுத்தர வர்க்கத்தினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், ஏன், படித்தவர்களும்கூட இன்று அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களின் மன அழுத்தம் அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. வறுமைக்கோட்டுக் கீழே வாழும் ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்வதில்லை. அவர்களுக்கு இல்லாத பிரச்னைகளா மேல்தட்டு மக்களுக்கு இருக்கப் போகிறது?அப்படியே இருந்தாலும் அதற்குத் தீர்வு தற்கொலையல்ல. 
பொதுவாக கோபம், இயலாமை, பயம் ஆகியவற்றின் காரணமாக திடீரென முடிவெடுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலைகளைத் தடுப்பதில் சமுதாயத்தின் பங்களிப்பும் அதிகமாக இருக்க வேண்டும். சக மனிதர்களின் மீதான அக்கறையும், அன்பும் ஒவ்வொருவருக்கும் இருந்தால் பெரும்பாலான தற்கொலைகளைத் தடுத்து விடலாம். 
பிரச்னைகளை பயமின்றி எதிர் நோக்கப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். இயல்பாகவே, குழந்தைகள் பயம் அறியாதவர்கள். அதனால்தான் இருட்டு, நெருப்பு போன்றவற்றிற்குப் பயப்படுவதில்லை. பெற்றோர்தான் பூச்சாண்டி, பூதம், பேய் எனச் சொல்லி பய உணர்வை கற்றுக்கொடுக்கின்றனர். 
வலி, வேதனை எதுவும் தெரியாமல் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தால், பிரச்னைகள் வரும்போது சமாளிக்கத் தெரியாமல், அவர்கள் தடுமாறத்தான் செய்வார்கள்.எனவே குழந்தைகளுக்கு என்ன பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் திறனைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சவால்களை சமாளித்து வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 
பள்ளிகளில் ஆசிரியர்களின் பங்கும் மிகவும் முக்கியமானது. உயிரின் மதிப்பை, வாழ்வின் அர்த்தத்தை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். கல்வியில் மட்டுமல்ல, வேறு திறமை உடையவர்களும் புத்திசாலிகள்தாம்; அவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும். 
குழந்தைகளின் திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதலோ அல்லது மட்டம் தட்டுதலோ கூடாது. தான் எதற்கும் பயனற்றவன் என்ற எண்ணம் ஒரு குழந்தைக்கு தன் பெற்றோராலோ, ஆசிரியர்களாலோ ஏற்பட்டு விடக்கூடாது. 
பெற்றோர், ஆசிரியர்கள் மட்டுமன்றி, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, நண்பர்கள், உடன் பணி புரிபவர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் என சமுதாயத்தில் எல்லாரும் அவர்கள் மீது அன்பும் ஆதரவும் செலுத்தினால் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது உறுதி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com