உதவிக்கரம் நீட்டுவோம்

அண்மையில் வீசிய கஜா புயல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது
Published on
Updated on
2 min read

அண்மையில் வீசிய கஜா புயல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுவிட்டது என்பதே உண்மை. தமிழ்நாடு முழுவதற்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து அளித்த அப்பகுதி மக்கள், தற்போது தங்களின் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, பால், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கே தவிக்கும் நிலையில் உள்ளனர். குடி தண்ணீருக்கும் கூட தவிக்க வேண்டிய சூழல். 
புயலின் பாதிப்பால், வீடு, வாசலை, விவசாய நிலங்களை, கால்நடைகளை இழந்து, தங்கள் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து தெருவுக்கு வந்துள்ளவர்கள் ஏராளமானோர்.
அதோடு ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்திருப்பது, மின் கம்பங்கள் சேதமடைந்திருப்பது போன்றவற்றால், அப்பகுதி புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வர எவ்வளவு நாள்கள் ஆகுமோ என்ற கவலை ஏற்படுகிறது.
புயல் பாதிப்பு ஏற்பட்டு சில நாள்கள் ஆன பின்னரும் கூட, மக்கள் அடுத்தவேளை உணவுக்கு இன்னும் கையேந்தி நிற்கும் நிலை ஏன்? நிவாரணப் பணிகள் ஏன் இன்னும் சீராகவில்லை என்ற கேள்வி எழுகிறது. 
சென்னை, கேரளம் போன்ற பகுதிகளில் பேரிடர் ஏற்பட்டபோது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருள்கள் உடனடியாக சென்றன. தொழிலதிபர்கள், திரைத் துறையினர், பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர். 
சமூக வலைதளங்களும் தற்போது உள்ளதை காட்டிலும், அப்போது பல மடங்கு சமூக கடமையாற்றின. அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் நாள்தோறும் பார்வையிட்டு நிலைமை சீராக வழிவகுத்தனர். குறிப்பாக, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த தன்னார்வலர்கள் நிலைமை சீராக கடுமையாக உழைத்தனர்.
ஆனால் தற்போது டெல்டா மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மற்ற மாவட்ட மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையோ எனத் தோன்றுகிறது.
சமூக வலைதளங்களில்கூட, பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் குமுறல்களும், நிவாரண உதவி கோரிக்கைகளும்தான் அதிகமாக காணப்படுகிறதே தவிர, சென்னை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தோ, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தோ பெரிய அளவில் நிவாரண உதவிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இது டெல்டா மாவட்ட மக்களிடம் மனக்குறையை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. 
மின்சாரம் இன்றி, குடிக்கக்கூட தண்ணீர் இன்றி அப்பகுதி மக்கள் தவித்து வருவதும், ஜெனரேட்டர் பயன்பாட்டுக்கும், குடிதண்ணீருக்கும் அதிகளவில் பணம் செலவழிக்க வேண்டிய நிலையில் உள்ளதையும், குடிசை வீடுகளுக்கு மேல் தார்பாய் விரிக்ககூட வழி இல்லாமல் தவிப்பதையும் கேள்விப்படும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது.
திரைத்துறையினரில், அரசியல் களம் கண்டவர்களும், அரசியல் களம் காண எண்ணுபவர்களும் கூட டெல்டா மாவட்ட மக்களை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. சென்னையில் பாதிப்பு ஏற்பட்ட போது பெரிய நடிகர்கள்கூட களத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இங்கு தன்னார்வலர்கள் மட்டுமே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் சென்னைக்கு பாதிப்பு என்றால் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட மக்களும் உதவுகிறார்கள். ஆனால் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு என்றால் சென்னை மக்கள் உதவ முற்படுவதில்லை என்ற எண்ணம் டெல்டா மாவட்ட மக்கள் மனத்தில் உள்ளது.
முன்பு ஒக்கி புயலால் பாதிப்பு ஏற்பட்ட போது குமரி மாவட்டத்துக்கு பிற மாவட்ட மக்களிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களிடம் இருந்தது போன்று தற்போது டெல்டா மாவட்ட மக்களிடம் உள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் தற்போது உணவு, குடிநீர், சமையல் பொருள்கள் இன்றி தவித்து வருபவர்கள் ஏராளம். குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு தார்பாய், கொசு விரட்டி, மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி போன்ற பொருள்களின் தேவை அதிகமாக உள்ளது.
ஆடு, மாடுகள் உள்ளிட்டவை ஆங்காங்கே செத்து மிதப்பதால் சுகாதாரக் கேடு உருவாகி தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இப்போதே காய்ச்சல் பாதிப்பு பல பகுதிகளில் உள்ளதையும் அறிய முடிகிறது.
இவற்றை போக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இருந்து மருத்துவக் குழுக்கள் சென்று இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதோடு, தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகளையும் வழங்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்க ஆலை அதிபர்கள் தயாராக உள்ளனர். உடைகள் வழங்க துணிக்கடைக்காரர்கள் தயாராக உள்ளனர். மருந்துப் பொருள்களை வழங்கவும் மருந்து கடைக்காரர்கள் தயாராக உள்ளனர். தங்களால் முடிந்த உதவியைச் செய்ய பொதுமக்களும் தயாராக உள்ளனர். ஆனால் அவற்றை ஆங்காங்கே சேகரித்து, முறையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகிப்பதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் தேவையான தன்னார்வலர்கள் தான் பற்றாக்குறையாக உள்ளனர்.
நாம் அனைத்து உதவிகளுக்கும் அரசை மட்டும் நம்பி இருக்க முடியாது. ஒவ்வொரு தன்னார்வலரும் நினைத்தால், தங்கள் பகுதியில் இருக்கும் ஒரு தன்னார்வ அமைப்புடன் இணைந்து நிவாரணப் பொருள்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று அவற்றை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். இதன் மூலம் டெல்டா மாவட்ட மக்களின் துயர் குறையலாம்; மனக்குறையும் நீங்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com