இந்தியாவின் "பீம் ஸ்மிருதி'!

அரசியல் அமைப்பு வரைவுக் குழு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒப்படைத்த நாள் 1950, நவம்பர் 26. அந்த நாளை டாக்டர் அம்பேத்கருக்கு தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அர்ப்பணித்து பல

அரசியல் அமைப்பு வரைவுக் குழு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒப்படைத்த நாள் 1950, நவம்பர் 26. அந்த நாளை டாக்டர் அம்பேத்கருக்கு தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அர்ப்பணித்து பல நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்துள்ளன. 

"அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே அல்ல; அதில் பெரும் பங்கு கொண்ட ஜவாஹர்லால் நேருவின் பங்கை பாஜக மூடிமறைக்கிறது' என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. இந்த விமர்சனத்தை நேருவேகூட இப்போது இருந்திருந்தால் விரும்பியிருக்க மாட்டார்.

சுதந்திர இந்தியாவுக்கென தனித்த அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்தவுடன், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியல் சாசன சபையின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 டிசம்பர் 13 அன்று அரசியல் சாசன சபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அப்பணியை அவர் தொடங்கினார். இதில் டிசம்பர் 17-இல் டாக்டர் அம்பேத்கர் தனது முதல் (கன்னி)பேச்சை சாதாரண உறுப்பினராகவே தொடங்கினார்.

டிசம்பர் 1946 முதல் ஜூன் 1947 வரை அரசியல் சாசன சபையில் அரசியல் சாஸனத்தை வரைவதிலும், பல குழுக் கூட்டங்களிலும் டாக்டர் அம்பேத்கரின் தலைசிறந்த பங்களிப்பை பல மூத்த தலைவர்கள் கண்கூடாகக் கண்டனர். ஏறத்தாழ அனைத்து முக்கிய குழுக்களிலும், அவரது அறிவுத் திறனையும் பங்களிப்பையும் பிறர் உணர்ந்திருந்த காரணத்தால்தான் டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாஸன சபையில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

பின்பு டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு உதவ ஆலோசனைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவுக்கு சர்தார் வல்லபபாய் படேல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும் உறுப்பினராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் குழுவின் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலும் மூத்த தலைவர் ராஜாஜியும் அம்பேத்கரின் கருத்துகளை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்கள்.

அதேசமயம், இடைக்கால அரசின் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு தலைமையில் ஐக்கிய அரசியல் சாசனக் குழு அமைக்கப்பட்டது. நேரு அக்கூட்டத்துக்கு வர இயலாதபோது இடைக்காலத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் உண்டு.

இதற்கிடையே, அரசியல் சாசன சபையின் உறுப்பினர் பதவியை டாக்டர் 
அம்பேத்கர் இழந்துவிட்டார். டாக்டர் அம்பேத்கர் இல்லாத நிலையில், சபையின் வேலைகள் அனைத்திலும் பின்னடைவு ஏற்பட்டது. இதை உணர்ந்த ராஜேந்திரபிரசாத்தும், சர்தார் வல்லபபாய் படேலும் மும்பையில் முதல்வராக இருந்த பி.ஜி.கேருக்கு "டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுக்க வழி செய்யுங்கள்' என்று கடிதம் எழுதினர். ஒரு காலத்தில் காங்கிரசையே எதிர்த்துப் போராடிய டாக்டர் அம்பேத்கரின் சேவை, சாசன சபைக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருந்தது என்பதை காங்கிரஸ் தலைவர்களே உணர்ந்திருந்தனர் என்பதை, இக்கடிதம் நமக்கு உணர்த்தும். சபையின் உறுப்பினராக, டாக்டர் அம்பேத்கர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையே, பிரதமர் நேரு, இந்திய அரசியல் சாசனம் வரைய சரியான ஒருவர் கிடைக்கவில்லையென காந்தியிடம் கூறி, பல நாடுகளுக்கு சாசனங்களை வரைந்த சர் ஐவர் ஜென்னிங்ûஸ அழைக்க அனுமதி கோரினார். காந்திஜி அதற்கு மறுப்புத் தெரிவித்து, டாக்டர் அம்பேத்கர் பெயரைப் பரிந்துரைத்தார்.

மேலும் டாக்டர் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளுமாறும் காந்திஜி கூறியபோது, தயக்கம் காட்டினார் நேரு. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் டாக்டர் அம்பேத்கர் என்று அதற்குக் காரணம் தெரிவித்தார். ஆனால் காந்திஜியோ "டாக்டர் அம்பேத்கரின் திறமைகள், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

நேரு தயங்கியபோதிலும், டாக்டர் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். 1947, ஆகஸ்ட் 29-இல் அரசியல் சாசன சபை ஒரு குழுவை அமைத்தது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என். கோபால்சாமி ஐயங்கார், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, சர்.பி.எல்.மிட்டர், டி.பி. கைத்தான் - இவர்களே வரைவுக் குழுவினர். இக்குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழுதான் அரசியல் சாசன வரைவை முழுமையாகத் தயாரித்தது.

அரசியல் சாசனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கரின் பணி எவ்வாறு இருந்தது என்பது குறித்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி கூறும்போது, "அரசியல் சாசனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கரின் ஆர்வத்தையும் கடுமையான உழைப்பையும் நான் அறிவேன். சபையால் வரைவுக் குழுவுக்கு அமர்த்தப்பட்ட எழுவரில், ஒருவர் பணியிலிருந்து நீங்கிவிட்டார். ஒருவர் காலமாகிவிட்டார். அந்த இடம் நிரப்பப்படவில்லை. இன்னொருவர் அமெரிக்கா சென்றுவிட்டார். மற்றொருவர் மாநில வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஓரிருவர் தில்லியிலிருந்து தொலைவில் இருந்ததால், அவர்களுடைய உடல்நிலை காரணமாக வருகை தர இயலவில்லை. ஆதலால் அரசியல் சாசனம் வரையும் முழுப் பொறுப்பும் டாக்டர் அம்பேத்கரிடம் சென்றது. அவர் அக்கடமையைச் செவ்வனே செய்ததால் நாம் அவருக்கு நன்றியுடையவராகிறோம் எனக் கூறுவதில் எந்த ஐயமும் இல்லை' என்று பாராட்டியுள்ளார். 

1949 செப்டம்பர் 16 அன்று எல்லா ஷரத்துகளின் மீதும் நடைபெற்ற விவாதங்கள் முடிவடைந்தன. செப்டம்பர் 17 அன்று டாக்டர் அம்பேத்கர் ஒரு தீர்மானத்தை மொழிந்தார். அதன் மீதான விவாதம் 10 வாரங்களுக்கு நடைபெற்றது. இறுதியாக, டாக்டர் அம்பேத்கரைப் பாராட்டி பேசிய உறுப்பினர்களின் பேச்சுகளை ஆராய்ந்தால் டாக்டர் அம்பேத்கரின் பணி எவ்வளவு முக்கியமானது என்பது விளங்கும்.

"நம் நாட்டின் விடுதலையை மகாத்மா காந்தி பெற்றுத் தந்தார். அதனுடைய அமைப்புச் சட்டத்தை, மகாத்மாவைக் கடுமையாக விமர்சித்த சட்டமேதையான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கியுள்ளார். இவரை நம்முடைய சாசன சபை மட்டுமல்லாமல் நம்முடைய நாடே பாராட்டக் கடமைப்பட்டுள்ளது' என்று சியாம நந்தன் சஹாவும், "டாக்டர் அம்பேத்கர் இந்த வரைவு அமைப்புச் சட்டத்தின் தலைவராக, தன்னுடைய அயராத உழைப்பின் மூலமாக எவ்வளவு திறமையுடன் இதனை வடிவமைத்துள்ளார் என்பதனை நான் பாராட்டாவிட்டால், என்னுடைய பொறுப்பிலிருந்து நான் தவறியவனாவேன்' என்று அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும் பாராட்டி இருப்பதிலிருந்து அவரது அரும்பணி எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

1949 நவம்பர் 25-இல் டாக்டர் அம்பேத்கர் நிறைவுரையாற்றினார். அதன்பின்னர் பேசிய டாக்டர் ராஜேந்திர பிரசாத், " நான் அன்றாடம் இந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த மன்றத்தின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு வந்த நேரங்களிலெல்லாம், வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய உடல்நலம் குன்றியிருந்தாலும் எவ்வளவு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தன்னுடைய கடமையை ஆற்றியுள்ளார் என்று உணர்ந்தேன். 

நாம் டாக்டர் அம்பேத்கரை வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரியான முடிவு என்பதையும் நான் உணர்ந்தேன். இந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை அவர் மெய்ப்பித்திருக்கிறார்; தன்னுடைய பணிக்கு அவர் மெருகு ஏற்றியுள்ளார்' என்று பாராட்டினார்.

பண்டித ஜவாஹர்லால் நேருவேகூட, அன்றைக்கு டாக்டர் அம்பேத்கரின் பணியை முழுமனதுடன் பாராட்டி உரையாற்றினார். "அரசியல் சாசனம் உருவாவதற்கு டாக்டர் அம்பேத்கரைக் காட்டிலும்  வேறு யாரும் அதிக அக்கறையும் உழைப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை' என்று பேசினார்  நேரு.

இதுதான் இந்திய அரசியல் சாசனம் வடிவமைத்த சிற்பியின் கதை. இந்த நாடு உள்ள வரை, இந்த நாட்டுக்கென தனித்த சிறப்புடைய அரசியல் சாசனத்தை வடிவமைத்த டாக்டர் பீமராவ் அம்பேத்கரின் புகழும் நிலைத்திருக்கும்.

மனு ஸ்மிருதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சமுதாயத்தின் பெரும்பகுதி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக்கி அடக்கியாண்ட ஆதிக்க சக்திகளுக்கு தனது கடுமையான உழைப்பாலும், நேர்மையான நடத்தையாலும் சரியான மருந்தைக் கொடுத்தார் அம்பேத்கர். ஒருமைப்பாட்டை வலுவாக்கும் "பீம ஸ்மிருதி' என்று அழைக்கத்தக்க அற்புதமான அரசியல் சாசனத்தை அவர் வழங்கிச் சென்றார்.

இந்த அரசமைப்புசட்ட அர்ப்பணிப்பு நாளைக் கொண்டாடத் தவறினால் நாம் நன்றி கெட்டவர்களாவோம். இத்தனை ஆண்டுகளாகக் கொண்டாடாமல் இருந்தது போகட்டும். இனியாவது நாம் அரசமைப்புச் சட்ட அர்ப்பணிப்பு நாளை, சுதந்திர நாள், குடியரசு நாளுக்கு நிகராகக் கொண்டாடுவதுதான் டாக்டர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், எஸ்சி அணி, பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com