மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் கோகோய், "நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளால் நீதித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
Updated on
3 min read


இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள ரஞ்சன் கோகோய், "நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளால் நீதித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. குற்ற வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பிறகும் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவில் வழக்குகளில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருத வேண்டும்' என்றார்.

இந்த நிலையில், கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எல்லா வயது பெண்களும் போகலாம் என்ற தீர்ப்பினை கடந்த மாதம் 28-ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. அதுவும் பொதுநலன் சார்ந்த அடிப்படையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில்.

பொதுநலன் எனில் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு நடைமுறையை, திட்டத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதே பொது நல வழக்காகும். 

அப்போது கூட, பல நீதிமன்றங்கள் பொது நல வழக்குகளைப் பதிவு செய்யத் தொடங்கு முன்பாகவே, இருக்கின்ற நடைமுறையால் வழக்கு தொடுப்பவர்க்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் பொதுமக்கள் எப்படி பாதிப்பிற்கு உள்ளாவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வார்கள். 

இல்லை எனில் "இந்த வழக்கில் உங்களுக்கு எந்த வகையில் தொடர்ப்பு இருக்கிறது. எந்த வகையில் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள்' என்று கேள்விக் கணைகளால் துளைத்த பின்னரே வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்குவார்கள். இல்லை எனில் வழக்கை தள்ளுபடி செய்து விடுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட  10 வயது முதல் 50 வரை உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை என்கிற நடைமுறை பல நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளது. இதற்கான காரணங்கள் பலவுண்டு.  ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. அவர் மோன நிலையில் தவத்தில் இருக்கிறார். 

அவர் சந்நிதானத்திற்கு வருபவர்கள் பல தினங்கள் முறையான, தூய்மையான விரதமிருந்து, காலை, மாலை வழிபாடுகளை நிகழ்த்தி பின்னர் மண்டல பூசைக்கோ அல்லது மகர ஜோதி தரிசனத்திற்கோ சபரிமலைக்குப் போகிறார்கள். 

இந்த நியதிகள் எல்லாம் மனித மனத்தில் மற்ற இச்சைகளோ, சலன உணர்வுகளோ தோன்றாவண்ணம் இருக்கவே. இப்படி ஆடவர்கட்கு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்ற பழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது.

இறைவன் முக்காலமும் உறைந்து இருக்கிற திருக்கயிலையில் நந்தவனத்தில் பூக்கொய்த அநிந்திதை, கமலினி என்ற இருவர் மீதும் ஆலால சுந்தரர்க்கு ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணமாக அவரை பூவுலகம் சென்று சுந்தரராக  பிறந்து பரவை, சங்கிலி நாச்சியாரோடு இருந்து இன்பம் துய்த்து வரப் பணித்தார் இறைவன். காரணம் திருக்கயிலை இன்பநுகர்வுக்கு இடமில்லை.

இவ்வகையான், சபரிமலையிலும் ஆடவர்களின் புல நுகர்வுக்கு இடம் கொடாமல் இருக்கவும் நைஷ்டிக பிரம்மச்சாரியின் தவநிலை நிலை பெறவும் பெண்கட்கு அனுமதி இல்லை. ஆனால், பிற இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு எல்லா வயது பெண்களும் போகலாம். தடை இல்லை. தற்போது சபரிமலையில் இந்தத் தடை தகர்க்கப்பட்டிருக்கிறது. 

இதற்கான வழக்கைத் தொடுத்தவர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை. இந்தக் கோயிலில் வழிபாடு நிகழ்த்துபவரும் இல்லை. ஐயப்பனை தெய்வமாகக் கருதுபவரும் இல்லை. காலங்காலமாக இருக்கின்ற நடைமுறையால் இவர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. 

இந்த கருத்தமைத்த விதத்தில் அமர்வு நீதிபதிகளில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, "உடன்கட்டை ஏறுதல் போன்ற சமூகத் தீங்கான பிரச்னைகள் தவிர்த்து, இதர மத நடைமுறைகளில் நீதிமன்றம் முடிவெடுக்கக் கூடாது. இந்த விஷயம் ஆழ்ந்த மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. இதனை ஆண், பெண் பாகுபாடு என்ற நோக்கில் அணுகக் கூடாது' என்றார். 

உலகில் உள்ள பிற பெண்களின் உரிமைக்காக நீதிவழங்கும் நான்கு நீதிபதிகளும் தங்கள் அருகே அமர்ந்து இருக்கும் சக பெண் நீதிபதியின் உணர்வினை உணர்ந்து இருக்கலாம். இந்த பெண் நீதிபதியின் உணர்வுதான் ஏனைய உலகில் உள்ள பெண்களின் உணர்வும்.

"ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை' என்றார் அப்பரடிகள். இந்த நிலை வரச் செய்யவே சில கட்டுப்பாடுகள். முற்றும் துறந்த முனிவர் விசுவாமித்திரரே அழகி மேனகையின் காதற் கணையில் வீழ்ந்தார் எனில் நாம் எம்மாத்திரம்?  இதனால்தான் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் காலங்களில் தங்களது இல்லங்களில் கூட கடுமையான பிரம்மச்சரியத்தில் இருக்கிறார்கள், திரு நீலகண்டரைப்போல. 

பத்து வயது குழந்தைகளைத் தெய்வமாகக் கருதியும், ஐம்பது வயதுக்கு மேற்பட்டவரைத் தாயாகக் கருதியும் விலக்களித்தார்கள்.

சிறுதொண்டர் புராணத்தில் ஆண் அடியராக வருகின்ற இறைவன் திருவெண்காட்டு நங்கையிடம் அவனது கணவன் இல்லத்தில் இல்லை என்பதை கேட்டு அறிந்து, "மாதரார் தாம் இருந்த இட வகையில் தனிப் புகுதோம்' என்று சொல்லி  மீள்வார். ஆனால், அதே இறைவன் காரைக்காலில் புனிதவதியார் இல்லத்தில், அவர் தனித்து இருக்கும் போது உணவு கேட்டு பெற்று உண்டு திரும்புகிறார். 

இது முரணாக இருக்கிறது என்பார்க்கு ஒரு செய்தி. திருக்கயிலை மலைக்கு சென்ற காரைக்கால் அம்மையார் குறித்து உமையம்மையிடம் "இவர் நம்மைப் பேணும் அம்மை காண்' என்கிறார் இறைவன். புனித வதியாரைத் தாயாக பாவித்தனால்தான் தன்னை ஒரு மகனெனக் கருதி அவர் இல்லம் புகுந்தார் இறைவர் என்பது உரைகாரர் விளக்கம்.

கேரளத்தில் அடர்ந்த காடுகளின் நடுவே தான் சபரிமலை உள்ளது. அந்தக் காலங்களில் எல்லாம் கரடு முரடான ஒற்றையடி பாதைகள் தான். காட்டு மிருகங்கள் பயம் வேறு. தங்குமிட வசதிகள் இல்லை. இவ்வழியில்தான் ஆடவர்கள் சென்று வழிபட்டு வந்தனர். 

இது போன்ற இடங்களுக்கு பெண்களை அழைத்துச் செல்ல சாத்தியம் இல்லை என்பது மட்டுமல்ல, மோன நிலையில் இருக்கும் ஐயப்பனின் தவத்திற்கு ஊறு வரக் கூடாது என்ற எண்ணமும் ஒரு காரணம். 

மேலும், பெண்கட்கு உடல் ரீதியான பிரச்னையும் இல்லை என்று சொல்ல இயலாது. மாதவிலக்கு காலங்களில் உதிரப் போக்கினால்  உடலில் அசதியும் தளர்ச்சியும் ஏற்படும். அதனால் தான் இன்றும் அவர்கட்கு மூன்று நாள்கள் ஓய்வும் தனிமையும் தருகிறார்கள்.

சபரிமலைக்கு குறிப்பிட்ட பருவங்களில் செல்லும் வேளைகளில் சமய ரீதியான, சடங்குகளை பழக்க வழக்கங்களைக் கொள்ள இயலாது என்பதும் பெண்களை அனுமதிக்க மறுப்பது ஒரு காரணமாக இருக்கலாம். 

எது எப்படியோ பல நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளதொரு நடைமுறையை, மரபை பெரும்பான்மை சமூகம் ஏற்பது போல் நீதிமன்றமும் ஏற்பது சாலச் சிறப்புடையது. அந்நியர் ஆட்சியில் கூட தடைகள் வராதபோது நம்மை நாமே ஆளும் குடியரசு நாட்டிலா சமய வழக்காறுகளைத் தகர்ப்பது!

பொது நலனிற்கு இந்த நடைமுறைகள் குந்தகம் விளைவிப்பதாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் கவலை கொள்ளலாம். யார்க்கும் எவ்வித இடையூறும் இன்றி இந்நாள்வரை இருந்து வரும் மரபை சமய ஒழுகலாறுகளை பெரும்பான்மைச் சமூகம் வருந்தத்தக்க விதத்தில் நீதி மன்றம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

இந்நாள் தலைமை நீதிபதி சொல்லியதைப் போல் ஆயிரமாயிரம் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மலையாய் குவிந்து கிடக்கின்றன. அரசியல்வாதிகளில் எத்தனை பேர் ஜெயிலில் இருப்பதற்கு பதிலாக பெயிலில் இருக்கிறார்கள். 

இவர்களை எல்லாம் கவனிப்பதை விட்டு விட்டு இந்த வழக்கை எடுத்து முடித்து இருக்கிறார்கள். இந்த தீர்ப்பினை வரவேற்கும் சில அரசியல்வாதிகளும், பெண்ணிய சிந்தனைவாதிகளும் இறைவனேஅர்த்தநாரீஸ்வரர்தான் என்பதை உணர வேண்டும்.

மிகவும் தொன்மையான இந்து சமயத்தில்தான் ஆத்திகர்கட்ரும் நாத்திகர்கட்கும், பகுத்தறிவு சிந்தனாவாதிகட்கும் இடம் உண்டு. கல் எறிந்து பூசித்த சாக்கிய நாயனார்க்கும் கோயிலில் இடம் உண்டு. தன் நயன மலர்களை பறித்து இறைவனுக்கு அப்பிய காளத்தி வேடனுக்கும் உயர் இடம் உண்டு. 

விஞ்ஞானம் ததும்பும் மெய்ஞாணம் கொண்டதொரு சமயத்தின் தொல் மரபுகளை தடுப்பதால், தகர்ப்பதால், மானுட சாதிக்கு  என்ன பெரிய லாபம் கிடைக்கப் போகிறது. இந்த தீர்ப்பினால் இனி ஆண்டாண்டு தோறும் ஆயிரக் கணக்கிலோ, லட்சக் கணக்கிலோ பெண்கள் சபரிமலைக்கு செல்லப் போவது இல்லை. 

மக்களின் அழுத்தமான நம்பிக்கையை சட்டம் கொண்டு கைப்பற்ற முடியாது. வேண்டுமானால் வீம்பிற்காக, இறை மறுப்பாளர்கள், பெண்ணிய சிந்தனாவாதிகள் ஓரிருவர் செல்லக் கூடும். வேறு ஒன்றும் பெரிய மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. 

ஆனால், இதற்காக கேரள அரசும் அதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகமும் சந்திக்கப்போகும் சிரமங்கள் அதிகமாக இருக்கும்.

கட்டுரையாளர்: தலைவர், திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com