பொருளாதாரத் தடை: தப்புமா இந்தியா? 

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போர்தான் இதுவரை சர்வதேச அளவில் பெரும் கவன ஈர்ப்பு பிரச்னையாக இருந்து வந்தது. இப்போது, அந்த விவகாரம் சற்று தணிந்து,

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போர்தான் இதுவரை சர்வதேச அளவில் பெரும் கவன ஈர்ப்பு பிரச்னையாக இருந்து வந்தது. இப்போது, அந்த விவகாரம் சற்று தணிந்து, இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்குமா? என்பதே பிரதான விவாதப் பொருளாகியுள்ளது.
1980-ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன், ரஷியாவுடன் (அப்போதைய சோவியத் யூனியன்) ஆயுதப் போட்டியில் ஈடுபட்டார். ரஷியாவுக்குப் போட்டியாகக் கடுமையான ஆயுதக் குவிப்பு நடவடிக்கையில் அப்போது அமெரிக்கா ஈடுபட்டது. ரீகன் மொமெண்ட் என்ற அழைக்கப்படும் இந்த ஆயுதப் போட்டியில் ரஷியாவை அமெரிக்கா வென்று பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. எனினும், இந்த ஆயுதப் போட்டி சர்வதேச அளவில் கடுமையான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், ரீகனின் அந்தக் கடுமையான செயல்பாடுகள்தான் இப்போது, அமெரிக்காவை உலக ஆயுத வல்லரசாக முன்னிறுத்தியுள்ளது. 
அதே பாணியில், பொருளாதார வல்லரசாக அமெரிக்காவை தொடர்ந்து முன்னிறுத்தும் நோக்கில் சீனா, ரஷியா உள்ளிட்ட போட்டி நாடுகளை டிரம்ப் குறிவைத்துள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அந்த வரிசையில் இப்போது, இந்தியாவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது.
ஏனெனில், அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ரஷியாவிடம் இருந்து ரூ.37,000 கோடிக்கு அதிநவீன எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்தியா அண்மையில் மேற்கொண்டது. மேலும், அமெரிக்காவின் தடையை எதிர்கொண்டுள்ள மற்றொரு நாடான ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. என்னதான் நட்பு நாடாக இருந்தாலும், அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் நாடுகளுடன், ஆயுதம் மற்றும் வர்த்தக உறவுகளை மேற்கொண்டால், நட்பு நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும். இதற்கான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கான ஒரே ஒரு விதி விலக்கு, அமெரிக்க அதிபரின் கைகளில் மட்டுமே உள்ளது. ஆனால், இந்தியா தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமீபத்திய கருத்துகள் அந்த விதிவிலக்கைப் பெற்றுத் தருமா? என்பதை கேள்விக் குறியாக்கியுள்ளது. ஏனெனில், அண்மையில் இந்தியாவை வரிகளின் ராஜா என்று கடுமையாக விமர்சித்திருந்தார் டிரம்ப். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் உள்பட பல பொருள்களுக்கு இந்தியா அதிகபட்ச வரியை விதித்து வருகிறது என்பதையே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார். 
இந்தியா மீதான டிரம்ப்பின் எரிச்சலுக்குப் பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, 2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது, அமெரிக்காவின் பால் பொருள்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்தது. அமெரிக்காவில் பசுக்களுக்கு அசைவம் கலந்து தீவனம் கொடுக்கப்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணம். மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, தங்கள் பால் பொருள்களில் அசைவத்தைக் குறிப்பிடும் கட்டத்தின் உள்ளே சிவப்புப் புள்ளி அடையாளத்துடன் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்பியது. ஆனால், அதற்கும் இந்தியா இசைவு தரவில்லை. இது தவிர, அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறிக்கிறார்கள் என்பது உள்பட டிரம்ப்பின் இந்திய அதிருப்திக்கு இதுபோன்ற பல காரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம்.
தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்காகவே அமெரிக்க நலன்களுக்கு எதிரான நாடுகள் மீதான பொருளாதாரத் தடை மூலம் எதிர்க்கும் சட்டத்தை அமெரிக்கா தனது அரசியல் ஆயுதமாக எப்போதும் கையில் வைத்துள்ளது. இப்போது, அந்த ஆயுதம் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவைப் பதம் பார்க்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டாங்கிகளையும், குண்டுகளையும் கொண்டு ஒருவரை மற்றொருவர் தாக்கி அழித்துக் கொள்வதற்கு பதிலாக, ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க நடவடிக்கை எடுத்து அதனை வீழ்த்துவதுதான் இன்றைய நவீன வர்த்தக - பொருளாதாரப் போர். இந்தப் போரிலும் அமெரிக்காவின் கைதான் ஓங்கியிருக்க வேண்டும் என்பதுதான் டிரம்ப்பின் எதிர்பார்ப்பு. அதுதான் உள்நாட்டில் சரியும் அவரது செல்வாக்கைக் காக்க ஓரளவுக்கு உதவும்.
எனவே, அமெரிக்கா தடை விதித்த நாடுகளான ரஷியா, ஈரானிடம் ஒரே நேரத்தில் நட்பு பாராட்டும் இந்தியா மீது அமெரிக்கா எந்த மாதிரியான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதே சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ரஷியாவிடம் இருந்து இதே டிரையம்ப் எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கியதற்காக சீனா மீது கடந்த மாதம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பாய்ந்தது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அண்மையில் சந்தித்துப் பேசினர். அப்போது, அமெரிக்க அமைச்சர்கள் இருவரும் இந்தியாவுக்கு சாதகமாகக் கருத்துத் தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்தன. 
பின்னர் அவர்கள் அளித்த பேட்டிகளும் இதனை உறுதிசெய்தன. எனவே, அவர்கள் அதிபரிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள்.
எனினும், அதிரடியான, யாரும் எதிர்பாராத முடிவுகளுக்கு பெயர்பெற்ற டிரம்ப், பொருளாதாரத் தடை எனும் பாணத்தை எந்தத் திசையில் வேண்டுமானாலும் வீசலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com