உலகப் பொது மொழி வேண்டும்

உலக நட்புறவும் ஒருமைப்பாடும் ஓங்க வேண்டுமென்று எல்லாரும் கூறுகிறார்கள்.

உலக நட்புறவும் ஒருமைப்பாடும் ஓங்க வேண்டுமென்று எல்லாரும் கூறுகிறார்கள். அது எப்படி ஓங்கும்? ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் மூலமே ஓங்கும். நான் ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கிருக்கும் உலகப் புகழ் பெற்ற லொவ்ரே சித்திரக்கூடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வைக்கப்பட்டுள்ள ஏராளமான கலைப்பொருள்களைப் பார்த்தேன்.
அவற்றுள் முக்கியமாக, எத்திசையிலிருந்து பார்த்தாலும் நம்மையே பார்த்துப் புன்னகைக்கும்படி வரையப்பட்டுள்ள மோனலிசா படத்தைப் பார்த்தேன். உலக நாடுகள் பலவற்றிலிருந்து வந்திருந்த ஓவியர்களெல்லாம் அப்படத்தின் எதிரே அமர்ந்து அது எவ்வகையில் தீட்டப்பட்டுள்ளது என்று கூர்ந்து நோக்கி ஆய்வு செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஓவியத்தின் கீழும் அந்த ஓவியம் குறித்த சிறு குறிப்பு எழுதப்பட்டுள்ளது. மோனலிசா ஓவியத்தின் கீழும் அந்த ஓவியத்தைப் பற்றிய சிறு குறிப்பு எழுதப்பட்டிருந்தது. அக்குறிப்பு ஃபிரெஞ்சு மொழியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில்கூட எழுதப்படவில்லை. எனவே ஃபிரெஞ்சு மொழி தெரியாத எவராலும் அதைப் படிக்க முடியவில்லை.
உலகப் பொது மொழி என்ற ஒன்று இருக்குமானால், ஃபிரெஞ்சுக்காரர்களிடம் உங்கள் தாய்மொழியாகிய ஃபிரெஞ்சு மொழியில் மட்டும் எழுதினால் போதாது, உலக மக்கள் எல்லாரும் உங்கள் நாட்டுக் கலைஞர்களின் பெருமையை அறிந்து கொள்ள உலகப் பொது மொழியிலும் அதனை எழுதுங்கள் என்று உலகோர் அழுத்தம் கொடுக்கலாம். 
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் கனவு நனவாக வேண்டுமென்றால் உலக மக்கள் பேசும் மொழிகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.
செம்மொழி என்ற உயர்வை எல்லா மொழிகளும் பெற்றிருக்கவில்லை. ஒரு சில மொழிகள் மட்டுமே பெற்றுள்ளன.
உலகில் தோன்றிவிட்ட எவரும் தன் தாய்மொழியை இழக்காமல் உலகத்தாரோடு உறவாடி மகிழ ஒரு உலகப் பொது மொழி வேண்டும்.
உலகில் பிறந்து வளரும் குழந்தைகள் விரும்பிய மொழிகளையெல்லாம் கற்கலாம். அதில் தடை ஏதும் இல்லை. ஆனால், எல்லாரும் கட்டாயமாக தங்களின் தாய்மொழியைக் கற்பதோடு, உலகப் பொது மொழியையும் கற்க வேண்டும்.
இப்படி ஒரு நிலை உருவானால், உலக ஒருமைப்பாடும், உறவும் அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் கூறிய யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உறவு நிலை தோன்றிவிடும்.
ஃபிரான்சில் பெற்ற அனுபவம் போல் வேறு பல இடங்களிலும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. அவற்றையும் கணியன் பூங்குன்றனாரின் கனவு நனவாக வேண்டுமே என்ற ஆதங்கத்தையும் உள்ளத்தில் வைத்து, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாசார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) உலகப் பொது மொழி வேண்டும் என்பதை வலியுறுத்தி 1992 ஜூன் மாதம் 25-ஆம் தேதி நான் ஒரு கடிதம் எழுதினேன். 
அவர்கள் 1992 ஜூலை மாதம் 23-ஆம் தேதி பதில் கடிதம் எழுதினார்கள். அக்கடிதத்தில், இந்தியா போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடு, பொது சபை நடைபெறும்போது இதற்கான வரைவு தீர்மானத்தைக் கொண்டு வந்தால், ஐக்கிய நாடுகள் சபையில் அதை ஏற்று உலகப் பொது மொழி உருவாக்கப்படும் என்று எழுதி இருந்தார்கள்.
ஏற்கெனவே இத்தகைய முயற்சியில் உருவான எஸ்பெராண்டோ என்ற பொது மொழி, உலகமொழிகளின் அறிஞர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1954-இல் ஐக்கிய நாடுகள் சபை அதை ஏற்ற போதிலும், உலக அறிஞர்களிடையே எதிர்பார்த்த ஒப்புதல் கிடைக்கவில்லை.
ஏனெனில், உலகில் உள்ள ஐந்து கண்டங்களில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொழிகளின் வேர்ச்சொற்களை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு அந்தப் பொது மொழி உருவாக்கப்பட்டது. பிற நான்கு கண்டங்களிலும் உள்ள மொழிகள் கவனிக்கப்படவில்லை.
தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று போற்றப்பட்ட, நம் மூத்த தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் கவனிக்கப்படவில்லை. 
உலகிலேயே ஓரெழுத்து வார்த்தைகள் வா-போ-தீ-நீ-பூ-வீ போன்றவை உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு தமிழ் மொழியில் இருக்கின்றன என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எஸ்பொரண்டோ உருவாகும்போது தமிழ் போன்ற மொழிகள் ஏனோ கவனத்தில் கொள்ளப்படவில்லை. 
நான் எழுதிய கடிதத்திற்கு உலக அமைப்பு பாராட்டு தெரிவித்தபோது உலகப் பொது மொழி காண வழிமுறையையும் கூறியது. அந்த 1992-ஆம் ஆண்டு கடிதத்தில், நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஐக்கிய நாடுகளின் பொது சபை கூடுகிறது என்று சுட்டிக்காட்டியதன் மூலம், இந்தியா தீர்மானம் கொண்டு வரலாம் என்பதையும் கோடிட்டுக் காட்டியிருந்தது.
அன்று 1992-இல் நரசிம்மராவ் இந்திய பிரதமராக இருந்தார். ஐ.நா. சபை எனக்கு அனுப்பிய பதிலையும் இணைத்து வேண்டுகோள் கடிதம் அனுப்பினேன். அதன் பின்னர் பிரதமர் பீடத்தில் அமர்ந்த - இன்றைய பிரதமர் வரை அனைவருக்கும் எழுதினேன்.
தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து செல்லும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற உறுப்பினர்களோடு கலந்துரையாடி, இதற்கான மசோதா ஒன்று கொண்டு 
வருவார்களானால்,
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்ற நல் உறவு நிலை உலகில் ஏற்பட்டுவிடும்.
கட்டுரையாளர்:
முன்னாள் தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com