தற்போதைய சூழலில் ஆணுக்கு இணையாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். குடும்பத்துக்குத் தேவையான வருவாய் ஈட்டுவதற்காக, தங்களது தகுதிக்கேற்ப பணியைத் தேடிக் கொள்கின்றனர். தகவல் தொழில்நுட்பம் படித்த பெண்கள் அயல்நாடு சென்று பொருள் ஈட்டுகின்றனர். அதே சமயத்தில், எழுத்தறிவு பெறாதவர்கள், பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலைகள், சிறு நிறுவனங்கள், விற்பனையகங்களில் பணிபுரிகின்றனர்.
கிராமப்புற பெண்கள் நூறு நாள் வேலை, விவசாய வேலை, பொருள் உற்பத்தி ஆலைகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர். சிவகாசி, திருப்பூர், நாமக்கல் போன்ற பகுதிகளில், கிராமப்புறங்களில் இருந்து வாகனங்கள் மூலம் பெண் பணியாளர்கள் தீப்பெட்டி ஆலை, நெசவு ஆலை உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஏற்றிச் செல்லப்படுகின்றனர். மீண்டும் மாலையில் அவர்கள் வசிக்கும் பகுதியில் கொண்டு வந்து இறக்கி விடுகின்றனர். இப்பணியின் மூலம் கிடைக்கும் வருமானம், அவரது குடும்பம் பட்டினி கிடக்காமல் காக்க உதவுகிறது. அவரவரின் தகுதி, திறமை, வசதி வாய்ப்புகளுக்கேற்ப அவர்கள் பணிபுரியும் இடமும், வசதியும் வேறுபடுகின்றன என்பது உண்மைதான். இருந்தாலும், கிராமப்புறப் பெண்கள் சொந்த ஊரிலோ அல்லது சுற்றுப்புறப் பகுதியிலோதான் பணிபுரிய அதிகம் விரும்புகின்றனர் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊரு போல வருமா என்ற எண்ணமே கிராமப்புற பெண்களிடம் மேலோங்கி இருக்கிறது.
கிராமங்களில் அதிக அளவில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். அதுபோல, சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. இது தற்போதைய சூழலில் மாறி இருந்தாலும், பணிபுரியும் நேரம், ஆண்-பெண் பாலின பேதம், தொழிலில் போதிய பயிற்சியின்மை உள்ளிட்ட காரணங்களால் பெண்கள் பணிக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர் அல்லது பணி மறுக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. அதாவது, கிராமப்புறப் பெண்கள் பொதுவாக பணிக்குச் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும், 100 பெண்கள் இருந்தால், சுமார் 50 பேரே பணிக்குச் செல்கின்றனர்.
மேலும், கிராமப்புறப் பெண்கள் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தங்களது விவசாய நிலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனர் அல்லது கூலிகளாகப் பணிபுரிகின்றனர். மேலும், கிராமப்புறங்களில் பெண்களுக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அடுத்த ஓராண்டில் கையில் குழந்தை. இதுவும் அவர்கள் பணிக்குச் செல்வதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
பெண்கள் அதிகம் பணிபுரிய விரும்புவதில்லை என்பதைக் காட்டிலும், அவர்களுக்கு போதிய ஊக்கமும், பயிற்சியும், உகந்த சூழலையும் ஏற்படுத்தித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரையில், ஆண்-பெண் என இரு பாலினருக்கும் இடையே ஊதிய விகிதத்தில் அதிக வேறுபாடு காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தென்னாப்பிரிக்கா, பிரேசில், சிலி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இரு பாலினருக்கிடையேயான ஊதிய முரண்பாடு அதிகம் உள்ளது.
ஒரு பெண், ஒரு நாளில் தனது வீட்டில் சமையல் பணிக்கென சராசரியாக இரண்டு மணி நேரம் செலவிடுகிறார். அதே சமயத்தில் ஓர் ஆண், ஒரு நாளைக்கு வீட்டு வேலைகளுக்கென ஒரு மணி நேரமே செலவிடுகிறார். அதுபோல, ஓர் ஆண் ஒரு நாளைக்கு ஊதியமில்லா பணிகளுக்கென (குழந்தைகளைக் கவனிக்கும் பணிகள் உள்ளிட்டவை) சுமார் 50 நிமிடங்கள் செலவிடுகிறார். ஆனால், ஒரு பெண், தனது குடும்பத்துக்கென சுமார் 6 மணி நேரம் செலவிடுகிறார்.
மேலும், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைக் கவனிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே. அதாவது, 100 சதவிகிதத்தில் 22 சதவிகித ஆண்களே (கணவன்மார்கள்) குடும்பப் பொறுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனராம்.
இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகு அல்லது குழந்தைப் பேற்றுக்குப் பிறகு பணியிலிருந்து விலகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களைப் பொருத்தவரையில் 17 சதவிகிதப் பெண்கள் பெயரில் மட்டுமே நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கிராமப்புறங்களில் இருந்து 16 சதவிகிதம் பேர் நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். கிராமப்புறப் பெண்களுக்கு போதிய சுதந்திரம் அளிக்கப்படவில்லை. ஐந்து சதவிகித பெண்களுக்கே தங்களது கணவரைத் தேர்ந்தெடுக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சரி, அனைவரும் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தால், கிராமங்களில் வசிக்கப்போவது யார்? கிராமங்களில் உள்ள கோயில், சாவடி, மடங்களில் கூடி ஊர் விஷயங்களை விவாதிப்பது யார்? கோயில் திருவிழாக்களைக் கொண்டாடுவது யார்? கிராமக் கலாசாரம் பண்பாட்டை பேணிக் காப்பது யார்?
ஒவ்வொரு தாலுகாவிலும் மாதிரி கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த கிராமங்களில் படித்த, படிக்காத பெண்கள் எனப் பகுப்பாய்வு செய்து, அவரவர் திறமைக்கேற்ப பணிகளை வழங்கி, பொருளாதார நிலையில் உயர வழிவகுக்கலாம். கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் கிராமங்களில் போதிய வருவாயின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றலாம்.
நலத் திட்டங்கள் என்ற பெயரில் அரசுகள் திட்டங்கள் பல கொண்டு வந்தாலும், அவையெல்லாம் விழலுக்கு இழைத்த நீராகத்தான் போகின்றன. அரசுகள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் கிராமப்புறப் பொருளாதாரம் உயர, பெண்களின் வாழ்க்கை மலர வழிவகை காண வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.