பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தடை செய்ய வேண்டிய தருணம்!

சினிமாவும், அரசியலும் இல்லாமல் தமிழகம் இல்லை. பிவிசி ஃப்ளெக்ஸ் இல்லாமல் இவை இரண்டுமே இல்லை.

News image
Updated On :30 செப்டம்பர் 2018, 10:06 pm

சுப. உதயகுமாரன்

சினிமாவும், அரசியலும் இல்லாமல் தமிழகம் இல்லை. பிவிசி ஃப்ளெக்ஸ் இல்லாமல் இவை இரண்டுமே இல்லை. சினிமா, அரசியல் எனும் இரண்டு தளங்களிலும் ராட்சதப் பதாகைகளும், கட்-அவுட்டுகளும் அமைக்காமல், இங்கே யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 
ஒரு புதிய திரைப்படம் வெளியாகும் அன்று திரையரங்குகளை முற்றிலுமாக சுற்றிவளைத்து பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைகள் வைத்து, பாலபிஷேகம் பண்ணாமல் ரசிகர்களுக்கு நிம்மதி வருவதில்லை.   அதேபோல, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், தலைவர்கள் வருகை என எந்த நிகழ்வாக இருந்தாலும், பிவிசி ஃப்ளெக்ஸ் இல்லையென்றால், தமிழக அரசியல்வாதிகள் நிலைகுலைந்து போவார்கள். 
சினிமா, அரசியல் தாண்டி இப்போது தமிழ்ச் சமூகத்தின் அடிமட்டம் வரை பிவிசி ஃப்ளெக்ஸ் ஆழமாக ஊடுருவி நிற்கிறது. காதுகுத்து முதல் கல்யாணம் வரை எந்த நிகழ்வானாலும், மண்டபங்களைச் சுற்றி, வீடுகளைச் சுற்றி, வீதிகளை அடைத்து நூற்றுக்கணக்கான பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைகள் வைக்கிறார்கள். அவற்றில் அந்த விழா நாயகர், விழா நாயகி இவர்களோடு சினிமா நடிகர்களும், அரசியல் தலைவர்களும் நீக்கமற இடம் பெற்றிருப்பார்கள். இந்த அளவுக்கதிகமான முக்கியத்துவத்தால் பல தருணங்களில் பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்படுகிறது. அவற்றைக் கிழித்தாலோ, அப்புறப்படுத்தினாலோ வழக்குகள் பாயும், வம்புகள் வந்து சேரும் என்பது தமிழகத்திலுள்ள அனைவருக்கும் தெரியும். 
பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைகள் மறைமுகமாக மட்டுமல்ல, நேரடியாகவும் உயிர்களைக் குடிக்கின்றன. ஓராண்டுக்கு முன்னால் திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து தமிழகம் வந்திருந்த கோவையைச் சார்ந்த ரகுபதி கந்தசாமி எனும் இளைஞர் ஒருவர், பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகை ஒன்றினால் ஏற்பட்ட சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்குக் காரணமாக இருந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைகள் நடைபாதைகளை அடைத்து வைக்கப்பட்டாலும், சாலைப் போக்குவரத்துக்கு அவை தடையாக இருந்தாலும் கவலையே படாமல் வளைந்து நெளிந்து செல்வதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் நன்றாகவே பழக்கப்பட்டிருக்கிறது. 
இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் அதிமுக்கிய பொருளாகிவிட்ட பிவிசி ஃப்ளெக்ஸ் பற்றி தமிழக அரசும், தமிழ்க் குடிமைச் சமூகமும் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய தேவை இப்போது உருவாகியிருக்கிறது. கடந்த சூன் 25 அன்று 84-ஆம் எண் அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருட்களை 2019-ஆம் ஆண்டு சனவரி 1 முதல் தடை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறது. நெகிழிப் பைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சான்கள் (ஸ்ட்ரா), தட்டுகள், குவளைகள், கரண்டிகள், கொடிகள், தோரணங்கள், விரிப்புகள் (ஷீட்) என ஓராயிரம் நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வை அடைத்திருக்கின்றன. 
கண்கெட்ட பிறகென்றாலும் சூரிய நமஸ்காரம் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருப்பதை நாம் வரவேற்றாக வேண்டும். ஆனால், மேற்குறிப்பிட்ட அரசாணையில் தமிழக அரசு மிகவும் தந்திரமாக அனைத்து நெகிழிப் பொருட்களையும்விட மிகவும் ஆபத்தான, பிவிசி ஃப்ளெக்ஸ்சை கவனமாகத் தவிர்த்திருக்கிறது. பிவிசி என்பது "பாலி வினைல் குளோரைட்' என்பதன் சுருக்கம்தான். நிலையானத் தன்மையற்ற இதனோடு ஈயம், காட்மியம் போன்ற கடின உலோகங்களைச் சேர்த்தால்தான், பயனுள்ள பொருட்களை தயாரிக்க முடியும். கடினமான பிவிசி பொருட்களை "பிவிசி ரிஜிட்' என்றும், நெகிழ்வானப் பொருட்களை "பிவிசி ஃப்ளெக்ஸ்' என்றும் அழைக்கிறோம். பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைச் சீலையும் ஒரு நெகிழிப் பொருள்தான். 
பிவிசி ஃப்ளெக்ஸ் தயாரிப்பில் நாற்பது விழுக்காடு குளோரைடு பயன்படுத்தப்படுகிறது. எனவே பிவிசி ஃப்ளெக்ஸ் மக்கும் தன்மை கொண்டதல்ல. இதை மறுசுழற்சி செய்யவும் முடியாது. எனவேதான் இதனை எரிக்கிறோம், அல்லது மண்ணுக்குள் போட்டுப் புதைக்கிறோம். அப்படி சூடாக்கப்படும்போது அல்லது எரிக்கப்படும்போது, அது நச்சுத்தன்மைமிக்க வாயுக்களை வெளியிடுகிறது. புற்றுநோயை உருவாக்கும் டயாக்சின், ஃபுரான்ஸ், சல்ஃபேட், நைட்ரேட் போன்ற நச்சுவாயுக்களை உமிழ்கிறது. காற்றைவிட கனமான இந்த மாசுமிக்க வாயுக்கள் தாங்கள் உமிழப்படும் இடத்தில் ஒரு போர்வைபோல படிந்து பிராணவாயுவை உட்புக விடாமல் செய்கின்றன. 
நெகிழிச் சாலைகள் போடும்போதும் பிவிசி ஃப்ளெக்ûஸப் பயன்படுத்த முடியாது. அதற்குக் காரணம், சூடாக்கப்பட்டவுடன் அது விஷவாயுக்களை உமிழும். பிவிசி ஃப்ளெக்ûஸ புதைத்தால் அதன் விஷப்பொருள்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்திலும், நிலத்தடி நீரிலும் கலந்து மிக மோசமாக மாசுபடுத்துகின்றன. அதேபோல, அதைப் பொடித்து தூளாக்கவும் முடியாது. காரணம், அந்தத் துகள்கள் காற்றில் கலந்தால் மனிதர்களும் விலங்குகளும் பெருமளவில் பாதிக்கப்படுவோம்.   பிவிசி ஃப்ளெக்ஸ் தயாரிக்கப்படும்போதும், அழிக்கப்படும்போதும் உருவாகும் மிகவும் விஷத்தன்மை கொண்ட வாயுக்கள் புற்றுநோய், சுரப்பி (ஹார்மோன்) குழறுபடிகள், மனிதர்களிலும் விலங்குகளிலும் இனப்பெருக்கக் குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி அழிப்பு என பல்வேறு பிரச்னைகளை எழச் செய்கின்றன. மலட்டுத்தன்மை, கர்ப்பக் கோளாறுகள், சர்க்கரை வியாதி, நுரையீரல் பிரச்னைகள், தோல் நோய்கள் என பற்பல வியாதிகள் மனிதர்களுக்கு எழுகின்றன. 
பிவிசி ஃப்ளெக்ஸ் வெளியிடும் விஷ வாயுக்களை குழந்தைகள் மோந்தால் அறிவுக் குறைபாடுகள், நரம்பு மண்டலக் குறைபாடுகள், செயல்பாட்டுக் குறைகள், பாலியல் மாற்றங்கள் என ஏராளமான கோளாறுகள் எழுகின்றன. "தரையில் வைத்தால் எறும்பு கடிக்கிறது, தலையில் வைத்தால் பேன் கடிக்கிறது' என்பது போல, பிவிசி ஃப்ளெக்ûஸ எரித்தாலும் பிரச்சினை, புதைத்தாலும் பிரச்னை. எனவேதான் இந்த வகை நெகிழிகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்திருக்கிறார்கள். சீனாவில் பிவிசி ஃப்ளெக்ஸ் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டாலும், அந்த நாட்டில் அதைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்ய தாராளமாய் அனுமதிக்கிறார்கள். எனவேதான் சீன பிவிசி ஃப்ளெக்ஸ் இந்தியச் சந்தையை நிரப்பிக்கொண்டிருக்கிறது. 
பிவிசி ஃப்ளெக்ஸ் இத்தனை ஆபத்தானது என்றுணர்ந்த இந்தியாவின் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதாகைகள், பொதியும் பொருட்கள் போன்றவற்றில் பிவிசி ஃப்ளெக்ஸ்சை ஆறு மாதங்களுக்குள் படிப்படியாக நிறுத்திவிடும்படி அனைத்து இந்திய மாநிலங்களையும் பணித்தது. பின்னர் மறுஆய்வு மனு ஒன்றின் மீது தீர்ப்பு சொன்ன பசுமைத் தீர்ப்பாயம், 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சூழல் அமைச்சகத்தைக் கடுமையாகக் கடிந்துகொண்டது. "ஆறு மாதங்களுக்குள் நிறுத்திவிடுங்கள் என்று சொன்ன பிறகும், ஓராண்டு கடந்த நிலையிலும் எதுவும் செய்யாமலிருக்கிறீர்களே' என்று கோபித்துக்கொண்ட தீர்ப்பாயம், இரண்டு மாத காலக்கெடு விதித்தது. 
சனவரி 1 அன்று நடைமுறைக்கு வரவிருக்கும் நெகிழிப் பொருட்கள் மீதானத் தடைக்கு எதிராக நெகிழி உற்பத்தியாளர்கள் சங்கம் களத்தில் இறங்கியிருக்கிறது. "இரண்டு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மூன்று லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை இழப்பார்கள்', "ரூ. 1,500 கோடி ஜி.எஸ்.டி. வரியிழப்பு நேரும்', "தமிழகம் அண்டை மாநில நெகிழி நிறுவனங்களின் சந்தையாகிவிடும்' என்றெல்லாம் பயம்காட்டி நாடு முழுமைக்கும் நடுவண் அரசு ஒரு கொள்கைத்திட்டம் கொண்டுவரும் வரை தமிழக அரசு நெகிழித் தடையை தள்ளிப்போட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். 
இந்த பிவிசி ஃப்ளெக்ஸ் பதாகைகளுக்கு எதிராக பல அமைப்புக்களும் போராளிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தடை செய்யப்படும் நெகிழிப் பொருட்களின் பட்டியலில் பிவிசி ஃப்ளெக்ûஸயும் இணைத்து புதிய அரசானை வெயிட வேண்டுமென்று, தொடர்புடைய அதிகாரிகளுக்கு சூழலியல் ஆர்வலர்கள் முறைப்படி விண்ணப்பித்திருக்கிறோம். பிவிசி ஃப்ளெக்ஸýக்கு பதிலாக பருத்தி (காட்டன்) அல்லது பாலித்தீன் போன்ற சூழலைக் கெடுக்காத பொருட்களை பயன்படுத்தலாம். பிவிசி ஃப்ளெக்ஸ் தடை என்பது முடியாத வித்தை அல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிவிசி ஃப்ளெக்ஸில் வெறும் பத்து விழுக்காடு மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. உள்நாட்டு உற்பத்தியை உடனடியாக நிறுத்தி, சீன இறக்குமதியை முற்றிலும் தடை செய்து, பிவிசி ஃப்ளெக்ஸ் தடையை மீறும் பண வெறியர்களை, அரசியல் கட்சிகளை கடுமையாகத் தண்டித்தால் இந்த நெகிழி அரக்கனிடமிருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும் என்பது உறுதி. கர்நாடக, சத்தீஸ்கர் அரசுகள் பிவிசி ஃப்ளெக்ஸ் பொருள்கள் பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தெளிவாகத் தடை விதித்துவிட்டன. தமிழக அரசும் பிவிசி ஃப்ளெக்ûஸ உடனடியாகத் தடை செய்ய 
வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளர்:
தலைவர், பச்சைத் தமிழகம் கட்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.