தொடர்ந்து தேவைப்படும் நம்மாழ்வார்!

தென் தமிழகத்துக்கு இனி வழக்கமான மழை கிடையாது, அவ்வப்போது புயல்கள் வரும், அதனால் கிடைக்கும் மழைதான் நமக்கு என்று எச்சரிக்கைவிடுத்துச் சென்றவர் இயற்கை

தென் தமிழகத்துக்கு இனி வழக்கமான மழை கிடையாது, அவ்வப்போது புயல்கள் வரும், அதனால் கிடைக்கும் மழைதான் நமக்கு என்று எச்சரிக்கைவிடுத்துச் சென்றவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். அவர் சொன்னது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
தஞ்சை மாவட்டம், இளங்காட்டில் 1938, ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்த நம்மாழ்வார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் ( பிஎஸ்ஸி) முடித்து, 1960ஆம் ஆண்டில் கோவில்பட்டி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். மிகக் குறைவான காலம் மட்டுமே அவரால் அரசுப் பணியில் இருக்க முடிந்தது.
மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களுக்காக எனது உழைப்பை வீணாக்க இயலாது என்று கூறி, அரசுப் பணியைத் துறந்த அவர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஈரோடு முதலிய மாவட்டங்களில் தங்கி நிறைய இயற்கை வேளாண் பண்ணைகளையும், சமூகக் காடுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். 
2005ஆம் ஆண்டில், சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தின் கிராமங்களில் தங்கி, சுனாமியின் தாக்கத்தால் உவர் நிலமாக மாறிப்போன விளை நிலங்களை, ஆறே மாதங்களில் நல்ல நிலங்களாக மாற்றிக் காட்டியவர்.
அதன்பிறகு, இயற்கை ஆர்வலர்களின் உதவியுடன் கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில் அவர் உருவாக்கிய கனவுப் பல்கலைக்கழகம்தான் வானகம்  நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம். ஏறத்தாழ 35 ஏக்கர் கொண்ட வறண்ட நிலத்தில் குடிசைகளோடு அவர் தங்கினார்.
கடுமையான சோதனைகளுடன் இன்றைக்கும் ஆண்டுக்கு ஆயிரம் இளைஞர்களுக்கு விவசாயப் பயிற்சியளிக்கும் மையமாகச் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு மட்டுமல்ல, இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தத் தமிழ் மண்ணில் யாரொருவர் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவாரோ, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாரோ அவருக்கு ஆதர்சமாக இருப்பார் நம்மாழ்வார். அத்தனைத் தீவிரமான போராளியாகக் கடைசி காலத்தில் அவர் மாறிப்போனார்.
நஞ்சில்லா உணவு, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி இவைதான் வானகத்தின் கோட்பாடுகள். தன்னுடைய கடைசி காலத்தில் இம் மூன்றுக்காகத்தான் தீவிரமாகப் பேசி வந்தார்.
மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு எதிரான மிகப்பெரிய போர்க்களத்தை தஞ்சை மண்ணில் உருவாக்கினார். ஒரு லட்சம் விவசாயிகளை ஒரே இடத்தில் திரட்டும் பெரும் போராட்டத்துக்கான முன்னேற்பாடுகளை கிராமங்கள் தோறும் சென்று மேற்கொண்டு வந்தார்.
அப்போது அவருக்கு உடல் நலக் குறைவும் ஏற்பட்டது. அதனைப் பொருட்படுத்தாமல் காலை ஒரு கிராமம், மாலை ஒரு கிராமம் எனத் தொடர்ந்து மூச்சிறைக்கப் பேசினார். உடல் நலக் குறைவு தீவிரமாகியது. 2013, டிச. 30ஆம் தேதி நம்மாழ்வார் உயிர் பிரிந்தது. 
மறுநாள் 31ஆம் தேதி தஞ்சையிலுள்ள பெரிய கல்லூரி ஒன்றில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. புத்தாண்டு தினத்தில் அவர் மிகவும் நேசித்த வானத்தில் விதைக்கப்பட்டார்.
இப்போதும் நம்மாழ்வாரின் பிறந்த நாளிலும், விதைப்பட்ட நாளிலும் வானகத்தில் இயற்கை ஆர்வலர்கள் ஒன்று கூடுகிறார்கள். 6 மாதப் பயிற்சி, ஒரு மாதப் பயிற்சி, மூன்று நாள் பயிற்சி என இயற்கை வேளாண்மை தவறாமல் சொல்லித் தரப்படுகிறது.
உண்மையில் எல்லோரும் வியப்படையும் வகையில், எந்த நேரத்துக்கு வானகத்துக்குச் சென்றாலும் பொறியியல், தொழில்நுட்பவியல் படித்த இளைஞர்களை ஏராளம் காண முடியும். வானகத்தோடு நின்றுவிடாமல், தமிழகம் முழுவதும் நம்மாழ்வாரின் வாரிசுகள் களமிறங்கிப் பணியாற்றி வருகிறார்கள்.
இது கொஞ்சம்போல நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் கூட, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கவனிக்கும்போது, சற்றே அச்சம் உருவாகிறது. 
தினமும் மூன்று வேளையும் நாம் சாப்பிடும் உணவும், இடையிடையே நம்மையும் மீறி நம்முள் திணிக்கப்பட்ட நொறுக்குகளை விஷம் என்கிறார்கள். நம் வீட்டுக்குள் நுழைந்து நம்மை மதி மயக்கச் செய்யும் தொலைக்காட்சிகளை மீறி குழந்தைகளை நல்ல உணவை நோக்கித் திருப்புவது பெரும்பாடாகத்தான் இருக்கிறது. மீத்தேன் என்ற பெயரில் இல்லாவிட்டாலும் வெவ்வேறு பெயர்களில் புதுப்புது நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
மொத்த உழைப்பையும் உறிஞ்சிக் கொள்ளும் கல்வி முறைக்குள் சிக்கித் தவிக்கிறோம். மாற்றுக் கல்வி முறைகள் வந்தாலும் அவை மிகச்சிறிய முயற்சிகளாகத்தான் தென்படுகின்றன. நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்றுத்தான் மருத்துவமனைகளுக்குள் நுழைய வேண்டிய துயரம் தொடங்கி வெகுநாள்களாவிட்டது. 
நம்மாழ்வாரின் அடிப்படைகள் காதுகளில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருந்தாலும், நம்மையும் மீறி அபாயக்குரல் காதுகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க முடியவில்லை. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு என மிக எளிதில் அவர் சொன்ன விவசாயத் தொழில்நுட்பம் முழுமையாகப் பரவலாக்கப்பட வேண்டும்.
தாகமெடுத்து தண்ணீர் குடி, பசித்துச் சாப்பிடு, உடல் ஓய்வை விரும்பினால் ஓய்வுக்குப் போ என்ற முழக்கங்கள் நோய் அண்டாத மானுடத்தை உருவாக்கும் என்றவர் நம்மாழ்வார்.
வெறுமனே பிரசாரங்களை, களப்பணிகளைத் தாண்டி, களப் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களைப் பயிற்றுவித்துப் போனவர் நம்மாழ்வார். அவர் இன்றைக்கும் தேவைப்படுகிறார், அநேகமாக என்றைக்கும் தேவைப்படுவார்.
வெறுமனே நெஞ்சிலேந்தி நினைவு நாளைக் கொண்டாடிப் பயனில்லை. அன்றாடச் செயல்பாடுகளில் ஒவ்வொரு மணித்துளியிலும் நம்மாழ்வாரின் மாதிரிகள் நம்முள் கலக்க வேண்டும். அதுதான் அவரது பணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணியாகும்.
இயற்கைக்குத் திரும்புதல் என்பது குகைகளில் வாழச் சொல்லுதலாகப் பார்க்கும் மனப்பான்மையும் ஆங்காங்கே பரப்பப்பட்டு வருகிறது. இந்தப் பொய்யை உடைத்தெறிய வேண்டும். அறிவியல் மக்களின் வாழ்க்கையை ஒரு போதும் சிதைக்கக் கூடாது, வளர்ச்சி மனிதர்களுக்கானது என்பதையும் மனதில் ஏந்திச் சிந்தித்து அசைபோட வேண்டும், முடிவெடுக்க வேண்டும். களம் காண வேண்டும்.

டிச. 30ஆம் தேதி நம்மாழ்வாரின் நினைவு நாள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com