நாட்டைக் காக்கும் குரு பரம்பரை...

இந்தியாவுக்கான பணியில் எதிர்காலத்தில் உனக்கு மகத்தான பங்கு ஒன்று உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்...
நாட்டைக் காக்கும் குரு பரம்பரை...

இந்தியாவுக்கான பணியில் எதிர்காலத்தில் உனக்கு மகத்தான பங்கு ஒன்று உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்... இந்தியப் பெண்களிடையே வேலை செய்வதற்கு இப்போது வேண்டியது ஒரு பெண் சிங்கமே... ஆனால், இந்தியாவில் பணியாற்றும்போது நீ பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... இவை அனைத்தையும் மீறி இந்த வேலையை மேற்கொள்ள உனக்குத் துணிவு இருந்தால், உன்னை நூறு தடவை வரவேற்கிறேன்.' 
}இது சுவாமி விவேகானந்தர் தனது அயர்லாந்து சிஷ்யை மார்கரெட் நோபிளுக்கு எழுதிய கடித வரிகள்.
1893 சிகாகோ சர்வசமயப் பேரவை சொற்பொழிவுக்குப் பிறகு விவேகானந்தர் லண்டனில் சில மாதங்கள் வேதாந்தப் பிரசாரம் செய்தபோது, அவருக்கு சீடர் ஆனவர் மார்கரெட். அயர்லாந்துப் பெண்ணான அவர், விவேகானந்தர் உபதேசங்களால் கவரப்பட்டு, இந்தியா வர விரும்பினார். அப்போது அவருக்கு விவேகானந்தர் எழுதிய கடிதம்தான் இது.
இந்தக் கடிதம் மார்கரெட்டின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது; அவர் இந்தியா வரத் துணிந்தார். அயர்லாந்தில் கிறிஸ்தவப் பாதிரியாரின் மகளாக 1867}இல் பிறந்த அவர், தனது குடும்பம், செல்வம், நாடு அனைத்தையும் துறந்து இந்தியா வந்தார். அவர், இந்திய மண்ணை மிதித்த நாள், 1898, ஜனவரி 28. விவேகானந்தரால் "சகோதரி நிவேதிதை' என்று நாமம் சூட்டப்பட்டார். இந்த ஆண்டு சகோதரி நிவேதிதையின் 150}வது பிறந்த தின ஆண்டாக நாடு நன்றியுடன் கொண்டாடுகிறது. 
தனது 44 ஆண்டு கால வாழ்வில் 13 ஆண்டுகள் இந்தியாவின் நலனுக்காகவே வாழ்ந்த பெருந்தகை அவர். சொல்லப்போனால், இந்தியாவில் பிறக்காத, இந்தியர்களைவிட இந்நாட்டை அதிகமாக நேசித்த மகத்தான பெண் அவர். அதனால்தான் அவரை "எதிர்கால இந்தியாவின் பிள்ளைகளுக்கு நீயே அன்னையாகவும், சேவகியாகவும், தோழியாகவும் விளங்குவாயாக' என்று சுவாமி விவேகானந்தர் ஆசீர்வதித்தார்; மகரிஷி அரவிந்தர் அவரை "அக்னிக்கொழுந்து' என்று வர்ணித்தார்.
இந்தியா வந்த நிவேதிதை, துவக்கத்தில் கொல்கத்தாவில் பெண்களுக்கான ஒரு பள்ளியை நிறுவினார். அங்கு பெண்களுக்கு பண்பாட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியையும் கற்பித்தார். முதன்முதலில் அங்குதான் வந்தே மாதரம் பாடல் பிரார்த்தனை கீதமாகப் பாடப்பட்டது. வஜ்ராயுதம் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியையும் அவர் 1905}இல் அறிமுகப்படுத்தினார்.
1899}இல் கொல்கத்தாவை பிளேக் நோய் தாக்கியது. தொற்றுநோய்க்கு பயந்து பலரும் நகரைவிட்டு வெளியேறியபோது, நகரத் தெருக்களில் சுகாதாரப் பணிகளிலும் மருத்துவப் பணிகளிலும் ஈடுபட்டார்.
விவேகானந்தர் நிறுவிய ராமகிருஷ்ண மடத்தின் ஆன்மிகப் பணிகளிலும் சகோதரி நிவேதிதை தொடர்ந்து ஈடுபாடு காட்டிவந்தார். 1902}இல் சுவாமிஜி மறைந்த பிறகு, அவரது கவனம் தேச விழிப்புணர்வுப் பணிகளில் திரும்பியது. இந்திய விடுதலைப் போரில் தொடர்பு கொண்டிருந்த பாலகங்காதர திலகர், சுரேந்திரநாத் பானர்ஜி, ரவீந்திரநாத் தாகூர், அரவிந்த கோஷ், பிபின் சந்திர பால், மகாகவி பாரதி உள்ளிட்ட பலரும் கொல்கத்தா வந்து சகோதரி நிவேதிதையிடம் ஆலோசனை பெற்றனர்.
அடிப்படையில் அவரும் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிவந்த அயர்லாந்து தேசக் குடிமகள் என்பதால், அவரால் இந்தியர்களின் விடுதலை வேட்கையுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிந்தது. அனுசீலன் சமிதி போன்ற புரட்சிகர அமைப்புகளுக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார். சுவாமி விவேகானந்தரின் தம்பியும் புரட்சியாளருமான பூபேந்திர பாலரின் போராட்டங்களுக்கும் அவர் ஒத்துழைப்பு நல்கினார்.
ஆன்மிக நாட்டத்தில் ஈடுபட வேண்டிய துறவி இவ்வாறு அரசியல் இயக்கங்களில் தொடர்பு கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்தபோது, "மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதே ஆன்மிகம்' என்றார் அவர்!
ராமகிருஷ்ணரின் தர்மபத்தினியான அன்னை சாரதா தேவி அவரை தனது செல்ல மகளாகவே நடத்தினார். தேசப் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு விவேகானந்தர் பணித்தார். அதை ஏற்று அவர் நாடு முழுவதும் பயணித்து தேசபக்திப் பிரசாரம் செய்தார். 
நிவேதிதையின் சொற்பொழிவுகள் அந்நாட்களில் விடுதலைக் கனலைப் பரப்புபவையாக விளங்கின. அதனால் அவர் ஆங்கிலேய அரசின் கோபத்துக்கு உள்ளானார்.
மகாகவி பாரதி 1906}இல் கொல்கத்தாவில் அவரை நேரில் சந்தித்தபோதுதான், பெண்களை சம உரிமையுடன் நடத்த வேண்டும் என்ற உபதேசத்தையும், "சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் அடிமை நிலை மாறாதவரை நாட்டின் அடிமைத்தளையை மாற்ற முடியாது' என்ற சத்திய தரிசனத்தையும் பெற்றார். அவர் சகோதரி நிவேதிதையை தனது குருவாகக் கொண்டார்.
"ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குரு' என்று கூறி, 1908}இல் தனது கவிதை நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் பாரதி. "அருளுக்கு நிவேதனமாய்' என்று துவங்கும் மகாகவி பாரதியின் பாடல், அவரது குருவணக்கமாகும். தாவரங்களுக்கும் உயிருண்டு என்று நிரூபித்த இயற்பியல் விஞ்ஞானி ஜெகதீச சந்திர போஸ் தனது கண்டுபிடிப்புகளுக்கு அறிவுசார் காப்புரிமை பெறக் காரணமாக இருந்தவர் நிவேதிதை. போஸ் ஆய்வு நிறுவனம் துவக்கப்படவும் தூண்டுகோலாக இருந்தார்.
இவ்வாறு தனது வாழ்வையே இந்தியாவின் எழுச்சிக்காக தியாகம் செய்த சகோதரி நிவேதிதை, உடல்நலக் குறைவால் 1911 அக்டோபர் 13}இல் டார்ஜீலிங்கில் 44}ஆம் வயதில் மறைந்தார்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்த அந்த மாது, இந்தியா வந்து, நமது நாட்டு நலனுக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்து, சந்தனம் போல தன்னைத் தேய்த்து நறுமணம் வழங்கி, இந்நாட்டின் காற்றில் கலந்தார். நமது நாட்டுப் பெண்களுக்கு அவர் என்றும் முன்னோடி, வழிகாட்டி.
வங்கம் தந்த ஆன்மிக சிங்கமான சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையாக இந்தியா வந்தார் நிவேதிதை. அவரது சீடராகத் தன்னை அறிவித்துக் கொண்டார் தமிழகத்தின் மகாகவி பாரதி. விடுதலைப் போர் காலத்தில் திகழ்ந்த இந்த குரு பரம்பரைதான் இந்தியாவின் ஆணிவேராக இன்றும் நாட்டைக் காத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com