கைக்குள் உலகம்... செல்லிடப்பேசியில் உறவு!

தூத்துக்குடி மாவட்டம், தனசேகரன் நகர் பகுதியின் பிரதான சாலை.

தூத்துக்குடி மாவட்டம், தனசேகரன் நகர் பகுதியின் பிரதான சாலை. குப்பைத்தொட்டியில் ஒரு ஐம்பது வயது தாண்டிய பெண் சடலம். சிப்காட் காவல் நிலையத்தினர் விசாரித்ததில் முத்து லட்சுமணன் என்கிற ஏழை அர்ச்சகரின் தாயார் அவர் என்று தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் பசியோடும் நோயோடும் அந்தத் தாய் இறந்திருக்கலாம் என்று சொன்னார்கள். 
அந்த அம்மையாரின் ஒரே மகன் முத்து லட்சுமணன், காப்பாற்றப் போதிய வருமானம் இல்லாததால், தந்தை நாராயண ஸ்வாமியை சென்னை மயிலையில் ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். உடல் நலன் சரியில்லாத தாய்க்காக ஒரு ஆண்டில் லட்ச ரூபாய் வரை கையைக் கட்டி வாயைக் கட்டி மருத்துவம் பார்த்துள்ளார். 
பத்து கோயில்களில் பூஜை செய்தாலும் மாத வருமானம் ரூபாய் மூவாயிரம்கூட எட்டாதாம். தட்டுக் காசும் சம்பளமும் அவ்வளவே. இதில் பூஜை சாமான் நைவேத்யம் கைக்காசு. நைவேத்தியத்தையே உணவாகக் கொள்ள வேண்டும். வறுமையும் நோயும் முற்றிய நிலையில் தாயார் இறந்து விட்டதை கோயில் வேலை முடிந்து வீடு திரும்பிப் பார்த்தவர் பெருகி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தாயைக் குளிப்பாட்டி சடலத்திற்கு சேலை அணிவித்துப் பொட்டுவைத்து சடங்குகள் செய்து பிரேத ஸம்ஸ்காரத்திற்கு வழியில்லாமல் சுற்றத்தாரும் ஆதரவான நண்பர்களும் இல்லாத நிலையில் வீட்டிற்கருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடத்தி விட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார். 
மறுநாள் நடைப் பயிற்சிக்குச் சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீஸிடம் தெரிவித்துள்ளனர். போலீஸாரும் பிராமண சமூகமும் உடலை தகனம் செய்ய முன்வந்து தூத்துக்குடி மையவாடியில் சடலம் எரியூட்டப்பட்டது.
இங்கே பல அவசரக் கேள்விகள்,  ஞாபகங்கள். முத்து லட்சுமணன் எங்கே ஆளே இல்லாத தீவிலா வசிக்கிறார்? தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத, பசித்த ஒரு நோயாளிக்கு பால் வார்க்காத அண்டை அயலார்கூட இருக்கிறார்களா? அம்மா உணவகத்தில் கூட ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைக்கிறதே. இந்த மாதிரியான செய்திகள் ஒன்று அல்ல, இரண்டல்ல, எப்போதாவது என்றுகூட அல்ல. இப்போது அடிக்கடி வர ஆரம்பித்து விட்டன. 
பல வாரங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று திரும்பிய மகன் ஒருவன் தன் வயதான தாயாரைக் காண வந்து, பூட்டிய கதவின் பின் நீண்ட நேரம் பதில் இல்லாததால் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இறந்த தாயின் சடலத்தை எலும்புக்கூடாகப் பார்த்ததாக செய்தி படித்தோமே, அதுவும் இந்த ரகம்தானா? பக்கத்து குடியிருப்பு அருகில் ஏதோ பிண நாற்றம் மாதிரி மூச்சை முட்டுகிறதே, செய்தித்தாள் எடுக்கப்படாமல் நீண்ட நாள்கள் கிடக்கிறதே , பாக்கெட் பால் பல நாள்கள் எடுக்கப்படாமல் கெட்டுப்போய் அருவருப்பான நாற்றம் வருகிறதே என்றெல்லாம் கூடப் பாராமலா சில அடிகள் தள்ளி மனிதர்கள் வசிப்பார்கள்? 
ஒரு விஷயம் உண்மைதான். ஏதோ கண்டங்கள் தாவும் முக நூலும், சுட்டுரையும் மற்றைய தொலைத்தொடர்பு வசதிகளும் பெருகி விட்டனவே தவிர, நேரடியாக மனிதர்களிடையே அளவளாவல் இல்லாமல் போய் விட்டது. ஜினோபோபியா என்கிற அந்நியர் அச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. மற்றவர்களை காட்டுமிராண்டிகளாக நினைக்கும் குணம் எல்லோருக்கும் வந்து விட்டதா? 
தவறு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் முக்கிய தவறு ஊடகங்களிடம் இருக்கிறது. வேண்டுமானால் கீழ்க்காணும் நல்ல விஷயங்களை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். 
புது தில்லி அருகிலுள்ள காஜியாபாதில் ஒரு வங்கி மேலாளரிடம், முன்னெ லால் சர்மா என்பவர் மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்டார். வங்கிக்கு வர வேண்டிய பணம் வந்து சேராததால் பின்னர் வருமாறு மேலாளர் சொன்னார். ஆனால் அதற்குள் சர்மா இறந்தார். முன்னெ லாலின் பேத்தி அடுத்து வந்து ஷர்மாவின் ஈமச் சடங்கு செய்யப் பணம் கேட்டார். அப்போதும் பணம் வரவில்லை. ஆனாலும் அதைச் சொல்லாமல் தனக்கு நன்கு தெரிந்த வாடிக்கையாளரிடமிருந்து ரூ.10,000 கடன் பெற்று தானும் ரூ.7,000 போட்டு 17,000 ரூபாயாக அவளுக்கு கொடுத்து மேலாளர் அனுப்பினார்.
இரண்டாவது செய்தி. கஜா புயலில் மரம் விழுந்து நடராஜன் என்பவர் இறந்தார். அவர் சடங்கிற்குப் பணம் இல்லாமல் அவர் மகன் சூர்யாவை ரூ.6,000-த்துக்கு கொத்தடிமையாக விற்றனர். விற்கப்பட்ட சூர்யா தஞ்சையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். அவனை தஞ்சைக் குழந்தை உதவி லைன் நண்பர்கள் எதேச்சையாகப் பார்த்து மீட்டனர்.
ஸ்ரீதர் என்பவர் சென்னை திருவான்மியூரில் காஞ்சி மஹா பெரியவர் சொற்படி அநாதை பிரேத கைங்கர்யம் டிரஸ்ட் என்று நடத்தி வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவருடன் இலவச சேவை புரிந்து சென்னை அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை போன்ற இடங்களிலிருந்து யாரும் தேடாமல் நீண்ட நாள்கள் கிடங்கில் கிடக்கும் சடலங்களைக் காவல் துறையின் அனுமதி பெற்று புதைத்தும் எரித்தும் வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 100 சடலங்களுக்கு இறுதிச் சடங்குகளை அவர்கள் செய்துள்ளனர். பொருளாதாரத்தில் மலிந்தவர்களுக்காக வருடாந்தரத் திதியையும் தேவைப்பட்டால் ஸ்ரீதர் செய்கிறார். (செல்லிடப்பேசி 98407 44400).
இந்த மேற்படி விஷயத்தை ஜீவாத்மா கைங்கர்ய சபை என்ற பெயரில் காஞ்சி மஹாஸ்வாமிகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இறந்தவர் தகனம் தவிர சிறைக் கைதிகள் குழந்தைகளுக்கு கல்வி உதவி, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி, பிரார்த்தனை என்று அவர்கள் பல்வேறு சமூகப் பணிகள் செய்து வருகின்றனர்.
ஒரு முத்து லட்சுமணன் தாயார் குப்பைத்தொட்டியில் அநாதையாகக் கிடந்ததைப் புகைப்படம் போட்டுப் பிரமாதமாக எழுதும் ஊடகங்கள், மேற்சொன்ன நல்ல விஷயங்களையும் பெரிதாகப் போட்டு பாராட்டி எழுத வேண்டும். சோம்பிக் கிடைக்கும் சமூக உணர்வுக்கு இது சாட்டையடியாக அமையும். 
அதற்கு முன்னால் சமூக உணர்வுகளை அன்றாடம் உசுப்பிக் கொள்ள, அவை காலாவதி ஆகாமல் இருக்க மெகா சீரியல்,  சினிமா,  கிரிக்கெட் விவகாரம், அரசியல் கிசு கிசு எல்லாவற்றுக்கும் இடையே கொஞ்சம் பக்கத்து வீடு, எதிர் வீடு, வாட்ச்மேன், பேப்பர்காரனுடன் கொஞ்சம் அளவளாவுங்கள். செல்லிடப்பேசியில் உறவை அடக்கிவிடாதீர்கள். கைக்குள் உலகம் அடங்கலாம். ஆனால், உணர்வுகள் அடங்கிவிடக் கூடாது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com