முடிவுக்கு வருமா வாரிசு அரசியல்?

அரசியல் எனும்  சொல் மிகவும் வலிமையானது, சிறப்புமிக்கது. குடியாட்சிக்கு முன்னர், பல நாடுகளில் மன்னராட்சி நடைபெற்றது.
Updated on
2 min read


அரசியல் எனும்  சொல் மிகவும் வலிமையானது, சிறப்புமிக்கது. குடியாட்சிக்கு முன்னர், பல நாடுகளில் மன்னராட்சி நடைபெற்றது. அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத்தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். மன்னராட்சி ஒழிந்து, உலகம் முழுவதும் ஜனநாயகம் தழைத்து மக்களாட்சி அமைந்த பின்னர், எல்லோரும் இந்நாட்டின் மன்னர் எனும் நிலை உருவானது. அதனால்தான் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்த காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்றோர் அரசியலில் மிக உயர்ந்த நிலையை அடைய முடிந்தது. இவை எல்லாம் 60 ஆண்டுகளுக்கு முன்னர்.
இப்போதோ தலைவர்களின் வாரிசுகளின் வரவால், நவீன மன்னராட்சி' என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் திறமையும், லட்சிய நோக்கும், நேர்மையும், ஒழுக்கமும் கொண்ட மிகச் சாதாரண மனிதர்கள்கூட சாம்ராஜ்யங்களை எதிர்க்கலாம் அல்லது ஏற்படுத்தலாம் என்னும் நிலை இருந்தது.
ஆனால், இன்றோ பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியலில் கோலோச்ச முடியும் என்னும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலும், பணம் இருந்தாலும் இரண்டாம் நிலைத் தலைவர்களாக மட்டுமே விளங்க முடியும். மேலும், முதல் நிலைத் தலைவர்களின் மனதிலும், அந்தத் தலைவர்களின் குடும்பத்தினர் மனதிலும், அவர்தம் வாரிசுகளின் மனதிலும் இடம்பெற்றால் மட்டுமே இரண்டாம் நிலைத் தலைவர்களாக நிலைபெற முடியும் என்பதே நிதர்சனம்.
காஷ்மீர் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா, அவரது மகன் பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா, உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் தொடங்கி தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி, பா.ம.க.வின் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, தேமுதிகவின் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன், அதிமுகவின் ஜெயக்குமார், அவரது மகன் ஜெயவர்தன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என வாரிசு அரசியலின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  வாரிசு அரசியலுக்கு முன்னோடியாகவும் சிகரம் வைத்ததைப் போன்று செயல்படும் இரண்டு குடும்பங்கள் நாட்டில் உள்ளன. வடக்கில் நேரு குடும்பம், தெற்கில் கருணாநிதி குடும்பம்.
மோதிலால் நேரு காலத்திலேயே ஜவாஹர்லால் நேரு, நேரு காலத்திலேயே அவரது மகள் இந்திரா, இந்திரா காலத்திலேயே சஞ்சய் காந்தி, இந்திராவுக்குப் பிறகு ராஜீவ், ராஜீவ் காந்திக்குப் பின் சோனியா, சோனியா காலத்திலேயே ராகுல், தற்போது பிரியங்கா என வாழையடி வாழையாகத் தொடர்கிறது வாரிசு அரசியல். தங்கள் குடும்பத்தினரை விட்டால் காங்கிரஸை வழி நடத்தும் தகுதி எவருக்கும் இல்லை என்று காங்கிரஸ்காரர்களை மட்டுமல்ல இந்திய மக்களையும் நம்ப வைத்துவிட்டது நேரு குடும்பம்.
கருணாநிதி காலத்திலேயே தில்லியில் தமது மருமகன் முரசொலி மாறன், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாரிசுகளாக அடையாளப்படுத்தப்பட்டனர். 
முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர் திடீரென்று தயாநிதி மாறனும், கருணாநிதியின் மகள் கனிமொழியும், மகன் மு.க.அழகிரியும் தில்லியில் முக்கியச் சக்திகளாக விளங்கினர்.
தற்போது ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு ஏற்ற பின்னர், உதயநிதியை மெதுவாகவும் நேரடியாகவும் முன்னிறுத்தத் தொடங்கி உள்ளனர் தி.மு.க.வினர். மறைமுகமாக ஸ்டாலினின் மரு
மகன் சபரீசன் கட்சியை இயக்கி வருகிறார்.  இன்னும் சொல்லப் போனால், எவ்வளவுதான் திறமையிருந்தாலும், தகுதி இருந்தாலும், ஆற்றல் இருந்தாலும், அரசியல் அறிவு இருந்தாலும் தலைவர்களின் வாரிசுகளாகப் பிறக்காவிட்டால் அரசியலில் ஜொலிக்க முடியாது என்பதே இன்றைய இந்தியாவின் அரசியல் நிலை.
1967-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ஒரு மாணவர் மூலம் முன்னாள் முதல்வர் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்தார். காமராஜரிடம், மூன்று முறை முதல்வராக இருந்த உங்களை, இந்தியாவின் இரண்டு பிரதமர்களைத் தேர்வு செய்யும் அளவுக்குத் தகுதி வாய்ந்த உங்களை,  ஒரு மாணவர் தோற்கடித்து விட்டாரே' எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குக் காமராஜர், ஜனநாயகம் வென்றது' என்றார்.  புரியவில்லையே' எனச் செய்தியாளர்கள் கூறியபோது,  ஆம். நீங்கள் சொல்லும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த என்னை ஒரு சாதாரண மாணவர் வெல்ல முடிகிறது என்றால், ஜனநாயகம் வென்றது என்றுதானே அர்த்தம்?' என்றார்.
இதே போன்று ஓர் அம்பாசிடர் காரும், துண்டறிக்கைகளும் மட்டுமே வைத்துக் கொண்டு 1957-ஆம் ஆண்டு தமக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத குளித்தலை தொகுதியில் கருணாநிதி வென்றார். 
1962-இல் தஞ்சாவூரில் பெரும் பணக்காரராகத் திகழ்ந்த பரிசுத்த நாடாரை எதிர்த்து போட்டியிட்டு,  முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வெற்றி பெற முடிந்தது. அத்தகைய ஜனநாயகம் இன்று எங்கே ? 
1967-க்கு முன்னர் இருந்த ஜனநாயகம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இன்றைக்கு இல்லாமல் ஆயிற்று. ஏறத்தாழ 50 ஆண்டுகளில் நம் நாட்டின் ஜனநாயகம் முழுவதுமாக வாரிசுகளால் நிரப்பப்பட்டு விட்டது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் மட்டுமல்ல...
மாவட்ட அளவிலும், ஒன்றிய, நகர, பேரூர், கிராம அளவிலும் வாரிசு அரசியல் நிறைந்துள்ளது.
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் காரணமாக அதிகாரமும், செல்வாக்கும் ஒரே இடத்தில் குவியும். அதிகாரமும் பணமும் ஒரே இடத்தில் குவியக் குவிய ஜனநாயகம் வீழும். நவீன சர்வாதிகாரிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். மக்களாட்சி மீது மக்களுக்கே நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிடும். வாரிசு அரசியலால் ஜனநாயகம் விரைந்து வீழும்  என்பதை உணர வேண்டியவர்கள் உணருவார்களா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com