தமிழை நேசித்த அண்ணல்!

மகாத்மாவாக அறியப்படாத நேரத்திலிருந்தே தமிழ் மக்களுடனும் தமிழ் நாட்டோடும் காந்தியடிகள் தொடர்பு


மகாத்மாவாக அறியப்படாத நேரத்திலிருந்தே தமிழ் மக்களுடனும் தமிழ் நாட்டோடும் காந்தியடிகள் தொடர்பு கொண்டிருந்தார். அவர் 1896-ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரை 20 முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்.
காந்தியடிகள் சென்றுள்ள ஊர்களையெல்லாம் வரைபடத்தில் குறித்துப் பார்க்கும்போது நமக்கே வியப்பாக உள்ளது. தமிழகத்தில் இருக்கும் நாமே இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள ஊர்களுக்கெல்லாம் சென்றிருப்போமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி மக்களுக்குச் சுதந்திர உணர்வையும் சமூக அநீதிகளை எதிர்த்துப் போராடும் துணிவையும் ஊட்டினார் 
காந்தியடிகள். 
தம்முடைய தலைமையில் நடைபெறும் அஹிம்சைப் போராட்டத்துக்கும் நிர்மாணத் திட்டங்களுக்கும் உறுதுணையாக இத்தமிழ் மக்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை காந்தியடிகளிடம் இருந்தது. அதனால்தான் தமிழகத்துக்கு அடிக்கடி வந்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய முடிவுகளைத் தமிழகப் பயணத்தின் போதுதான் காந்தியடிகள் எடுத்தார்.
அன்றைய நிலையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வந்த தேசியத் தலைவர் காந்தியடிகள் ஒருவர்தான். கிராமம் கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிச் சுதந்திரப் போராட்டத்தை வெகுஜன இயக்கமாக மாற்றியவர் அவர். 
1921-இல் ஒத்துழையாமை இயக்கத்துக்காகவும், 1927-இல் கதர் இயக்கத்துக்காகவும் 1934-இல் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்திற்காகவும் தமிழகப் பயணத்தை மேற்கொண்டபோது, அவை எல்லாவற்றிலும் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டது தமிழகம்.
தமிழர்கள் மீதும் அவர்களுடைய கடமையுணர்வு மற்றும் வீரத்தின் மீதும் அண்ணல் காந்திக்கு உந்துதல் உருவாகக் காரணம், தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் செயல்பாடுகள் என்றுதான் கூறவேண்டும்.
எளிய மனதுடைய தமிழ்மக்கள்தான், அசைக்க முடியாத நம்பிக்கையோடு, எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், எனக்கு உணர்வூட்டி, என்னைத் திறமையாக வழிநடத்தியவர்கள். ஆகையால் தமிழர் கூட்டம் ஒன்றுக்கு வரும்போது ரத்தபாசம் உள்ள உறவினர்களின் கூட்டம் ஒன்றிற்கு வருவதாகவே நான் உணர்கிறேன்' என்றார் காந்தியடிகள்.
தென்னாப்பிரிக்கச் சிறையில் இருக்கும்போது எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கடமையையே செய்துவரும் தமிழர்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களின் தாய்மொழியில் அவர்களுடன் பேசவாவது செய்யவேண்டும் என்று கூறித் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்கிறார். 
என்னுடைய பூர்வ ஜென்ம உறவுதான் எனக்குத் தமிழர்களோடு இப்பொழுது இருக்கும் தொடர்பு' என்றுகூடக் கூறியிருக்கிறார் காந்தி.
இதெல்லாம் ஏதோ ஓர் அரசியல்வாதி தன்னுடைய செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளச் சொன்ன வார்த்தைகள் அல்ல. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வந்த உணர்வின் வெளிப்பாடுகளே. தமிழர்களோடு அவருக்கு ஏற்பட்ட பந்தம் ஏறத்தாழ 55 ஆண்டுகள் தொடர்ந்திருந்தன.
1894-ஆம் ஆண்டு, பாலசுந்தரம் என்ற கூலித்தொழிலாளி அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட காந்தி முன் நின்று தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையைக் கூறுகிறார். பாலசுந்தரம், தன்னுடைய துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார். காந்தியோ அந்தத் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு பேசச் சொல்கிறார். பாலசுந்தரம் அது அவமரியாதை என்று மறுக்கிறார். ஆனால், அதுதான் சுயமரியாதை என்று பாலசுந்தரத்தை துண்டைப் போட்டுக்கொண்டு பேசச் செய்கிறார் அன்றைய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஒப்பந்தக்கூலி பாலசுந்தரத்துக்கு அவர் முதலாளியிடமிருந்து விடுதலையையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். இவ்வாறு 1894-ஆம் ஆண்டிலேயே தமிழர்களின் சுயமரியாதைக்காகப் போராடியவர் காந்தி.
பாலசுந்தரத்துக்கு ஆங்கிலம் தெரியாது. காந்திக்கோ தமிழ் தெரியாது. அப்படி இருக்கையில் காந்தி எவ்வாறு பாலசுந்தரம் கூறியதைப் புரிந்து கொண்டிருக்க முடியும்? அதற்கு உறுதுணையாக இருந்தவர்தான் வின்சென்ட் லாரன்ஸ். இவர் சென்னையில் உள்ள ஜார்ஜ்டவுன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். தென்னாப்பிரிக்கா சென்ற இவர்தான், ஆறு வருடங்கள் காந்திக்குத் தனி உதவியாளராகப் பணியாற்றியவர். இவரால்தான் காந்திக்குத் தமிழர் பற்றிய அறிமுகம் கிடைத்தது. மற்றொரு உதவியாளர் ஜோசப் ராயப்பன் என்கிற தமிழர்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பும் போது 1914-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாளன்று நடந்த பிரிவுபசார விழாவின்போது காந்தியுடன் சேர்ந்து பணியாற்றிப் பலமுறை குடும்பத்துடன் சிறைக்குச் சென்ற தமிழர் கிருஷ்ணசாமி தம்பி நாயுடு தன்னுடைய மனைவியுடன் இணைந்து நாராயணசாமி, பார்த்தசாரதி, பாலகிருஷ்ணன் மற்றும் பக்கிரிசாமி ஆகிய தம் நான்கு மகன்களையும் இந்தியாவுக்குச் சேவை செய்வதற்காகக் காந்தியிடம் தானம்' கொடுத்தார்கள் என்றால், அவர்களை காந்தியடிகள் எந்த அளவுக்கு ஈர்த்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.
காந்திக்குத் தமிழர்களோடு ஏற்பட்ட ஆரம்பகாலத் தொடர்புகளான இவைகள் தமிழர்கள் பற்றி அவருடைய எண்ணங்கள் உருப்பெற அடித்தளமிட்ட நிகழ்ச்சிகளாக இருந்திருக்கலாம். 
இந்தியன் ஒபீனியன் பத்திரிகை தென்னாப்பிரிக்காவில் போராட்டத்தின் போது ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் அந்த இதழ் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 1905-இல் காந்தி எழுதிய கடிதம் ஒன்றில் நான் மிகவும் சுறுசுறுப்பாகத் தமிழைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். எல்லாம் சுமுகமாக நடைபெற்றால் தமிழ்க் கட்டுரைகளை இரண்டே மாதங்களில் என்னால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிடுகின்றார். 
முதன்முறையாக 1896-இல் சென்னை வந்தபோதே, தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அண்ணாசாலையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் கடையில் தமிழ்ப் புத்தகங்களை அவருடைய பயணச் செலவில் ரூ.12-க்கு வாங்கிச் சென்றார் காந்தியடிகள். அப்போது அவருக்கு வயது 27தான்.
வார்தாவிலுள்ள சேவாகிராம் ஆசிரமத்தில் இருந்த இலங்கைத் தமிழர் வி. நாகலிங்கம் காந்தியடிகளிடம் கையெழுத்திட்டுத் தருமாறு கேட்கிறார். அப்படியென்றால் பணம் கொடுக்க வேண்டுமே என்கிறார் காந்தி. அந்த நண்பரும் ரூ.5 தருகிறேன், ஆனால் தமிழில் கையெழுத்திட்டு ஒரு நீதியோடு எழுதித் தரவேண்டும் என்கிறார். அப்படியென்றால் ரூ.6 கொடுக்க வேண்டும் என்று கூறி நீரில் எழுத்தாகும் யாக்கை' என்ற நன்னெறியை எழுதி அதன் கீழ் ம.க.காந்தி என்று கையெழுத்திடுகிறார். 
1933-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் நாள் நடைபெற்ற தமிழ் அன்பர்கள் மாநாட்டிற்கு அவர் எழுதிய வாழ்த்துச்செய்தியில் தமிழ் அன்பர்களின் அன்பு, எவ்வளவு கடுமையான சிரமங்கள் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு நீடித்து நிலைத்திருக்கும் என்று நம்புகின்றேன். தமிழ் மொழியைப் பற்றி நான் மேலெழுந்த வாரியாகவே அறிந்துள்ளேன். ஆனால், அச்சொற்ப அறிவும்கூட அம் மொழியின் அழகையும் வளத்தையும் எனக்கு உணர்த்தியிருக்கிறது. அம்மொழியை உதாசீனப்படுத்துவது பெருங்குற்றமே என்று எனக்குப்படுகிறது' என்று குறிப்பிடுகின்றார். 
காந்தியடிகள் என்று சொன்னவுடன் அனைவருடைய மனத்திலும் நிற்கும் உருவம் இடுப்பில் ஒரு வேஷ்டியும் மேலே ஒரு துண்டும் பொக்கை வாய்ச் சிரிப்பும்தான். இந்த எளிமையான உடைக்கு காந்தி மாறியது மதுரையில்தான் என்பது நமக்கெல்லாம் பெருமை. இது நடந்தது செப்டம்பர் 22, 1921. 
மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்த போதுதான் இந்தச் துணிச்சலான முடிவை எடுத்தார் காந்தி. காந்தி தங்கியிருந்த அந்த வீடு இப்போது கண்காட்சிக்கூடமாகப் பாதுகாக்கப்படுகிறது. காந்தியடிகள் தன் 78 வருட வாழ்க்கையில் ஆறு முறை மதுரைக்கு வந்திருக்கிறார். 13 நாள்கள் மதுரையில் தங்கியிருந்தார்.
வன்னீர்வலசு' என்ற கிராமம் உடுமலைப் பேட்டையிலிருந்து பழனி செல்லும் வழியில் உள்ளது. இரண்டு மைல் உள்ளே செல்ல வேண்டும். ஒரு ஹரிஜனக் குடியிருப்பு இருக்கிறது. 1934-இல் அங்கு செல்ல ஏது வழி? இரண்டு மைலும் காந்தியடிகள் நடந்து செல்லக் கூட முடியாத அளவு உள்ளது. இரண்டு மைல் நடந்து உள்ளே வந்து பின்னர் திரும்புவது கடினம். கார் செல்லும் அளவு பாதையாக இருந்தால் காந்தியடிகள் நேராக ஊருக்கே வந்து திரும்ப ஏதுவாக இருக்கும். ஏற்பாடு செய்ய முடியுமா என்றார். இதை கேட்ட தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக வேலை செய்து வந்த அப்பாவு என்பவர் மனம் தளரவில்லை. 
பத்தே நாள்களுக்குள் இரண்டு மைல் பாதை ஒன்றை ஏற்படுத்திய அதிசயம் தமிழகத்தில் எங்கும் நடந்ததில்லை. பிப்ரவரி 7, 1934 அன்று அந்தப் புதிய சாலையில் காந்தி காரில் பயணித்து வன்னீர்வலசு' கிராமத்தை அடைந்தார். இதைப் பற்றி ஹரிஜன்' நாளிதழில் மாதிரிக் கிராமம்' என்று வன்னீர்வலசை'க் குறிப்பிட்டுத் தலையங்கமே எழுதி இருக்கிறார் காந்தியடிகள்.
ஒரு நற்சான்றிதழ் காந்தியிடமிருந்து பெறுவது சுலபமல்ல. மிகக் கடுமையான பரிசோதனைக்குப் பிறகுதான் ஒரு வார்த்தையில் சான்றிதழ் தருவார் காந்தி. அப்பேர்பட்ட அவரே கொடுத்த நன்சான்றிதழ் சென்னைக்குத்தான் கிடைத்தது. ...வியப்பளிக்கக் கூடியவாறு சென்னை தலையாய இடம் வகிக்கிறது. இங்கு உள்ளவர்கள் சிறந்த செயல்வீரர்கள். நூற்றுக்கு நூறு திருத்தமாய் செய்வார்கள்; இல்லையென்றால் அதைச் செய்யவே மாட்டார்கள்' என்றார் அண்ணல் காந்தி.
1919-இல் தமிழகம் வந்தபோது இராஜாஜி குடியிருந்த வீட்டில்தான் காந்தியடிகள் தங்கியிருந்தார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு மாபெரும் சந்திப்பு இங்கு நடந்தது. வாழ்க நீ எம்மான்! இந்த வையத்து நாட்டிலெல்லாம்' என்று தன் பாட்டால் ஆசீர்வதித்தார் பாரதி. அந்த மகாகவியும் மகாத்மாவும் சந்தித்துக் கொண்டது 1919-இல் சென்னையில் இராஜாஜியின் இந்த வீட்டில்தான்.
சில நிமிஷங்கள்தான் இந்த சந்திப்பு என்றாலும் இருவர் மனதிலும் நல்ல தாக்கத்தை உருவாக்கிவிட்டது. ஆகவேதான் அங்கிருந்த மற்றைய தலைவர்களிடம் இவரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்றார் காந்தி.
பின்னர் பாரதியின் நினைவுநாள் வந்தபொழுது அந்த நிகழ்ச்சிக்குத் தன்னுடைய கையால் தமிழில் எழுதி வாழ்த்துச்செய்தி அனுப்பி வைத்தார். 
நம்முடைய வீரத்தைப் பற்றி நாம் புகழ்ந்து பேசிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நம்முடைய வீரத்தோடு தியாகத்தையும் இணைத்து உலகுக்கே தமிழ் சமுதாயத்தை அடையாளம் காட்டியவர் அண்ணல் காந்தியடிகள்.
தமிழ் மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் காந்தி காட்டிய அன்பு, வைத்திருந்த நம்பிக்கை மிகவும் ஆழமானது. எந்தத் தரப்பை எடுத்துக் கொண்டாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பாரம்பரியத்துக்கு மிகச் சிறந்த சான்று தாங்கள்தாம் என்பதைத் தமிழர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்....' என்று தமிழர்களையும் தமிழையும் மதித்து வாழ்ந்த அண்ணல் காந்தியடிகள் தமிழ் மீதும் தமிழர்கள் மீதுமான நேசத்தை அவருடைய 150-ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் தமிழகம் முழுவதுமாக மீட்டெடுத்து நினைவுகூர வேண்டியது நமது கடமை.

கட்டுரையாளர்:
இயக்குநர், தேசிய காந்தி
அருங்காட்சியகம், புது தில்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com