உத்தரப் பிரதேசத்தின் புதிய பிரச்னை

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை கடந்த சில

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன் பிறப்பித்தார். மாநிலத்தில் சாலைகளில் திரியும் பசு, எருமை, காளை ஆகிய கால்நடைகளை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எந்தக் கட்சியுடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் புதிய பிரச்னையை எதிர்கொண்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? மாநிலத்தில் கால்நடைகளின் பெருக்கம் திடீரென்று அதிகரித்து விட்டதா? 
கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பசுக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மற்றொரு புறம், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில வன்முறையாளர்கள், பசுக்களை இறைச்சிக்காகக் கடத்திச் சென்றதாக சிலர் மீது தாக்குதல் நடத்தினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக, ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்தச் சூழலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வராகப் பதவியேற்றார். ஹிந்துத்துவ கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் அவர், பசுக்களைப் பாதுகாப்பதற்காக கோசாலைகளை அமைத்து பராமரிக்க முடிவு செய்தார்.
இதனிடையே, அந்த ஆண்டு மே மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நாடு முழுவதும் இறைச்சிக்காக கால்நடைகளை விற்பனை செய்யவும், இறைச்சிக் கூடங்களை நடத்தவும் தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை நிறுத்தி வைத்தது. இருப்பினும், ஏற்கெனவே நலிவடைந்திருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழில், மேலும் வீழ்ச்சியை சந்தித்தது.
உத்தரப் பிரதேசத்தில் நிலைமை இன்னும் மோசமானது. அந்த மாநிலத்தில் உள்ள விவசாயிகளால் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியவில்லை. அருகில் உள்ள சந்தைகளுக்கும் விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. விவசாயிகளில் பெரும்பாலானோர் குறைந்த அளவில் நிலம் வைத்து விவசாயம் செய்பவர்கள். அவர்கள், ஆண்டுக்கு இரு பருவத்துக்கு சாகுபடி செய்பவர்கள். ஆண்டுக்கு 15 நாள்களுக்கு மட்டுமே உழவுப் பணிக்காக, கால்நடைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இதனால், கறவை மாடுகளைத் தவிர, மற்ற மாடுகளுக்கு கால்நடைத் தீவனம் அளித்து அவர்களால் பராமரிக்க முடியவில்லை. இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாமலும், பராமரிக்கவும் இயலாத நிலையில், அவர்கள் கால்நடைகளை அவிழ்த்து விட்டார்கள். இதுபோன்று பல விவசாயிகளால் கைவிடப்பட்ட கால்நடைகள்தான், மாநிலம் முழுவதும் சாலைகளில் பராமரிப்போர் இல்லாமல் சுற்றித் திரிகின்றன. இவ்வாறு திரியும் கால்நடைகளால் சாலைகளில் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், அந்தக் கால்நடைகள், அங்குள்ள வயல் வெளி, தோட்டத்துக்குள் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை மேய்ந்து நாசப்படுத்தி விடுகின்றன. இதனால், ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் பயிரிடும் விவசாயி கூட இரவு பகலாக தோட்டங்களில் காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முள்வேலியைத் தாண்டிச் சென்று பயிர்களை கால்நடைகள் நாசப்படுத்தி விடுகின்றன. இதனால், பண வசதியுள்ள சிலர் கம்பி வேலிகளை அமைத்து வருகிறார்கள். இதை எல்லோராலும் செய்ய முடியவில்லை.
இந்தப் பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக, மோகன்லால்கஞ்ச் நகரில் கடந்த மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்.கே.செளதரி, கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி ஒரு நூதனப் போராட்டம் ஒன்றை நடத்தினார்.அவர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் வீதிகளில் சுற்றித் திரிந்த 700 கால்நடைகளுடன் சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். 
இந்தப் பிரச்னைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படாவிட்டால், சுமார் ஒரு லட்சம் கால்நடைகளுடன் லக்னெளவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லம் முன் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, வீதிகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை அருகில் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் கட்டி வைத்தனர். 
பிரச்னை மேலும் தீவிரம் அடைந்ததை அடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 2-ஆம் தேதி இரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் காணொலி முறையில் அழைத்துப் பேசினார்.அப்போது, மாநிலம் முழுவதும் வீதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
வீதிகளில் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விரைவில் தெரியவரும். இந்தப் பிரச்னையை வைத்து, உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. 
முதல்வரின் நடவடிக்கையின் பலன்கள், அடுத்த சில மாதங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com